இலங்கைச் செய்திகள்


இலங்கையின் விமான சேவை விஸ்தரிக்கப்படும் : பிரதமர்

இலங்கையர்களை தடுத்து வைத்திருக்கும் மத்திய கிழக்கு.!

12ஆவது உலக இஸ்லாமிய பொருளாதார மாநாடு ஆரம்பம்

அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் ஆடி அமாவாசை தீர்த்த உற்சவம்

வைத்தியர்களுக்கு இரண்டாம்மொழி அறிவு கட்டாயமாக்கப்பட வேண்டும்

தமிழ் கலாசார முறைப்படி திருமணம் செய்த வெளிநாட்டு ஜோடி

விடோடோவை சந்தித்தார் பிரதமர் ரணில்

பிள்ளையானின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு.!

டென்மார்க் துணை விமானியான இலங்கை தமிழ் பெண்ணின் ஆசை ; வீரகேசரி இணையத்திற்கு வழங்கிய விசேட செவ்வி (காணொளி இணைப்பு)

இலங்கை வந்தார் நோர்வே பிரதமர்.!






இலங்கையின் விமான சேவை விஸ்தரிக்கப்படும் : பிரதமர்

01/08/2016 பொது மற்றும் தனியார் துறையினரின் பங்களிப்புடன் இலங்கையின் விமான சேவை விஸ்தரிக்கப்படுவதோடு அபிவிருத்தி செய்யப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இலங்கையின் சர்வதேச விமான நிலையங்களுக்கும் கொழும்பு “போர்ட் சிட்டி” (துறைமுக நகரத்துக்கிடையே) யையும் இணைக்கும் விமானச் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியங்களின் சிவில் விமான போக்குவரத்து இயக்குநர்களின் 53 ஆவது மாநாடு இன்று கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற்றது.   நன்றி வீரகேசரி 















இலங்கையர்களை தடுத்து வைத்திருக்கும் மத்திய கிழக்கு.!


01/08/2016 மத்திய கிழக்கு நாடுகளில் தொழில்புரியும் இலங்கையர்களை திருப்பியனுப்புவது தொடர்பில் அந்நாடுகள் இதுவரையில் எந்தவிதமான தீர்மானத்தையும் எடுக்கவில்லை எனத் தெரிவித்த வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மஹேஷிணி கொலன்னே.
இவ் விடயம் தொடர்பில் மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள இலங்கை கௌன்சியுஸர் பிரிவுகள் மற்றும் தூதரகங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார். 
இது தொடர்பாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மஹேஷினி கொலன்னே மேலும் தெரிவிக்கையில் மத்திய கிழக்கு நாடுகள் சவூதி அரேபியா, டூபாய் ஜோர்தான் உட்பட பல நாடுகளில் தொழில்புரியும் இந்தியத் தொழிலாளர்களை அந் நாடுகளில் நிறுவனங்கள் திருப்பி இந்தியாவுக்கு அனுப்பி வைக்கின்றன. 
இவர்களில் பெரும்பாலானோர் ஆண் தொழிலாளர்கள். கட்டட நிர்மாணப் பணிகள் உட்பட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள இந்திய ஆண் தொழிலாளர்களே இவ்வாறு மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
ஆனால் இலங்கையைப் பொறுத்தவரையில் மத்திய கிழக்கு நாடுகளில் பெருமளவில் பெண்களே வீட்டுப் பணிப் பெண்களாக தொழில் புரிகின்றனர். 
எனவே இதுவரையில் இலங்கைப் பணிப்பெண்களை திருப்பியனுப்புவது தொடர்பில் எந்தவிதமான தீர்மானத்தையும் மத்திய கிழக்கு நாடுகள் எடுக்கவில்லை. 
அது தொடர்பாக எந்தவிதமான அறிவிப்பும் எமக்கு விடுக்கப்படவில்லை.
அதேவேளை தற்போது மத்திய கிழக்கில் தோன்றியுள்ள நிலைமைகள் இலங்கை தொழிலாளர்கள் தொடர்பான விடயங்களை நாம் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றோம். 
மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்கள், கௌன்சியூலர் பிரிவுகளுடன் தொடர்பினை பேணி வருகின்றோம். 
இது வரைவில் எமது தொழிலாளர்களுக்கு எதுவிதமான பிரச்சினையும் இல்லை என்றும் மஹேஷணி கொலன்னே தெரிவித்தார்.   நன்றி வீரகேசரி 












12ஆவது உலக இஸ்லாமிய பொருளாதார மாநாடு ஆரம்பம்

02/08/2016 பொருளாதர வளர்ச்சியை பரவலாக்குதல் எதிர்கால வர்த்தகத்தை மேம்படுத்தல் எனும் தொனிப்பொருளில் 12 ஆவது உலக  இஸ்லாமிய பொருளாதார மாநாடு சற்று முன்னர் இந்தோனேசிய  தலைநகர் ஜெகர்த்தா மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமாகியது. 
இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விட்டுடு தலைமையில் ஆரம்பமாகியுள்ள இம்மாநாட்டின் அங்குரட்பண நிகழ்வில் பிதமர் ரணில் விக்கிரமசிங்க பாரியார் மைத்திரி விக்கிரமசிங்க மற்றம் அமைச்சர் கபீர் ஹசீம், இராஜங்க அமைச்சர்களான ஏ.எச்.எம்.பௌசி, சுஜீவ சேரசிங்க  ஆகியோர் பங்கேற்றுள்ளனர்
அத்துடன் மலேசிய பிரதமர் நஜீப் துன் அப்துல் ரஸாக்இ தஜிகிஸ்தான் ஜனாதிபதி எமோமாலி ரஹுமொன், கென்ய ஜனாதிபதி அல்பா கொண்கொண்டி, ஜோர்டானின் பிரதி பிரதமர், தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் சூமாவின் பிரதிநிதியாக மெயிட் நகோனா மஸ்கபானி, கட்டார் நாட்டு ஜனாதிபதி ஷேக் தமீம் பின் ஹமாட் அல் தானியின் பிரதிநிதியாக ஷேக் அஹமட் பின் ஜாசீம் அல் தானி,  நைஜீரியாவின் கைத்தொழில் மற்றும் வர்த்தக துறை அமைச்சர்அபுபக்கர், அல்ஜீரியாவின் கைத்தொழில் அமைச்சர் அப்டீசெலீம் புஜ்சோரிப், வியட்நாம் ஜனாதிபதி சார்பாக விசேட பிரதிநிதி டு தங் ஹாய், தாய்லாந்து பிரதமர் சார்பில் விசேட பிரதிநிதி விநிச்சய் சீம்சியங்  இஸ்லாமிய பொருளாதார மன்றத்தின் சார்பில் அஹமட் மொஹமட்  அலி உள்ளிட்ட  முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டுள்ளனர். 
உலக இஸ்லாமிய பொருளாதார  மன்றத்தின் தலைவர் துங்முஸா ஹைடம் ஆரம்ப உரையை நிகழ்த்தினார்.


இந்தோனேசிய நிதி அமைச்சர் முல்யானி இன்டிராவாட்டி சிறப்புரை வழங்கினார். 

இந்தேனேசிய ஜனாதிபதி ஜோகோ விட்டுடு  உரையாற்றியதோடு 12ஆவது உலக இஸ்லாமிய பொருளதார மாநாட்டை உத்தியோகபூர்வமாக  ஆரம்பித்து வைத்தார். 
மலேசிய  பிரதமர் நஜீப் துன் அப்துல் ரஸாக் விசேட உரையை ஆற்றினார். 
 பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட ஏனைய தலைவர்கள் உரையாற்றினர். 

நன்றி வீரகேசரி 














அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் ஆடி அமாவாசை தீர்த்த உற்சவம்


02/08/2016 கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடை சூழ சிறப்பாக நடைபெற்றது.
மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியனவற்றை ஒருங்கே கொண்ட மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவ பெருவிழா கடந்த சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
இராமயன போர் நிறைவுபெற்றதும் யுதத்தின்போது போது இராமபிரானால் கொல்லப்பட்டவர்களின் பிதிர்களினால் பிரம்மகத்தி தோசத்தினால் பீடிக்கப்பட்ட இராமன் மாமாங்கம் வந்து தீர்த்தக்கேணியை உருவாக்கி சிவலிங்க வழிபாடு மேற்கொண்டதாகவும் இதன்போது பிதிர் தோசம் நீங்கப்பெற்றதாகவும் வரலாறுகள் கூறுகின்றன.
அத்துடன் இராவணனால் வழிபடப்பட்ட ஆலயமாகவும் நீண்டகால வரலாற்றினைக்கொண்ட மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவ பெருவிழாவின் இறுதி உற்சவமான ஆடி அமாவாசை தீர்தோற்சவம் சிறப்பாக நடைபெற்றது.
ஆலயத்தில் வசந்த மண்டபத்தில் விசேட பூஜைகள் நடைபெற்று சுவாமி வீதியுலா வரும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து மாமாங்கேஸ்வரர் தீர்த்தக்கேணிக்கு சுவாமி கொண்டுவரப்பட்டு அங்கு விசேட பூஜைகள் நடைபெற்றது.
பூஜையினை தொடர்ந்து அடியார்களின் ஹரோகரா கோசத்துடன் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் கோலாகலமான முறையில் நடைபெற்றது.
இந்த தீர்த்தோற்சவத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டதுடன் தாய்தந்தையர்களை இழந்தவர்கள் தமது பிதிர்கடன்களையும் நிறைவேற்றினர்.   நன்றி வீரகேசரி 












வைத்தியர்களுக்கு இரண்டாம்மொழி அறிவு கட்டாயமாக்கப்பட வேண்டும்

03/08/2016 வைத்தியர்களுக்கு சிங்களம் மற்றும் தமிழ்மொழி அறிவு அத்தியாவசியமானதாகும். இதன் அடிப்படையில் அரச வைத்தியர்களுக்கு இரண்டாம்மொழி  அறிவு வழங்குவது தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை இணங்கண்டு அதனை கட்டாயமாக்குவதற்கான வேலைத்திட்டங்களை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டுமென அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
2007 ஆம் ஆண்டு அமுல்படுத்தப்பட்ட அரச அதிகாரிகளக்கான மும்மொழி கொள்கை மற்றும்  மும்மொழி அறிவின் அவசியம் தொடர்பான சட்டமூலம் நடமுறைக்கு வந்த போதிலும் 2013 ஆம் ஆண்டு அரச அதிகாரிகளுக்கு கட்டாயமாக்கப்பட்டது. இருந்த போதிலும் குறித்த சட்டமூலம் வைத்தியர்களுக்கு அத்தியாவசியமான தேவையாக உள்ளது.
நாட்டில் சகல பகுதிகளிலும் குறிப்பாக வடக்கு, கிழக்கு பகுதிகளில் பணிபுரியும் சிங்கள வைத்தியர்கள் தமிழ்மொழி மூல அறிவின்மையினால் பல்வேறு இடையுறுகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். அதனை போன்றே தமிழ் வைத்தியர்களும் சிங்கள மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் பல இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். இதனை நிவர்த்திக்கும் வகையில் தமிழ்மொழியை பயிற்றுவிக்கும் தனியார் நிறுவனம் (NITLAD) வைத்தியர்களுக்கு மொழிப் பயிற்சியினை வழங்கியது. 
ஆனால் சுகாதார அமைச்சுக்கும் குறித்த தனியார் நிறுவனத்திற்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சினை மற்றும் வளப்பற்றாக்குறை காரணமாக தற்போது இயங்கவில்லை. எனவே சுகாதார அமைச்சின் கண்காணிப்பில் மீண்டும் குறித்த நிறுவனத்துக்கு தேவையான அனைத்து வசதிகளை வழங்கி, வைத்தியர்களுக்கு மொழிப் பயிற்சியினை வழங்க வேண்டும் என்றார்.   நன்றி வீரகேசரி 












தமிழ் கலாசார முறைப்படி திருமணம் செய்த வெளிநாட்டு ஜோடி


03/08/2016 பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த ஜோடி ஒன்று தமிழ் கலாசார முறைப்படி திருமணம் செய்துகொண்டுள்ளனர்.
இச் சம்பவம்  திருகோணமலை திருக்கோணேஸ்வரா் ஆலயத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை  இடம்பெற்றுள்ளது.
நன்றி வீரகேசரி 















விடோடோவை சந்தித்தார் பிரதமர் ரணில்

03/08/2016 இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று காலை இந்தோனேசிய நேரப்படி 9.30 மணியளவில் ஜகர்த்தாவில் உள்ள ஜனாதிபதி அரண்மனையில் வைத்து சந்தித்தார்.
இந்நிகழ்வில் பிரதமரின் பாரியார், இந்தோனேசிய ஜனாதிபதியின் முதற்பெண்மணி, சர்வதேச வர்த்தக இராஜங்க அமைச்சர் சுஜீவ  சேனசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான கபீர் ஹாசிம், நல்லிணக்க இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம் பௌசி ஆகியோர் கலந்துகொண்டனர்.
இச் சந்திப்பின் போது, இலங்கையின் வர்த்தக பொருளாதார கலாசார துறைகளை மேலும் வலுப்படுத்த வேண்டும் என இந்தோனேசிய ஜனாதிபதி தெரிவித்தார்.
இதேவேளை தேசிய அரசாங்கம் பொருளாதாரம் அபிவிருத்தி நடவடிக்கைகளை சிறப்பாக முன்னெடுத்து வருவதாகவும் இந்தோனேசியாவுக்கு விஜயத்தை மேற்கொண்டமை  மகிழ்ச்சியளிப்பதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
நன்றி வீரகேசரி 










பிள்ளையானின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு.!

04/08/2016 கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தன் உட்பட நால்வரை எதிர்வரும் 11 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
குறித்த வழக்கின் விசாரணை இன்று நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதிபதி எம்.கணேசராஜா இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சித்;தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின்முன்னாள் தேசிய அமைப்பாளரும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா, கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் மற்றும் இராணுவப் புலனாய்வு உத்தியோகஸ்தர் எம்.கலீல் ஆகியோருக்கே விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
கடந்த 25.12.2015 அன்று மட்டக்களப்பு மரியாள் தேவாலயத்தில் நத்தார் ஆராதனையில் ஈடுபட்டிருந்த ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இக் கொலைச் சம்பவம் தொடர்பாக பிள்ளையான் உட்பட மேலும் நால்வர் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைகளுக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.    நன்றி வீரகேசரி 











டென்மார்க் துணை விமானியான இலங்கை தமிழ் பெண்ணின் ஆசை ; வீரகேசரி இணையத்திற்கு வழங்கிய விசேட செவ்வி (காணொளி இணைப்பு)

04/08/2016 நம்முடைய இனம் நிறைய வித்தியாசமான துறைகளை தேர்ந்தெடுத்து எல்ல துறைகளிலும் சிகரங்களை அடைய வேண்டும் என்பதே எனது ஆசையென டென்மார்க்கின் துணைவிமானியான இலங்கையின் தமிழ்ப்பெண் அர்ச்சனா செல்லத்துரை வீரகேசரி இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.
இலங்கை யாழ்ப்பாணம் வல்லையைச் சேர்ந்த அர்ச்சனா செல்லத்துரை, டென்மார்க் நாட்டின் முதலாவது தமிழ்ப் பெண் துணை விமானியாக கடமையாற்றி வருகின்றார்.
டென்மார்க்கில் ஆசிரியர் பயிற்சி முடித்து டேனிஸ் மொழி ஆசிரியையாக இருந்த இவர் , விமானியாக படிப்பதற்காக அமெரிக்கா சென்று மியாமியில் டீன் இன்ரநாஷனல் விமானிகள் கற்பித்தல் கல்லூரியில் படித்து சித்தியடைந்துள்ளார்.

இந்நிலையில் அவர் வீரகேசரி இணையத்தளத்திற்கு வழங்கிய விஷேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அதில் மேலும் தெரிவிக்கையில்,
விமானியாக வேண்டும் என்ற பயணம் இன்றோ நேற்றோ தொடங்கியதல்ல. நான் யார்? என்னால் என்ன முடியும்? இந்த சமுதாயத்திற்கு என்ன செய்யவேண்டும்  அது மட்டுமல்லாமல் பெண்களுக்கு நான் முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.
நான் விமானி படிப்பை முடித்து விட்டு எனது பேஸ்புக்கில் ஒரு பதிவொன்றை இட்டேன். நான் கொஞ்ம் கூட எதிர்பார்க்கவில்லை தமிழ் மக்களிடம் இருந்து இவ்வளவு அன்பும் ஆதரவும் எனக்கு கிடைக்குமென.
ஆனால் இந்த அன்பும் ஆதரவும் எனக்குமட்டுமல்ல எல்லா பெண்களுக்கும் கிடைக்க வேண்டும். அதேவேளை, பெண்களுக்கு மட்டுமல்ல நம்முடைய இனம் நிறைய வித்தியாசமான துறைகளை தேர்ந்தெடுத்து எல்ல துறைகளிலும் சிகரங்களை தொட வேண்டும் என்பதே எனது ஆசை என தெரிவித்துள்ளார்.   நன்றி வீரகேசரி 













இலங்கை வந்தார் நோர்வே பிரதமர்.!

04/08/2016 நோர்வே பிரதமர் ஏர்னா சொல்பேக் உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழு, இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டு வந்துள்ளனர். 
இவர்கள் இன்று காலை 9.55 மணிக்கு கட்டார் விமான சேவைக்கு சொந்தமான QR 664 விமானத்தில் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.
இலங்கைக்கு வந்துள்ள நோர்வே பிரதமர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அரசாங்க உயர் அதிகாரிகளைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.   நன்றி வீரகேசரி 



No comments: