மெல்பேண் மண்ணில் இசையால் மனதைக் கவர்ந்த செல்வி.அஞ்சலி காசிநாதன், செல்வி.அஷ்வினி காசிநாதன் சகோதரிகளின் வாய்ப்பாட்டு சங்கீத அரங்கேற்றம்.















Melbourne George Wood Performing Arts Centre ல் 09.07.2016 சனிக்கிழமையன்று மாலை கலாநிதி சந்திரபானு பரதாலயா அக்கடமியின் பிரபல சங்கீத ஆசிரியை ஸ்ரீமதி சிவகங்கா சகாதேவன் அவரிகளின் மாணவிகளும், திரு.காசிநாதன், திருமதி.சுந்தரராணி காசிநாதன் தம்பதிகளின் அன்புப் பிள்ளைகளுமான செல்வி.அஞ்சலி காசிநாதன், செல்வி.அஷ்வினி காசிநாதன் ஆகியோரின் வாய்ப்பாட்டு சங்கீத அரங்கேற்றத்திற்குச் செல்லக் கூடிய அரிய வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அரங்கேற்றம் மண்டபம் நிறைந்த பார்வையாளர்கள் முன்னிலையில் மிகவும் கோலாகலமாக நடந்தேறியது.


தமிழ்க் கலை, கலாச்சாரப்படி மண்டப வாசலில் பிள்ளையார், கலைவாணி உருவச் சிலைகளுடன் மங்கள நிறைகுடம் வைக்கப்பட்டிருந்தது. இளம் பெண் பிள்ளைகள் யாவரையும் வருக வருகவென வரவேற்றனர். அவர்களுடன் அஞ்சலி, அஷ்வினி ஆகியோரின் பெற்றோர்கள், பேரன், பேர்த்தி, சகோதரன் என யாவரும் இருகரம் கூப்பி வரவேற்றுக் கொண்டிருந்தார்கள்.
இந்துமதகுருக்கள் இறைவனுக்குப் பூசை செய்து தீபஆராதனை நடாத்தியிருந்தார். அதனைத் தொடர்ந்து செல்வி.அஞ்சலி காசிநாதன், செல்வி.அஷ்வினி காசிநாதன் இருவரும் மலர் சாத்தி வணங்கி மாதா, பிதா, குரு,தெய்வ ஆசீர்வாதங்கள் பெற்றுக் கொண்டார்கள். மேடை மிகவும் அழகாக அலங்கரித்திருந்தார்கள். மயில் மீதிலேறி வரும் ஸ்ரீ முருகப்பெருமானின் அற்புதக்காட்சி அனைவரையும் கவர்ந்திருந்தது. சகோதரன் ஹரன் காசிநாதன் தனது ஆரம்ப உரையைக் கூறி உணர்வு பூர்வமாக சங்கீத அரங்கேற்றத்தினை ஆரம்பித்து வைத்திருந்தார்.  




அஞ்சலி, அஷ்வினி இருவரும் நவரங்கமாளிகா இராகத்தில் ஆதி தாளத்தில் அமைந்த வர்ணத்தினை இராக ஆலாபனையுடன் இனிமையான குரலிசையோடு ஆரம்பித்திருந்ததைப் பார்த்த போதே திறமைகள் மிகுந்ததாக அமையப் போவதை உணர்ந்தேன். அதற்கு ஏற்றார் போல் பார்வையாளர்களது கரகோஷமும் மழையாகப் பொழிந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.  

ஹம்சத்வனி இராகத்தில் ஆதி தாளத்தில் முத்துசாமி தீட்சிதருடைய பாடல் வாதாபி கணபதி என்று ஆரம்பிக்கின்ற யாவருக்கும் தெரிந்த பாடலை அடுத்து பாடியிருந்தார்கள். பல தடவைகள் கேட்ட பாடல் இவர்களுடைய குரலில் கேட்கும் போது ஆனந்தமாக இருந்தது. பஞ்சரத்தின கீர்த்தி நாட்டை இராகத்தில் ஆதி தாளத்தில் தியாகராஜா உடைய பாடலைப் பாடியிருந்தார்கள். யாரும் பாடல்களைப் பாடலாம் என்பது வேறு. இப்படித்தான் பாடப்பட வேண்டும் என்பது வேறு. இங்கே இந்த இரண்டு சகோதரிகளும் குருவின் வழிகாட்டலுக்கு ஏற்ப மிகவும் இயல்பாகவே பாடியதைப் பார்க்கும் போது இவர்கள் இருவரும் இறைவனது இசை ஞானத்தினைப் பெற்றிருக்கின்றார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
தாயே திரிபுரசுந்தரி என்று ஆரம்பிக்கின்ற பாடல் சுதாசவேரி இராகத்தில் கண்ட சப்பு தாளத்தில் பெரியசாமி தூரன் இயற்றிய பாடலைப் பாடியிருந்தார்கள். ஹேமலதா கணேசன் இயற்றிய சண்முகப்பிரியா இராகத்தில் கண்ட ஜதி திரிபுட தாளத்தில் அமைந்த இராகம் தாளம் பல்லவி என்ற கோர்வையைப் பாடியிருந்தார்கள். அஞ்சலி, அஷ்வினி இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்திருந்தார்கள் போல் மிக அருமையாக இருந்தது.அவர்களுடைய கணீர் என்ற குரலினிமை இராகங்களுக்கு ஏற்ப மாற்றி மாற்றிப் பாடும் போது எவ்வளவு அழகாகவும் இனிமை நிறைந்ததாகவும் இருந்தது எனலாம். இடைவேளையின் பின் மீண்டும் நிகழ்ச்சி ஆரம்பமானது.



சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்த அவுஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த Melbourne Mac Robertson Girls' High School Vice Principal Margaret,AKINS அவர்கள் இருவருடைய கல்லூரிப் பயணம், மற்றும் இவர்கள் பெற்றிருக்கும் அதிதீரத் திறமைகள் பற்றிக் கூறி மென்மேலும் வளங்கள் பெற வாழ்த்துக்களை வழங்கியிருந்தார்.
அரங்கேற்றத்தின் பிரதம அதிதியாக வருகை தந்த ஸ்ரீமதி சாருலதா மணி அவர்கள் தனதுரையில் அரங்கேற்றம் என்பது அனைவரும் பல மணித்துளிகள், நாட்கள், வாரங்கள் என்று அதீத பயிற்சிகள் எடுத்த பின்னர் தான் இவ்வகையானதொரு நிகழ்ச்சியைப் படைக்கின்றார்கள். எனவே கூட்டு முயற்சி தான் இதற்கு அடிப்படையானது என்பதை வலியுறுத்தினார். இறைவனது இசையை பல வடிவங்களில் பற்பல பரிமானங்களில் எடுத்து வரும் போது அதற்கு ஒரு அழகு இருக்கின்றது. இவர்கள் இருவரது இசைப் பயணம் இன்னும் மென்மேலும் சிறப்புப் பெற்று வளரவேண்டும் என வாழ்த்தியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து ஹிந்தோளம் இராகத்தில் ஆதி தாளத்தில் அமைந்த சமாஜ வர ஹாமன என்ற பாடல், பூர்விகல்யாணி இராகத்தில் ரூபக தாளத்தில் ஆனந்த நடம் ஆடுவார் என்ற பாடல் இரண்டையும் மிகவும் அழகாகப் பாடியிருந்தார்கள். அடுத்து என்ன தவம் செய்தனை யசோதா என்ற அடிக்கடி காதில் கேட்ட பாடல் மீண்டும் கேட்க வேண்டும் போல் என்று சொல்லும் அளவிற்குப் காதிற்கினிமையாகப் பாடியிருந்தார்கள்.
பல இசை விற்பன்னர்கள் குரல்களில் கேட்ட பாடல் குறை ஒன்றும் இல்லை என்ற பாடல்.  சிறப்பு மிக்க பாடல்களை இசைக்கும் போது சிறந்த குரல் வளமும், பாடும் திறமையையும்  கொண்டவர்கள் என்பதை நிரூபித்திருந்திருந்தார்கள்.
யாழ்ப்பாணம் இனுவையூர் ஸ்ரீ வீரமணி ஐயர் இயற்றிய திலங் இராகத்தில் ஆதி தாளத்தில் வண்ண வண்ண சேலை என்று ஆரம்பிக்கின்ற பாடல் அனைவரையும் மிகவும் கவர்ந்திருந்தது. தில்லானா என்ற முக்கிய பகுதியில் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் வழித்தோன்றலான இராஜ்குமார் பாரதி என்பவர் இயற்றிய தில்லானா மெல்பேண் ஸ்ரீ குன்றத்துக் குமரனை குறிப்பிட்டு இயற்றப்பட்டிருந்தது. மிகவும் அழகாகவும் ஆனந்தமாகவும் பாடியிருந்தார்கள். வாய்ப்பாட்டு சங்கீத அரங்கேற்ற நிகழ்ச்சியினை நிறைவு செய்ய திருப்புகழ், மற்றும் மங்களம் இசைத்திருந்தார்கள்.
நிகழ்ச்சிக்கு மேலும் அணிசேர்ப்பது போல் பிரபல மிருதங்க வித்துவான் ஸ்ரீ என்.ராமகிருஷ்ணன், வயலின் இசை வித்துவான் ஸ்ரீ பி.வி.ராகவேந்திர ராவ், இளம் கலைஞர்களான சாய் சாரங்கன் ரவிச்சந்திரா கடம், சாய் நிவேதன் ரவிச்சந்திரா கஞ்சிரா, வீணை இசையில் கஸ்தூரி சகாதேவன், தம்புரா இசையில் வேணுஷி பாலேந்திரன் ஆகியோர் பக்க வாத்திய இசைகளை நன்றாகவே வழங்கியிருந்தார்கள். அவர்களது சோலோ இசை மட்டுமல்லாது தனி ஆவர்த்தனங்களது இசைச் சங்கமம் என்பது நிகழ்ச்சிக்கு மெருகூட்டியது எனலாம்.
இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்த அனைவருக்கும் இனிதான, நிறைவான நன்றி உரைகளை இரு சகோதரிகளும் கூறினார்கள். அரங்கேற்றம் இனிதே நிறைவு பெற்றது.
இந்த நிகழ்வில் பல விடயங்களை முக்கியமாகப் பதிவு செய்ய விரும்புகின்றேன். எதிர்காலச் சந்ததியினரான அஞ்சலி, அஷ்வினி இளம் சகோதரிகள் பல ஆண்டுகளாக கர்நாடக சங்கீத சாஸ்திரீய இசை மற்றும் வீணை இசையை சங்கீத ஆசிரியை ஸ்ரீமதி சிவகங்கா சகாதேவனிடம் முறையாகப் பயின்று, மேலும் சங்கீத விற்பன்னர் ஸ்ரீமதி ஹேமலதா கணேசன் அவர்களிடம் இசை ஞானத்தினை வளர்த்து இளம் சந்ததியினருக்கு முன்மாதிரியாகவும், ஊக்குவிக்கும் முகமாகவும் கற்பனை வளத்தோடும், சங்கீத ஆலாபனைகளுடனும், அபாரமாக அரங்கேற்றம் செய்திருக்கின்றார்கள்.
இவர்கள் மெல்பேணில் கவின் கலை இசைக் கல்லூரி பிரபல வயலின்,வாய்ப்பாட்டு இசை ஆசிரியை ஸ்ரீமதி ரமா சிவராஜா அவர்களிடம் வயலின் இசை பயிலும் மாணவிகள் என்பது பல்கலை ஆர்வம் கொண்டவர்கள் என்பதற்கு சான்று பகர்கின்றது
இரு இளம் சகோதரிகளும் பெற்ற, கற்ற இசைஞானத்தை மற்றய சந்ததியினருக்கு எடுத்துச் செல்லப் போகின்றார்கள். இந்த நிகழ்வில் வீணை, கஞ்சிரா, கடம், தம்புரா ஆகிய வாத்தியக் கருவிகளை வாசித்தவர்கள் யாவரும் இங்கு முறையாகப் கலைகளைப் பயின்று தங்களது திறமைகளை வெளிக் கொண்டு வருகின்றார்கள். அனைத்து பார்வையாளர்களது இதயங்களையும் வருடி தமது திறமைகளால் இன்புறவைத்த பெருமையைப் பெற்றவர்கள் என்பதைக் கண்கூடாகப் பார்த்தேன். மெல்பேண் வானமுதம் வானொலியில் சிறுவர் சங்கமம் நிகழ்ச்சியின் ஊடாக அஞ்சலி தனது தமிழ் பேசும் திறமையைக் கொண்டு வந்தவர். அத்துடன் தமிழ் ஆராய்ச்சிக் கட்டுரையும் எழுதியிருந்ததோடு அதனை வானொலியூடாகவும் எடுத்து வந்திருந்தார்.
எனவே நிச்சயமாக எதிர்கால சந்ததியினருக்கு முன்மாதிரியாகத் திகழ்வார்கள் என்பதில் எதுவித சந்தேகமும் இல்லை. திறமைகள் எப்பவும் எந்த நேரத்திலும் வெளிவரலாம். இதற்கெல்லாம் அத்திவாரம் இட்ட பெற்றோருக்கும், குருவுக்கும் இந்த நேரத்தில் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்க விரும்புகின்றேன். அது மட்டுமல்லாமல் அஞ்சலி, அஷ்வினி இது ஒரு படிக்கல் இன்னும் எத்தனையோ இசை ஞானங்களைப் பெற்று பற்பல திறமைகளை அற்புதமாக வெளிக்கொணர வேண்டும். எல்லாம் வல்ல கலைவாணி அருள் பெற்று வளமுடனும் நலமுடனும் வாழ்க என வாழ்த்துகின்றேன்.

மெல்பேண் நவரத்தினம் அல்லமதேவன்

No comments: