காவல் தெய்வங்கள் - தொடர்ச்சி -செ .பாஸ்கரன்



.
எனக்கு அடுத்த கட்டிலில் இருந்தவர் மரியா என்ற தென்ஆபிரிக்கப்பெண் இவரை நான் முதன்முதலில் பார்த்தபோது ராமாயணத்தில் வரும் கூனிபாத்திரம் தான் கண்முன்னால் வந்து நின்றது. முதுகுவளைந்து ஒருபக்கமாக சாய்ந்து நடந்து கொண்டிருந்தார். என்னைப் பார்த்து ஒரு சின்ன சிரிப்பு. நானோ பல விதமான நோவுடன் இயலாமல் படுத்திருக்கின்றேன் என்மனைவியிடம் என்னைப்பற்றி கேட்டறிந்து விட்டு பாதர் வருவார் உமது கணவனுக்காக பிரார்த்தனை செய்ய சொல்லட்டுமா என்று கேட்டிருக்கின்றார். நிலைமையை புரிந்து கொண்ட என்மனைவி இல்லை நண்பர்கள் பலர் கோவிலில் பிராத்தனை செய்துவிட்டார்கள் நன்றி என்று நாசூக்காக மறுத்து விட்டார்.

மரியாவிற்கு எதிராக இருந்தவர் மகமூட் என்ற இளைஞர் காலை விசிறி விசிறி நடப்பார் யாரையும் பார்த்து சிரிக்கமாட்டார்.திடீரென்று நின்று உற்றுப்பார்ப்பார் மீண்டும் நடக்க தொடங்கி விடுவார். பக்றீரியா காலில் தாக்கியதாக அறிந்தேன். அவரோடு எந்தவிதமான சிரிப்பையும் வைத்துக்கொள்ளவில்லை.

எனது கட்டிலுக்கு எதிராக இருந்தவர் அவுஸ்ரேலிய பெண்மணி அவரது கணவன் அவரை அணைத்துக்கொண்டே இருப்பார் பாசக்கிளிகள் போல் இருக்கிறது எவ்வளவு நேரம்தான் இப்படியே இருப்பார்கள் என்று பார்த்துக்கொண்டே இருந்து உறங்கிவிடுவேன். 

நான் மற்ர அறையில் இருந்து இங்கு கொண்டுவரப்பட்டபோது நண்பர்கள் கொண்டுவந்து தந்த பூங்கொத்துக்கள்   அனைத்தும் கொண்டுவரப்பட்டு சுற்றி அடுக்கப்பட்டிருந்தது. அதுவும் பூந்தோட்டம் அமைப்பதில் அதிக பிரியமுள்ள என் மனைவி அந்த இடத்தையும் ஒரு பூந்தோட்டமாகவே மாற்றிவிட்டார். வார்டை நோக்கி வருபவர்களுக்கு இந்த சிறிய பூந்தோட்டம் கண்ணைக்கவரும். சிறிய உருவம்கொண்ட ஒரு பாட்டி காலையும் மாலையும் நடை பயில்வாள் மெல்ல மெல்ல நடந்துவரும் அவள் பியூட்டிபுல் என்று சொல்லிக்கொண்டு அந்த பூக்களை தடவிப்பார்ப்பாள் முகர்ந்து பார்ப்பாள். நன்றாக இருக்கிறது அழகாக இருக்கிறது என்று பலவிதங்களில் கூறுவாள். அவளுக்கு யாரும் பூக்கள் கொடுக்கவில்லையோ என்று மனதில் எண்ணம் எழும் அது விடைகாணமுடியாத எண்ணமாகவே இருந்து விட்டது. அவளது கட்டிலை நான் சென்று பார்க்கவே இல்லை. 

சுகயீனமாக இருப்பவர்களுக்கு பூக்கள்தான் கொடுக்கவேண்டும்  என்ற எண்ணம் சற்று அதிகமாவே ஏற்பட்டது. கட்டிலில் படுத்திருந்து பார்க்கின்றபோது மனதில் மகிழ்சி பொங்குகின்றது எந்தப்பக்கம் திரும்பினாலும் பூக்கள் சிரித்தவண்ணம் இருக்கின்றபோது வருத்தம் எல்லாவற்றையும் மறந்து மனது மகிழ்வுகொள்கிறது. 

மறுநாள் காலையில் என் எதிரில் இருந்த பெண்மணி மிக அழகான பூக்கள் என்றுகூறி சிரித்துவிட்டு நாங்கள் போய்வருகிறோம் எம்மை போகசொல்லிவிட்டார்கள் என்று கூறி மற்றவர்களிடமும் விடைபெற்றுச் சென்றுவிட்டாள். அவளது பெயரைக்கூட சரியாக தெரிந்துகொள்ளவில்லை ஆனாலும் அந்த நாலுபேரில் இருந்து அவள் பிரிந்து சென்றது ஏதோ குடும்ப உறவு ஒன்று செல்வதுபோன்ற சிறு சோகம் மனதை வருத்தியது.

நான் அங்கிருந்தபோது ஒருநாள் காதலர் தினம் வந்தது. மனைவியும் மகளும் வந்தபோது எனக்கு ஒற்றைச் சிவப்பு றோஜா வந்தது. தலைமாட்டில் அதை அழகாக சொருகி வைத்துவிட்டார் என்மனைவி. 
அதேபோல் மகமூட்டுக்கும் யாரோ ஒருவர் ஒற்றை சிவப்பு றோஜா கொடுத்திருந்தார்கள். தாதிமார்கள் வரும்போது காதலர் தின பூக்களைப்பற்றி பேசுவதும் கேட்பதுவும் நையாண்டி செய்வதுமாக அன்றைய பொழுது போய்க்கொண்டிருந்தது. 

ரிங்ரிங் என்ற தாதி அதே சிரிப்புடனும் புன்னகையுடனும் இந்த றோஜாவைப்பற்றி கேட்டுக்கொண்டிருந்தாள். பதில் கூறியபின் நான் கேட்டேன் உனது காதலன் உனக்கு பூதரவில்லையா என்று சிரித்தபடியே கூறினாள் அவன் தரவில்லை நான் போகும்போது வாங்கிக் கொண்டுபோய்க் குடுக்கப் போகிறேன். அவன் சரியான கஞ்சன் என்று கூறிசிரித்து விட்டு சென்றாள். காதலர் தினமும் உலகமயமாதலில் பூக்கொடுக்கும் வியாபாரமாகிவிட்ட கொடுமையை எண்ணி நொந்துகொண்டேன். 

மறுநாள் காலைமுகமட் தனது ஒற்றை றோஜாவை மடித்துக் கசக்கி அங்கிருந்த குப்பைத்தொட்டியில் போடுவதைப் பார்த்து மனது திக்கென்று அடித்துக்கொண்டது. அவன் நிமிர்ந்து என்னைப் பார்த்தபோது நான் தலையை தாழ்த்திக்கொண்டேன். ஏதோ தன்னுள் சொல்லிக்கொண்டு போய் கட்டிலில் அமர்ந்துவிட்டான்.

என் எதிரே இருந்த கட்டிலுக்கு தாதிமார் உடையலங்காரம் செய்து நேர்த்தியாக வைத்தார்கள். புது மணப்பெண்ணை பார்த்திருக்கும் கட்டில்போல் கசங்காமல் மடிப்பு கலையாத விரிப்போடு காத்திருந்தது அந்த கட்டில். குதிரைப்பந்தயத் திடலில் குதிரைகளை விரட்டிக்கொண்டு போட்டி போடும் குதிரைவீரனைப்போல் இந்த தாதிமாரும் ஒருவர் சென்ற பின் வெறுமையாகும் கட்டிலுக்கு யாரோ ஒருவரை உடனடியாக தள்ளிக் கொண்டு வந்து விடுகிறார்கள். அரசாங்கம் ஆஸ்பத்திரிகளுக்கான கொடுப்பனவுகளில் வெட்டியதால் ஏற்பட்டதின் விளைவுதான் நோயாளர்கள் கட்டிலுக்காக காத்திருக்கும்  இந்த நிலையும் இந்த ஓட்டப்பந்தயமும் என்பதை நேரடியாக பார்க்ககூடியதாக இருந்தது. 

இந்தக்கட்டிலை தனதாக்கிக் கொண்டவர் பராட் (Farad) முனகியபடியே வந்தார் முனகிக்கொண்டே இருந்தார். தலையை பல விதமாக பிசைந்து பார்த்தும் என்ன வருத்தமாக இருக்கும் என்று ஊகிக்கவே முடியவில்லை. அங்கு கண்ணில் காணும் தாதிமாரிடம் டொகடர் வரயில்லையா என்று முனகிக்கொண்டே கேட்பார் வெயிட் மிஸ்டர் பராட் வருவார்கள் என்ற விடைகளை பல தாதிமாரிடம் இருந்து கேட்டு சலித்துவிட்டார். கடைசியாக ரிங்ரிங் என்ற தாதிதான் சரியான பதிலைக் கூறினார் மிஸ்டர் பராட் இன்று சனிக்கிழமை டாக்டர்கள் குறைவு அவசரம் என்றால் மட்டும் வருவார்கள் அவர்கள் வரும்வரை அவர்கள் சொன்ன மருந்தை நாங்கள் தருவோம் என்று கனிவோடு கூறினார். 

முனகிக்கொண்டிருந்த பராட் கர்ஜிக்கத் தொடங்கினார் நான் வயிற்று நோவில கிடந்து துடிக்கிறன் நீங்க சனிக்கிழமை எண்டுறீங்கள். வருத்தத்திற்கு தெரியுமா வெள்ளி சனிஎன்று மிகுந்த ஆத்திரத்தோடு கோபகனல் கண்களில் தெரிய பேசி முடித்தார். நான் மரியாவைப் பார்க்க மரியா என்னைப்பார்க்க மகமூட் எழுந்து காலை விசிறிக்கொண்டு ஒரு வேக நடை போட்டார் ஆனால் ரிங்ரிங்கோ எதுவம் நடக்காததுபோல் மிஸ்டர் பராட் இந்த குளிசய எடுங்கோ நோ குறையும் டாக்டர் வந்ததும் முதலில் உங்களிடம் அழைத்து வருகின்றேன் என்று கூறி மருந்தைக் கொடுத்தார். சவுக்குக்கு அடங்கிய சர்க்கஸ் சிங்கம் போல பராட் அடங்கிக் கொண்டார். முனகல் அடங்க மறுத்தது.

ஞாயிறு காலை திரைச்சீலையால்  மூடியிருந்த கட்டிலில் இருந்து எழுத்தாளர் எஸ்.பொ வின் சுவாரஸ்யமான ஞானம் சஞ்சிகையில் வெளிவந்திருந்த கேள்விபதில் பகுதியை வாசித்துக்கொண்டிருந்தேன். இருந்தாற்போல் பக்கத்து கட்டில் பகுதியில் இருந்து பரமண்டலத்தில் இருக்கும் பிதாவே என்று சத்தமாக ஜெபிக்கும் ஒலியும் அதைத் தொடர்ந்து சிடி யிலிந்து ஒலிக்கும் ஞானப் பாடலும் சத்தமாகவே கேட்டது. ஊர்க்கோவில்களில் புலவர் சவுண்ட் சேவிசிலிருந்து 18 ஒலிபரப்பிகளால் ஒலிக்கும் பாடல் கேட்ட ஞாபக அலைகள் வந்து மோதியது. புத்தகத்தை மடித்துப்பிடித்தபடி சிரித்துக்கொண்டிருந்தேன் முன் பக்கத்தைத்   தவிர மற்றப்பக்கங்கள் மூடியிருந்ததால் யாரும் என்னைப்பார்க்க முடியாது. அப்போது அங்கு வந்த ரிங்ரிங் கிடம் என்ன நடக்கின்றது என்று கேட்டேன். அவள் சிரித்தாள். குறைத்து போடும் படி சொல்ல சொன்னேன்.

அப்போது மகமூட்டினுடைய கைபேசியிலிருந்து தொழுகை சத்தம் போட்டியாக எழுந்தது. ரிங்ரிங் சென்று இருவரையுமே மெதுவாக செய்யும்படி கேட்டுக்கொண்டு அந்த விடயத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தாள். மகமூட் எரிச்சல் அடைந்து அவன்பாணியில் தன் எதிர்ப்பை தெரிவித்திருக்கிறான். மனிதர்கள் ஒவ்வொருவரும் சிந்திக்கும் திறனும் செயலாற்றும் விதமும் வேறானவைகளாகத்தானே இருக்கும் என்று எண்ணிக்கொண்டபோது இன்னோர் எண்ணமும் எழுந்தது எனது கைபேசியில் இருந்து சுப்ரபாதம் ஒலிக்கவிட்டிருந்தால் எப்படி இருந்திருக்கும் மல்ரி கல்சறல் வோட் என்று இருந்திருக்குமோ என்று நினைத்து சிரித்துக்கொண்டேன்.

புஸ்பா அன்று காலை மருந்துகளோடு வருகின்றார். பராட்டிடம் மருந்து கொடுக்கும்போது அவர் புஸ்பாவோடும் சத்தம் செய்கின்றார். அவரால் நோவை தாங்கமுடியவில்லை அத்தோடு டாக்டர்களையும் காணவில்லை  அதன் வெளிப்பாடு கோபமா மாறிவிடுகின்றது. ஏன் நோவிற்கு மருந்து தரவில்லை என்று கேட்கின்றார் அதற்கு புஸ்பா கூறுகின்றார் டாக்டர் எழுதியுள்ளதைத்தான் நாங்கள் தருவோம் உங்களுக்கு நோவென்றால் நீங்கள் சொல்லி கேட்டால் நோவிற்கு PPain killer தருவோம் என்கிறார். பராட்டோ விடுவதாய் இல்லை நீங்கள் தான் தரவேண்டும் நாங்கள் எப்படி மருந்தைப்பற்றி கேட்பது. இதைப் பார்த்தபோது முட்டை முதலில் வந்ததா கோழி முதலில் வந்ததா என்ற விவாதம்போல் இருந்தது. கோபமடைந்த பராட் நான் உம்மைப்பற்றி முறைப்பாடு செய்யப்போகின்றேன் என்கிறார் புஸ்பாவும் யாரிடம் வேண்டுமானாலும் முறைப்பாடு செய்யுங்கள். ஆனால் இப்போ உங்களுக்கு நோஇருந்தால் சொல்லுங்கள் நோவிற்கு மருந்து தருகிறேன் நீங்கள் கேட்காமல் நான் தரக்கூடாது என்கிறர். பராட்டோ டாக்டர் எழுதியிருக்கவேண்டும் நீங்கள் தரவேண்டும் என்கிறார். 

இந்த வேளையில் இதை பார்த்துக்கொண்டிருந்த பக்கத்து கட்டில் நோயாளியான மரியா புஸ்பா நல்ல தாதி அவரோடு சத்தம் போடாதீர்கள் என்று பரிந்து பேசுகிறார் உடனே புஸ்பா அவரைத்தடுத்து நிறுத்தி மரியா இது நானும் பராட்டும் உரையாடும் விடயம் நீங்கள் அமைதியாக இருங்கள் என்றதும் மரியா கட்டிலில் அமர்ந்து கொள்கிறார் 
நான் ஒரு பெருமூச்சை விட்டுக்கொள்கிறேன் மரியா தப்பிவிட்டார் என்று மனம் சொல்லிக்கொள்கிறது.

டாக்டர் வந்தால் கேட்டுவிட்டு தருகிறேன் என்று இடத்தை விட்டு நகர்கிறார் புஸ்பா.

சிறிதுநேர நிசப்தம் என்னைப்பார்த்து பராட் கூறுகின்றார் பெண்கள் இப்பிடித்தான் திருப்பி கதைக்கின்றார்கள் என்று. எனக்கு இதில் உடன்பாடு இல்லை என்றாலும் என்னையே பார்த்துக்கொண்டிருக்கும் பராட்டிற்கு ஆம் என்றும் சொல்லாமல் இல்லை என்றும் சொல்லாமல் ஒரு அசட்டுச்சிரிப்போடு தலையை வேறுபக்கம் திருப்பிக் கொள்கின்றேன். ( வந்த இடத்தில் நமக்கேன் வம்பு என்று உள் மனம் சொல்லிக்கொள்கிறது) இவர் இங்குவந்ததற்கு எந்த பெண்ணுமே இவரைப் பார்க்க வந்ததில்லை மனைவி உட்பட. ஒரு தாடிவைத்த நபர் (தம்பியாக இருக்கலாம்) மட்டும் தான் வந்து போனதை கண்டிருக்கிறேன். பெண்கள் சகவாசமே இல்லாது வாழ்கின்றாரோ என்று நினைத்துக்கொண்டேன்.

சிறிது நேரத்தில் ஒரு இந்திய இளம் பெண் டாக்டர் வருகின்றார் இவர்தான் எனக்கு இரண்டு தடவைகள் IV Tube  போட்டவர். பராட்டிடம் வந்து அன்பாக விசாரிக்கின்றார் வயிற்றை தட்டிப்பார்க்கின்றார் மிருதங்கத்தின் கறுப்பு வட்டத்தில் தட்டும்போது கேட்கும் ஒலிபோல் கேட்கிறது. டாக்டரும் இந்திய பெண்தானே சுருதி நன்றாக இருக்கென்று நினைத்தவர் போல் திருப்தியாக தலையை ஆட்டிவிட்டு புஸ்பாவிடம் ஏதோ கூறுகின்றார். புஸ்பா போய் இன்னுமொரு தாதியையும் அழைத்துக்கொண்டு தள்ளுவண்டியில் சில பொருட்களோடு வருகிறார் சினிமா திரையில் படத்தின் இறுதியில் சுபம் விழுவதுபோல் கேட்டின் மூடப்படுகிறது. நான் புத்தகத்தை விரிக்கிறேன் மனம் புத்தகத்தில் செல்லாமல் மூடப்பட்ட கேட்டினுக்கு உள்ளே செல்கின்றது. 

எனிமா என்ற சொல் இரண்டொருதடவை கேட்டது. அதன்பின் மீண்டும் திரை விலகுகின்றது. எல்லோரும் நகர்கின்றார்கள். ஒரு சில நிமிடங்கள்தான் சென்றிருக்கும் பராட் எழுந்து ஓட்டமும் நடையுமாக கழிவறை நோக்கி செல்வார் பின் முன்னும் பின்னும் நெளிந்தவாறு வருவார் சிறிது நேரத்தில் பல தடவைகள் ஓட்டமும் நடையும் தொடர்ந்தது. அதன்பின் அவர் எந்த முனகலும் இல்லாது அமைதியாக இருந்தார்.  என்னைப்பார்த்து நட்புடன் சிரிப்பார் இப்போது எந்த பயமும் இல்லாது நானும் அவரைப்பார்த்து நட்புடன் சிரித்துக்கொள்வேன். 

அன்று மாலை நான் படுத்திருந்தபோது எனது புத்தகம் கட்டிலில் இருந்து விழுந்துவிட்டது.எழும்பி எடுப்பதற்கு சற்று சிரமமாக இருக்கும் என்பதால் ஆறுதலாக எடுப்போம் என்று எழும்பாமலே கிடந்தேன் எதிர்பார்க்காமல் கட்டிலில் படுத்திருந்த பராட் எழுந்து ஓடிவந்து புத்தகத்தை எடுத்து என்கையில் தந்துவிட்டு ஒரு சிரிப்போடு தன் இடம் நோக்கி நகர்ந்து கொண்டார். நான் நன்றி சொல்லிவிட்டு கண்களை மூடினேன். மனம் கல்லுக்குள் ஈரம் என்று சொல்லிக்கொண்டது. 

இந்த சில நாட்களில் மரியாவின் முதுகு நிமிர்ந்து நன்றாக நடக்க தொடங்கிவிட்டார்.  பராட் அமைதியாக இருக்கின்றார் மகமூட் மட்டும் இன்னும் அப்படியே இருக்கின்றான். அவனைத்தவிர நாங்கள் மற்ற மூவரும் இடையிடையே ஏதாவது பேசிக்கொள்வோம். இந்த நான்கு சுவருக்குள் ஒரு உறவுப்பாலம் பிணைந்து கொண்டது. 

இந்த ward டில்தான் நண்பர் சிவபாதத்தின் மகன் டாக்டர் சந்தோஸ் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். அவர் எங்களுக்கு பொறுப்பான டாக்டரல்ல ஆனால் காலை மதியம் மாலை என்று அடிக்கடி வந்து என்னைப் பார்ப்பார் அங்கிள் ஏதாவது வேண்டுமா என்று கேட்பார். மனதுக்கு சந்தோசமாக இருக்கும் எங்கள் பிள்ளைகள் இங்கு இப்படி இருந்து கொண்டு எங்களின் நலனில் அக்கறை கொள்கின்றார்கள் என்பது உண்மையில் பெருமையாக இருக்கும். நிறைய பிள்ளைகள் இப்படியான நிலைக்கு வரவேண்டும் என்று மனது எண்ணிக்கொண்டது.

மறுநாள் டாக்டர் வந்தபோது என்னைப் போகலாம் என்று கூறிவிட்டார். நான் அன்பாக பழகிய தாதிமார் வந்து எனது பொருட்களை எவ்வளவு விரைவாக அடுக்கி என்னை அனுப்ப முடியுமோ அவ்வளவு விரைவாக செய்தார்கள். நான் ஏதாவது தப்பாக நினைத்து விடுவேனோ என்று ஒருவர் மாறி ஒருவர் கூறினார்கன் இன்று 8 நோயாளர்கள் கட்டிலுக்காக காத்துக்கொண்டிருக்கின்றார்கள் நாம் எமது கடமையைச் செய்கிறோம் என்று. நான் சிரித்துக்கொண்டே சொன்னேன் வீட்டிற்கு போவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது ஆனால் உங்களையெல்லாம் விட்டுப் போவது கொஞ்சம் கஸ்டமாக இருக்கிறது என்று அவர்களும் சிரித்தார்கள். என்னைப்போல் எத்தனை பேர் வந்து போனதை அவர்கள் பார்த்திருப்பார்கள். 

நான் வெளிக்கிடும்போது மரியாவந்து வாழ்த்துக்கூறி தானும் நாளை பெரும்பாலும் போய் விடுவேன் என்றார். சிறிய உலகம் எங்காவது சந்திப்போம் என்று கூறி விடைதந்தார். பராட்டைக் காணவில்லை இடையிடையே சிகரட் பற்றுவதற்காக காணாமல் போய் விடுவார். மகமூட்டை பார்தேன் கட்டிலில் இருந்தவன் எழுந்து விசிறி விசிறி நடந்து வந்தான் அருகில் நின்று ஒரு கூர்ந்த பார்வை பார்த்தான் எனது தோழில் கையால் தட்டி குட்லக் என்று கூறிவிட்டு வந்த வேகத்தில் திரும்பி சென்றுவிட்டான். ஒரு கணம் நெஞ்சில் நெருஞ்சிமுள் தைத்ததுபோல் இருந்தது. அவனது உலகம் வேறென்று நினைத்திருந்தேன் அவனும் இந்த உலகத்தில் ஒருவனாகத்தான் இருக்கின்றான். இதுவரை இல்லாத சுமை நெஞ்சிலே அழுத்தியது சொந்த உறவுகளை விட்டுச்செல்லும் துக்கம் தொடர நடக்கிறேன். கீழே செல்வதற்கு நிற்கும்போது பராட் வருகின்றார் என்னைக்கண்டதும் போகின்றீர்களா என்று கேட்கின்றார் நான் ஆமாம் என்கின்றேன். நன்றாக இரு brother  என்று வாழ்த்துக் கூறுகின்றான். மரியா பராட் மகமூட் என்ற நான்கு சுவர்களுக்குள் ஏற்பட்ட உறவுகளைப்பிரிந்து மனைவி என்ற உறவோடு கைகோர்த்து நடக்கின்றேன். 
   

4 comments:

kirrukan said...

முதலில் விரைவில் நலம் பெற வாழ்த்துக்கள்... இந்த காவல் தெய்வங்கள் மென்மையான‌ ஆயுதங்களுடன்(அன்பு,மருந்து) இருப்பவ‌ர்கள்...நீங்கள் வன்மையான ஆயுதங்களுடன் உள்ள காவல் தெய்வங்களின் படங்களை போட்டு எங்களை பயமுறுத்துகின்றீர்கள்....மீண்டும் த‌மிழ்முரசை காண்பதில் மிக்க மகிழ்ச்சி....

C.Paskaran said...

நன்றி கிறுக்கன்.
நீண்ட நாட்களாக தமிழ்முரசில் உங்கள் பதிவில்லாமல் கலகலப்பில்லாமல் போய்விட்டது. மீண்டும் வருகைதந்ததற்கு நன்றி. அது சரி காவல் தெய்வங்களின் கதை கேட்டதும் தான் உசாராகி விட்டீர்களோ

யசோதா.பத்மநாதன் said...

மிக அழகான உருக்கமான தத்துரூபமான நாடகக் காட்சி ஒன்றைப் பார்த்து முடித்ததை போல இருக்கிறது பாஸ்கரன். தமிழாலா சொன்ன முறையாலா சொல்லப்பட்ட சம்பவத்தாலா தெரியவில்லை கண்ணீரை அது தந்து சென்றது.

எங்கள் எல்லோரோடும் இவற்றைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

அன்பும் நன்றியும் மகிழ்ச்சியும் வாழ்த்துக்களும்

மனமார்ந்த பாராட்டுக்களும்!

வாழி! நலம் சூழ!!

Ramesh said...

பாஸ்கரன் நல்ல எழுத்தோட்டம். சம்பவங்களை சொன்ன விதம் மிக அருமை. நாங்கள் யாழ்தேவியில் பயணித்தபோது ஏற்பட்ட அனுபவத்தையும் பிரியும்போது ஏற்படும் வருத்தத்தையும் உங்கள் எழுத்தில் தெரிந்தது. மனிதர் வாழ்வு ஒரு ரெயில் பயணம்தானே பலர் ஏறுவார்கள் பலர் இறங்குவார்ககள் இடையில் ஏற்படும் நட்பும் பிரிவும் நடந்துகொண்டே இருக்கும். என்ன நான் திடீரென்று சுகிசிவம் போல் ஆகிவிட்டேன்.
என்ன இருந்தாலும் மிஸ்டர் பாஸ்கரன் அந்த ஆபிரிக்க சிங்கத்துக்காக ஒரு அம்மிக்கல்லு வாங்கதான் போறன் கி கி கி கி
ரமேஸ்