.
#அப்பா தமிழ் சினிமா வெளியில் மிகவும் மரியாதைக்கும் வணக்கத்திற்கும் உரிய திரைப்படங்களில் ஒன்றாகி இருக்கிறது.
சமுத்திரக்கனி என்கிற தனிமனிதன்… அவனது படைப்பின் வழியாக மிகப்பெரியதொரு கேள்வியை உங்கள் முன் வைக்கிறான். மிகவும் அதிமுக்கியமான அவசியமான ஒரு மாற்றத்தை உங்களிடத்தில் எதிர்பார்த்து நிற்கிறான்.
தினசரி… காலையில் எழுந்து குழந்தைகளை பள்ளிக்கு படு சிரத்தையாக அனுப்புகிற அம்மா, அப்பாவா நீங்கள்?
ஆம் என்றால்… இது நீங்கள் பார்க்க வேண்டிய படம்.
உங்கள் குடும்பத்தில் உங்களுக்கு அடுத்தபடியாக பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப தயாராகிக்கொண்டிருக்கும் அப்பா, அம்மாக்கள் இருக்கிறார்களா….?
ஆம் என்றால்… இது அவர்களுக்கான படம்…
கல்வி என்ற பெயரில் இன்றைய தேதியில் நாம் அத்தனை பேரும் அடிக்கிற கேலிக்கூத்தை திரையில் பார்த்து… நீங்கள் சிரிப்பீர்களா? சிந்திப்பீர்களா?
அல்லது சிரித்து சிந்தித்துவிட்டு… மறுநாள் காலையில் அதே பழைய குருடியாய் கதவு திறப்பீர்களா என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
சரியாக உச்சாவும் கக்காவும் போகக்கூட பழகி இருக்காத ஒண்ணரை அடி குழந்தைகள் கிட்ட புராஜெக்ட் புராஜெக்ட்னு ஒண்ணு செய்யச்சொல்லி கேட்பாங்க பாருங்க…
விடிய விடிய நாமே உட்கார்ந்து வெட்டி ஒட்டி… படாத பாடு பட்டு ஸ்கூல்ல கொண்டு போய் சேர்ப்போம். அப்டி நமக்கு செய்ய முடியலன்னா… பக்கத்து வீடு.. எதிர்த்த வீடு..ன்னு எங்கயாவது ஒரு பொண்ணுகிட்ட பையன்கிட்ட கெஞ்சி செய்ய வச்சி வாங்கிருவோம்.
அதுவும் இல்லையா?… ஸ்டேஷனரி ஸ்டோர்ல ரெடிமேட் ஆக வச்சிருப்பாங்க… காசு கொடுத்து வாங்கி கொண்டு போய் கொடுத்து… மிஸ் கிட்ட குட் வாங்கி பெருமைப்பட்டுக்குவோம்.
வெக்கமா இல்லையா உங்களுக்கு? என்று கேட்காமல் கேட்கிறார், சமுத்திரக்கனி என்கிற தயாளன் ஆகிய இந்த அப்பா.
நாலு வயசு பிள்ளையும் அஞ்சு வயசு பிள்ளையும் எப்டிங்க புராஜெக்ட் செய்யும்…. அதுவும் பக்கா பெர்ஃபெக்டா வேணும்.. பார்த்தா வீட்டுக்கு எடுத்துட்டு போயி வச்சிக்கணும்ணு தோணணும்.
படிக்கிறது புள்ளைங்களா? அப்பா அம்மாவா? எதிர்த்த வீட்டு பொண்ணா? பக்கத்து வீட்டு பையனா? ஸ்டேஷனரி கடைக்காரரா?
இப்டி உங்களுக்கு கேட்கவே தோணலையா?
இப்டி எல்லாம் உங்களுக்கு யோசிக்கவே தோணலையா? என பொருமுகிறார், இந்த அப்பா.
இப்படித்தான் அப்பாக்கள் இருக்கவேண்டும் என ஏங்க வைக்கிற அப்பாவாக… சமுத்திரக்கனியாகிய தன்னையும்…
இப்படியே எல்லா அப்பாக்களும் இருந்தால் நாங்க என்ன செய்ய முடியும் என்று குழந்தைகள் கதறுகிற ஒரு அப்பாவாக… தம்பி ராமய்யாவையும்…
அச்சு அசலாக திரையில் வடித்தெடுத்திருக்கிறார், சமுத்திரக்கனி.
இவர்கள் இரண்டு பேர் மாதிரியும் இல்லாமல் புது மாதிரியாக இன்னொரு அப்பா, நமோ நாராயணன்….
“இருக்கிற இடம் தெரியாம இருந்துட்டுப் போயிரணும்டா” என்று புத்தி?! புகட்டும் அப்பா…
இதில் எந்த அப்பா நீங்கள் என்று தெரிந்து கொள்ள “அப்பா” பாருங்கள்…
இதில் எந்த அப்பா உங்கள் அப்பா என்று தெரிந்து கொள்ள “அப்பா” பாருங்கள்…
90% க்கு மேல மார்க் எடுத்தா தான் ஸ்கூல்ல சீட்டே தருவாங்களாம்? அப்போ உங்க ஸ்கூல் எதுக்கு?
ஒட்டு மொத்த கடல் பரப்பை விடவும்.. தனியார் கல்வி நிலையங்கள் என்ற பெயரில் ஆக்ரமிக்கப்பட்டுள்ள ஆளுமை செய்கிற நிலப்பரப்பு அதிகமாக இருக்கும் போல.
எவ்வளவு பெரிய கட்டடங்கள்… நுழை வாயில்கள்..
ஒவ்வொரு நாளும் நம் தாய்மார்களின் பேராதரவோடு முளைத்துக்கொண்டே இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா?
ஒன்றுமே தெரியாமல் பிரைவேட் பள்ளியில் தன் குழந்தையை சேர்க்கவேண்டும்… என்று கையைக்கிழித்து கணவனை பிளாக் மெயில் செய்து அடம்பிடிக்கும் ஒரு மனைவியாகிய அம்மா.
சமுத்திரக்கனியின் மனைவி, ப்ரீத்தி என்கிற மலர்
ஒன்றையுமே சொல்ல முடியாமல் கணவன் சொல்வதை மட்டும் கேட்டு வாழ்கிற இன்னொரு சராசரி மனைவியாகிய அம்மா.
தம்பி ராமய்யாவின் மனைவி, வினோதினி என்கிற ராணி.
இந்த இரண்டில் எது நீங்கள் என்று தெரிந்து கொள்ள “அப்பா” பாருங்கள்.
இந்த இரண்டில் எது உங்கள் அம்மா, உங்கள் மனைவி, உங்கள், சகோதரி…. என்று தெரிந்து கொள்ள “அப்பா” பாருங்கள்.
தனியார் பள்ளிகள்… அதிசயமானவை அற்புதமானவை என்று சொல்ல வைக்க அவர்களே… பெற்றோர்களிடம் கறந்த பணத்தை வைத்து கோடிகளில் விளம்பரம் செய்வார்கள்.
உதாரணத்திற்கு இப்போது டிவிக்களில் கடுப்பேற்றுகிற அந்த சமையல்கலை பயிற்சிப்பள்ளி.
பேசாம பிரதமர் கிட்டயும் ஜனாதிபதி கிட்டயும் சொல்லி… இந்தியர்கள் அவ்ளோ பேரையும் அவங்க கிட்ட சமையல்கலை கத்துக்கச்சொல்லி வெளிநாட்டுல வேலை வாங்கிக்கொடுக்கலாம் போல…
அவ்ளோ விளம்பரம்….
ஒவ்வொரு தனியார் “கல்வித்தொழில்” கம்பெனியும் தங்கள் கம்பெனிகளை ஆகச்சிறந்ததாக ஊர் உலகத்துக்கு காட்ட எந்த லெவலுக்கும் போவார்கள் போல. ஒவ்வொரு கம்பெனியிலும் குறைந்த பட்சம் நாலைஞ்சு நான் கடவுள் ராஜேந்திரன்களை அதற்கென்றே வைத்திருப்பார்கள் போல.
அந்த சூட்சுமம் புரியாமல் நீங்கள்… உங்கள் குழந்தைகளை சிறைக்கு அனுப்பிவிட்டு பெருமை பீற்றிக்கொள்கிறீர்கள் என்று தடவிக்கொடுத்து புரியவைக்கிறார், தயாளன் என்கிற இந்த அப்பா.
சமுத்திரக்கனியின் கதாபாத்திரத்திற்கு மிகவும் ஆதரவாக அதற்கு முந்தைய தலைமுறை கதாபாத்திரத்தில் பக்குவப்பட்ட மனிதராக, மனைவியின் அப்பாவாக, மாமனாராக, தாத்தாவாக… வேல.இராமமூர்த்தி… சிறப்பு அய்யா.
சிறுவன் என்பதில் இருந்து வாலிபன் என்பதற்குள் நுழையும்… ஒவ்வொரு இந்திய ஆண் குழந்தையும் தன் வயதுக்கு நிகரான பெண் குழந்தையை பார்க்கும்போது… ஏற்படுகிற பருவமாற்றத்தை… பதற்றத்தை… “ஒண்ணுக்கு வருதுப்பா” என்று புரியவைக்கும் காட்சி… அதைத் தொடரும் காட்சிகள்…
அய்யோ… இந்த உளவியல் பிரச்சினை தானே, சுவாதியை சிதைத்தது, அய்யோ… இந்த உளவியல் பிரச்சினை தானே வினுப்பிரியாவை தற்கொலைக்கு தூண்டியது என்று புரிந்துகொண்டு… உங்கள் பிள்ளைகளுக்கும் புரிய வையுங்கள் என்று கெஞ்சுகிறது.
முந்தானை முடிச்சு போல பாக்யராஜ் படங்களை நினைவூட்டும் அர்த்தமுள்ள வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நகைச்சுவைகள்… அச்சமில்லை அச்சமில்லை… போல பாலச்சந்தர் படங்களை நினைவூட்டும் ஆழமான வசனங்கள்… என சிரிப்பலைகளில் அதிர்கிறது திரையரங்கம்.
சமுத்திரக்கனியின் மகனாக விக்னேஷ்,
தம்பி ராமய்யாவின் மகனாக ராகவ்…
நமோ நாராயணனின் மகனாக நஷாத்,
மற்றும் சிறுமிகள் யுவலஷ்மி., கேப்ரியெல்லா…
என அனைவரும் உங்களை ஆச்சர்யப்படுத்துவார்கள். குலுங்கி குலுங்கி சிரிக்க வைப்பார்கள், குலுங்கி குலுங்கி அழ வைப்பார்கள்.
படத்தின் இறுதிக்காட்சியில் தன் ஒட்டு மொத்த அன்பையும் தன் நண்பனின் அப்பா, தம்பி ராமய்யாவின் கைகளில் நிரப்பும்.. அந்த அம்பேத்கர் நகர்… சிறுமியின் கதாபாத்திரத்தின் மூலமாக சமுத்திரக்கனி செய்வதெல்லாம் மிகப்பெரிய சமத்துவ போதனை.
இளையராஜா… திரையில் நகரும் ஒவ்வொரு உயிரின் உணர்வோடும்.. திரையில் அசையும் ஒவ்வொரு முகத்தின் உணர்வோடும்… தன் இசையால் நம்மை இணைக்கிறார்.
இந்தப்படம் பார்த்து… எத்தனை அப்பாக்கள், எத்தனை அம்மாக்கள் மனம் மாறுவார்கள் என்பதில் எனக்கு அப்படி ஒன்றும் பெரிய எதிர்பார்ப்பு இல்லை என்றாலும் ஒரே ஒரு அப்பா மனம் மாறினால்… தயாளன் போல ஒரே ஒரு அப்பா உருவானால்… அதுவே பெரும் புரட்சி. மகிழ்ச்சி.
இந்த நேரத்தில் தன் குழந்தைகளை அரசுப்பள்ளியில் தான் படிக்க வைப்பேன், என்ற என் தன் மன உறுதியில் பின்வாங்காமல் அதை செயல்படுத்தி இருக்கும், நண்பர் ராஜிவ் காந்திக்கும் அவரது மனைவிக்கும் இனிய வாழ்த்துகள்.
ராஜிவ்காந்தி போல நம்மால் இருக்க முடியவில்லையே என்ற அங்கலாய்ப்பு எனக்குள் இன்னும் இருக்கிறது. அது இந்த வருடம் பீஸ் கட்டமுடியாமல் திணறியபோது இன்னும் அதிகரித்திருக்கிறது.
ஏன் எனில்… பள்ளிக்கூடங்களில் கற்கின்ற கல்வி மட்டுமே அறிவையும், வாழ்க்கையையும் தீர்மானிக்கிறது என்பதில் என்னால் எப்போதும் உடன்படவே முடியாது.
பாவம், இந்த அப்பா படத்தை பார்த்துவிட்டு பல அப்பாக்களால், அம்மாக்களால் புலம்ப மட்டுமே முடியும். அதைத்தாண்டி வேறு எதையும் செய்ய முடியாது.
செய்யவேண்டியது யார்….. அரசு தான்..
மேலும் மேலும் தனியார் கல்வி கம்பெனிகளுக்கு அனுமதி கொடுப்பதை அரசு தான் நிறுத்த வேண்டும். முடிந்தால் அத்தனை தனியார் கல்விக்கம்பெனிகளையும் இழுத்து மூட வேண்டும்.
அதைச்செய்ய மக்கள் தான் போராட வேண்டும். எப்போது?
——————
அப்பாவின் தயாரிப்பாளர், இயக்குநர் சமுத்திரக்கனிக்கும் அவரது குழு உறுப்பினர்கள் அத்தனை பேருக்கும் மானசீகமான ஒரு வணக்கம். மரியாதை நிறைந்த வாழ்த்துகள். உணர்ச்சிப்பூர்வமான நன்றிகள்.
nantri http://maattru.com/
No comments:
Post a Comment