இலக்கியப் பதிவுகளினூடாக நீர்கொழும்பூர் நினைவுகள்

   என்.செல்வராஜா -   நூலகவியலாளர்,
  (தொகுப்பாசிரியர்,   நூல்தேட்டம்:   ஈழத்துத்  தமிழ்  நூல்விபரப்பட்டியல் )

நீர்கொழும்பு,  தென்னிலங்கையின்  ஒரு  கடலோரத்  தமிழ்க்கிராமமாக,   தனித்துவமான  மொழி  வழக்குடன்  திகழும்  ஒரு வாழிடம்.    அதுவே   என்  இளமைக்காலத்தின்  வசிப்பிடம்.   தந்தையார் அமரர்   வ.நடராஜா -  அந்நாட்களில்  இந்து  வாலிபர்  சங்கத்துடன் தன்னை  இணைத்துத்  தமிழ்ப்பணியாற்றிய  ஒரு  பொது வேலைப்பகுதி     ஓவசியர்.     கடற்கரைத்தெருவில்,   தமிழகம்  என்ற பெயர் கொண்ட  எமதில்லத்திலேயே   எனது   இளமைக்காலம் கழிந்தது.     அன்றைய    விவேகானந்த   மகா   வித்தியாலயத்தில்   எனது பள்ளிக்காலம்  கழிந்து.    1970  இல்  எமது  தந்தையாரின்   மறைவின் பின்னர்  அந்த   மண்ணைவிட்டு,    பதினாறு    வயதில் யாழ்ப்பாணத்திற்குப்  புலம் பெயர்ந்து  செல்ல   நேர்ந்தது. அன்னையாரின்   ஊரான  ஆனைக்கோட்டையில்    எனது   எஞ்சிய பாடசாலை    வாழ்வு  தொடர்ந்ததும்    கடந்து  போன வரலாறு. அங்கிருந்து   திருநெல்வேலி,   கொழும்பு    என்றாகி  இன்று   லண்டன் வரையில்  தொடர்கின்றது    எனது  புலப்பெயர்வு.


இந்நிலையில்,   பிறந்த  வளர்ந்த  இளமைக்கால  நீர்கொழும்பு  பற்றிய எனது  மனப்பதிவு  ஆழ்மனதில்  நீங்கா  நினைவாகி  ஒரு  படிமமாகப் பதிந்து கிடக்கின்றது.   அந்த  நினைவுகளை  மீள  அசைபோட வைத்த ஒரு  இலக்கியவாதியின்  எழுத்துலகம்  பற்றியதான  ஒரு கருத்துப்பதிவே  இக்கட்டுரையாகும்.
நீர்கொழும்பு   தந்துள்ள  படைப்பாளிகள்  பற்றிய  பட்டியலொன்றை பதிய    முனைந்தால்,   அதில்   அக்காலத்தில்  நீர்கொழும்பு  இலக்கிய வட்டம்  நடத்தியவர்கள்  முதலில்  நினைவுக்கு  வருகிறார்கள். மறைந்தும்  மனதில்  மறையாத  நீர்கொழும்பூர்  முத்துலிங்கம், சந்திரமோகன்,   தற்போது  அவுஸ்திரேலியாவில்  வாழும் லெட்சுமணன்    முருகபூபதி,    பிரான்சில்  வாழும்  செல்வரத்தினம், ஜேர்மனியில்    வாழும்    தேவா,    கனடாவில்   வாழும்     நீர்கொழும்பு தர்மலிங்கம்,    பத்திரிகையாளர்  நிலாம்,   பவாணிராஜா,    மு.பஷீர், மினுவாங்கொடை     கொரஸ    கிராமத்தில்     அமைந்துள்ள  ஸ்ரீ சுதர்மானந்த    விஹாரை  பிரதம  குருவாகவிருந்த வண. எம்.ரத்னவன்ச    தேரோ    ஆகியோரை   நிச்சயம் குறிப்பிட்டாகவேண்டும்.
நீர்கொழும்பு   இலக்கிய  வட்டம்  உருவாக  முன்னர்  அங்கு இயங்கிய    வளர்மதி  இலக்கிய   அமைப்பின்  அனுசரணையுடன் 1972  இல்  மல்லிகைச் சஞ்சிகை  நீர்கொழும்பு  பிரதேச  மலர் வெளியிடப்பட்டமையும்    குறிப்பிடத்தக்கது.    இந்த  அமைப்புகளின்  வருகைக்குப்  பணியாற்றியதில்   முக்கியமானவராக    முருகபூபதி இனம் காணப்படுகிறார்.     நீர்கொழும்பின்  மொழி  வழமையை, இலக்கிய   ஆளுமையை  அன்றாடம்   தன்  படைப்புகளினூடாக வெளிக்கொணர்வதுடன்,   இன்றளவில்    உலகளாவிய ரீதியில்  தமிழ் எழுத்தாளர்களுக்கிடையிலான    ஓர்    உறவுப்பாலமாகவும் செயற்படுகின்றார்.
1972   இல்   ஈழத்து  ஆக்க    இலக்கியத் துறையில்   புதியவராக -அறிமுக    எழுத்தாளராக   நுழைந்த  முருகபூபதியின்    முதலாவது சிறுகதைத்தொகுதியாக    சுமையின்  பங்காளிகள்   என்ற    நூல், நவம்பர்   1975  இல்  நீர்கொழும்பு   இலக்கிய  வட்டத்தினரால் வெளியிடப்பட்டிருந்தது.    அந்த    நூலின்  இரண்டாவது  பதிப்பு   2007  இன் இறுதிக்கூற்றில்  வெளியிடப்பட்டது.
இலங்கையின்  கடல் தொழிலாளர்களான    மீனவர்கள்    பற்றிப் பல சிறுகதைகளை     ஈழத்து  எழுத்தாளர்கள்   ஏற்கெனவே படைத்திருக்கிறார்கள்.    மீனவ  மக்களை  நன்கு  அறிந்து அவர்களிடையே    வாழ்ந்து   வளர்ந்தவர்களாலேயே    இலக்கிய நயத்துடன்    இதுபற்றிக்   கூறமுடிகின்றது.   கடல்    வாழ்வு  பற்றிய வெற்றிகரமான   கதைகளின்   வாயிலாக,    மீனவ    மக்களின் நுட்பமான   வாழ்வினையும்  பிரச்சினைகளையும்    இலக்கியமாக்க முடிகின்றது.
யாழ்ப்பாணத்தின்  நவாலிப்பகுதி  மீனவர்களைப்பற்றி    அப்பச்சி மகாலிங்கமும்,    நாவாந்துறைப்பகுதி    மீனவர்கள்    பற்றி   டானியல் அன்ரனியும்,    வல்வெட்டிக்  கடலோரக்    கிராமங்களைப் பற்றி தெணியானும்,    ஆனைக்கோட்டை   மீனவர்   சமூகம்    பற்றி அகஸ்தியரும், கொழும்புத்துறைப்பகுதி மீனவர் சமூகம் பற்றி செ.யோகநாதனும்  பல    கதைகளை    எமக்கு   இதுவரை வழங்கியிருக்கிறார்கள்.     நவாலி,    நாவாந்துறை,   வல்வெட்டி, ஆனைக்கோட்டை,     கொழும்புத்துறை    என்று    இவையெல்லாம் வடபிரதேசத்துக்  கிராமங்கள்.    இவை    அனைத்தும்    வடக்கின் யாழ்ப்பாணப்   பிரதேசத்தைச்    சூழவுள்ள    மீனவக் கிராமங்கள்.    சற்று வித்தியாசமாக,    தூரத்தே    தென்னிலங்கையில்  நீர்கொழும்பைப்  பற்றி -  நீர்கொழும்புப் பிரதேச  மீனவர்கள்   பற்றி    அவர்களின் மண்ணுக்கேயுரிய    வித்தியாசமான     பேச்சுத்தமிழ்பற்றி எழுதியவர்களில்     முருகபூபதியை     முக்கியமானவராக     நினைவில்    கொள்ள முடிகின்றது.
முருகபூபதியின்   இளமைக்கால    நீர்கொழும்பு    வாழ்வின்    மலரும் நினைவுகளின்     சுவையான     சொற்கோலங்களாகவோ    நினைவுப் பதிகைகளாகவோதான்   சுமையின்    பங்காளிகள்     என்ற   சிறுகதைத்   தொகுப்பில்     உள்ளடங்கிய    கதைகள்    எனக்குப் படுகின்றன.     நீர்கொழும்புவாழ்   தமிழ்   மீனவர்    சமூகத்தினர் தமக்கேயுரிய     தனித்துவமான     கலாச்சாரம்,     பேச்சுவழக்குகளைக் கொண்டவர்கள்.      கத்தோலிக்க   மதத்தை     பெரும்பாலானவர்கள் பேணுகிறார்கள்.      இங்கு    வாழ்ந்த,    வாழுகின்ற  மக்கள்  பலர் முருகபூபதியின்    இக்கதைகளின்  கதாபாத்திரங்களாவர். அம்மக்களின்   கனவுகள்,  ஆசைகள்,  எதிர்பார்ப்புகள்,  ஏமாற்றங்கள், நிராசைகள்,    இழப்புகள்,  வெற்றி   தோல்விகள்,    சாதனைகள்,   கடல் மீதான     அவர்களின்  காதல்,   கோபம்,    ஊடல்,    என்பன   இவரது கதைகளுக்குக்     கருவாகவும்    பின்புலமாகவும்  அமைந்துள்ளன.
முருகபூபதி    நினைவுக்  கோலங்கள்    என்ற  சிறுகதைத் தொகுதியை 2006  இல்     வெளியிட்டிருந்தார்.    நீர்கொழும்பு  -    முருகபூபதி  பிறந்து வளர்ந்து  -  வாழ்ந்த  ஊர்.  முழுமையான  கிராமமுமல்லாத, தன்னிறைவடைந்த    நகரமுமல்லாத     ஒரு    வகையான    நகரம். முன்பொரு    காலத்தில்  போர்த்துக்கேயரின்  படையெடுப்புக்குட்பட்ட கடலோரத்துக்     கிராமம்.    இன்றும்  ஒரு  ஒல்லாந்தரின்  கோட்டை கடலோரத்தில்    இருக்கின்றது.    சிறைச்சாலையாக    இது  தற்போது மாற்றப்பட்டுள்ளது.    இன்று    தென்னிலங்கை    செங்கம்பளம்  விரித்து   வரவேற்கும்  உல்லாசப்பயணிகளின்    கடலோரத்தை   நாடிய    படையெடுப்பால்   சமூகச்  சீரழிவின் தாக்கத்துக்குள்ளாகியுள்ள   நகரம்.
இச்சிறுகதைத்    தொகுதியில்  பதினான்கு  நினைவுக்கோலங்கள் இடம்பெற்றுள்ளன.    ஒவ்வொன்றும்  நான்    இளமைத் துடிப்புடன் ஓடியாடித்திரிந்த     அந்தக்  கடலோரக்   கிராமத்தின்  வனப்பினூடு மீளவும்    மானசீகமாக  ஒன்றிப்போக  வைத்துவிட்டன.   அத்துடன், இவ்வளவு   நுணுக்கமாகவும்  நேர்த்தியாகவும்,   அதன்  இயற்கை வனப்பினையும்    அங்கு  வாழ்ந்த  மக்களையும்  இவரால்  எப்படி தத்ரூபமாக  மனக்கண்முன்  கொண்டு வந்து  நிறுத்த  முடிகின்றது என்றும்    அதிசயிக்க  வைக்கின்றது.
இவரது    கதைகளையும்  அதன்  வழியாக  அவரது கதாபாத்திரங்களாகவும்    இந்த  நூலில்  தரிசித்த   எனக்கு, நீண்டகாலத்திற்குப்    பின்னர்  நீர்கொழும்புக்குப்  போய்வந்த  அனுபவம்    கிட்டியது.    அதுவும்  ஒரு  பதினாறு  வயது  இளைஞனாகப் போய்    வந்த  உணர்வையே    என்னுள் இச்சொல்லோவியங்கள்    ஏற்படுத்தின.    உள்ளதை    உள்ளபடி-   பூசி மெழுகாமல்    நேர்மையாகச்    சொல்லும்    ஒரு  படைப்பாளியின் சத்திய    வசனங்களை,   கனடாவின்    அ.முத்துலிங்கம்,   ஜேர்மனியின் பொ.கருணாகரமூர்த்தி    என்ற  வரிசையில்  அவுஸ்திரேலியாவின் முருகபூபதியிடமும்  காணமுடிந்தது.
நீர்கொழும்பில்  வாழ்ந்த  காலத்தில்,   நான்  அன்றாடம்  எனது அம்மாவின்    ஆணைப்படி  காலையில்  முகம்  கை  கால் கழுவியதும்,    வீட்டுப் பூந்தோட்டத்தில்  பறித்த  அன்றலர்ந்த மலர்களைக்  கொய்து    பொலித்தீன்  பைகளில்  பவ்வியமாக  இட்டு வீட்டிலிருந்து    பாடசாலைக்குச் செல்லும்  வழியில்  கடற்கரைத் தெருவில்    உள்ள  காளிகோயிலில்    ஒப்படைத்துச் செல்வது வழக்கம்.    காளிகோவில்  பூசகர்  பொன்னம்பலத்திடம்  நாளாந்தம் நான்  வழங்கும்   பூக்களுக்குப் பதிலுபகாரமாக    ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும்    மாலைப்  பூசையின்  பின்னர்  அவர் எனக்குப்    பிரத்தியேகமாகத்  தந்தனுப்பும்  சுவையான   கடலை, வடை    பிரசாதங்களுக்காக  பூசை  முடியும்வரையில் பொறுமைகாக்கும்   என்   அனுபவங்கள்  சித்தன்  என்ற  கதையை வாசித்ததும்    நினைவில்  வந்து  போனது.    இப்படியாக  ஒவ்வொரு கதையையும்  அதன்     கதாபாத்திரங்களின்    வாயிலாக    எனது  மலரும்    நினைவுகளைக்  கிளறிக்கொண்டு  செல்வதை சொல்லிக்கொண்டே    போகலாம்.
வடக்கிலும்    கிழக்கிலுமிருந்து    தொழில்வாய்ப்புக்களுக்காக  தமிழர்கள்    காலம்  காலமாக  நீர்கொழும்புக்குச்  சென்று வாழ்ந்திருந்தனர்.    அவர்களுடன்  இணங்கி  வாழ்ந்த  பூர்வீகக் கரையோரத்    தமிழர்கள்  போர்த்துக்கேயராலும்,    பின்னாளில்  வந்த சிங்களமயமாக்கல்    கொள்கை   வகுப்பாளர்களினாலும் மதமாற்றத்திற்கும்    மொழிமாற்றத்திற்கும்  உட்படுத்தப்பட்டு சிங்கள  மயமாக்கப்பட்ட    காலகட்டத்திலும் கூட    அவர்களது  தமிழ்  சிறப்பான   நீர்கொழும்புத்  தமிழாக  நிலைத்து  இருந்தது.   அந்த நீர்கொழும்புத்  தமிழ்  போர்த்துக்கேய,   சிங்கள  மொழிச்சொற்களை அவ்வப்போது    உள்வாங்கிக்கொண்ட  போதிலும்  கூட அடிப்படையில்    அவர்களது  மொழி  தமிழாகவே  இருந்தது.    அந்தத் தமிழை -  நீர்கொழும்புத்    தமிழை  மீண்டும்   இந்த  நூலின்   வாயிலாக    அறிந்துகொள்ளமுடிந்தது.
சுமையின்  பங்காளிகள்  நூலின்    மேலட்டைப்படத்தில் நீர்கொழும்பின்     பிரசித்திபெற்ற    கடற்கரையில்    சுறுசுறுப்பாக வலைகளுடன்    இயங்கும்  மீனவர்களையும்,    அவர்களது வள்ளங்களையும்    அவர்கள்  பிடித்து வந்த  மீன்களைக் கூடைகளுக்குள்     நிரப்பிக்கொண்டு  அருகிலுள்ள    மீன்சந்தைக்கு விரையக்காத்திருக்கும்   அந்த     மீனவப்பெண்களின்  அவசரத்தையும் உயிரோட்டமாகச்    சித்திரிக்கின்றன.
முருகபூபதியின்    மற்றுமொரு     நல்ல    படைப்பு,    2001   இல் வெளிவந்த  பறவைகள்    என்ற     நாவலாகும்.      ஐம்பதிற்கும்  மேற்பட்ட      சிறுகதைகளைப் படைத்துள்ள   முருகபூபதியின் முதலாவது   நாவல்  இது.    2003    ஆம்     ஆண்டில்     சிறந்த நாவலுக்கான     இலங்கை  தேசிய     சாஹித்திய    விருது   பெற்றது. இந்நாவல்,     இலங்கை     மக்களின்   இடப்பெயர்வை -  புலப்பெயர்வைச்     சித்திரிக்கிறது.    தேவகி     யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்து     நீர்கொழும்பு  நகரில்    வந்து   குடியேறுகிறாள். நோய்வாய்ப்பட்ட    மாமன்    சிற்றம்பலத்தைக்   கவனிக்கும் பொறுப்பும்    அவளுடையதாகின்றது.     ஓய்வுபெற்ற  ஆசிரியரான சிற்றம்பலத்தின்     பிள்ளைகள்    புலம்பெயர்ந்து    ஐரோப்பாவிலும், அவுஸ்திரேலியாவிலும்      குடியேறியிருக்கின்றனர்.     இதே சிற்றம்பலம்தான்     முன்னர்     தேவகிக்கும்  அவரது  மகன் குமாருக்கும்     இடையில்  முகிழ்ந்த   காதலுக்குத் தடையாகியிருந்தவர்.    அவுஸ்திரேலியாவிலிருந்து  குமார் குடும்பத்துடன்   விடுமுறைக்காக     ஊர்திரும்புகிறான்.    அங்கு தேவகியைக்  காண     நேர்வதால்  ஏற்படும்   உணர்வுச்    சிக்கல்களும், புலம்பெயர்    வாழ்வியல்     மற்றும்   தாயக   தரிசனம்    என்பனவும் இந்நாவலில்    சுவைபடக் கூறப்படுகின்றது.
முருகபூபதியின்      படைப்புகளில்      நீர்கொழும்பு    கதைக்களங்களாக அமைவது     போன்றே  வேறு சில    படைப்பாளிகளின் படைப்பாக்கங்களிலும்     நீர்கொழும்பும்,    அது  சார்ந்த    பிரதேசங்களும் அமைந்திருப்பதைக்     காணமுடிகின்றது.     என்  கைக்கெட்டிய அத்தகைய  படைப்புகளில்  ஒன்று  எஸ்.ஏ.உதயன்  எழுதி  மன்னார் கலையருவி    வெளியீடாக  2011 இல்   மலர்ந்த   சொடுதா  என்ற நாவலாகும்.    மன்னார்  பிரதேசத்தைச்  சேர்ந்த  எஸ்.ஏ.உதயன் ஏற்கெனவே    லோமியா,   தெம்மாடுகள்,   வாசாப்பு  ஆகிய நாவல்களையும்    குண்டுசேர்  என்ற  சிறுகதைத் தொகுதியையும் எழுதியவர்.    இது    இவரது     நான்காவது    நாவலாகும்.
இளம்   சம்மாட்டி  மரியாசு  இந்நாவலின்  நாயகன்.  அவனுக்குத் துணை    சீமாம்புள்ளை.    கடற்தொழில் சார்ந்த  தொழில்நுட்பத்தை பயன்படுத்தி  தொழிலாளர்களின்  சுமையைக்  குறைக்க  முனையும் மரியாசு  -  அவர்களுக்கு    லாபத்தில்    பங்கும்  வழங்குகின்றான். சீமாம்புள்ளையின்    மூன்று   புதல்விகளில்  கடைக்குட்டி ரெத்தினமாலையுடன்   மரியாசு     காதல்   கொள்கிறான். சந்தர்ப்பவசத்தால்   அவளது  தமக்கை   சுகந்த மாலையுடன் பாலியல் தொடர்பு    கொண்டதால்     அவள்   கருவுறுகிறாள்.    அதனால்    மரியாசு ரெத்தினமாலையின்    காதலை   இழக்கிறான்.     இடையில் சுகந்தமாலை      சமூகத்தின்    பழிச்சொல்லுக்கு     இலக்காகித் தற்கொலை      செய்துகொள்கிறாள்.  
  இந்நாவல்   60  வருடங்களுக்கு முன்னிருந்த    மன்னார்   மீனவ  மக்களது  வாழ்க்கை  நிலையை எடுத்துக்காட்டுகின்றது.    மன்னார்  கடற்கரைப் பிரதேசக்  கிராமங்கள், அக்கிராமங்களின்    சூழல்,    பருவ  மாறுதல்கள்,    வாழ்க்கை  முறைகள்    ஆகியவற்றை    இந்நாவலில்   உயிர்த்துடிப்புடன் தரிசிக்கமுடிகின்றது.    இறால்  பிடிப்பதற்காக  நீர்கொழும்பிலிருந்து வரும்    சிங்கள    மீனவர்களுக்கும்   மன்னார்  மீனவர்களுக்கும் இடையில்    ஏற்படும்  பிணக்குகள்,    முரண்பாடுகள்   என்பனவும், அப்பிரச்சினையைத்   தீர்த்துவைக்க  முனையும்   காவல்துறையின் பக்கச்    சார்பான  போக்கும்,    இவற்றுக்கும்  அப்பால் கடற்தொழிலாளர்களின்    மனிதநேய  உறவுகள்    என்பன  இந்நாவலில் அழுத்தமாகப்    பதிவுசெய்யப்படுகின்றன.   மன்னார்  மண்ணின் மணம்  கமழ    நாவலை    நகர்த்திச்செல்லும்    ஆசிரியர்     தேவைக்கேற்ப பிரதேச    வழக்கில்    பயன்படுத்தப்படும்   பழமொழிகள், உவமைத்தொடர்கள்   என்பவற்றையும்     ஆங்காங்கே    பொருத்தமாகப்  பயன்படுத்தியிருக்கின்றார்.
நீர்கொழும்பூர்   முத்துலிங்கம்   09  ஜனவரி  2000  அன்று  சுகவீனம் காரணமாக    மறைந்துவிட்டார்.     அவர்  மறையும்  முன்னர் இறுதியாக   எழுதிய  நாவல்  அந்த  நதியும்  அதன்  மக்களும்  தினக்குரலில்    வாராந்தம்  பிரசுரமாகிவந்த  வேளையிலேயே  அவரது மரணமும்     நிகழ்ந்தது.    கதை    நிகழும்  களம்  சிலாபம்,   சித்தாமடம், மாயவன்    ஆற்று  மையம்.     சிலாபத்திலிருந்து     புத்தளம்   செல்லும் பாதையில்   தெதுரு  ஓயா    என்ற  மாயவன்  ஆற்றின்  ஒரு  கரையை   எல்லையாகக்  கொண்டிருக்கும்  சித்தாமடம்  என்னும் கிராமமும்    அக்கிராமத்து  பால்பண்ணையும், அப்பண்ணையோடிணைந்த   மக்களும்    அப்பிரதேசத்தை ஆட்டிப்படைத்த    1957  பெருவெள்ளமும்  நாவலை   விறுவிறுப்பாக்கக் காரணமாகின்றன.    அமரர்  முத்துலிங்கத்தின்   மறைவுக்குப்  பின்னர் அவரது    மகன்    ஜெயகாந்தனால்  2005  இல்    இந்நாவல்   நூலுருவில்    வெளியிடப்பட்டது.
ஒரு    ஜனனத்தின்  அஸ்தமனம்   என்ற  தலைப்பில்  நீர்கொழும்பூர் முத்துலிங்கம்    1994    இல்    எழுதிய  சிறுகதைத்  தொகுப்பு   பற்றியும் இங்கு     குறிப்பிடலாம்.    இலங்கையின்  மேல்மாகாணத்துக் கடற்கரைப்    பிரதேசத்தில்,     குறிப்பாக    நீர்கொழும்பின் குடாப்பாட்டிலும்    பிரசித்திபெற்ற  முன்னேஸ்வரம்  (சிலாபம்) கோயில்    கிராமத்திலும்  வாழும்  மாந்தரையும்  வாழ்க்கையையும் சித்திரமாக்கியுள்ள   ஒரு  ஜனனத்தின்  அஸ்தமனம்  என்ற குறுநாவலுடன்    ஐந்து  சிறுகதைகளையும்   உள்ளடக்கிய  தொகுதி இதுவாகும்.
தூர  விலகும்  சொந்தங்கள்   என்ற  சிறுகதைத்  தொகுதியை நீர்கொழும்பு    ந. தர்மலிங்கம்  எழுதி  2004  இல்   மணிமேகலைப் பிரசுரமாக      வெளியிட்டிருந்தார்.    தூர  விலகும்  சொந்தங்கள்,   சத்திய    தரிசனம்,    ஆணின்  தேடல்,    நோயாளிகள்,    புரியாத  புதிர், தாய்,     நிறைவு,   பாவத்தின்     தீர்ப்புகள்,   தாம்பத்யம்  ஒரு  தவம், வாழ்த்துக்கள்,    வாலிபத்  தீயிலே,    இப்படி  எத்தனை    சுமைகள்  ஆகிய   12    கதைகள்  இத்தொகுப்பில்  இடம்பெற்றுள்ளன.    இவரது  கதைகளும்  மண்ணின்  வாசனை    தூக்கலாக  அமைந்து நீர்கொழும்பூர்    நினைவுகளுக்கு  என்னை    இட்டுச்சென்றன.
கனடாவில்   தற்போது  புலம்பெயர்ந்து  வாழும்   கவிஞர் வி.கந்தவனம்   நாடறிந்த ஈழத்துக் கவிஞர். 1967 இல் ஏனிந்தப் பெருமூச்சு என்ற தலைப்பில் யாழ் இலக்கிய வட்டத்தின் வாயிலாக ஒரு கவிதைத் தொகுதியை வெளியிட்டிருந்தார். அரங்கக் கவிதைகளின் தொகுப்பாய் அமைந்த இந்நூலில் 5 மேடைகளில் அரங்கேற்றப்பட்ட 5 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. மலையகத் தமிழரின் பெருமூச்சை முதலாவதாக ஏனிந்தப் பெருமூச்சு என்ற கவிதையில் புலமைத்திறத்துடன் வெளிவிடுகின்றார். இது அட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரித் தமிழ் விழாவில் 16.3.1963 அன்று மேடையேறியது. இரண்டாவதாக வீர சுதந்திரம் வேண்டிநின்ற பாரதியாரின் கனவை பாரதி என்ற கவிதையில் பாடி நெகிழ்கிறார். இது மாத்தளை இலக்கிய வட்டம் பாரதி விழாவில் புனித தோமையர் கல்லூரியில் 6.10.1963இல் அரங்கேறியது.
 கனவுலகம்  என்ற மூன்றாவது கவிதை வாழ்வாங்கு வாழ வழிகாட்டும் வள்ளுவன் திருக்குறள் பற்றியது. இது யாழ்ப்பாணம், திருநெல்வேலி செங்குந்த இந்துக் கல்லூரித் தமிழ்விழாவில் 12.9.1964இல் அரங்கேறியது. வள்ளல் நல்லதம்பி என்ற நான்காவது கவிதை நீர்கொழும்பு இந்து வாலிபர் சங்கத் தமிழ் விழாவில் 30.1.1965 இல் அரங்கேறியது. அமரர் இ.நல்லதம்பி- நீர்கொழும்பின் பிரபல வர்த்தகர், இந்து வாலிபர் சங்கத்தின் தலைவர்களுள் ஒருவர் என்பதற்கப்பால், எனது பெற்றோரினது குடும்ப நண்பர்;. சிறுவயதில் அடிக்கடி எனது அன்னையாருடன் அவர்களது இல்லத்திற்குச் சென்றுவந்ததும், எனது மூத்த சகோதரிஅங்கு ரோகினி ஆசிரியை நடத்திவந்த கர்நாடக சங்கீத பிரத்தியேக வகுப்புக்குச் செல்லும் வார இறுதிகளில் அவருடன் துணைக்குச் சென்று அவர்களுடன் அமர்ந்து சங்கீதம் கற்றதும் மலரும் நினைவுகள்.
ஆக்க இலக்கியங்களுக்கு அப்பால் என்னை நீர்கொழும்பு பற்றி இரைமீட்கவைத்த மற்றொரு நூலாக அமைந்ததும், 2004இல் மலர்ந்ததுமான நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி: பொன்விழா மலர் என்ற சிறப்பு மலரைக் குறிப்பிடுவதைத் தவிர்க்கமுடியாது. 1932இல் நீர்கொழும்பில் இந்து வாலிபர் சங்கம் உருவாகியது. இச்சங்கத்தினால் 7.10.1954 இல் 32 மாணவர்களுடனும், 2 ஆசிரியர்களுடனும் விவேகானந்த வித்தியாலயம் என்ற பெயரில் உருவாக்கப்பட்டதே இன்று கம்பஹா மாவட்டத்திலுள்ள ஒரேயொரு இந்துப் பாடசாலையான விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி. இப்பாடசாலையை 1963இல் அரசாங்கம் பொறுப்பேற்றது. தனது பொன்விழாவை 2004இல் கொண்டாடும்வகையில் அக்கல்லூரி வெளியிட்ட மலர் இதுவாகும். ஆசிச் செய்திகள், வாழ்த்துச் செய்திகள், பாடசாலையின் விரிவான வரலாறு உட்பட பல்வேறு முக்கிய தகவல்களைத் தாங்கிய கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள் உள்ளிட்ட படைப்பிலக்கியங்கள், என இம்மலரில் பல்வேறு அம்சங்கள் உள்ளடங்குகின்றன. நீர்கொழும்பு பற்றிய சமூகவியல் ஆய்வுகளை மேற்கொள்வோருக்கு இம்மலர் நிச்சயம் பயனுள்ளது.
முருகபூபதியைப் போலவே நீர்கொழும்பைப் பின்னணியாகக் கொண்ட பலர் ஆக்க இலக்கியங்களையும் அறிவியல் நூல்களையும் படைத்துவந்திருக்கிறார்கள். நீர்கொழும்பு இலக்கிய வட்டம் நடத்தியவர்கள் என இக்கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்டவர்களின் தொடர்ச்சியாக வாழும் இவர்களில் சிலரது படைப்புகளில் நீர்கொழும்பின் தனித்துவம் பேணப்படுவதில்லை என்ற விமர்சனம் முன்வைக்கப்பட்ட போதிலும், இவர்களும் நீர்கொழும்பு மண்ணின் இலக்கியவாதிகளாக, எழுத்தாளர்களாக அடையாளப்படுத்தப்படவேண்டும் என்று கருதுகின்றேன்.
காவலூர் இ.விஜேந்திரன் (இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பட்டதாரி. நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றியவர். உலகின் மூன்றாவது கண், ஜனநாயகத்தின் நான்காவது தூண் ஆகிய நூல்களை எழுதியவர்),
எஸ்.உதயசெல்வன் (யாழ்ப்பாணத்தில் திருநெல்வேலியைப் பிறப்பிடமாகக்கொண்ட இவர், நீர்கொழும்பின் குடாப்பாடு பிரதேசத்தில் வாழ்ந்து வருகிறார். இவரது முதலாவது நாவல் நினைவெல்லாம் நீயே 2004இல் மணிமேகலைப் பிரசுரமாக வெளிவந்தது. தொடர்ந்து அப்பாவைத்தேடி  என்ற சிறுகதைத் தொகுதியும்,  மொட்டுக்களை மலரவிடுங்கள், காதல் பூட்டு ஆகிய நாவல்களும் வெளிவந்தன. வாய்ப்பூட்டு நாவல் திருப்பூர் தமிழ்ச்சங்கம் நடத்திய 2005 ஆம் ஆண்டுக்கான இலக்கிய விருது பரிசுப்போட்டியில் பரிசுபெற்றது. உள்ளத்திலே குடியிருக்கலாமா- இவரது ஐந்தாவது நூல்),
எம்.எம்.ஜி.பிரிட்டோ (சுற்றாடல், கணிதம் போன்ற பாடநூல்களை எழுதி நீர்கொழும்பு கிளிண்டன் சுரேஷ்குமாரின் மூலம் வெளியிடுபவர்),
கலாநெஞ்சன் ஷாஜஹான் (தளுப்பொத்த, பள்ளன்சேனை வீதியில் வசிக்கும் இவரின் ஏன் இந்த மௌனம் கவிதைத் தொகுதி 1999இல் வெளிவந்தது),
கிச்சிலான் அமதுர் ரஹீம் (நீர்கொழும்பைச் சேர்ந்த பெண் கவிஞர் கிச்சிலான் அமதுர் ரஹீம், ஆசிரியப் பணியில் நீண்டகாலம் ஈடுபட்டவர். தமிழ் மொழி ஆசிரிய ஆலோசகராகப் பணியாற்றிய வேளையில் வானொலி, தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகப் பணியாற்றியவர். பின்னாளில் பாரிசவாதத்தால் பாதிப்புற்றவர். இவரது படைப்பாக்கங்களின் முதலாவது தொகுப்பாக கவிக்குழந்தை என்ற கவிதைத் தொகுதி 2007இல் வெளிவந்துள்ளது),
க.சிவாதரன் (டாக்டர் கந்தசாமி சிவாதரன் யாழ்ப்பாணம், மாதகலைச் சேர்ந்தவர். 1992இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில்  சேர்ந்து 1997ம் ஆண்டு டீ.ளு.ஆ.ளு. பட்டம் பெற்றவர். உளவளத்துணை, மருந்தியல் தொடர்பான துறைகளில் தேர்ச்சிபெற்ற இவர் நீர்கொழும்பில் தனியார் மருத்துவ மனையொன்றை நடத்திவருகிறார். பல்வேறு நோய்களுக்கு மருத்துவரின் பயனுள்ள ஆலோசனைகள் என்ற இவரது நூல் 2005இல் மணிமேகலை பிரசுரமாக வெளிவந்தது),
சு.சிவராஜலிங்கம் (நீர்கொழும்பு, ஆவே மரியா வீதியில் நினியோன் மாவத்தையில் வசித்த  இவர் காலமாகவிட்டார்  இவர் அந்திப் பொழுதின் சிந்தனை மலர்கள் என்ற வரலாற்று நாவலின் ஆசிரியர்),
எம்.ஜே.எம்.றியாள் (நீர்கொழும்பு கம்மல்துறையைச் சேர்ந்த இவரது மதீனாவை நோக்கி என்ற நூல் 1980இல் வெளிவந்தது),
பண்டிதர் க.மயில்வாகனனார் (நீர்கொழும்பு விஜயரத்தினம் இந்து மத்தியகல்லாரி முன்னர் விவேகானந்த வித்தியாலயமாக இயங்கிய காலத்தில் முதலாவது தலைமை ஆசிரியர்.
 புலவர்மணி பண்டிதர் க.மயில்வாகனன் வட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர். இவர்  விசுவேசர் புராணம் உள்ளிட்ட பன்னூலாசிரியர்),
 மு.பஷீர் (நீர்கொழும்பு உருவாக்கிய தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவர் ) மு.பஷீர். நீர்கொழும்பு இலக்கிய வட்டத்தின் முதலாவது தலைவராகவும் இருந்தவர். இவரது தலைமுறை இடைவெளி சிறுகதைத் தொகுதி அவுஸ்திரேலியா முகுந்தன் பதிப்பகத்தினால்  வெளியிடப்பட்டது),
 கவி முத்துதாசன்; (தென்றல் விடு தூது என்ற கவிக்கதம்பம் நூலின் ஆசிரியர் கவி முத்துதாசன்;, ப.விக்கினேஸ்வரன் என்ற இயற்பெயர் கொண்டவர். கடற்கரைத்தெரு, லக்ஷ்மன் மாவத்தை,  “தமிழகம்” இல்லத்திலிருந்து 1983இல் தென்றல் விடு தூது வெளிவந்தது. ஆரம்பகால நீர்கொழும்பு வாழ்வை சுமந்து நான் வாழ்ந்த இல்லமும் இதுவே),
சுபைர் இளங்கீரன் (யாழ்ப்பாணத்தில் பிறந்த இவர்; சுமார் அரை நூற்றாண்டு காலமாக தீவிர அரசியல், பத்திரிகையியல் மற்றும் இலக்கியப்பணிகளில் ஈடுபட்டு 1996 செப்டெம்பர் 12ம் திகதி நீர்கொழும்பில் காலமானவர்), நீர்கொழும்பூர் ந.தருமலிங்கன் கடற்கரை வீதியில் வசித்த இவரது வடிவங்கள் என்ற கவிதைத் தொகுதி 1998இல் வெளியாகியது) ஆகியோர் பற்றியும் இக்கட்டுரையின் நிறைவாகப் பதிவுசெய்ய விரும்புகின்றேன்.
இன்று நீர்கொழும்பில் பிறந்து வளர்ந்து இலக்கியம் படைத்துவரும் வேறும் பல இளம் படைப்பாளிகள் பலரின் பெயர்கள் இங்கு குறிப்பிடப்படவில்லை என்பதை நானறிவேன். இக்கட்டுரை நீர்கொழும்பின் இலக்கியவளம் பற்றிய முழுமையான ஆய்வல்ல என்ற வகையில், எதிர்காலத்தில் பிரதேச இலக்கிய ஆய்வுகளை மேற்கொள்ள முன்வரும் ஆய்வாளர்களுக்கு இக்கட்டுரை சிறிதளவாவது உதவியாகவிருக்கும் என்று நம்புகின்றேன்.
தொடர்புகளுக்கு: என்.செல்வராஜா,
இணையத்தளம்:    noolthettam.com     E Mail:  noolthettam.ns@gmail.com


No comments: