இறைவனாய் வாழுகின்றார் ---- எம் . ஜெயராமசர்மா அவுஸ்த்திரேலியா ]

.
    தப்பாகப் போகாமல் தடுத்திடுவார் எங்களப்பா
    எப்போதும் எம்நினைப்பாய் இருந்திடுவார் எங்களப்பா
    அப்பாவி போலவவர் அயலார்க்குத் தோற்றிடினும்
    அப்பாவின் அறிவுத்திறன் ஆருக்கும் இல்லையென்போம் !

    ஆங்கிலத்தைப் பேசுகின்ற ஆற்றலில்லா எங்களப்பா
    அழகுதமிழ் பேசிநின்றால் அனைவருமே அசந்திடுவர்
     பட்டிமன்றம் கவியரங்கம் ஏறிநிற்பார் எங்களப்பா
     பரவசமாய் அவர்படையல் பாங்குடனே வந்துநிற்கும் !

     ஆடம்பரம் அறியாமல் வளர்ந்துவிட்டார் எங்களப்பா
     அறிவுடனே ஆராயும் ஆற்றலுள்ளார் எங்களப்பா
     வீணான வார்த்தைகளை விரும்பாதார் எங்களப்பா
     விருப்புடனே தேர்ந்தெடுத்து விளம்பிடுவார் வார்த்தைதனை !


      ஓடியாடி நின்றிடுவார் ஓயாமல் உழைத்திடுவார்
      ஓய்வெடுப்பு எனும்வார்த்தை உள்ளமதில் அவர்க்கில்லை 
      வாடிநிற்பார் முகங்காணின் மனமார உதவிநிற்பார்
      மாமனிதர் எங்களப்பா வாழ்வாங்கு வாழவேணும் !

       வடமொழியில் வல்லுனராய் எங்களப்பா இருப்பதனால்
       வாத்தியார் எனும்பெயரால் வரவேற்பார் யாவருமே 
       உபநிடதம் விளக்கமெல்லாம் ஒழுக்காக விளக்கிநிற்பார்
       அவர்மீது எம்மதிப்பு அதிகரித்தே வருகிறது !

       வெள்ளைவேட்டி சால்வையுடன் வெளியிலவர் போய்வருவார்
       உள்ளமதில் கள்ளமதை உதறியே எறிந்துநிற்பார்
       பள்ளமதில் வெள்ளம்போல் பாய்ந்துவரும் கருணையினால்
       பலபேரின் துயர்துடைக்கப் பாடுபட்டார் எங்களப்பா !

       குங்குமப் பொட்டுடனே குதூகலிக்கும் அவர்முகத்தில்
       மங்காத காந்தசக்தி மலர்ந்தபடி அமைந்திருக்கும்
       பொங்கிவரும் பக்திதனை இங்கிதமாய் உரைத்துநிற்கும்
       எங்களது அப்பாவை என்னாளும் வியந்துநிற்போம் !

       கோவில்சென்று கும்பிடுவார் குறைசொல்லல் தவிர்த்திடுவார்
       யார்மனமும் நோகாமல் நல்லதெல்லாம் எடுத்துரைப்பார்
       கூர்மைநிறை கருத்தையெல்லாம் கொண்டுவந்து அளித்திடுவார்
       வாய்மைதனை வாழ்வியலாய் வாழ்ந்துநின்ற எங்களப்பா !

       கடவுளில்லை என்பார்க்கு கவனமாய் பதிலுரைப்பார்
       கடவுளினைக் காணுதற்கு கண்ணியமே தேவையென்பார்
       கண்ணியத்தை உணராதார் கடவுள்பற்றி உணரார்கள் 
       கண்ணியத்தை வளர்த்துவிட்டு கடவுளையே தேடுஎன்பார் !

        சித்தரது தத்துவத்தை சிரசின்மேல் வைத்திடுவார்
        அத்தனையும் தமிழினத்தின் சொத்தெனவே சொல்லிநிற்பார்
        நாத்திகம் முழங்கிடுவார் நம்சித்தர் வழிபார்க்கின்
        ஆத்தீகம் எனும்வழியே அவர்க்கு நட்பாகுமென்பார் !

       வள்ளுவத்தை வாழ்வாக்கி வாழ்ந்துபார் எனச்சொல்வார்
       தெள்ளுதமிழ் நூல்களுள்ளே திருக்குறளே சிறந்ததென்பார்
       உள்ளத்தால் பொய்யாது ஒழுகுதலே மேன்மையென்பார்
       ஒருதீங்கும் நினைக்காதே என்றுரைப்பார் எங்களப்பா !

       எங்களப்பா எண்ணம்போல் எல்லோர்க்கும் இருந்துவிடின்
       சங்கடங்கள் சண்டைகள் தமைமறந்தே ஓடிவிடும் 
       இங்கிதமாய் வாழுஎன்று எங்களப்பா எடுத்துரைப்பார்
       இதயமதில் எங்களப்பா இறைவனாய் வாழுகின்றார் !

No comments: