சிறுகதை - சாமி கழுவின காரும்; என் பையன் பார்க்கும் உலகமும் - வித்யாசாகர்!

.
ரமும் செடியுமென் சாதியென்று போற்றும் தமிழர் குடும்பத்தில் பிறந்த எனக்கு நான் உபயோகிக்கும் காராக இருந்தாலும் அதுகூட உணர்வுகளோடு ஒன்றிப்போன சொந்தத்தைப்போல ஒன்றாகவேயிருந்தது.

பொதுவாக நானெப்போதும் எனது காரை சுத்தமாகக் கழுவி வாசனைதிரவியம் போட்டு மிக அழகாக வைத்துக்கொள்வதுண்டு. அதையும் தாண்டி எனது காரிடம் நான் அடிக்கடி பேசுவதுமுண்டு. எங்கே போவது, யாரைப் பார்ப்பது, எண்ண செய்வது என்றெல்லாம் மௌன மொழியில் பேசி எனது காரோடு சிலாகித்துக்கொள்வதுண்டு.

இன்றும் அப்படித்தான் கார் கழுவப் போனோம். கூட எனது மகனும் வந்திருந்தான். மகனுக்குப் பெயரை எல்லோருக்கும் அக்கறை வரட்டுமே என்று மொழி என்றே வைத்திருந்தோம். அதென்ன மொழி மோரு மாங்காய் என்று சிலர் கிண்டலடிப்பார்கள். ஏன் வெள்ளைக்காரன் ஸ்ட்ரீட் ஸ்டவ் யங் மூனுன்னெல்லாம் வெச்சிகிட்டா அதை அப்படியே காப்பி அடிக்கிறீங்களே, அப்புறம் அவன் தெரு அடுப்பு நிலா கடல்னு வைக்கும்போது நாமமட்டும் மொழி மாங்காய் மல்லிகான்னு ஏன் வைக்கக் கூடாது? தமிழ்ல வைக்கிறோம்ற இன அடையாளம் இருந்தா அது போதாதா? என்பேன். 

இன்று எனது கார் கழுவும் இடத்திற்கு வந்ததைப்போல மொழி அவ்வப்போது என்கூட வந்துவிடுவதுண்டு. வளரும் சிறுவயது என்பதால் அவனுக்கு உலகம் மிக வியப்பாக இருக்கும்போல. பார்ப்பதைப் பற்றியெல்லாம் நிறையக் கேள்வி கேட்பான், சொல்லச் சொல்ல சிரிப்பான். குதிப்பான். அவன் உலகம் மிக அழகு. வெளிப்படையானது. கேள்வியின் கூச்சமோ பதில் போதவில்லையென்றால் திரும்பக் கேட்க அச்சமோ தயக்கமோவெல்லாம் அவனிடம் கிடையாது. 

பிள்ளைகள் முழுமையானவர்கள். பிறந்ததுபோன்றே வளருகிறார்கள். நாம் தான் பிறரின் அனுபவங்களை விழுங்கி விழுங்கி இப்படி யார்யாரோ வாழ்ந்துப்போன இடத்தில் நின்றுக்கொண்டு நாம் வாழ்வதாக எண்ணிக் கொள்கிறோம். மெல்ல மெல்ல அவர்களையும் நம்மைப்போலவே மாற்றிவிடுகிறோம். பிறகு மொத்தத்தில் நமக்கு வாழ்க்கை புரிவதற்குள் கொண்டுவந்த நாட்கள் தீர்ந்துவிடுகிறது. 

இன்று மொழிக்கு பிடித்தமான இடமாக இருந்தது இந்தப் பணிமனை. சில கார்கள் மேலேற்றி தண்ணீர் அடிப்பதும் சிலதைக் கீழ்வைத்தே கால்நடைகளைக் கழுவுவதுபோல் தேய்த்துக் கழுவுவதுமாய் இருந்ததவனுக்கு ஆர்வத்தை தூண்டியிருக்கலாம். இங்கும் அங்குமாய் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டிருந்தான்.

நாங்கள் உள்ளே புகுந்து வளைந்து ஒரு ஓரத்தில் இறங்கி நிற்க; அந்தக் கார் கழுவும் நபர் வந்து என்னிடம் பவ்வியமாக வணக்கம் சொல்லிவிட்டு நீங்க அங்கப் போய் உட்காருங்கண்ணே நான் பார்த்துக்குறேன்’ என்றுச் சொல்லிவிட்டு சாவியை வாங்கி காரை ஒட்டிக்கொண்டுபோய் உள்ளே கழுவுமிடத்தில் விட்டார். 

நான் ஒரு நூறு ரூபாயை எடுத்து நீட்ட வேலை படுஜோராக நடந்தது. தரையில் டயர் பட்டு ஒட்டிய மண்ணிலிருந்து மேலே அடர்ந்து கிடந்த அழுக்கு வரை தேய்த்துத் தேய்த்து எடுத்தார். பணம் கொடுத்தால் தான் நம்மூர் ஆட்களுக்கு பெட்ரோல் போட்டமாதிரி’ என்று உள்ளே நினைத்துக்கொண்டேன். இல்லைனா எடுத்து விடு சார் உள்ளே, ஆளெல்லாம் இங்க வராதுண்ணுவான். 

வேறென்னச் செய்ய, வாங்கிப் பழகிய மாட்டுக்கு சூடாவே இருந்தாலும் உரக்க ரெண்டுப் போட்டாதானே நல்லா ஓடும். எதையோ கொடுத்துவிட்டு செஞ்சித் தொலைங்கடான்னு நினைசசி கொஞ்ச தூரமா வந்து உட்கார்ந்துகிட்டேன். 

மொழி அங்கேயே நின்றிருந்தான். சற்று நேரம் கடந்தப்பின், மொழியைக் காணோமே என்று எட்டிப் பார்த்தேன். உள்ளே வேலை அச்சர சுத்தமாக நடந்துக்கொண்டிருந்தது. அந்தப் பணியாள் வேலையை மிக சுத்தமாக செய்துக்கொண்டிருந்தான். 

அத்தனை நிதானமாக காற்று பரப்பி, சோப்பு நுரை விட்டு தேய்த்து தண்ணீர் அடித்து ஒவ்வொரு பாகமாக சுத்தமாகக் கழுவி கொண்டுவந்து காரை எங்களுக்கருகில் நிறுத்தினான். சரிசரி கொடுத்த காசு நன்றாக வேலை செய்கிறது பலே பலே என்று எண்ணிக்கொண்டேன். 

அவன் வேகமாக வண்டியிலிருந்து கீழிறங்கி அண்ணே கொஞ்சம் தாமதமாகிப்போச்சு மன்னிசிடுங்கண்ணே என்றான். பரவாயில்லை பரவாயில்லை அடுத்தமுறை இபப்டி ஆகக் கூடாது சரியா என்றேன். இந்தா ஒரு நூறு சேர்த்து வெச்சிக்கோ என்றேன்.

அவன் அதை மறுத்து; இல்லைண்ணே குழந்தை அவ்வளவு விவரமா இருக்கான், நிதானமா நின்னு எல்லாத்தையும் பார்க்குறான். அவனுக்கு இதுதான் உலகம்னு தெரியிற வயசிது. எதையும் தவறா கத்துக்க கூடாதில்லையா அதாண்ணே முறைப்படி அவன் தெரிந்துக்கொள்ளனுமேன்னு பார்த்து பார்த்து செய்ததுல கொஞ்சம் தாமதமா போச்சு. அதில்லாம, எனக்கு காசெல்லாம் வேண்டாம்ண்ணே; அப்புறம் தம்பி அதுக்காகத் தான் நான் வேலை செய்தேன்னு நினைச்சுடும். ஒரு விசயத்தை நாம் சரியா கத்துக்கொடுத்தா தான் அதுங்களும் சரியா வளரும்ண்ணே. இந்தாங்கண்ணே உங்கப் பணம்” என்று பணத்தை என்னிடம் நீட்டினான். 

“அய் நல்ல மாமா என்று சொல்லிவிட்டு மொழி அந்தப் பணத்தை வாங்கி எனது பாக்கெட்டில் சொருகினான். நான் நல்லதுப்பா என்று சொல்லிவிட்டு கண்ணாடியை அவசரமாக மேலேற்றிக் கொண்டேன். 

மொழி என்னிடம் திரும்பி “அப்பா நல்ல அப்பாவேயில்லை’ காசு கூடதந்து கெடுக்குறீங்க, அந்த மாமா தான் சரி” என்றுச் சொல்லிவிட்டு சிரித்தான். 

எனது கருகிய முகத்தோடு என்னால் அந்த வேலையாளின் கண்ணியத்திற்குமுன் நிற்கமுடியவில்லை. கார் சன்னல்கதவின் கண்ணாடியை சட்டென மேலேற்றிவிட்டகையோடு அங்கிருந்து நகர்ந்தேன்.  

கொஞ்சதூரம் வந்ததும் உள்ளிருந்து நடுக் கண்ணாடிவழியே பின்னாலிருந்து மொழிக்குக் கைகாட்டிய அவனையே பார்த்துக்கொண்டு முன்னால் போனேன், ஏதோ ஒரு ஞானப்பால் தந்த சாமியை விட்டு நான் விலகி தூரமாக சென்றுக் கொண்டிருப்பதைப்போல இருந்ததெனக்கு. 

உலகம் இப்படித்தான் இரண்டு நாணயத்தின் பக்கத்தைப்போல நல்லதையும் கெட்டதையும் சேர்த்தே சுமந்திருக்கிறது. இதில் எது நல்லது எது கேட்டது என்று அறிவதன் நியாயத்தில் தான் சிலநேரம் நாம் நல்லவனாகவும் கெட்டவனாகவும் மாறி விடுகிறோம். இயல்பில் எல்லோரும் எப்போதுமே கெட்டவரில்லை என்பதே யதார்த்தம் போல்.
---------------------------------------------------------------------
வித்யாசாகர்

No comments: