தமிழ் சினிமா


கள்ளப்படம்


தமிழ் சினிமா சில நாட்களாக சிறிய பட்ஜெட் நல்ல படங்களின் வருகையால் சிறப்பாகவே உள்ளது. அந்த வகையில் தரமான இயக்குனர் மிஷ்கினின் உதவி இயக்குனர் வடிவேல் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் தான் கள்ளப்படம்.
சினிமாவில் மெட்டா என்று ஒரு வகை திரைக்கதை ஜாலம் உள்ளது. அப்படியென்றால், சினிமாவிற்குள் சினிமாவை பற்றி எடுக்கும் ஒரு வகை ஜானர் தான் இந்த மெட்டா பிலிம். உதாரணமாக வெள்ளித்திரை, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் ஆகிய படங்களை சொல்லலாம். அந்த வகை கதையம்சம் கொண்டது தான் இந்த படமும்.

கதை

படத்தின் கதையாக பார்த்தால் ஹீரோ தன் நல்ல தரமான கதையை முதல் படமாக எடுக்க வேண்டும், எந்த ஒரு கமர்ஷியலுக்கும் விலை போக கூடாது என்பதே ஒன் லைன். படத்தின் இயக்குனர் வடிவேல், இசையமைப்பாளர் கே, ஒளிப்பதிவாளர் சந்தோஷ், எடிட்டர் காகின் ஆகியோர் கள்ளப்படத்திற்கு வெளியில் மட்டும் இல்லை, படத்திலும் இவர்களே அந்தந்த கதாபாத்திரங்களாக நடித்துள்ளனர்
வடிவேல் தன் அப்பா கூத்து கலையை நடத்தி வந்து காலப்போக்கில், அது அழிவதை கண்டு இறந்து விடுகிறார். இதையே நான் படமாக எடுத்தால் என்ன? என்று ஒவ்வொரு தயாரிப்பாளர் வீட்டிற்கும் ஏறி இறங்குகிறார்.ஆனால், அனைவரும் விரும்புவது கமர்ஷியல் கதையை தான்.
இதில் ஒரு கட்டத்தில் தயாரிப்பளாராக வரும் நரேன், வடிவேலுவை அசிங்கப்படுத்தி அனுப்புகிறார். ஒரு கட்டத்தில் வயது ஆக ஆக, 4 இளைஞர்களுக்கும் பயம் வர, நரேன் வீட்டிலேயே கொள்ளையடித்து படம் எடுத்தால் என்ன? என்று யோசித்து ப்ளான் போடுகிறார்கள்.
அதேபோல் நரேனின் மனைவியும் ஒரு முன்னாள் ஹீரோயின், அவருக்கும் வீட்டில் மரியாதை இல்லை, அவரும் கொள்ளையடித்து தன் காதலனுடன் செட்டில் ஆக ப்ளான் போட, அந்த பணத்தை வடிவேல் அன்கோ கைப்பற்றுகிறது. ஆனால், திருட வந்த இடத்தில் தன் பெண்ட்ரைவை விட்டு செல்கிறார் கே. இதை தொடர்ந்து போலிஸ் இவர்களை கண்டிப்பிடித்ததா?, படத்தை எடுத்து வெற்றி பெற்றார்களா? என்பது தான் மீதிக்கதை.

நடிகர், நடிகை, டெக்னிஷியன் பங்களிப்பு

படத்தில் மெயினாக வரும் வடிவேல், கே, சந்தோஷ், காகின் இவர்களின் உண்மையான பணியை தான் திரையிலும் செய்துள்ளதால் கதாபாத்திரங்களாகவே வாழ்ந்து இருக்கிறார்கள். அட நீண்ட இடைவேளைக்கு பிறகு நம்ம செந்தில் கலக்கியிருக்கிறார். 2 காட்சிகளில் தான் வருகிறார், ஆனால், அந்த இளைஞர்களுக்கு ஒரு தேவ தூதனாக, ஐ ஓப்பனராக வந்து செல்கிறார்.
சிங்கம் புலி தன் வழக்கமான நகைச்சுவையால் சிரிக்க வைத்து விட்டு, ஒரு சில போதனைகளையும் சொல்லி செல்கிறார். நரேன், அவரின் மனைவியாக வரும் முன்னாள் ஹீரோயின், இவர்களை கண்டுபிடிக்க வரும் போலிஸ் என அனைவரும் நிறைவாக நடித்துள்ளனர். ஆனால், மிஷ்கின் டச் ரொம்ப ஓவர் வடிவேல். இதற்கு மஞ்ச சேலை பாட்டு வேறயா??

க்ளாப்ஸ்

படத்தின் கதை, திரைக்கதை, வசனம். அனைத்திலும் சிக்ஸர் அடிக்கிறார் வடிவேலு, சந்தோஷின் ஒளிப்பதிவு மிகவும் லைவாக உள்ளது. கே தன் பங்கிற்கு படத்தில் கதாபாத்திரமாக கலக்கியது மட்டுமில்லாமல், பின்னணி இசையிலும் மிரட்டியிருக்கிறார்.
வசனத்தை குறிப்பிட்டே ஆக வேண்டும், இங்க எப்படி ஜெயிக்கிறோம்ன்னு முக்கியமில்லை, ஜெயிக்கனும், மாமரத்துல மாங்காய் இருக்கும், பணம் மரத்துல பணம் இருக்குமா? நான் இப்போ பணமரமா நிக்கிறேன் போன்ற வசனங்கள் யோசிக்க வைக்கின்றது. மேலும், கிளைமேக்ஸ் காட்சி எழுந்து நின்று கைத்தட்ட வைக்கிறது.

பல்ப்ஸ்

இரண்டாம் பாதியில் ஏதோ திரைக்கதை கொஞ்சம் தடுமாறினாலும், நல்ல கதை தான் என்பதால் பல்ப்ஸ் சொல்ல மனமில்லை.
மொத்தத்தில் இது கள்ளப்படம் இல்லைங்க ரொம்ப நல்லப்படம்.

ரேட்டிங்-3.25/5 நன்றி  cineulagamNo comments: