"தி அல்கெமிஸ்ற்" (தமிழ்: "ரசவாதி")

.

அமெரிக்காவில் பிரபலமான "சிபோற்லே" (Chipotle) எனும் மெக்சிகோ நாட்டு உணவகம் கனடாவில் பரவலாக இல்லையென அண்மையில் விஜயம் செய்த கனேடிய உறவுகளிடமிருந்து அறிந்து கொண்டேன். சோறு, இறைச்சி, கறுப்பு பீன்ஸ், அவகாடோப் பழம் என்பவற்றைக் குழைத்து ஒரு ரோரிலாவில் சுற்றித் தரும் "புறிற்றோ" (Burrito) தான் இந்த உணவகங்களின் விசேட தயாரிப்பு. இந்த உணவகத்தில் எனக்குப் பிடித்த இன்னுமொரு விடயம், உணவை வாங்கி எடுத்துச் செல்லும் கடதாசிப் பைகளில் சுவாரசியமான தகவல்களைப் பதிப்பித்திருப்பார்கள். சில சமயங்களில் மனதுக்குப் புத்துயிர் தரும் கதைகளும் வந்து சேர்ந்து அந்த நாளைத் திசை மாற்றி விடும். அப்படி என் ஒரு நாளை வெளிச்சமாக்கிய கதை ஒன்று இதோ: 
"ஒரு கிராமவாசி தினமும் நீண்ட தூரம் சென்று குடி தண்ணீர் அள்ளி வருவான். இதற்காக இரண்டு தண்ணீர்க் குடங்கள் அவனிடம் இருந்தன. ஒன்று பள பளக்கும் புதிய குடம். இரண்டாவது சிறிய ஓட்டைகளால் தண்ணீர் வழிந்து விடும் பழைய குடம். இரண்டு குடங்களையும் தன் தோளில் ஒரு குறுக்குத் தடியின் முனைகளில் கட்டித் 


தொங்க விட்டு அவன் தண்ணீர் கொண்டு வருகையில், ஒட்டைகள் நிறைந்த பழைய குடத்திலிருந்து தண்ணீர் வெளியேறி வீட்டை அடைகையில் பாதி தான் எஞ்சியிருக்கும். இது பற்றிப் பழைய குடத்திற்கு பெரும் கவலை. "நான் எனக்குரிய பணியைச் செவ்வனே செய்ய முடியாமல் இருக்கிறேனே? இன்னும் ஏன் என்னை இந்த மனிதன் காவித் திரிகிறான்?" என்று வருந்திய பழைய குடம் ஒரு நாள் தன்னைத் தூக்கி வரும் கிராமத்தவனிடமே இந்தக் கவலையைச் சொல்கிறது. "இன்று நான் உன்னை என் தோளில் காவி வருகையில், நீ இருக்கும் பக்கத்தில் என்ன தெரிகிறது என்று கவனமாகப் பார்த்துக் கொண்டே வா!" என்று புன்னகையுடன் சொல்கிறான் கிராமத்தவன். பழைய குடம் இப்போது தான் தொங்கும் பக்கத்தில் கவனிக்கிறது. அங்கே, பாதையோரத்தில் அழகிய பூக்கள் பூத்துக் குலுங்கும் பூஞ்செடிகள் ஏராளமாக வளர்ந்திருக்கின்றன. பழைய குடத்தில் இருந்து வழியும் தண்ணீர் விரயமாகாமல் அந்தச் செடிகள் குடித்து வளர்கின்றன என்பது பழைய குடத்திற்குப் புரிகிறது. "நீ கொடுக்கும் தண்ணீர் விரயமாகாமல் பாதையோரம் நானே செடிகள் வைத்தேன். என் குடமே! உன் பணி வீணாணதல்ல, மாறாக நீ ஒரு தோட்டத்தைப் போசிக்கும் உயரிய பணி செய்கிறாய், கவலையை விடு!" என்று விளக்கினான் கிராமத்தவன்.
இந்தக் உவமானக் கதையை எழுதிய  பவுலோ கியுலோ (Paulo Coelho) தான் "தி அல்கெமிஸ்ற்" (The Alchemist) எனும் உலகப் புகழ் பெற்ற நாவலை 1988 இல் எழுதினார். ரொம் கிளான்சியோ அல்லது டானியல் ஸ்டீலோ எப்போது அடுத்த கதை எழுதி வெளியிடுவார்கள் என்று காத்துக் கிடக்கும் உலகில், பவுலோவின் போர்த்துக்கீசிய மொழி அல்கெமிஸ்ற் உடனே சக்கை போடு போடவில்லை. ஆனால் அடுத்த பத்து வருடத்திற்குள் மெதுவாக பிரேசிலை விட்டு அமெரிக்காவுக்கும், ஐரோப்பாவுக்கும் இந்த நாவல் பரவிய போது, அல்கெமிஸ்ற் எல்லை தாண்டிய ஒரு அதிசயமாக வளர ஆரம்பித்தது. இன்று உலகின் எண்பது மொழிகளில் பெயர்ப்புச் செய்யப் பட்ட ஒரு நாவலாக அல்கெமிஸ்ற் இருப்பதன் காரணம் ஒன்றே ஒன்று தான்: உலகின் எந்தக் கலாச்சார, மத, இன அடிப்படை கொண்ட வாசகருக்கும் ஒரு எல்லை கடந்த செய்தியை இந்த நாவல் சொல்வதே அந்தக் காரணம்!.
அல்கெமிஸ்ற் அடிப்படையில் ஒரு ஆடுமேய்க்கும் சிறுவன் ஸ்பெயினில் இருந்து எகிப்து நோக்கி கனவில் தான் கண்ட புதையல் பொக்கிஷமொன்றைத் தேடிப் பயணிக்கும் கதை. இங்கே ஆடு மேய்த்தல், கனவு, புதையல், எகிப்தை அடைய அவன் கடக்கும் பாலைவனம், அவன் பயணத்தில் சந்திக்கும் "அல்கெமிஸ்ற்" அல்லது ரசவாதி, எல்லாமே உவமானங்கள். இந்த உவமானங்களை எங்கள் வாழ்க்கையில் நாம் பொருத்திப் பார்த்தல் மிகவும் இலகு (இதைத் தான் இந்த நாவலை வாசித்த/வாசிக்கப் போகும் யாரும் தவறாமல் செய்வார்கள் என்றும் நம்புகிறேன்!). ஒவ்வொரு நாளும் நாம் தவறாமல் காணும், ஆனால் உன்னிப்பாகக் கவனிக்கத்தவறும் நிகழ்வுகள், சில சமிக்ஞைகளை எளிய வாக்கியங்களால் அரிய தத்துவங்கள் போல உணர்த்துவதும் அல்கெமிஸ்ற் நாவலில் காணப்படும் ஒரு பிரமிக்கத் தக்க அம்சம். பவுலோவின் எல்லாப் புனைவுகளுமே, நான் அறிந்த வரை, தனி மனித முயற்சியாலும் தெய்வீக வழி நடத்தலாலும் ஒருவர் தான் வேண்டியதை எல்லாம் அடைய முடியும் என்ற செய்தியையே அடிநாதமாகக் கொண்டவை. இங்கே தெய்வ வழி நடத்தல் என்பதை எந்தக் கடவுளோடும் மதத்தோடும் தொடர்பு படுத்தாமல் சில சமயங்களில் இயற்கைச் சக்திகளோடு தொடர்பு படுத்தியிருப்பதன் மூலம் தெய்வ நம்பிக்கையற்ற வாசகர்களும் பவுலோவின் எழுத்துகளைத் தீவிரமாக மறுதலிப்பதில்லை.
"ஒருவன் ஒரு ஆசையைக், கனவை மிகவும் நேசித்து நாடும் போது. முழு அகிலமும் ஒன்று கூடி அவனுக்கு உதவுகிறது!" என்பதே அல்கெமிஸ்ற்றில் எதிரொலிக்கும் அடிநாதமாக இருக்கிறது. இந்த அவதானிப்பை வெவ்வேறு மொழிகளில் கலாச்சாரங்களில் வெவ்வேறு வழிகளில் நாம் கேள்விப் பட்டிருக்கிறோம். "அதிர்ஷ்டம் தயாராக இருக்கும் ஒருவரையே நாடி வரும்!" ("luck comes to the prepared") என்பது மேற்கு நாடுகளில் பொதுவாக சொல்லப்படும் இப்படியான ஒரு கருத்து.
கனவு என்பதால், ஒன்றை விரும்புகிறோம் என்பதால் அது எங்களுக்கு இலகுவாகக் கிடைத்து விடும் என்ற கருத்தை மறுதலிப்பதன் மூலம், "வெற்றிக்கான பத்து வழிகள்" என்ற தோரணையில் மேற்கு நாடுகளில் எழுதப் படும் pop psychology ஆலோசனைப் புத்தகங்களில் இருந்தும் அல்கெமிஸ்ற் வேறு படுகிறது. நாவலில் வரும் இந்தப் பரிமாற்றம் பலரின் அனுபவத்தோடு பொருந்தும் என நம்புகிறேன்:
ஆடுமேய்ய்க்கும் சிறுவன்: "என் இதயம் அஞ்சுகிறது! என் கனவுகளைத் தேடிப் பயணிப்பதால் துன்பம் வருமோ என என் இதயம் அஞ்சுகிறது!
அல்கெமிஸ்ற்:  உன் இதயத்திடம் சொல்: "துன்பத்தை விடக் கொடுமையானது துன்பம் வரும் முன்னே அத்துன்பம் பற்றி அஞ்சுதல் என்று உன் இதயத்திடம் சொல்!"
அல்கெமிஸ்ற் ஆலோசனையாக அல்லாமல், ஒரு கதை சொல்லியாகச் சொல்லும் செய்திக்கு விமர்சனங்கள் இல்லாமல் இல்லை. சுற்றியிருக்கிற சமூகத்தின் உதவிகள் ஆதரவையே பெற முடியாமல் இருக்கும் கோடிக்கணக்கான உலக மக்களிடம் "முழு அகிலமும் உன் துணைக்கு வரும்!" என்ற செய்தி என்ன மாற்றத்தை ஏற்படுத்தும்? இந்த விளிம்பு நிலை மக்கள் எப்படி இந்தச் செய்தியை ஏற்றுக் கொள்வர்? என்ற கேள்விகள் இணையத்தில் உலவுகின்றன. எனக்கும் பதில் தெரியவில்லை! ஆனால் ஒவ்வொருவரது அனுபவத்தையும் ஒவ்வொரு தனி நூலாகக் காட்டும் அல்கெமிஸ்ற்றின் அணுகுமுறை என்னைக் கவர்ந்தது! உங்களுக்கு என்ன தோன்றுகிறது என்று வாசித்துப் பாருங்கள் நண்பர்களே!
நன்றி.
பிற்குறிப்பு: "தி அல்கெமிஸ்ற்",  "ரசவாதி" என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்க்கப் பட்டிருப்பதாக அறிந்தேன். எங்கே கிடைக்கும் என்று தெரியவில்லை! தெரிந்தவர்கள் இங்கே பதிவிடுங்கள். ஆங்கில மூலம் 10 டொலருக்குள் தான், இலத்திரனியல் புத்தகம் அச்சுப்புத்தகத்தை விட மலிவு!
Nantri:http://www.yarl.com/

1 comment:

murali said...

ரசவாதி அமேசான் கின்டில் கிடைக்கின்றது..