09/12/2019 இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசிய பின்னர், அவருடன் கூட்டாக உரையாற்றிய, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ, மற்றெல்லா விவகாரங்கள் குறித்தும் கருத்து வெளியிட்ட போதும், தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்தோ, அது சார்ந்த விடயங்கள் குறித்தோ எந்தக் கருத்தையும் வெளியிட்டிருக்கவில்லை.
அவருக்கு முன்னதாக உரையாற்றியிருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, “சமத்துவம், நீதி, அமைதி மற்றும் கௌரவம் ஆகியவற்றின் அடிப்படையிலான தமிழர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும், நல்லிணக்க செயல் முறையை இலங்கை அரசு முன்னெடுத்துச் செல்லும் என்று நம்புகிறேன். 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதும் இதில் அடங்கும்.” என்று குறிப்பிட்டிருந்தார்.
அதற்குப் பிறகு, உரையாற்றிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ, அந்த விடயம் பற்றி எதுவுமே தெரியாதது போல கடந்து சென்றிருந்தார்.
ஆனால், கூட்டாக நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போது, தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றக் கூடிய நல்லிணக்க செயல்முறை பற்றி இந்தியப் பிரதமர் வலியுறுத்தியிருந்ததுடன், அதில் 13ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்தும் விடயமும் உள்ளடங்கும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ இந்த விடயத்துக்கு அந்தச் சந்தர்ப்பத்தில் பதிலளிக்காவிடினும், மறுநாள் ‘தி ஹிந்து’ நாளிதழின் ஆசிரியரும், ராஜபக் ஷ குடும்பத்துக்கு நெருக்கமான, சுப்ரமணியன் சுவாமியின் மகளுமான சுஹாசினி ஹைதருக்கு அளித்திருந்த செவ்வியில் பதிலளித்திருந்தார்.
13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாது என்றும், மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரத்தை வழங்க முடியாது என்றும் அதில் அவர் குறிப்பிட்டிருக்கிறார். எனினும், மாற்று வாய்ப்புகள் குறித்து கலந்துரையாட முடியும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
மஹிந்த ராஜபக் ஷ ஜனாதிபதியாக இருந்தபோது, இந்தியாவுக்கு 13 பிளஸ் என வாக்குறுதியைக் கொடுத்தார். பின்னர் அப்படி எந்த வாக்குறுதியையும் கொடுக்கவில்லை என்றும் கூறினார்.
கோத்தாபய ராஜபக் ஷ, தேர்தலுக்கு முன்னரும் கூட, 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாது என்றே கூறியிருந்தார். குறிப்பாக பொலிஸ், காணி அதிகாரங்களை வழங்க முடியாது என்றும் நியாயப்படுத்தியிருந்தார். காணி அதிகாரங்களைக் கொடுத்தால், அபிவிருத்தியை முன்னெடுக்க முடியாது என்றும், பொலிஸ் அதிகாரங்களைக் கொடுத்தால், பாதுகாப்பு பிரச்சினை ஏற்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.
எனினும், community police போன்ற குறைந்தளவிலான பொலிஸ் அதிகாரங்களை வழங்குவது பற்றி ஆராய முடியும் என்றும் அப்போது அவர் குறிப்பிட்டிருந்தார்.சுஹாசினி ஹைதருக்கு அளித்துள்ள செவ்வியிலும், மாற்று ஏற்பாடுகள் குறித்துப் பேசமுடியும் என்று அவர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தியப் பயணத்துக்கு முன்னதாக, இந்திய ஊடகவியலாளர் நிதின் ஏகோகலேக்கு அளித்திருந்த செவ்வியிலும் கூட, தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அபிவிருத்தியே தீர்வு என்பதை ஜனாதிபதி வெளிப்படுத்தியிருந்தார்.
அதுபோலவே, இந்தச் செவ்வியிலும், சிறந்த வாழ்க்கைத் தரத்தையும், அபிவிருத்தியையும் வழங்குவதே தனது தீர்வு என்று அவர் குறிப்பிட்டுள்ளதுடன், சுதந்திரம், அரசியல் உரிமைகள் என்பன, ஏற்கனவே அரசியலமைப்பில் இருக்கின்றன என்றும் கூறியிருக்கிறார்.
ஆனால், அரசியலமைப்பில் 13 ஆவது திருத்தச்சட்டத்தில், அளிக்கப்பட்டுள்ள போதும், அந்த அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதற்கு அரசாங்கமே தடையாக இருக்கிறது.
தற்போதைய அரசியமைப்பில் குறைபாடுகள் உள்ளதாக, அதில் தமது உரிமைகள் உறுதிப்படுத்தப்படவில்லை என, தமக்கான அதிகாரங்கள் உறுதி செய்யப்படவில்லை என தமிழ் மக்கள் உணர்கிறார்கள். 19 ஆவது திருத்தச்சட்டம் தோல்விய டைந்து விட்டது -அது தவறானது என்றும் அதனை நீக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ எவ்வாறு கருதுகிறாரோ, அதுபோலவே, அரசியலமைப்புச் சட்டத்தினால் தமது உரிமைகள் உறுதி செய்யப்படவில்லை என்று தமிழ் மக்களும் உணருகிறார்கள்.
இவ்வாறான நிலையில் தான், கூடுதல் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகள் தமிழ் மக்களால் முன்வைக்கப்படுகின்றன
கூடுதல் அதிகாரங்களைப் பகிருவதன் மூலம், தமிழ் மக்களின் அபிலாஷைகள் பூர்த்தி செய்யப்படுவதன் மூலம், பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பது தமிழ் மக்களினது எதிர்பார்ப்பு மாத்திரமன்றி, சர்வதேச சமூகத்தினதும் நிலைப்பாடாக இருக்கிறது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் கூட இதனையே வலியுறுத்திக் கூறியிருந்தார். ஆனால், அதிகாரப் பகிர்வு என்ற விடயத்தை, ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒருவராக தற்போதைய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ இல்லை என்பதே உண்மை.அபிவிருத்தி, வேலைவாய்ப்பு, வாழ்க்தைத்தரம் ஆகியவற்றை அரசியல் பிரச்சினைகளுக்கான தீர்வாக மாற்ற முடியும் என்பது அவரது நம்பிக்கையாக இருக்கிறது. தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்பதை நிரூபிப்பதற்கு அவர் முற்படுகிறார்.
அவரைப் பொறுத்தவரையில் அதிகாரப்பகிர்வு என்பது ஏமாற்றும் கருத்து என்பதாகவே உள்ளது. 70 ஆண்டுகளாக ஆட்சியாளர்கள் அளித்து வந்த அதிகாரப்பகிர்வு பற்றிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
அதற்கும் அப்பால், பெரும்பான்மை மக்களின் விருப்பத்துக்கு மாறாக எதையும் செய்ய முடியாது என்றும், பெரும்பான்மை சமூகத்தின் விருப்பத்திற்கு மாறாக யாராவது ஏதாவது வாக்குறுதியளித்தால் அது பொய் என்றும் கூறியிருக்கிறார்.
பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய வேண்டாம், வேலைவாய்ப்பை வழங்க வேண்டாம் என எந்த சிங்களவரும் தெரிவிக்க மாட்டார். ஆனால் அரசியல் விவகாரங்கள் வேறு மாதிரியானவை என்று அவர் கூறியுள்ளதானது, அரசியல் ரீதியான விடயங்களில் சிங்கள மக்கள் விட்டுக் கொடுப்புகளுக்கு தயாராக இல்லை என்பதை வெளிப்படுத்துவதாக உள்ளது.
பெரும்பான்மைச் சிங்கள மக்கள் அபிவிருத்தியை எதிர்க்கவில்லை. அதிகாரப்பகிர்வை எதிர்க்கிறார்கள் என்ற அவரது கருத்து, சிங்கள மக்கள் எதிர்க்காத எதையும் தான், தமிழ் மக்களுக்கு கொடுக்க முடியும் என்பதை உறுதிப்படுத்துவதாக உள்ளது.
சிங்கள மக்களின் ஆதரவுடன் தான் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நிலையான ஒரு தீர்வை எட்ட முடியும் என்பதில் சந்தேகமில்லை.
அதேவேளை , சிங்கள மக்கள் அவ்வாறான தீர்வை எதிர்க்கிறார்களா அல்லது சிங்கள அரசியல்வாதிகள் அவ்வாறான நிலையை உருவாக்குகிறார்களா என்ற கேள்வி இருக்கிறது.
இந்தமுறை ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள மக்களின் வாக்குகளால் ஜனாதிபதியானவர் கோத்தாபய ராஜபக்ச ஷ அவர் வெற்றி பெறுவதற்காக, அவரைச் சுற்றியிருந்தவர்கள் கையில் எடுத்திருந்த முக்கியமான ஆயுதம் இனவாதம் தான்.
தமிழ், முஸ்லிம்களுக்கு எதிராக தெற்கில் பரப்பப்பட்ட இனவாதக் கருத்துக்கள் தான், சிங்கள மக்கள் மத்தியில் கோத்தாபய ராஜபக் ஷவை சிங்கள பௌத்த காவலனாக மாற்றியது. அவருக்கு வெற்றி வாய்ப்பையும் உருவாக்கிக் கொடுத்தது.
அதுபோலத் தான், பெரும்பான்மை சிங்கள மக்கள் அதிகாரப்பகிர்வை எதிர்க்கிறார்கள் என்று கூறி, சிங்கள ஆட்சியாளர்களும், அரசியல்வாதிகளும் தான், ஒரு மாய விம்பத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.
மஹிந்த ராஜபக் ஷ போன்ற மரபுவழி அரசியல்வாதிகள் மாத்திரமன்றி, கோத்தாபய ராஜபக் ஷ போன்ற மரபுசாரா அரசியல்வாதிகளும் கூட, அந்த நிலைக்கு விதிவிலக்கானவர்கள் அல்ல.
இந்தியப் பிரதமர் மோடி 13 ஆவது திருத்தம் உள்ளிட்ட நல்லிணக்க செயல்முறைகளை வலியுறுத்தியிருந்த நிலையில், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ, அந்த இடத்திலேயே அது சாத்தியப்படாது என்பதை வெளிப்படுத்தியிருக்கலாம். அது தான், வெளிப்படைத்தன்மையான அரசியல்.
நடைமுறைச் சாத்தியமற்ற வாக்குறுதிகளை கொடுக்கமாட்டேன் என்றும், ஒரு வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லை எனின், அதனை கூறிவிடுவேன் என்றும், கூறியிருக்கும், கோத்தாபய ராஜபக் ஷ, இந்தியப் பிரதமருக்கு முன்பாக ஏன், 13 ஆவது திருத்தம் பற்றியோ, தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு குறித்தோ வெளிப்படைத்தன்மையுடன் பேசத் தவறினார் என்ற கேள்வி வருகிறது.
அதேவேளை , தமிழர் பிரச்சினை விவகாரத்தை இந்தியா மறந்து விடவில்லை என்பதை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வெளிப்படுத்தியிருக்கிறார். இது தமிழருக்கு சாதகமானதா என்று உறுதியாக கூற முடியாது.
இந்தியாவைப் பகைத்துக் கொள்ளாதபடி, இந்தியாவுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தாதபடி, நடந்து கொண்டால், இருதரப்பு உறவுகளுக்கு பாதிப்பு வராது என்பது ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவின் கணிப்பு.
அந்த முயற்சியில் எந்தளவுக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ வெற்றி பெறுவார் என்பதைப் பொறுத்தே, 13 ஆவது திருத்தம் உள்ளிட்ட விவகாரங்களின் மீதான இந்தியாவின் அடுத்தடுத்த நகர்வுகள் அமைந்திருக்கும்.
அதுவரை இந்தியத் தரப்பில் இருந்து எந்த சூடான நகர்வுகளையும் எதிர்பார்ப்பதற்கில்லை."
- கபில் -நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment