.

பிரண்ட்லைன் நாளேடு அம்பலப்படுத்தும் மருத்துவ உலகின் அசிங்கங்கள் . . . .என்.சுபாஷ்.


Medicine-Imc_0
இந்தியாவில் மருந்து வணிகம் அதிக லாபம் ஈட்டும் தொழிலாக மாறியுள்ளது. அப்படி மாறியதால் கடும் போட்டியும் நிலவுகிறது.நம் நாட்டில் 1970 ஆம் ஆண்டில் அமலுக்கு வந்த காப்புரிமை சட்டத்தின் விளைவாக ஏராளமான இந்திய முதலாளிகள் மருந்து உற்பத்தி மற்றும் வணிகத்தில் இறங்கினர்.  நம் நாட்டில் மருந்துகள் வணிகப் பெயர்களில்( BRAND NAME) மட்டுமே வணிகம் செய்யப்படுகின்றது.. இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஏராளமான நிறுவனங்கள் மருந்து உற்பத்தி மற்றும் வணிகத்தில் ஈடுபட்டன….அதையொட்டி மருத்துவர்களும் மருந்துகளை அரசு மருத்துவமனை அல்லாத வெளிசந்தையில் வணிகப்பெயர்களிலேயே எழுத துவங்கினர்…இது நம் நாட்டில் தற்போது இருக்கும் நிலை.
இந்திய மருந்து சந்தை சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ளது. இதில் சிறு,நடுத்தர பெரிய மருந்து நிறுவனங்கள் தங்கள் மருந்துகளை பிரபலப்படுத்திட மருத்துவ பிரதிநிதிகளை நியமித்து மருத்துவர்களை சந்தித்து விற்பனையை செய்து வருகின்றனர்.. 1990களில் இந்தியாவில் உலகமயம் வந்ததின் விளைவாக போட்டி வெவ்வேறு வடிவங்களில் மாறியது.
உலக மயத்தின் விளைவாக அமெரிக்கா போன்ற நாடுகளில் முன்னணி மருத்துவர்களை ஒட்டு மொத்தமாக விலைக்கு வாங்குவது அதன் மூலமாக தங்கள் நிறுவனத்தின் மருந்துகளை பரிந்துரைக்க வைப்பது, அம்மருந்துகளின் பக்க விளைவுகளை மறைப்பது, ஆராய்ச்சி முடிவுகளில் வரும் பாதகமான விவரங்களை கூட வேறு காரணங்களை சொல்லி  சாதகமாக்கி கொள்வது போன்ற பல அம்சங்கள் இருக்கிறது என்பதை பல பன்னாட்டு மருத்துவ பத்திரிக்கைகள் அவ்வப்போது  அம்பலப்படுத்தியிருக்கின்றன. இது ஒரு சான்று.


இந்திய நிலை:

இந்தியாவின் முன்னணி ஆங்கில நாளேடான பிரண்ட்லைன் இந்தியாவில் விற்பனையில் முன்னணியில் உள்ள சன்பார்மா நிறுவனம் மேற்கண்ட பாணியில் செய்துள்ள , செய்து வருகிற முறையற்ற வணிக யுத்திகளை ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியுள்ளது. இந்தியாவில் உள்ள மருத்துவ கவுன்சில் வழிகாட்டுதலை முற்றிலுமாக புறந்தள்ளி , நேர்மையான வழிமுறைகளை கேலிக்கூத்தாக்கி, மருந்து விற்பனை தொழிலையே கொச்சைபடுத்தியுள்ளது. அதன் விவரங்களை ஆழ்ந்து படிக்கும் போது நம்மில் பலருக்கு ஆச்சரியமும் ,அதிர்ச்சியும் ஏற்படுத்தும். முன்னணி நிறுவனங்கள் மருத்துவர்களுக்கு விலையுயர்ந்த பரிசு பொருட்களை கொடுப்பது, வெளிநாடுகளுக்கு சுற்றுலா அழைத்து செல்வது, முக்கிய மருத்துவர்களை வைத்து கருத்தரங்கம் நடத்தி, அதன் மூலம் ஒரு கருத்துருவை உருவாக்குவது, மருத்துவமனைகளில் நீரழிவு, ஆஸ்துமா, இருதய நோய்கள் கண்டுபிடிப்பு முகாம் எனும் பேரில் மக்களை திரட்டி, அதன் மூலம் அம்மருத்துவர்களுக்கு நோயாளிகளின் முழு விவரங்களை அளித்து, அவர்களுக்கு தங்கள் நிறுவனத்தின் மருந்துகளை எழுத வைக்க நாடு முழுதும் பல வகைகளில் முறையற்ற வேலைகள் நடக்கின்றது. இப்படி நடக்கும் முறையற்ற விற்பனை யுத்திகளின் ஒரு பகுதியான மருத்துவர்களை வெளிநாட்டுக்கு உல்லாச பயணம் அழைத்து செல்வதற்கான 91 மருத்துவர்களின் விமான டிக்கட்டுகள் தங்களிடம் இருப்பதாக பிரண்ட்லைன் நாளிதழ் ஆதாரத்துடன் சொல்கிறது.
இந்தியாவில் கடைபிடிக்கப்படும் நீண்ட காலமாக பின்பற்றப்படும்  ஒழுங்கு முறை நெறிகளின் அடிப்படையில் இது போன்ற அனைத்தும் ஒழுங்கீனமானது. தவறானது. ஆனாலும் எந்த நிறுவனமும் பின்பற்றுவதில்லை.

குவிந்துள்ள ஆதாரங்கள்:

இந்தியாவின் முன்னணி நிறுவனமான சன் பார்மா மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படுகின்றது. மிக குறுகிய காலத்தில் மருந்து வணிகத்தில் பலரை பின்னுக்கு தள்ளி முன்னுக்கு வந்தது. எப்படி அந்நிலைக்கு வர முடிந்தது? பெரும்பாலும் அவர்களின் வியாபார அணுகுமுறை முறையற்ற விதம் தான். மருந்து விற்பனையில் உள்ள முறையற்ற வணிகத்தை   மிக நேர்த்தியாக பல ஆண்டுகளாக செய்து வருபவர்கள். மருத்துவர்களை தங்கள் நிறுவனத்தின்  மருந்துகளை எழுத வைக்க வெவ்வேறு விதமான திட்டங்களை கையாள்வது, அன்றாட பரிசோதனைகளில் வரும் முடிவுகளின் அடிப்படையில் தங்கள் நிறுவன மருந்து மட்டுமே சிறந்தது எனும் சிந்தனையை உருவாக்கி, அதை மட்டும் நோயாளிகளுக்கு பரிந்துரைக்க வைப்பது, எனும் சாகசத்தை இந்நிறுவனம் செய்கிறது. இப்படி பரிசோதனை செய்யும் மருத்துவர்களுக்கு பெரும் தொகையை சன்மானமாக அளிப்பது, அதன் மூலம் அதிகமான விற்பனையை பெறுவது எனும் சூழ்ச்சி இதில் உள்ளது.
சன்பார்மா நிறுவனத்துடன் இப்படி ஒப்பந்தம் செய்து கொள்ளும் மருத்துவர்கள் சுமார் 25 நோயாளிகளுக்கு அந்நிறுவனத்தின் மருந்துகளை பரிசோதிப்பதற்கு 1000ரூபாய் வீதம் கொடுக்கப்படுவார்கள். அதாவது ரூபாய் 25,000. இது மறைமுகமாக மருத்துவரை கறை படிந்தவராக மாற்றுவது……..   இப்படி பல மருத்துவர்களுக்கு கொடுக்கப்பட்ட ரூ 25,000 க்கான காசோலைகளின் ஜெராக்ஸ் நகல்கள் தங்களிடம் இருப்பதாகவும் பிரண்ட்லைன் நாளேடு சொல்லுகிறது. ஆனால் இதுவரை சன்பார்மா நிறுவனம் அதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை.
இன்னுமோர் ஆதாரத்தையும் அந்நாளேடு அச்சுக்கு கொண்டு வந்துள்ளது. கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த அந்நிறுவனத்தின் மண்டல மேலாளர் மருத்துவ பிரதிநிதிகளுக்கு கீழ்காணும் இமெயிலை அனுப்புகிறார்…இதோ அதன் சாரம்…..கோட்டயத்தில் நாம் செய்திருக்கும் முயற்சி நமக்கு கைமேல் பலனளிக்கும் .  அந்த நகரின் முக்கியமான குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் நம் மருந்துகளை எழுதுவதற்கு நம் திட்டங்களை ( காசோலை வாங்கி கொள்வது ) ஏற்றுக்கொண்டுள்ளார்… ஆகவே, இம்மாதம் முதல் நமது நிறுவன மருந்துகளின் விற்பனை பல மடங்காக அதிகரிக்கும். இதை கருத்தில் கொண்டு மொத்த விற்பனையாளரிடம் கூடுதல் இருப்பு வைத்திட ஏற்பாடு செய்யவும்.. இந்த இமெயில் உணர்த்துவது என்ன?   முறையற்ற வணிகத்தை ஊக்குவிக்கும் ஏற்பாடு…. இது பெரும் பனிப்பாறையின் நுனி மட்டுமே….
அந்த மேலாளர் மேலும் எழுதுகிறார்……நாம் பணம் வாங்கும்  மருத்துவர்களை கண்டறிந்து அவர்களை முறையாக “ கவனித்தால்” நமது  மாதாந்திர விற்பனை இலக்கை இலகுவாக  நிறைவேற்ற முடியும். . ஆகவே, முதலீடு செய்ய கூடிய மருத்துவர்களை விசேஷமாக தொடர்ந்து பார்த்து முதலீட்டுக்கு ஏற்ற விற்பனையை அவர்களிமிடமிருந்து பெறுவதற்கு நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். நம்முடைய கவனம் எக்காரணம் கொண்டும் சிதறி விடக்கூடாது. மேலும் இது போன்ற “ நல்ல “ மருத்துவர்களை தொடர்ந்து அடையாளம் கண்டு அவர்களுக்கான சேவையை செய்வது நமது விற்பனையை அதிகப்படுத்தும். இப்படி பல மருத்துவர்களை விலைக்கு வாங்கியது குறித்த அனைத்து ஆதாரங்கள் இருப்பதை குறிப்பிடுகிறது பிரண்ட்லைன்.
மருத்துவ உலகம் எந்த அளவுக்கு ஊழல் மயமாகி உள்ளது என்பதற்கு இது ஒரு சான்று.

முகாம்…ஒரு புது விதம்:

நம்மில் பலர் மருத்துவர்களை சந்திக்க செல்லும் போது சில மருந்து நிறுவனம் மருத்துவமனை வளாகத்தில் பெரிய பேனர்களை கட்டி,இலவச சிறப்பு மருத்துவ முகாம், நோய் கண்டறிதல் ,ரத்த சோகை  கண்டறிவது இலவசமாக ரத்த அழுத்தம்,கண்டுபிடிப்பு, போன்ற முகாம்கள் நடைபெறுவதை பார்த்திருப்போம்.இதுவும் ஒரு வகையில் முறையற்ற விற்பனை முறை. ஏனென்றால்,  மருந்து விற்பனை இரு சட்டங்கள் மூலம் நிர்வகிக்கப்படுகிறது. இந்த இரு சட்டங்களும் மருந்து விற்பனை நேரிடையாக இருக்கவேண்டும் எனவும், மறைமுகமாகவோ, வெளிப்படை தன்மை இல்லாதவாறு இருக்ககூடாது எனவும் பரிந்துரைக்கின்றது. ஆனால் நடப்பது என்ன?
பொதுவாக முகாம்கள் நடத்தப்படுவது விழிப்புணர்வை நோயாளிகளுக்கு உருவாக்கத்தான். ஆனால் இம்முகாம்களில் கலந்து கொள்ளும் நோயாளிகளுக்கு தங்களுக்கு உள்ள நோயின் தாக்கம் குறித்தோ, அல்லது அதனால் ஏற்படும் பாதிப்புக்கள் பற்றியோ விரிவான விபரம் தெரிய வாய்பில்லை. இந்த நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள மருந்து நிறுவனங்கள் ஒரு போதும் தயங்கியதில்லை. முகாம்களில் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொள்ளும் பலர் அந்நிறுவனத்தின் மருந்துகளை உட்கொள்ள வேண்டியவர்களாக மாற்றும் வேலைகளும் நடைபெறுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்னர் எங்கு பார்த்தாலும் ஹெபடைடிஸ் பி எனும் வைரஸ் நோய்க்கு எதிரான தடுப்பூசி  போடும் முகாம் நடத்தப்பட்டது…பள்ளி கூடங்களில் கூட அம்முகாம்கள் நடந்தது….ஏன்? புதிதாக விற்பனைக்கு வரும் ஒரு தடுப்பூசியை பிரபலமாக்க,பயன்பாட்டுக்கு கொண்டு வர அதை இந்தியாவில் அறிமுகப்படுத்திய கம்பெனி செய்த வேலை  ஒரு தேவையற்ற பயத்தை உருவாக்கியது.அதாவது அந்த ஊசி போட்டுகொள்ளாவிட்டால் உயிருக்கு ஆபத்து..ஏற்படும் எனும் சூழ்ச்சி பின்னலில் பலரும் சிக்கினார்கள்…மருந்து விற்பனை அமோகமாக நடந்தது ….ஆனால் இன்று உலக சுகாதார நிறுவனம் அனைத்து குழந்தைகளுக்கும் அவசியம் போட வேண்டிய தடுப்பூசி பட்டியலில் அதை இணைத்து விட்டது…கட்டாயமாக்கி விட்டது….எவ்வளவு வியாபார சாமர்த்தியம்….தொடர் சுரண்டல்…. மருந்து கட்டாயமாக்க படுவதற்கு முன்னரே மருந்து நிறுவனங்கள் ஒரு பயத்தை போலியாக உருவாக்கி அதன் மூலம் பெரும் லாபம் ஈட்டியுள்ளது.  சட்டங்களை தங்களுக்கு ஏற்றாற்போல் வளைக்கும் வல்லமை மருந்து நிறுவனங்களுக்கு இருக்கு என்பதற்கான அழிக்க முடியாத சான்று.

காற்றில் பறக்கும் விற்பனை நெறிகள்:

இந்தியாவில் வணிகத்தில் ஈடுபடும் அனைத்து கம்பெனிகளும் தங்களுக்குள் விற்பனையை முறைபடுத்தி கொள்ள ஒரு நெறி முறை அமலாக்க சட்டத்தை உருவாக்கினர். தங்களுக்குள் போட்டி இருந்தாலும், மருத்துவத்தின் புனிதம் காத்திட, மக்களுக்கு உண்மையான சேவை செய்திட, என பல விவரங்களை அடுக்கி கொண்டு போகும் அந்த பெரிய முன்வரைவு திட்டம் காகிதத்தில் தான் இருக்கிறது. நடைமுறையில் இல்லவே இல்லை.
தாங்கள் உருவாக்கிய சட்டத்தையே அவர்கள் பின்பற்றுவதில்லை. மாறாக சட்டத்தின் குறைபாடுகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு முறையற்ற வணிகத்தில் ஈடுபடுகின்றனர். இதில் எந்த நிறுவனமும் மற்ற நிறுவனங்களை குற்றம் சாட்டுவதில்லை. காரணம் எல்லோருமே ஒரே குட்டையில் ஊறி மட்டைகள்….அனைத்து நிறுவனங்களும் ஏதோ ஒரு வகையில் தங்களுடைய வியாபாரத்தை அதிகமாக்க, குறுக்கு வழியினை பின்பற்றுகின்றனர். இந்த அசிங்கங்களை துவக்க காலத்திலிருந்தே பொது வெளியில், ஊடகங்களில் அம்பலப்படுத்தி வரும் வேலையை அகில இந்திய மருத்துவ பிரதிநிதிகள் சம்மேளனம் செய்து வருகிறது. இவர்கள் எடுக்கும் சிறு முயற்சிகள் கூட தேசிய அளவில் பெரும் அங்கீகாரத்தை ஏற்படுத்தியுள்ளது என்று சொன்னால் மிகையாகாது.
நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என கண்காணிக்க வேண்டிய அரசு நிர்வாகம் மருந்து துறையை பொறுத்தவரையில் ஒருஅசையாத  கல்லாக மட்டுமே இருக்கிறது. மக்கள் எப்படி போனால் என்ன? கார்ப்பரேட்டுகளால் நமக்கு என்ன லாபம், வரவு என கணக்கு பார்க்கும் மோடி அரசு   எதையாவது செய்யுமா? கண்டிப்பாக செய்யாது.
மருந்து விற்பனை என்பது மனிதர்களின் உயிரோடு தொடர்புடையது. அதில் வணிக நோக்கம் மட்டும் இருக்க கூடாது.ஆனால் இன்று  அது மட்டும் தான் மேலோங்கி இருக்கிறது…மற்றவை எதுவும் இல்லை….லாபம், லாபம்,மேலும் லாபம் என்பது மட்டுமே குறிக்கோளாக இருப்பதால், நெறிமுறைகள் காலில் போட்டு மிதிக்கப்படுகின்றன. சமதளப்போட்டி என்று இல்லாமல், அசமத்துவ போட்டி நிலவுகிறது. இதில் யாரும் விதிவிலக்கல்ல…. அவரவர் தகுதிக்கேற்ப முறையற்ற வணிகத்தில் ஈடுபடுகின்றனர். தங்களின் நோய் குணமாகிட மிகுந்த எதிர்பார்ப்புடன் வரும் நோயாளிகளை  லாபத்திற்காக கொள்ளையடிக்க திட்டமிடும் மருந்து நிறுவனங்களின் லாப வெறியை கட்டுபடுத்திட  வேண்டாமா?
மருந்து துறையில் நடைபெற்று வரும் நெறி பிறழ் வணிகத்தை பல முறை ஆதாரங்களோடு சுட்டிகாட்டிய பிறகும் அரசுகள் ஏன் நடவடிக்கை எடுப்பதில்லை என்பது  மிக பெரிய கேள்வி….நிசப்தம் தான் அரசின் பதில்…..

எப்போது மாறும்:

சன்பார்மா மட்டுமல்ல….ஏராளமான பன்னாட்டு நிறுவனங்களும் மருந்து வணிகத்தில் மிகப்பெரிய தவறுகளை காலம்காலமாக செய்து வருகிறது.இது போன்ற முறையற்ற வணிகத்தில் ஈடுபடும் நிறுவனங்களின் பட்டியலை ஆதாரத்துடன் பல ஆண்டுகளாக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்ற போதும் யார் மீதும் இதுநாள் வரை ஒரு தண்டனை சட்டம் பாய்ந்ததில்லை. எல்லாம் சுத்தமானவர்கள் என அரசே சொல்லாமல் சொல்லுகிறது. தனக்கு பரிந்துரைக்கப்படும் மருந்து எதற்கு, அதன் பயன் என்ன, பக்க விளைவுகள் என்ன, பின்விளைவுகள் குறித்த அனைத்து விவரங்களும் நோயாளிகளுக்கு தெரிந்திட வேண்டும். அதே போல் தனக்கு கொடுக்கப்படும் மருந்து எந்த நிறுவனத்தினுடையது, அதன் தரம்  பற்றிய முழு விவரம் வேண்டும். இவை எல்லாவற்றையும் விட மருந்து விற்பனைக்கான கட்டுப்பாடு சிறிதளவு கூட தளர்த்தப்படாமல், நெறிமுறைகளோடு விற்க்கப்பட வேண்டும் .இப்படி செய்தால் மட்டுமே மருந்து விற்பனையின் கறைகள் அகற்றப்படும். இல்லையேல் இந்த களங்கம் என்றும் நீடித்து கொண்டே இருக்கும்.கடந்த 20 ஆண்டுகளாக இந்தியாவில் மருந்து துறை வணிகமயமாக மாறியுள்ள நிலையில் களங்கத்தை போக்க அரசை தலையிட வைப்பதே இன்றைய உடனடி தேவை.அப்படி செய்தால் மட்டுமே இந்த துறை பாதுகாக்கப்படும், சேவைத்துறையாக இருக்கும்.
ஆதாரம் பிரண்ட்லைன் ஆங்கில இதழ்  (மே மாதம் )
தமிழாக்கம். என்.சிவகுரு.

No comments: