.
கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள மருங்கூர் கிராமத்தில் சுமார் 2200 ஆண்டுகள் பழமையான கல் ஆயுதத்தை சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக வரலாற்றுத் துறை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இரும்புக்காலப் பண்பாடு: மருங்கூர் கிராமத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு வடக்கே உள்ள பகுதியில் கிழக்கு மேற்காக 5.5 ஏக்கர் பரப்பளவில் சுமார் 2200 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் வாழ்ந்த இரும்புக்காலத்தை சார்ந்த மக்கள் இறந்தவர்களை புதைக்கப் பயன்படுத்தப்பட்டமுதுமக்கள் தாழிகள் காணப்படுகின்றன. கடந்த 2009 ஆண்டு இவ்வூரை சார்ந்த ராமலிங்கம் என்பவர் தமது நிலத்தை கனரக எந்திரம் மூலம் சீர் செய்யும் போது நான்கு அடி ஆழத்தில் உடைந்த முதுமக்கள் தாழிகள் மற்றும் அதன் மூடுகற்களும் வெளிப்பட்டன . அப்பகுதியில் இருந்து தமிழ் பிராமி எழுத்து பொறிக்கப்பட்ட மட்கல ஓடுகள் கிடைத்தது.
பண்டைய கால மக்களின் வாழ்விடப் பகுதி: மருங்கூர் கிராமத்தின் தெற்குபகுதியில் அமைந்துள்ள உள்ள குளத்தின் கிழக்கு கரைப் பகுதியில் பத்தடி உயரமும் ஒரு ஏக்கர் பரப்பளவும் கொண்ட பண்பாட்டு மேடு ஒன்று உள்ளது. இப்பகுதியில் கடந்த 2005 ஆம் ஆண்டு சாலை சீரமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டபோது 7 x 21 x 42 செ.மீ அளவுகளை கொண்ட செங்கற்கள் மற்றும் சிவப்புநிற மட்கல ஓடுகள், நான்கு கால்களுடன் கூடிய அம்மிகல், பெண்கள் விளையாடுவதற்காக பயன்படுத்தப்பட்ட சில்லு கருவிகள் போன்றவை வெளிப்பட்டுள்ளது. மேலும் சுமார் 9000 ஆண்டுகளுக்கு முன்பு மருங்கூர்பகுதியில் நுண்கற்கால மக்கள் பயன்படுத்திய கல்லாயுதங்கள், கற்செதில்கள் மற்றும் பிறைவடிவ கல்லாயுதங்களும் இப்பகுதியில் நடத்தப்பட்ட மேற் களஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மருங்கூர் பகுதியில் சிறியமற்றும் பெரிய அளவிலான கூழாங்கற்கள் மண்ணின் மேற்பரப்பில் பரவலாககாணப்படுகின்றன. இவைகள் சுமார் 20 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்புதொன்றியவை. இங்கு வாழ்ந்த நுண் கற்கால மக்கள் விலங்குகளை வேட்டையாடுவதற்காக தங்களுக்கு தேவையான கல் ஆயுதங்களை இந்தகூழாங்கற்களில் இருந்தே தயாரித்துள்ளனர்.
"கதா" ஆயுதம்: கடந்த இரண்டு மதங்களுக்கு முன்பு இவ்வூரை சார்ந்தராஜசேகர் என்பவர் தமது தோட்டத்தில் மரக்கன்றுகள் நடுவதற்காக தோண்டிய போது சுமார் மூன்றடி ஆழத்தில் துளைகளுடன் கூடிய கல் ஆயுதம் கிடைத்திருப்பதாக சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக வரலாற்றுத் துறைக்கு தகவல் அளித்தார்.அதன் பேரில் இத்துறையை சார்ந்த தொல்லியல் ஆய்வாளரும் பேராசிரியருமான சிவராமகிருஷ்ணன் மற்றும் ஆய்வு மாணவர்களும் மருங்கூர் சென்று கல்ஆயுதத்தை ஆய்வு செய்தனர். 1050 கிராம் எடை கொண்ட கூழாங்கல்லின்நடுப்பகுதியில் 6 செ.மீ அளவில் வட்ட வடிவ துளை இடப்பட்டுள்ளது. மேலும் 12செ.மீ சுற்றளவும், 6 செ.மீ கணமும் கொண்டதாக இந்த கல் ஆயுதம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த கல் ஆயுதத்தின் நடுவில் உள்ள துளையில் 6 செ.மீ.கண அளவு கொண்ட ஒருவலிமையான மரக் குச்சியினை சொருகி கதை போன்ற தற்காப்பு ஆயுதமாக பண்டையகால மக்கள் இதை பயன்படுத்தி இருக்கலாம். மேலும் நெல் மற்றும் பயறுவகை தானியங்களை பிரித்தெடுக்கவும், விலங்கினங்களை வேட்டையாடவும், சுத்தியல் போன்ற கருவியாகவும் இந்த கல் ஆயுத்தத்தை பயன்படுத்தி இருக்கலாம். இந்த கல் ஆயுதம் கிடைக்கப்பட்டுள்ள இடத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் தூரத்தில் இரும்புக் கால பண்பாட்டை சார்ந்த மக்களின் முது மக்கள்தாழிகள் காணப்படுவதாலும் மேலும் இதே பண்பாட்டுக் கூறுகளைக் கொண்ட வரலாற்றுத் தடையங்கள் பெருமளவில் கிடைப்பதால் இந்த கதை போன்ற கல்லாயுதமும் அதே காலக்கட்டத்தை சார்ந்ததாக இருக்கலாம் என்கிறார் பேராசிரியர் சிவராமகிருஷ்ணன்
nantri:http://ancient-tamilagam.blogspot.com.au/
No comments:
Post a Comment