ஏனையவர்களிலிருந்து கார்த்திகா வேறுபடும் விதம் – 16

.
நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்
 
  மகேந்திரவர்மன் என்ற பல்லவ மன்னன் கலைகள் பலவற்றிற்கு ஆதரவு கொடுத்து வளர்த்தவன் மட்டுமல்ல,  அவனே ஒரு சிறந்த கலைஞனாகவும் இருந்திருக்கிறான்.  பிரபலமான மத்தவிலாச பிரகசனம் என்னும் நையாண்டி நாடகம் அவனால் எழுதப்பட்டது. மகேந்திரவர்மன் நடனம், நாடகக் கலைகளில் வல்லவன் என்பதற்கு ஆதாரமாக அண்மையில் திருச்சியில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டின் மூலம் அறியமுடிகிறது. எனது நடன ஆய்வின்போது அவன் எழுதிய நகைச்சுவை நாடகம் ஒன்று கிட்டியது. இந்நாடகம், நகைச்சுவை நாடகம் எவ்வாறு அமையவேண்டும் என்பதற்கு அவன் எடுத்துக்காட்ட எழுதியது என்று கூறப்படுகிறது.



  “பிரகசனம்” என்ற இந்நாடகத்தை நாட்டியமாக்கலாம் என எண்ணிய சமயத்தில் “வீரகேசரி” பத்திரிகையின் 50-ஆவது ஆண்டு விழாவை விமரிசையாகக் கொண்டாடத் திட்டம் தீட்டினர். என்னையும் நாட்டிய நிகழ்ச்சி தயாரித்துத் தரும்படி கேட்டனர். அதற்காகத் தயாரித்த நாட்டியம் ‘வேண்டாத வித்தை’ மகேந்திரவர்மனால் எழுதப்பட்ட பிரகசனமே.

   இதுதான் கதை – ஆடல் நங்கை ஒருத்தி தன் காதலனைத் தேடி நந்தவனத்தில் உலாவுகிறாள். வந்தவள் அங்கே ஆடிப்பாடி களித்தவண்ணம் இருந்தாள்.  அச்சமயம் யமலோகத்தில் இருந்து பூலோகம் வருகை தந்த இரு யமதூதுவர்கள் அவள் வனப்பிலும் ஆடலிலும் மயங்கி நின்றனர். பூலோகத்தில் குறித்த நேரத்தில் ஒருவரின் ஆயுளை முடிக்கவேண்டியது அவர்கள் கடமை. நேரம் தவறாது செயல்படவேண்டும். யமதூதரோ, ஆடல் நங்கையின் வனப்பில் மயங்கி நின்றமையால் போகவேண்டிய இடத்திற்குப் போவது தாமதமாகி விடுமோ, குறித்த நேரம் தவறாது உயிரை எடுத்தாகவேண்டுமேஉ வேறு வழியில்லாமையால் உடனடியாக ஆடல் நங்கையின் உயிரையே பாசக்கயிற்றால் கவர்ந்து எடுக்கிறார்கள்.

   அச்சமயம், ஒரு முனிவரும் சிஷ்யனும் நந்தவனத்திற்கு வந்தார்கள். இறந்த உடல் ஒன்று இருப்பதைக்கண்ட முனிவர், உயிர் கூடு விட்டுக் கூடு செல்லும் வித்தையை சிஷ்யனுக்கு போதிக்க இதுவே நல்ல நேரம் எனக் கருதினார். உயிரற்ற உடல் ஒன்று உள்ளதல்லவா, பயன்படுத்திவிடலாம் என எண்ணிய அவர், தன் உயிரை அந்த இளம்பெண்ணின் உயிரற்ற உடலில் செலுத்தினார். தற்போது முனிவர் உயிர் இளம்பெண்ணின் உடலில். ஆனால் அவர் குணத்தால் முனிவரேதான். உடல்தான் இளம்பெண்ணானது.

   அதே சமயம் யமலோகத்தில் தப்பான உயிரை எடுத்துவந்துவிட்டீர்கள், அதை மறுபடியும் அவளது உடலில் செலுத்திவிட்டு வாருங்கள் என யமதர்மராஜா கோபமாக தூதுவரை பூலோகம் அனுப்பிவிட்டார். இளம்பெண்ணின் உயிருடன் திரும்பிய யமதூதுவர், அவள் உடல் உயிர்பெற்று  நடமாடுவதைக் கண்டு திகைத்தனர். இருந்தும் அதே பூங்காவில் உயிரற்ற முனிவரின் உடல் இருப்பதைக் கண்டு இளம்பெண்ணின் உயிரை முனிவர் உடலில் செலுத்திவிட்டு சென்றனர். முனிவர் உடலில் இளம்பெண்ணின் உயிர். இளம் நாட்டியக்காரியல்லவா? அவள் தனக்கே உரிய தளுக்கு குலுக்கு நடையில் உலவுகிறாள்.

   அவளது காதலன் அங்கு வந்தவன் அவள் என எண்ணி பெண் உருவில் இருக்கும் முனிவரை அணைக்க நெருங்குகிறான். முனிவரோ (பெண் உருவம்) ‘வேண்டாம், தள்ளி நில்’ என்று விலகுகிறாள். இளைஞன் தான் தாமதமாக வந்ததால்  அவள் கோபமாக இருப்பதாக எண்ணி அவளை மேலும் மேலும் அணைக்கமுயல, முனிவர் (பெண் உரு) ஓடுகிறார். ஆனால் பெண்ணோ (முனிவர் உருவம்) தன் காதலன் எதற்காக தன்னை அணுகாது பிறிதொரு பெண்ணின் பின் ஓடுகிறான் என அவனைக் கலைக்கிறாள். இவ்வாறாக மூவரும் ஒருவரை ஒருவர் துரத்தி மேடையைச் சுற்றி ஓட, பார்வையாளர்கள் வயிறு குலுங்கச் சிரித்தார்கள்.

   இருதள மேடை அமைத்திருந்தேன். மேல்தளத்தில் (யமலோகத்தில்) இருந்து பூலோகத்தில் நடப்பதைக் கண்ணுற்ற யமதர்மராஜன், இனிமேல் பூலோகத்தில் யாருமே கூடுவிட்டுக் கூடு தாவும் வித்தையைக் கையாளக்கூடாது. இது பூலோகவாசிகட்கு ‘வேண்டாத வித்தை’ எனவும் இத்தகைய வித்தை உயிர்களை நேரம் தவறாது எடுப்பதற்கு பாதகமாக அமையும் எனவும் கூறினார். இருவர் உயிர்களையும் அவரவர் உடலுக்குள் செலுத்த பிரச்சனைக்குத் தீர்வு கண்டார்.

   1977-ஆம் ஆண்டு வீரகேசரி பத்திரிகை தமது 50 ஆண்டுகள் நிறைவு விழாவை வெகுவிமரிசையாக நடத்தத் திட்டம் போட்டனர். விழாவில் நாட்டிய நிகழ்ச்சி நடத்தும்படி என்னைக் கோரினார்கள். எனது ‘உழைப்புயர’ ‘வேண்டாத வித்தை’ என்ற இரு நாட்டியங்களைத் தயாரித்தேன்.

11.05.1977 –வீரகேசரி
    - சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் திரு. பாலசுப்ரமணியம்.

   ‘தமிழகத்தில் கண்டிராத புதுமையைக் கண்டேன். முத்தமிழ் வளர்ச்சிக்காக செட்டிநாட்டரசர் ஏற்படுத்திய  ஆலோசனைக்குழுவில் பலகாலம் கடமை ஆற்றினேன் என்ற முறையில் இங்கு நடந்த நாட்டிய நாடகம் வெகு நன்றாக இருந்தது என்று மனப்பூர்வமாகச் சொல்ல விரும்புகிறேன். ஈழத்தில் நாட்டியக்கலை இவ்வளவுதூரம் வளர்ந்துள்ள நிலையைக் காண்பது எனக்கு உவகை கலந்த வியப்பை அளக்கிறது. தொன்மை சிறப்பு வாய்ந்த பரதக்கலைக்கு புது மெருகு ஊட்டியுள்ளன, இன்றைய இரு நாட்டியங்களும்’ என்றார்.

   அன்றைய நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கியவர் வண.தணிகாசலம் அடிகளார். சென்னை பல்கலைக்கழகப் பேராசிரியர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

   ‘உழைப்புயர’ ‘வேண்டாத வித்தை’ ஆகிய இரு நாடகங்களும் றோயல் இந்து மாணவரின் மன்றத்தின் நிதி உதவிக்காக நடைபெற்றது.

  அதற்கான விமர்சனம் 10.09.1978 தினகரன் பத்திரிகையில்..

‘அரங்கு கண்டவை’ என்ற தலைப்பில் அபயவன் விமர்சித்திருந்தார். அதன் ஒரு பகுதி.

 ‘நமக்குத் தொழில் கவிதை,  நாட்டிற்குழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல்’ என்பது பாரதி கூற்று.

இன்றோ, ‘நமக்குத் தொழில், இலட்சியம், ஓய்வு என எனை இமைப்பொழுதும் சோராமல் இருப்பதற்கு உதவுவது யாவுமே நாட்டியமே’ என்கிறார் கார்த்திகா.

  றோயல் கல்லூரி மண்டபம் ‘நவரங்கலாவில்’ அன்று இரண்டு நாட்டிய நாடகங்கள் இடம்பெற்றிருந்தன. மாமல்லன் மகேந்திர பல்லவன் எழுதிய கதையொன்றினை முதன்முதலில் மேடைக்கு தயாரித்தப் பெருமை திருமதி கார்த்திகாவிற்கே உரியது. ‘வேண்டாத வித்தை’ எனும் இந்நாட்டியத்தில் இளைஞர்கள் பலர் சிறப்புடன் ஆடி ரசிகர்களின் பாராட்டைப் பெற்றனர். குறிப்பாக யமனாக வந்து ஆடிய தமேந்திரனும் கிங்கரனாக (யமதூதன்) தேவ மனோகரனும், முனிவராக வந்த நிர்மலா நடராஜாவும், காதலனாக வந்த அமிழ்தன் கணேசரும் பாராட்டிற்குரியவர்கள்.

   ஹாஸ்ய நாடகத்தைத் திராவிட இலக்கணத்தில் ‘பிரகசனம்’ என்பார். மூலக்கதையில் நோக்கம் குன்றிவிடாமல் நாடகம் முழுவதும் ஹாஸ்யம் இழையோடும் வண்ணம் நாட்டியத்தைத் தயாரித்தமை கார்த்திகாவின் திறமைக்கு ஒரு சான்றாகும். அடுத்ததாக ‘உழைப்புயர’ எனும் நாட்டியம் மனிதகுலம் சீரும் சிறப்புடன் வாழ்வதற்கு மக்களின் உன்னத உழைப்பும், தன்னம்பிக்கையும் வேண்டும் என்பதே இந்நாட்டியத்தின் செய்தி. பாடல்கள் ஒன்றுமே இன்றி முற்றிலும் இசையுடன் ஆக்கப்பட்டது இந்நாட்டியத்தின் செய்தியினை தெளிவாகப் புரியவைக்கத் தவறவில்லை. பல அரிவையரும், ஆடவரும் திறம்பட ஆடி நாட்டியத்தின் நோக்கத்தினைப் புலப்படுத்தினர். மொழியின் தடையின்றி உலக மக்கள் யாவருமே இந்நாடகத்தினைப் புரிந்து மகிழும் வாய்ப்பை ஏற்படுத்திய திருமதி கார்த்திகா கணேசர் கலை உலகின் பாராட்டுக்குரியவர். 

No comments: