சங்க இலக்கியக் காட்சிகள் 44- செந்தமிழ்ச்செல்வர், பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா

.
பண்டைத் தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகளையும்,  பண்பாட்டினையும் படம்பிடித்துக்காட்டும் சான்றுகளாகத் திகழும்சங்க இலக்கியங்கள் குறித்துரைத்து நிற்கும் சுவைமிகுந்த காட்சிகளை வெளிப்படுத்தும் கட்டுரைத்தொடர்.

என்னை மறந்துவிடு, அவளோடாவது இருந்துவிடு!

வயலும் வயல் சார்ந்த நிலமுமான மருதநிலத்து மக்கள் உளவுத்தொழிலில் உயர்ந்து விளங்கினார்கள். போதிய வருமானம், பொழுது போக்குதற்கு கிடைத்த அளவற்ற நேரம் என்பவற்றால் நிறைவான வாழ்க்கையிலே அவர்கள் மகிழ்ந்தார்கள். கலைகளிலே சிறந்தார்கள். களியாட்டங்களிலே மிதந்தார்கள். அத்தகையதொரு மருதநிலத்திலே காதல்வயப்பட்டு அவளும் அவனும் திருமணம் செய்து வாழ்ந்து வந்தார்கள். அளவற்ற வசதியும் வாய்ப்பும் அவனுக்கு வீட்டுச் சாப்பாட்டைவிட வெளிச் சாப்பாட்டில் விருப்பத்தை உண்டாக்கின. பரத்தையரை நாடினான். அவர்களோடு கூடினான். மனைவியை மறந்தான். வீட்டைத் துறந்தான்.
அவன் பரத்தையரோடு இன்புறுகின்ற செய்தியை ஊர்மக்கள் கண்டகண்ட இடங்களில் எல்லாம் கதைக்கத் தொடங்கினார்கள்.



அவர்களது அந்த ஏழனப் பேச்சுக்கள் அவளது செவிகளில் வந்து சேருகின்றன. அவை நெருப்பைவிடக் கொடுமையாக அவளைச் சுட்டெரிக்கிறன. அவள் துன்பத்தில் துடிக்கின்றாள். அவ்வாறு அவள் வருந்திக்கொண்டிருக்கும்போது அவன் அவளைத்தேடி வீட்டுக்கு வருகிறான். அப்போதும்கூட நிரந்தரமாக அவன் வருவதாகத் தெரியவில்லை. அவனது தேர்ப்பாகன் வீட்டுக்கு வெளியே தேரை நிறுத்திவைத்தக்கொண்டு அவனுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறான். அவன் தன்னிடம் திரும்பி வருகிறான் என்றெண்ணி உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்க அவனை வரவேற்பதற்காக ஓடோடி வாசலுக்கு விரைகிறாள். தேர்ப்பாகன் தெருவில் காத்து நிற்பதைக் காணுகிறாள். உள்ளத்தில் எழுந்த மகிழ்ச்சி ஏமாற்றத்தில் கரைகிறது.

அவன் தேரிலிருந்து இறங்கி வரும்போது பரத்தையர் வீட்டில் அவன் இன்புற்றிருந்தமைக்கான அடையாளங்கள் அவனது உடலில் வெளிப்படையாகத் தெரிகின்றன. அவனது மாலைலை அவனது கழுத்தில் காணவில்லை. மாறாக கசங்கிய பூமாலையொன்றை அவன் அணிந்திருக்கிறான். அதைக்கண்டதும் அவளுக்கு அவன்மீது கோபம் பிறக்கின்றது. வெறுப்பு உண்டாகின்றது. “நீ ஏன் இங்கு வந்தாய்? ஏதற்காக வந்தாய்? உன் உடலைப் பார்! அதிலே உன் பெருமை தெரிகிறது. உனது நடத்தை மிகவும் போற்றத்தக்கதாகவே இருக்கிறது.” என்றெல்லாம் அவனைப் பார்த்து இகழ்ந்து பேசுகின்றாள். வீதியிலே காத்து நிற்கும் தேர்ப்பாகனைச்  சுட்டிக்காட்டி “என்னிடம் நீ காட்டுகின்ற அன்பிற்கு நன்றி. மிக்க மகிழ்ச்சி. நீ இப்போதே திரும்பிப் போகலாம். என்னைப் போல அந்தப் பரத்தையர்களையும் புறக்கணித்துவிடாமல் அவர்களிடமாவது ஒழுங்காக இருக்கப்பார்” என்று கூறித் திருப்பி அனுப்புகின்றாள். இந்தக் காட்சியை நமக்குக் காட்டுகின்ற பாடல் இதோ:


வீங்குநீர் அவிழ்நீலம் பகர்பவர் வயற்கொண்ட
ஞாங்கர் மலர்சூழ்தந்து ஊர்புகுந்த வரிவண்டு
ஓங்குயர் எழில்யானைக் கனைகடாம் கமழ்நாற்றம்
ஆங்கவை விருந்தாற்றப் பகல் அல்கிக் கங்குலான்

வீங்குஇறை வடுக்கொள வீழுநர்ப் புணர்ந்தவர்
தேங்கமழ் கதுப்பினுள் அரும்பு அவிழ் நறுமுல்லைப்
பாய்ந்து ஊதிப் படர்தீர்ந்து பண்டுதாம் மரீஇய
பூம்பொய்கை மறந்து உள்ளாப் புனல்அணி நல்ஊர!
அணைமென்தோள் யாம்வாட அமர்துணைப் புணர்ந்துநீ

மணமனையாய் எனவந்த மல்லலின் மாண்பு அன்றோ
பொதுக்கொண்ட கவ்வையின் பூவணிப் பொலிந்த நின்
வதுவை அம் கமழ்நாற்றம் வைகறைப் பெற்றதை
கனலும் நோய்த்தலையும் நீ கனங்குழை அவரொடு
புனல் உளாய் எனவந்த பூசலின் பெரிதன்றோ

தார்கொண்டாள் தலைக்கோதை தடுமாறிப் பூண்டநின்
ஈர்அணி சிதையாது எம்இல்வந்து நின்றதை
தணந்ததன் தலையும் நீ தளர்இயல் அவரொடு
துணங்கையாய் எனவந்த கவ்வையின் கடப்பன்றோ
ஒளிபூத்த நுதலாரோடு ஓரணிப் பொலிந்தநின்

களிதட்ப வந்தஇக் கவின்காண இயைந்ததை
அளிபெற்றேம் எம்மைநீ அருளினை விளியாது
வேட்டோர் திறத்து விரும்பியநின் பாகனும்
நீட்டித்தாய் என்று கடாஅம் கடும்திண்தேர்
பூட்டு விடாஅ நிறுத்து

(கலித்தொகை, மருதக்கலி பாடல் இல: 1 பாடியவர்: மருதன் இளநாகனார்)

நேரடிக்கருத்து:

வயல்களால் நிரம்பப்பெற்றது மருத நிலம். வற்றாத குளங்கள் அங்கே உள்ளன. அந்தக் குளங்களிலே தாமரைகள் நிறைந்த பொய்கையிலே மலர்ந்திருந்த தாமரை மலரில் வரிவண்டு ஒன்று அமர்ந்திருந்து தேனுண்டு களிக்கின்றது. பக்கத்திலேயுள்ள வயல்களிலே குவளை மலர்கள் பூத்திருக்கின்றன. பூக்காரிகள் வந்து அந்தக் குவளை மலர்களைப் பறித்தெடுத்துக்கொண்டு அவற்றை விற்பதற்காக ஊருக்கள் கொண்டு செல்கின்றார்கள். தாமரை மலரில் அமர்ந்து தேனருந்திக்கொண்டிருக்கும் வண்டு இப்போது குவளை மலர்களின் மேல் ஆசைப்பட்டு அவற்றிலே தாவி அந்த மலர்களோடு ஊருக்குள் வந்துவிடுகின்றது. அப்போது அந்த ஊரிலே இருக்கும் மிகப் பெரிய யானைகளின் மதநீர் மணம் அந்த வண்டைக் கவர்கின்றது. உடனே நீலநிறக் குவளை மலர்களை விட்டுவிட்டு. மதநீரை நாடி வண்டு பறந்து போகின்றது. பகல் முழுவதும் அந்த வண்டு இப்படியே அங்கும் இங்குமாக மாறிமாறிக் களித்திருக்கின்றது.

மாலை வேளையாகின்றது. அந்த ஊர்ப் பெண்கள் முல்லை மொட்டுக்களைத் தலையிலே சூடுகின்றனர். இரவுமுழுவதும் தத்தம் கணவரோடு கூடித் தழுவி இன்புற்றுக் கிடக்கின்றனர்.  அவர்களது தலைகளிலே சூடியிருந்த முல்லை மொட்டுக்கள் மலர்ந்து நறுமணம் வீசுகின்றன. அந்த மணத்தினால் கவரப்பட்ட வரிவண்டு அங்கேயும் வந்து பெண்களின் கூந்தல்களை வட்டமிடுகின்றன. இவ்வாறு தங்கியிருந்த தாமரைப் பொய்கையை மறந்து கண்டகண்ட இடங்களிலெல்லாம் ஆசைகொண்டு பறந்துதிரியும் வண்டினைப் போன்றவன் நீ. நீர்வளம் நிரம்பப்பெற்ற ஊரைச் சேர்ந்தவனே! நான் சொல்வதைக் கேள்!

இங்கே பஞ்சணை போன்ற எனத தோள்கள் வாடி நான் வருந்திக் கிடக்கின்றேன். நீயொ இரவெல்லாம் பரத்தையரோடு கூடிக்கலந்து இன்புற்றுவிட்டு இப்போது இங்கெ வருகின்றாய். நீ காமத்தின் வசப்பட்டு விட்டாய். ஊரவர்கள் எல்லாம் இழித்துப் பேசுகின்றார்கள். உனது பெருமையை எப்படிச் சொல்வது? அத்துடன் பரத்தையரோடு கூடிக்கிடந்த அடையாளங்களோடு இப்படி எனக்கு முன்னே வந்து நிற்கின்றாயேää இது மிகவும் பெருமைப்படத்தக்க காரியம் தான்!

நீ பரத்தையரோடுகூடி பொய்கையிலே நீர் விளையாட்டில் மகிழ்ந்திருக்கிறாய் என்று மற்றவர்கள் பேசுகின்ற பேச்சுக்களைக் கேட்டு எனது நோய் அதிகமாகி நெருப்பைவிடக் கடுமையாக என்னைச் சுட்டெரித்தது. அப்படியெல்லாம் நான் துடிதுடித்துக் கிடக்கும்பொழுது நீ இப்படி வந்து நிற்கின்றாய். உனது காமமயக்கத்தினால் உன் மாலையை எவளோ ஒருத்திக்குக் கொடுத்துவிட்டாய். அவள் தலையில் இருந்த பூமாலையை நீ அணிந்து கொண்டிருக்கிறாய். அதையெல்லாம் நீக்காமலே துணிவாக என் முன்னே நீவந்திருக்கும் உனது பெருமைக்குரிய நடத்தை நீ பரத்தையரோடு நீராடியதாக முன்னர் எழுந்த வதந்தியைப் பார்க்க மிகவும் சிறந்ததல்லவா?

நீ என்னைப்பிரிந்ததனால், நான் துன்பத்தில் கிடந்தபோது நீ பரத்தையரோடு திருவிழாவில் கூத்தாடிக்கொண்டிருந்தாய் என்ற செய்தியையும் அறிந்தேன். இப்போது அவர்களோடு சேர்ந்து மகிழ்ந்திருந்த அந்த அடையாளங்களைக்கூட மறைக்காமல் எனக்கு முன்னே வந்து நிற்கின்றாயே. இது அதனை விடவும் அதிகமானதல்லவா?

ஏதோ இந்த நிலையிலாவது எங்களிடம் வந்து எனக்கு அருள்புரிந்தாயே! அந்த அளவில் நாங்களும் உனது அன்பினைப் பெற்றதாக மகிழ்கின்றோம். உனது பரத்தையர்களுக்கு மிகவும் வேண்டியவனான உனது தேர்ப்பாகன் பூட்டிவைத்த தேருடன் வெளியே காத்துக்கொண்டு நிற்கின்றான். இங்கே நீ தாமதித்தால், உன்னிடம் சொல்லாமலேயே அவன் சென்றாலும் சென்றுவிடுவான். அதனால் இப்போதே போய்வா. பரத்தையரோடு உனக்குள்ள உறவாவது என்னோடு கொண்டிருந்த உறவைப்போல அறுந்துவிடாமல் இருக்கட்டும். இப்போதே சென்று அந்த உறவையாவது தக்கவைத்துக்கொள். (என்று கணவனைப் பார்த்து மனைவி கூறுவதாக அமைந்த பாடல் இது)

No comments: