விழுதல் என்பது எழுதலே - பகுதி 44 எழுதுபவர் மதுவதனன் மௌனசாமி – டென்மார்க்

. 
திரு.மதுவதனன் மௌனசாமி அவர்களின் கலை இலக்கிய ஈடுபாடு கொண்ட ஒரு சிறந்த எழுத்தாளர்.
கதை தொடர்கிறது.........
"நேற்றோ முந்தநாளோ கனடாவில இருந்து ஒரு போன் வந்திருந்து. திருப்பி எடுக்க காசு இருக்கேல. காசு போட்டுட்டு எடுக்கோணும் எண்டு யோசிச்சானான். மறந்துபோனன். அதுக்கும் கலாவுக்கு ஏதும் சம்மந்தம் இருக்குமோ… சீ.. என்னை உப்பிடி கேவலமா யோசிசவளைப்பற்றி நானெதுக்கு யோசிக்கவேணும்… உவள்தான் தலையிடிக்கு காரணமா இருக்கும்" சீலன் ஏதேதோவெல்லாம் யோசித்தான்.

வீட்டுக்கு வந்து விவேக் அங்கிளிடம் வைத்தியரைச் சந்தித்தது பற்றியும் நடந்தவற்றையும் கூறினான்.

"ஓம் சீலன்இ தலையில ஸ்கான் பண்ணுறது நல்லதில்லை எண்டும் ஆக்கள் சொல்லுறவையள். உந்த யோசினைகளை குறைத்துப் பார்த்தால் தெரியும் தலையிடி குறையுதோ எண்டு."

"அங்கிள் உந்த ஸ்கானில வேற வேற வகையள் இருக்கு. எம்ஆர்ஐ ஸ்கான் பிரச்சினை குடுக்குறதில்லை. சீ.ரீ ஸ்கான் கொஞ்சம் அதிகமான கதிரியக்கத்தை தலைக்குள்ள செலுத்தும் அதுவும் கனதரம் தலையைக் கொண்டே குடுத்தாத்தான் பிரச்சினை" தான் படித்தவற்றில் தெரிந்ததைக் கூறினான்.

"சரிதான் சீலன்இ பேசாம தலையைக் கொண்டே குடுக்காம இருக்கிறது நல்லம். விசாவும் கிடைச்சுட்டுத்தானே. கொஞ்சம் யோசனைகளைக் குறைத்து தலையிடியையும் குறைத்துப் பார்க்கலாம்தானே.""ஓம் அங்கிள். வேலைஇ படிப்புஇ இவங்கட டொச் மொழிப்படிப்பு எண்டு வாழ்க்கை கொஞ்சம் பிசியாகப் போறதால இனிக்கொஞ்சம் ஓகேயாக இருக்கும் எண்டு நினைக்கிறன். என்ன இரவில படுக்கேக்கதான் யோசனைகள் வாறத தடுக்கேலாமல் இருக்கு."

"எல்லாம் சரிவரும். ஊரில அம்மா தங்கச்சியை நினைத்து இங்க இனி எப்படி எதிர்காலம் இருக்கவேணும் எண்டதையும் நினைத்து இயங்கினால் எல்லாம் சரியாகிவிடும்." விவேக் அங்கிள் வழமையைப் போலவே உற்சாகம் கொடுத்தார்.

விவேக் அங்கிள் சென்றதும் போனை எடுத்தான் சீலன். கனடாவிலிருந்து வந்த தொலைபேசி இலக்கத்தைப் பார்த்தான். நேற்று வந்திருக்கிறது. எதுக்கும் எடுத்துப்பார்ப்போம் என்று முயன்றான்.

சிறிது நேர காத்திருப்புக்குப் பிறகு எதிர்முனையில் ஒரு பெண்குரல்.
"ஹலோ யாரிது?"

தமிழ்தான். கேட்டமாத்திரத்திலேயே புரிந்துகொண்டான் இது பத்மகலாவல்ல என்று.

"நான் சீலன். ஜேர்மனில இருந்து கதைக்கிறன். இந்த நம்பரிலயிருந்து நேற்று ஒரு கோல் வந்திருந்தது. அதுதான் இப்ப எடுத்துப் பார்க்கிறேன்."

"ஓ… அது நீங்களா. என்ரை பிரண்ட் கலா நேற்று என்ரை போனை வாங்கி உங்களுக்கு கோல் பண்ணினவள். எனக்குத் தெரியாது ஏனெண்டு. இன்னும் கொஞ்ச நேரத்தில வருவாள். ஏதும் சொல்லிவிடவேணுமோ? அவளின்ட நம்பர் இருக்கு தாறதோ?"

"ஒண்டும் சொல்லுறேக்கு இல்லை. நம்பர் என்னட்ட இருக்கெண்டு நினைக்கிறன்" ஒருவித படபடப்புடன் சொல்லி துண்டித்துவிட்டான். படபடப்பு உடலெல்லாம் பரவியிருந்தது. கையில் அது தெரிந்தது.

"என்னத்துக்கு வேற ஆற்றையோ போனிலயிருந்து எனக்கு கோல் பண்ணினவள்… அதுவும் கனகாலத்துக்கு பிறகு நேற்று..." படபடப்பில் என்னத்தை யோசிப்பதென்றே தெரியவில்லை சீலனுக்கு. இதுவேற இன்னொரு தலையிடி என்று யோசித்துக்கொண்டான்.

அப்படியே கதிரையில் இருந்தவனுக்கு அரைமணி நேரம் கடந்தது தெரியவில்லை. போன் கிணுகிணுத்தது. திடுக்கிட்டுக்கொண்டு போனைப் பார்த்தான். அதே கனடா நம்பர். ஒரு வித பதைபதைப்புடன் காதில் வைத்து ஹலோ என்றான்.

"சீலன்இ நான் கலா கதைக்கிறன்."

"..."

"என்ன சீலன் சத்தத்தைக் காணேல?"

"..."

"சீலன். நான் கடைசியாகக் கதைத்ததுக்குப் பிறகு உங்களுடன் தொடர்புகொள்ளவேண்டும் என்று பலதரம் முயன்றேன். ஆனால் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. இப்போதுதான் கிடைத்திருக்கிறது. நான் கடைசியாக் கதைக்கேக்க கோபம் மாதிரி நிறையக் கதைச்சிருந்தன். என்ன கதைச்சன் எண்டு ஞாபகம் இல்லை. ஏனெண்டால் நான் அப்ப உண்மையாகக் கதைக்கேல. உங்களோட பானு எண்டு யாரையோ இணைச்செல்லாம் கதைச்சனான் எண்டு நினைக்கிறன். அதெல்லாம் கட்டாயத்துக்குத்தான் கதைச்சனான். இங்க அக்காமார் தாங்கள்தான் என்னை எடுத்துவிட்டதெண்டு கொஞ்சம் அதிகமாக என்னில ஆதிக்கம் செலுத்தினம். நான் முரளியைத்தான் கட்டவேணும் எண்டமாதிரி நிக்கினம். உங்கட விடயம் தெரிஞ்சுபோச்சு. அக்காக்களுக்கு விருப்பம் இல்லை. முரளிதான் நீங்கள் பானு எண்டு யாரோடயோ தொடர்பாம் எண்டு அக்காக்கு சொன்னவர். இங்க அது பெரிய பிரச்சினை. எனக்கு ஒண்டிலயும் கவனம் செலுத்தேலாமல் இருந்தது. அதுதான் அண்டைக்கு அக்காவும் பக்கத்தில நிண்டவாஇ உங்கட கோல்தான் வருது எண்டு அவவுக்கும் தெரியும். அதாலதான் அப்பிடிக் கதைச்சனான். எனக்கும் கொஞ்சம் ரைம் வேண்டும் போல இருந்துது. உங்களுக்கும் நிறையப் பிரச்சினைகள். சுவிஸில சீலனா இருந்து டென்மார்க்கில மாரிமுத்து ஆகி இப்ப ஜேர்மனில...சீலனா மாரிமுத்துவா தெரியாது. உங்களுக்கும் ரைம் கொஞ்சம் தேவைப்படுது எண்டு யோசிச்சன். இவ்வளவு காலம் காதலிச்சனாங்கள். நான் கதைக்கேக்க அது உண்மையில்ல எண்டு கண்டுபிடிச்சிருப்பீங்களோ தெரியாது. திருப்பி என்னைத் தொடர்பு கொள்ள நீங்கள் முயலேல எண்டதில கோபமா இருக்கிறீங்கள் போலத்தான் கிடக்கு." பொலபொலவென்று உதிர்ந்து தள்ளினால் கலா.
சீலனுக்கு தூக்கிவாரிப் போட்டது. சொல்வதற்கு ஏதுமே இல்லாத வெறுமையொன்று அவனை ஆட்கொண்டிருந்தது.
"என்ன சீலன்இ ஏதுமே கதைக்கமாட்டன் எண்டு நிக்கிறியள்."
"கலா. எனக்கு என்ன சொல்லுறது எண்டு தெரியேல. கொஞ்ச நேரம் கழிச்சு போன் பண்ணுறன்."

"ஓகே சீலன். ஏதோ கதைச்சிட்டியள். சந்தோசமா இருக்கு. இந்த நம்பருக்கே போன் பண்ணுங்கோ. எனக்கு பண்ணவேண்டாம். இவளுக்கு பக்கத்தில நான் இருந்தாக் கதைக்கிறன். இல்லாட்டி நாளைக்கு இதே நேரம் கதைக்கிறன்."
"ஓகே.."
போனை வைத்த சீலனை ஒரு வெறுமை சூழ்ந்திருந்தது. மனதின் எங்கோ ஒரு மூலையில் சந்தோசப்புள்ளியொன்று தோன்றியிருந்தது. இயற்கையும் இயல்பு வாழ்வும்கூட விழுந்துபோகும் தருணங்களிலெல்லாம் எழுந்துகொள்வதற்கு சந்தர்ப்பத்தை வழங்கியே செல்கின்றன. சீலனுக்கு தலையிடி இல்லாமல் போவதற்கான காரணமும் வந்திருக்கிறது என்று போகப் போகத் தெரியும்.
--- தொடரும்.

No comments: