மூன்றாம் உலகத்திலிருந்து முதல் உலகத்துக்கு...‏

.

ஒரு தலைமுறைக்குள்ளாகவே தனது நாடு மூன்றாம் உலக நாடு என்ற நிலையிலிருந்து முதல் உலக நாடு என்ற நிலையை அடைய வேண்டும் என்ற இலக்கை வைத்துக்கொண்டு அதை சாதிக்கவும் செய்தார் லீ குவான் யூ.
லீ குவான் யூ குறைந்தபட்சம் 97 வயது வரையாவது வாழ்ந்திருக்க வேண்டும் என்பது ஒரு இந்தியராக எனது விருப்பம். அப்படி வாய்ப்பிருந்தால், அதாவது 2020-ல், இந்தியாவைப் பற்றி சற்று நல்ல விதத்திலான கருத்து லீக்கு ஏற்பட்டிருக்கலாம். 2007-ல் ‘இந்தியாவின் அமைதியான எழுச்சி’யைப் பற்றி எழுதி இந்தியர்களின் அன்புக்குப் பாத்திரமானார் லீ. ஆனால், 2012-ல் ‘மேன்மையை அடைய முடியாமல் போன தேசம்’ என்று இந்தியாவை விமர்சித்தார்.
இந்தியாவைப் பற்றி அவரிடமிருந்து கடைசியாக நாம் அறிந்துகொண்ட கருத்து இதுதான் என்பது துரதிர்ஷ்ட வசமானது. அதற்குப் பிறகு உடல்நலக் குறைவினால் அவர் முடங்கிவிட்டார். இந்தியாவுக்கான முன்னாள் அமெரிக்கத் தூதர் ராபர்ட் பிளாக்வில்லிடம் இந்தியாவைப் பற்றி லீ தெரிவித்த கருத்துக்கள் இவை: “சீனத்திலும் இந்தியாவிலும் உள்ள கட்டுமானத் தொழில்துறைகளைப் பாருங்கள்! ஒரு நாடு காரியங்களைக் கனக்கச்சிதமாக முடிக்கும் நாடு; இன்னொரு நாடு காரியத்தில் அப்படிக் கிடையாது என்றாலும் பேச்சு மட்டும் எப்போதும் பெரியதாக இருக்கும் என்பதை நீங்கள் உணர்வீர்கள்.” இந்தியாவைப் பற்றி அவர் சொன்னது எவ்வளவு உண்மை!இந்தியாவைப் பற்றி லீ முடிவுக்கு வந்தது இதுதான்: இந்தியா என்பது மகத்தான நாகரிகத்தைக் கொண்ட தேசம் தான். ஆனால், நவீன தேசம் என்ற அளவில் சீனத்துக்கு என்றுமே அது இணையாகாது. உலகின் நம்பர் ஒன் வல்லரசாக மறுபடியும் ஆவதில் முழுமூச்சாக இருக்கிறது சீனம். இந்தியா, கடுமையாக உழைத்தால் ஒருவேளை இரண்டாம் இடத்தை அடையலாம் என்று லீ கருதினார்.
உண்மையில் இந்தியாவுக்கு நல்லதையே நினைத்தார் லீ. “சிங்கப்பூரும் மற்ற தெற்காசிய நாடுகளும் இந்த இரண்டு ராட்சசர்களுக்கிடையில் (அதாவது, சீனா- இந்தியாவுக்கிடையே) இருக்கின்றன. எனவே, சீனாவும் இந்தியாவும் சீரான உறவைக் கொண்டிருக்க வேண்டும். இதன் மூலம் இரண்டு நாடுகளும் ஏற்றம் பெற வேண்டும். கூடவே, கிழக்காசிய, தெற்காசிய நாடுகளையும் தங்களுடய வளர்ச்சிப் பாதையில் சேர்த்துக்கொள்ள வேண்டும்” என்று ஃபோர்ப்ஸ் இதழில் லீ எழுதினார்.


லீயின் நட்பும் இந்தியாவின் உதாசீனமும்
இந்தியாவைக் குறித்து குழப்பமான நிலைப்பாட்டையே லீ குவான் யூ கொண்டிருந்தார். சிங்கப்பூரை சுதந்திரப் பாதையை நோக்கிச் செலுத்துவதிலும், குடியரசாக உருவாக்குவதிலும் லீ ஈடுபட்டிருந்த 1960-களில் அவர் முதலில் நாடியது இந்தியாவைத்தான். தனது சொந்த நாட்டிலேயே கம்யூனிஸ்டுகளோடு அவர் மல்லுக்கட்டிக்கொண்டிருந்ததால் சீனத்தின் மாவோவை நாடியிருக்க முடியாதல்லவா! முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்டிருந்த மலேசியாவிலிருந்து பிரிந்ததாலும் மற்ற அண்டை நாடு களுடனான உறவும் சொல்லிக்கொள்ளும்படி இல்லாததாலும் இந்தியாவைத் தனக்கான சகாவாக லீ கருதினார். அந்தத் தீவுக்கு அதன் சம்ஸ்கிருதப் பெயரான ‘சிம்ஹபுரா’ என்பதையே தக்கவைத்துக்கொண்டார். ‘சிம்ஹபுரா’ ‘சிங்கப்பூர்’ ஆகியிருக்கிறது. மேலும், ராஜாங்கரீதியில் இந்தியாவின் அங்கீகாரத்தையும் ராணுவ உதவியையும் அப்போது லீ எதிர்பார்த்தார்.
புதிய தேசமொன்றின் தலைவராகத் தனது ஆரம்ப நாட்களில் லீ, இந்திரா காந்தியின் துணிவை மிகவும் வியந்திருக்கிறார். இந்திரா காந்தியை முதன்முறையாக சிங்கப்பூருக்கு வரச் செய்து அந்த வருகையை வெற்றி கரமானதாக ஆக்குவதற்கு வழக்கத்துக்கு மாறான முயற்சி களை லீ மேற்கொண்டார். இந்தியாவுடன் ராணுவ ஒத்துழைப்புக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இந்த ஒத்துழைப்பு காலப்போக்கில் மேலும் வலுவாகவே மாறியது. ஆனால், இந்தியாவின் ஆட்சித் தலைமையும், ராஜாங்கரீதியிலான தலைமையும் சுயமுக்கியத்துவத்தில் ஊறியிருந்தவையல்லவா! ஆரம்பத்தில் லீக்கு உதவினாலும், கடைசியில் அவரது கோரிக்கை
களை உதாசீனப்படுத்தும் அளவுக்கு இந்தியா போய்விட்டது. தெற்காசிய நாடுகளுக்கான கூட்டமைப்பை (ஏசியான்) இந்தியாவே நிறுவலாம் என்ற லீயின் யோசனையையும் இந்தியா புறக்கணித்தது.
கோவுக்கும் ராவுக்கும் நன்றி!
உள்நாட்டிலேயே பனிப்போர், காலனியாதிக்கத்துக்குப் பிறகான போக்கு ஆகியவற்றில் சிக்கிக்கொண்டது இந்தியா. எனவே, ஆசியாவின் முன்னேற்றப் பாதையில் தனது நிலை குறித்த தெளிவு இந்தியாவுக்கு இல்லாமல் போய்விட்டதுபோல் தோன்றியது. ‘பெரிய அண்ணன்’ மனப்பான்மை கொண்ட இந்தியா வால் புறக்கணிக்கப்பட்ட லீ, பிறகு இந்தியாவை விமர்சிக்க ஆரம் பித்ததோடு மட்டுமல்லாமல் அதை உதாசீனப்படுத்தவும் செய்தார். பனிப்போருக்குப் பிறகு, நரசிம்ம ராவ் ‘கிழக்கைப் பாருங்கள்’ முழக்கத்தைக் கொண்டுவரும் வரை சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு அப்படித்தான் இருந்தது. இந்தியாவுடன் உறவைப் புதுப்பித்துக்கொள்வதற்கான பொறுப்பு லீக்கு அடுத்ததாகப் பிரதமரான கோ சோக் டாங்கின் கைகளில் வந்து சேர்ந்தது. லீயும் இந்திரா காந்தியும் எதில் கோட்டை விட்டார்களோ அதில் கோவும் ராவும் வெற்றிபெற்றனர். ஆகவே, இந்தியா-சிங்கப்பூர் இடையிலான புது உறவுக்கு அவர்கள் இருவருக்கும்தான் நன்றி சொல்ல வேண்டும்.
சிங்கப்பூரை நிர்மாணம் செய்தல்
தனித்துவம் மிக்கவர் லீ. வளர்ந்து வரும் நாடுகளிடையேயும், காலனியாட்சிக்குப் பிந்தைய நாடுகளிலும் உள்ள தலைவர் களில் மிகவும் துணிச்சலானவராகத் தனது தேசத்தை மாற்றியமைத்தவர் அவர். ஒரு தலைமுறைக்குள்ளாகவே தனது நாடு மூன்றாம் உலக நாடு என்ற நிலையிலிருந்து முதல் உலக நாடு என்ற நிலையை அடைய வேண்டும் என்ற இலக்கை வைத்துக்கொண்டு அதை சாதிக்கவும் செய்தார்.
லீயின் விமர்சகர்கள் அவரது சர்வாதிகார நடவடிக்கை களைச் சுட்டிகாட்டுவார்கள். மேலும், மாற்றுக் கருத்துகளையும் ஊடகங்களையும் அவர் ஒடுக்கிய விதத்தையும் அவர்கள் சுட்டிக்காட்டுவார்கள். அவரது ஆதரவாளர்களோ, தீங்கற்ற சர்வாதிகாரியாக அவரைக் கருதுவார்கள். அதுமட்டு மல்லாமல், ஜனநாயகபூர்வமான அங்கீகாரத்தை லீ எப்போதும் நாடினார் என்றும், மக்கள்நல அரசொன்றின் மூலம் அதைப் பெறுவதை அவர் உறுதிப்படுத்திக்கொண்டார் எனவும் அவரது ஆதரவாளர்கள் கருதினார்கள். தனது குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் தங்கள் எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையை விதைக்கச் செய்யும் மக்கள் நல அரசாக தனது அரசை லீ நடத்தினார் என்பது அவரது ஆதரவாளர்களின் வாதம்.
செங்கல் செங்கல்லாக…
பொருளாதார வளர்ச்சியும் நவீனமயமாக்கலும் மட்டுமே லீயின் சிங்கப்பூரைத் தனித்துக் காட்டவில்லை. சமூகத்தை வடிவமைப்பதில் அவருக்கு இருந்த ஈடுபாடுதான் லீயை மற்ற தலை
வர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. சிங்கப்பூரைக் கிட்டத்தட்ட செங்கல் செங்கல் லாக உருவாக்கினார் லீ. பழையன வற்றைத் தரைமட்டமாக்கி, பசுமை யான பூங்கா தீவுக்கு நடுவே ‘குளிரூட்டப்பட்ட’ அதிநவீன நகரை நிர்மாணித்தார். சிங்கப்பூர் நவீன மானது. அதே நேரத்தில் கலை, கலாச்
சாரம் சார்ந்த விஷயங்களிலும் அந்த நாடு மிகுந்த முனைப்பைக் காட்டியது. தனது கலாச்சார வேர்களின் பன்மைத் தன்மையை முக்கியமாக அது கருதியது.
சமூகத்தை ஒருங்கிணைப்பது எப்படி, அரசு இயங்குவது எப்படி என்பதிலெல்லாம் லீ வலுவான கருத்துகளைக் கொண்டிருந்தார். தனது சிந்தனைகளுக்குச் செயல் வடிவம் கொடுப்பதற்கான வாய்ப்பும் சுதந்திரமும் அவருக்கு இருந்தது. சமூக வடிவமைப்பு நுட்பமும் அவருக்குக் கைகொடுத்தது. அதைக் கொண்டு பன்மைக் கலாச்சார தேசத்தை அவர் உருவாக்கினார்; (தமிழ் உட்பட) 4 மொழிகளை ஆட்சி மொழிகளாக அறிவித்தார். மேலும், அவரது வீட்டு வசதித் திட்டமும் வெவ்வேறு இனங்கள் கலந்து வாழும் சூழலை ஏற்படுத்தியது.
வழிகாட்டும் அமைச்சர்
சிங்கப்பூரில் தனது பணியைக் கச்சிதமாக முடித்துக் கொண்ட பிறகு, லீ தனது களத்தை சிங்கப்பூரிலிருந்து ஆசியா அளவில் விரிவுபடுத்தினார். சீன மேம்பாட்டுக்காக உதவ முயன்றார். அவரது அறிவுரைகளை சீனா புறக்கணிக்க வில்லை. நவீன சீனத்தின் தளகர்த்தரான தெங் சியோ பிங், சிங்கப்பூரின் பொருளாதார வெற்றியிலிருந்து மிகுந்த உத்வேகத்தைப் பெற்றார். புதிய சீனத்தை உருவாக்குவதில் தனக்கு உதவும்படி லீயை அழைத்தார். சிங்கப்பூரிடமிருந்து கற்றுக்கொண்டதைக் கொண்டு ஷாங்காயை ‘கீழை நாடுகளின் மன்ஹாட்ட’னாக தெங் மாற்றினார்.
சிங்கப்பூரில் புதிய தலைமுறையிடம் அதிகாரத்தை ஒப்படைத்துவிட்டு ‘வழிகாட்டும் அமைச்ச’ராக மாறினார் லீ. அதற்குப் பிறகு, கிட்டத்தட்ட ஒரு ஆசிரியர் போன்றே ஆனார். உலக வரலாற்றைச் சுயமாகவே கற்றார். பல்வேறு நாடுகளுக்கும் சென்று அந்நாட்டுத் தலைவர்களுக்கு போதனைகளும் அறிவுரைகளும் வழங்கினார். சிங்கப்பூரில் ஒரே ஒரு நிறுவனத்துக்குத்தான் தனது பெயரைச் சூட்ட லீ அனுமதி வழங்கினார். ‘லீ குவான் யூ சமூகத் திட்ட உருவாக்கத்துக்கான கல்லூரி’ என்பதுதான் அந்த நிறுவனம். வளர்ச்சிக்கும் செழிப்புக்கும் சமூகத் திட்டங்கள் உருவாக்குவதை லீ எவ்வளவு முக்கியமாகக் கருதினார் என்பதை இதிலிருந்து நாம் உணரலாம்.
லீயின் இரு சீடர்கள்
சீனாவைப் பற்றியும் அதன் தலைமையைப் பற்றியும் நன்கு அறிந்தவர் லீ குவான் யூ. ஆகவே, இன்னும் திரை விலகாத சீனாவுக்கும், அதன் மீது ஆர்வத்தை வளர்த்துக் கொண்டிருக்கும் உலகுக்கும் இடையிலான பாலம்போல் விளங்கினார் லீ. முன்னாள் பிரதமர்கள் நரசிம்ம ராவும், மன்மோகன் சிங்கும் சீனத்தைப் புரிந்துகொள்வதற்கும் எதிர்கொள்வதற்கும் வேண்டி, தாங்களாகவே லீயின் சீடர்களாக ஆனார்கள். மன்மோகன் சிங்கின் முதல் ஆட்சிக் காலத்தில் லீ, டெல்லிக்கு வரும்போதெல்லாம் இருவரும் ஒன்றாக உணவருந்து வதுண்டு. அப்போதெல்லாம், சீனத்தின் தலைமையை எதிர்கொள்வது எப்படி என்பது குறித்து ‘வழிகாட்டும் அமைச்சர்’ தனது சீடருக்குச் சொல்லித்தருவார்.
சிங்கப்பூரின் வெற்றிக்கு லீயும் அவரது ஆட்சியும் முழுமுதற் காரணமாக ஆக்கப்பட்டுவிட்டதால் அதன் தோல்விகளுக்கும் அவரே தற்போது பொறுப்பாக்கப்படுகிறார். வருமானத்தில் அதிக அளவில் ஏற்பட்டிருக்கும் ஏற்றத்தாழ்வு காரணமாக கீழ்த்தட்டு மக்களிடயே பெருங்கோபம் உருவாகியிருக்கிறது. அதேபோல், செழிப்பான பொருளாதாரம் ஏற்படுத்தும் ஆசைகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் நடுத்தர வர்க்கமும் பதற்றத்துக்குள்ளாகியிருக்கிறார்கள். நாடு கடந்து வாழும் சிங்கப்பூர்வாசிகளிடமும் சிறுபான்மை இனத்தவரிடையும் அதிகரித்துவரும் கசப்புணர்வில் இந்த கோபம் பிரதிபலிக்கிறது.
லீயும் அவரது சகாக்களும் உருவாக்கிய அரசியல் கட்சி தனது செல்வாக்கை இழந்துகொண்டுவருகிறது. அவரது விமர்சகர்களின் குரலும் வலுப்பெற்றுக்கொண்டுவருகிறது. அநேகமாக, தனது ‘மண்ணின் சொர்க்க’த்திலிருந்து விடை பெற்றுக்கொள்ள இதுதான் லீக்குச் சரியான தருணமாக அமைந்திருக்கும்போல.
- சஞ்சயா பாரு, ‘லீ குவான் யூ சமூகத் திட்ட உருவாக்கத்துக்கான கல்லூரி’யில் வருகைதரு பேராசிரியராக இருந்தவர்.
சுருக்கமாகத் தமிழில்: ஆசை

No comments: