படித்தோம் சொல்கின்றோம்: முருகபூபதி


டிசெம்பர் 11 ஆம் திகதி  மகாகவி பாரதியின் 137 ஆவது பிறந்த தினம்  சித்திர பாரதியும் கருத்துப்படங்களும்   

தமிழ்நாடு திருநெல்வேலி மாவட்டத்தில் எட்டயபுரம் கிராமத்தில்  1882 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி ஒரு ஆண்குழந்தை பிறந்தது. பெற்றவர்கள் அக்குழந்தைக்கு சூட்டிய பெயர் சுப்பிரமணியன். செல்லமாக சுப்பையா என அழைத்தார்கள்.    தமிழ்நாடு திருநெல்வேலி மாவட்டத்தில் எட்டயபுரம் கிராமத்தில்  1882 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி ஒரு ஆண்குழந்தை பிறந்தது. பெற்றவர்கள் அக்குழந்தைக்கு சூட்டிய பெயர் சுப்பிரமணியன். செல்லமாக சுப்பையா என அழைத்தார்கள்.  அந்தக்குழந்தை பாரதியாக வளர்ந்து மகாகவியாகி 1921 செப்டெம்பர் மாதம் 12 ஆம் திகதி அதிகாலை தனது உயிரை நீத்தது. மறையும்போது 39 வயதுதான்.  மேதாவிலாசம் மிக்க பலருக்கு அற்பாயுள்தான் !  அத்தகைய அபூர்வமனிதர் பாரதியார் குறித்து இன்றும் பேசப்படுவதற்கு ஏராளமான காரணங்கள் இருக்கின்றன.  அந்தக்காரணங்களை ஆராயப்புகும்போது, உலகின் உயர்விருது எனக்கருதப்படும் நோபல் விருது அவருக்கேன் வழங்கப்படவில்லை..?  என்ற ஆதங்கமே எமக்கு  மேலோங்குகிறது.வறுமையில் வாடியபோதும்  “ வீழ்வேன் என நினைத்தாயோ..?  “ என்று வீம்போடு பேசியவர் பாரதியார்.  விருதுகள், பட்டங்களைத் தேடி ஓடாதவர். பாரதி பட்டம்கூட அவரது பால்ய காலத்து கவியாற்றலுக்காகத்தான் வழங்கப்பட்டது. அதுவே இறுதிவரையிலும் நிலைத்து நிற்கிறது.  பாரதி மறைந்து,  இறுதி ஊர்வலத்தில் அவரது பூதவுடல் நகர்ந்தபோது உடன் வந்தவர்களின் எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்த எண்ணிக்கைகூட பதினைந்தை தாண்டாது!   அவர் தனது முப்பத்தொன்பது ஆண்டு கால வாழ்க்கையில் பதினேழு ஆண்டுகாலத்தை பொதுவாழ்க்கைக்கு அர்ப்பணித்தவர் என்று பாரதி இயல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.  அந்தப் பொதுவாழ்வில்தான் அவர் கவிஞரகவும் அதேசமயம் பத்திரிகையாளராக, மொழிபெயர்ப்பாளராக,  பாடசாலை ஆசிரியராக, அரசியல் மாநாடுகளில் பங்கேற்றவராக பிரிட்டிஷாரின் அடக்குமுறையிலிருந்து தப்பி புதுச்சேரியில் அடைக்கலம் புகுந்தவராக – இறுதியில் சிறைவாசம் அனுபவித்தவராக அலைந்துழன்றிருக்கிறார்.  எனினும் அவருடைய அசாத்திய துணிவும் தர்மாவேசமும்  எச்சந்தர்ப்பத்திலும் குறைந்துவிடவில்லை. அத்துடன் கேலியும் கிண்டலும் அங்கதமும் இழையோட பேசவல்லவர்.  தன்னை கவர்ந்துசெல்ல வரும் காலனையும்  “ எட்டி உதைப்பேன்  “ என்று ஆக்ரோஷமாக குரல் எழுப்பியவர். மகாத்மா காந்தி சென்னைக்கு வந்தவேளையில்,  அவர் இருந்த இல்லத்திற்கு அத்துமீறிப்பிரவேசித்து, தான் திருவல்லிக்கேணி கடற்கரையில் ஒழுங்கு செய்திருக்கும் பொதுக்கூட்டத்திற்கு வரமுடியுமா...? எனக்கேட்டவர்.
காந்தியோ தனக்கிருந்த வேறுவேலைகளினால் வரமுடியவில்லை எனச்சொன்னதும் " வாழ்க நீ எம்மான்..." எனப்பாடிவிட்டு விருட்டென விரைந்து மறைந்தவர்.  இத்தகைய துடிப்பான இயல்புகொண்டிருந்த பாரதி, ரவீந்திரநாத் தாகூருடன் கருத்தியில் ரீதியில் கவிதா வாதம் நடத்துவதற்கு விரும்பியவர்.  இதுபற்றி   பேராசிரியர் க. கைலாசபதி தனது இருமகாவிகள் நூலில் பதிவுசெய்துள்ளார்.  பாரதியின் சரிதையை தமிழில் எழுதியிருக்கும் சுத்தானந்த பாரதியாரும் ஆங்கிலத்தில் எழுதியிருக்கும் பேராசிரியர் பி. மகாதேவனும் பாரதியார், ரவீந்திரநாத் தாகூருடன் கவிதா விவாதம் நடத்தவிரும்பினார் என்ற தகவலை தமது நூல்களில் விபரித்துள்ளனர்.  ஒரு நாடக பாணியில் இது நிகழ்ந்திருக்கிறது. ஆனால், அந்தக்காட்சியில் தாகூர் இல்லை.  பாரதி: அப்பா, இப்போது தாகூர் எங்கிருக்கிறான்...?  சிஷ்யன்: மதுரையில்.


பாரதி: உடனே புறப்படு. சலோ மதுரை. அவனை ஒரு கை பார்க்கிறேன்.  சிஷ்யன்: நாம் போவதற்குள் தாகூர் சென்றுவிட்டால்...?  பாரதி: அட அபசகுனமே...! நமது தமிழ்நாட்டுக்கு தாகூர் வந்து நம்மைக்காணாமல் செல்லுவதா...?  சிஷ்யன்: விலாசம் தெரியாதே...!  பாரதி: அட .. சீ...! "தாகூர் மதுரை" தந்தி பறக்கும் ஐயா...!  சிஷ்யன்: சரி... என்ன செய்தி அறிவிக்க...?  பாரதி: " தமிழ்நாட்டு கவியரசர் பாரதி, உம்மைக்கண்டு பேச வருகிறார்" என்று உடனே தந்தி அடியும்.  சிஷ்யன்: அங்கே போய் என்ன செய்யப்போகிறீர்...?  பாரதி: ஓய்... ஓய்..., நாம் தாகூருக்கு ஒன்று சொல்லுவோம். " நீர் வங்கக்கவி. நாம் தமிழ்க்கவி. விக்டோரியா ஹாலில் கூட்டம் கூட்டுவோம். உமது நோபல் பரிசைச் சபை முன் வையும். நாமும் பாடுவோம். நீரும் பாடும். சபையோர் யார் பாட்டுக்கு 'அப்ளாஸ்' கொடுக்கிறார்கள் என்று பார்ப்போம். நமது பாட்டே நயம் என்று சபையோர் மெச்சுவார்கள். உடனே உமது கையால் எமக்கு நோபல் வெகுமதியைத்தந்து செல்லவேண்டியது என்போம்..!  சிஷ்யன்: அதெப்படி...? அவர் வங்காளத்தில் பாடுவார். நீர் தமிழில் பாடுவீர். வங்காளத்திற்கு கிடைத்த நோபல் பரிசு உமது தமிழுக்கு எப்படிக்கிடைக்கும்...?  பாரதி: அட.. அட அபஜெயமே! சர்வவேசுரன் தமிழனுக்கு எல்லாம் வைத்தான். புத்தி மட்டும் வைக்கவில்லை. நேற்றுப்பிறந்த வங்காளத்தான் நோபல் பரிசு வாங்கவேண்டும். கற்பகோடி காலம் வாழ்ந்த தாழ்ந்த தமிழன் அந்தப்பரிசுக்கு லாயக்கில்லையோ...?  சிஷ்யன்: மன்னிக்கவேண்டும். தமிழ் வங்கத்திற்கு தாழ்ந்ததில்லை. ஆனாலும் அவர் உலக மகா கவியாகப் புகழ்பெற்றவர்.  பாரதி:  நாம் உலகப்புகழ் பெறமுடியாதோ...? அட தரித்திர மனிதா! அந்த இழவுக்குத்தான் நோபல் வெகுமதியை தாகூரிடமிருந்து வெல்லவேண்டும் என்கின்றோம் !  இந்தமாதிரியே பேசிக்கொண்டு பாரதியார் இரவில் எட்டயபுரம் வந்தார். (1919) பிறகு நன்றாகச்சாப்பிட்டுத் தலையைச்சாய்த்தார். மறுநாள் காலையில்தான் எழுந்தார். நோபல் வெகுமதி விஷயம் மறந்துபோயிற்று. இது யோகி சுத்தானந்த பாரதி தீட்டியுள்ள சித்திரம். 1918 இல் பாரதியார் புதுச்சேரி வாழ்க்கை அலுத்துப்போய் தமது மனைவியின் ஊரான கடயத்திற்குச்சென்றார். கடயத்தில் ஈராண்டு வாழ்க்கை. அப்பொழுதுதான் மேற்கூறிய சம்பவம் நிகழ்ந்ததாகத்தெரிகிறது என்று எழுதுகிறார் பேராசிரியர் கைலாசபதி.  பாரதியார்  ( 1882 – 1921 ) ரவீந்திரநாத் தாகூர் ( (1861 – 1941 )                   இவர்கள் இருவரையும் ஒப்பீடு செய்து கைலாசபதி                ( இருமகாகவிகள் ) தொ.மு. சி. ரகுநாதன் ( கங்கையும் காவிரியும் ) உட்பட பலர் ஆய்வுசெய்துள்ளனர்.  பாரதியாரும் தாகூரைப்போன்று நோபல் விருதுக்கு முற்றிலும் தகுதியானவர்தான் என்பதை பறைசாற்றும் இரண்டு தொகுப்புகள் பற்றி இங்கே அறிமுகம் செய்ய விரும்புகின்றேன்.      பாரதி என்ற பெயரிலேயே இலங்கையில்,    ஒரு இலக்கிய சிற்றிதழை நடத்தியவரும் ,  பல மேனாட்டு கவிதை இலக்கியங்களை தமிழில் மொழிபெயர்த்தவருமான மூத்த எழுத்தாளர் கே. கணேஷ் அவர்கள்,  மறைவதற்கு சில வருடங்களுக்கு முன்னர்,  “ இனி இது உங்களிடம்தான் இருக்கவேண்டும்  “ எனச் சொல்லி என்வசம் தந்த  இரண்டு  அரிய பொக்கிஷங்கள்தான் அவை!  ரா. அ. பத்மநாபன் தொகுத்திருக்கும் சித்திர பாரதி, ஆ. இரா. வேங்கடாசலபதி தொகுத்திருக்கும் பாரதியின் கருத்துப்படங்கள் – ஆகிய  குறிப்பிட்ட இரண்டு பெறுமதிவாய்ந்த நூல்களும் மகாகவி பாரதியின் பேராளுமையை பல்வேறு ஆதாரங்களுடனும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அரிய ஒளிப்படங்களுடனும் சித்திரிக்கின்றன.      சித்திர பாரதி  பாரதி நூற்றாண்டை முன்னிட்டு வெளியான சித்திரபாரதி என்னும் தொகுப்பில், பாரதியின் கையெழுத்துப்பிரதிகள், கடிதங்கள், பாரதி ஆசிரியராக பணியாற்றிய பாலபாரதா                  ( ஆங்கிலம் ) சக்கரவர்த்தினி, கர்மயோகி, விஜயா, இந்தியா முதலானவற்றின் படங்கள், பாரதியார் சம்பந்தப்பட்ட பல அரிய ஒளிப்படங்கள், அவருடன் நெருக்கமாக இருந்த சுதந்திரப்போராட்ட தியாகிகள் பற்றிய விபரங்களும் இந்நூலில்  இடம்பெற்றுள்ளன.  பாரதியின்  மனைவி செல்லம்மா மற்றும் பாரதி மிகவும் மதித்த விவேகானந்தரின் சீடர் நிவேதித்தா , வீட்டுப்பணியாள் அம்மாக்கண்ணு, வ. உ. சிதம்பரப்பிள்ளை, வ.வே.சு. அய்யர், குவளைக்கண்ணன், சுதந்திர பேராட்ட வீரர் வாஞ்சிநாதன் உட்பட பலரதும் ஒளிப்படங்கள் இந்நூலில் இடம்பெறும் கட்டுரைகளுக்குப்பக்கத்தில் பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்பட்டுள்ளன.  இதன் முதல் பதிப்பு பாரதியின் 76 ஆவது பிறந்த தினம் கொண்டாடப்பட்ட  காலத்தில் 1957 இல் வெளிவந்துள்ளது. மண்டயம் ஶ்ரீ ஶ்ரீநிவாஸாச்சாரியார் அதற்கு முகவுரை எழுதியுள்ளார். அதன் திருத்திய இரண்டாம் பதிப்பினையே கே. கணேஷ் அவர்கள் என்னிடத்தில் கையளித்தார்.  இந்தப்பதிப்பு பாரதி நூற்றாண்டு காலத்தில் டிசெம்பர் 11 ஆம் திகதி 1982 இல் வெளியானது. இந்த அரிய தொகுப்பில் 1917 ஒளிப்படங்கள் பதிவாகியிருக்கின்றன.  இதனைத் தொகுத்திருக்கும் ரா. அ. பத்மநாபன் 1934 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஆனந்தவிகடன் இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றியவேளையில் பாரதியாரின் ஒரு ஒளிப்படம் அவர் வசம் கிடைத்திருக்கிறது. அதனை அச்சமயம் ஆனந்தவிகடன் ஆசிரியராக பணியாற்றிய  கல்கி அவர்களிடம் காண்பித்துள்ளார்.  பின்னர் அந்த அரியபடம் பிரதி எடுக்கப்பட்டு ஊடகங்கள் பலவற்றுக்கும் அனுப்பப்பட்டுள்ளன. அவ்வேளையில் பாரதியின் வரலாற்றை சரித்திரபூர்வமாக ஆராய்ச்சி செய்து  தொகுப்பொன்றை வெளியிடும் பணியில் பத்மநாபன் இறங்கியிருக்கிறார்.  அதற்காக  பாரதி வாழ்ந்த எட்டயபுரம், காசி,  புதுவை, கடயம் எங்கும் பயணித்து படங்களும், தகவல்களும், பத்திரிகைகளும்  சேகரித்திருக்கிறார்.  19 ஆம் நூற்றாண்டில் தமிழ்நாடு எப்படி இருந்தது ? என்பதை அறிமுகப்படுத்தும் பாங்கில் தொடங்குகிறது இத்தொகுப்பின் முதல் அங்கம். எட்டயபுரம் பற்றிய அறிமுகக்கட்டுரையில் எட்டயபுர மன்னர்கள், எட்டயபுரம் அரண்மனை ஆகிய படங்கள் இடம்பெறுகின்றன.  பாரதி 1919 இல் சீட்டுக்கவி எழுதிய வெங்கடேசுர எட்டப்ப நாயக்கரின் தகவல் சொல்லப்படுகிறது.  பாரதியாரின் ஜாதகக்குறிப்பும்  இடம்பெற்றிருப்பதுதான். இந்நூலில் மற்றும் ஒரு சுவாரசியமான தகவல்!    மதுரையில் வெளியான விவேகபாநு ( 1904 ) இதழில்  முதல் பிரசுரம் கண்ட   பாரதியின் தனிமை இரக்கம் என்ற கவிதை தோன்றிய கதையும் சொல்லப்படுகிறது.  காசியில் வாசம்செய்த காலப்பகுதியில் ஒரு பாடசாலையில் மாதம் இருபது ரூபா சம்பளத்திற்கு பணியாற்றியிருக்கும் பாரதி, சரஸ்வதி பூசையன்று, ஒரு கூட்டத்தைக்கூட்டி பெண் கல்வி என்ற தலைப்பிலே பேசியிருக்கிறார். அதில்   “பெண்கள் கல்வியின்றித் தேசம் முன்னேறாது “  என்று வலியுறுத்தியிருக்கிறார்.  பாரதியாரை கைது செய்வதற்காக பிரிட்டிஷ் அரசினால் உளவாளியாக அனுப்பப்பட்ட ஒரு துப்பறியும் பொலிஸ்காரரின் டயறிக்குறிப்பினையும் கையெழுத்துடனேயே தேடி எடுத்து பதிவுசெய்துள்ளார் தொகுப்பாளர்.  சென்னை  பாரதியார் சங்கத்தின் சார்பில் அதன் அப்போதைய தலைவர் நா. மகாலிங்கம்  இந்த தொகுப்பிற்கான பதிப்புரையை எழுதியுள்ளார். 230 பக்கங்களுக்கும் மேற்பட்டது இந்த தொகுப்பு.    பாரதியின் கருத்துப்படங்கள்   இதழியல் துறையில்   கார்ட்டூன் எனப்படும் கருத்துப்படத்தை தமிழுக்கு முதல் முதலில் அறிமுகப்படுத்தியவர் பாரதியார். அவர் வாழ்ந்த காலம்   இந்தியா,  அந்நிய ஏகாதிபத்தியத்தின் கொடுங்கரங்களில் சிக்கியிருந்து பிரிட்டிஷ் இந்தியா என்ற பெயருடன் விளங்கியது.  பாரதி தாம் பொறுப்பேற்று நடத்திய இந்தியா என்ற அரசியல் வார இதழில் கருத்துப்படங்களை வெளியிட்டுத் தமிழ் – இந்திய  இதழியல் துறையிலும் முன்னோடியாக விளங்கினார் என்பது பரவலாக அறியப்படாத செய்தி, ஆனால், பாரதியின் கவிதைகள், உரைகள் படைப்பாற்றல் தமிழ் உலகெங்கும் பரவலாக அறியப்பட்ட செய்தி. அதனால், அறியப்படாத பாரதியின் கருத்துப்பட பக்கம் பற்றி  வரலாற்றுப் பின்னணிகளுடன் விரிவாகப்பேசுகிறது பாரதியின் கருத்துப்படங்கள் என்ற தொகுப்பு.  1850 ஆம் ஆண்டு முதல் டில்லியிலிருந்து வெளியான Delhi Sketch Book தான் இந்தியாவில் முதல் முதலாக கருத்துப்படங்களை வெளியிட்டுள்ளது. 1857 இல் கிளர்ச்சியாளர்கள் டில்லியை முற்றுகையிட்டதையடுத்து இதன் வருகை நின்றிருக்கும் தகவலையும், அதன் பின்னர் The Indian Punch  என்ற இதழ் தொடர்ந்து கருத்துப்படங்களை வெளியிட்டிருக்கும் செய்தியையும் தொகுப்பாசிரியர் வெங்கடாசலபதி தெரிவிக்கின்றார்.   இந்தியா இதழில் வெளியான ஒவ்வொரு கருத்துப் படத்திற்குமான விளக்கக்குறிப்புகளும் இந்நூலில் பதிவாகியிருப்பதனால் அவற்றின் வரலாற்றுப்பின்னணிகளையும் அறிந்துகொள்ள முடிகிறது.  பாரதி,  அன்றைய அரசையும் அதிகாரத்தையும் அங்கதச்சுவையுடன் சித்திரித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் உழைத்திருக்கிறார்.  பாரதியின் சிந்தனைகளும் செயற்பாடுகளும் தீர்க்கதரிசனமானவை. எதிர்காலத்தில்  இதழியல் துறையும் கருத்துப்படங்களின் ஊடாக மக்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக அன்றே, அத்தனை அரசியில் நெருக்கடிகளுக்கும் மத்தியிலிருந்து சிந்தித்திருக்கிறார்.   சமகாலத்தில்  நாளாந்தம் வெளியாகும் செய்தி ஏடுகளை கையில் எடுக்கும் வாசகர்களில் பெரும்பாலானவர்களை கவர்வதும் இந்த கருத்துப்படங்கள்தான்.  கருத்துப்படங்களில் தாம் எவ்வாறு சித்திரிக்கப்படுவோம் என்ற அச்சத்துடன் தினமும் பத்திரிகைகளை பார்க்கும் அரசியல் தலைவர்களும் சமகாலத்தில் எம்மத்தியில் நடமாடுகின்றனர். அவர்களை கருத்துப்படங்கள் சீண்டிப்பார்ப்பதுடன் சிந்திக்கவும் தூண்டும்.  இந்தப்பதிவில் அறிமுகப்படுத்தப்படும் இரண்டு தொகுப்புகளும் ஊடகவியலாளர்களுக்கும் வரலாற்று ஆய்வாளர்களுக்கும் பாரதி இயலை கற்கவிரும்பும் மாணவர்களுக்கும் சிறந்த உசாத்துணை ஆவணங்களாகும்.  பாரதிக்கு நோபல் விருது கிட்டாதுபோயினும்,   மக்கள் மனங்களில்  தமிழின் கொடையாகவே  என்றும் வாழ்ந்துகொண்டிருப்பார்.  letchumananm@gmail.com  


            
No comments: