வோட்டலூவில்* நான் By எச்.ஏ. அஸீஸ்



நெப்போலியனே
வோட்டலூவில்  நீ   தோல்வியுற்ற
போர்க் களத்தில்  நிற்கிறேன்
எல்லாத்  திசைகளையும்
ஏறெடுத்துப் பார்க்கிறேன்

இறுதியாக  நீ சூழப்பட்ட  வேளை
ஏது  உன்  மனதில்  தோன்றியிருக்கும்
உன் மீது  நீ  இட்ட   அபரிதமான   முதலீடா
பிறர் திறனில்  நீ  கொண்ட
இளக்காரக்   கணிப்பீடா,   இல்லை
எல்லையற்ற  வல்லமையின்
இருப்பிடம்  நீ  என  நினைத்ததுவா
எத்தனை  களங்களைக் கண்டவன் நீ
எத்தனை போர்க்களத்தை வென்றவன் நீ


இந்தப் போர்  முனையை
நீ   இழந்துவிடக்  காரணம்  ஏன்
உன் கடைசி   ராஜாங்கத்தின்
கடிவாளத்தில்   இருந்தனையோ
சரித்திரம்   உன்னை  வீரனாய்
விபரித்த  போதும்
என்ன   தரித்திரம்  ஆட்கொண்டது
இந்த விரிந்த  தரையில்  வந்து
வீரம்  காட்ட
அழிவின்  பாதையில்  நீ
அமைதி  தேடி   வந்தாயோ
இழிவின்   கொடுமையினை
எவ்வாறு  ருசித்திருப்பாய்
நிற்கிறேன்
நிதானித்து
நீ   தோல்வியுற்ற
போர்க்களத்தில் 
* Waterloo is where Napoleon was defeated in 1815.



No comments: