.
அவுஸ்ரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன 10வது ஆண்டு நிறைவு விழா
கலையொலி மாலை 2012 (மெல்பேண்  நிகழ்வு)  - கார்த்திகா கணேசர்


ATBC என மக்களால் போற்றப்படும்  வானொலி  தளிர் நடை  போட்டு வாழ்ந்து 10 வயதை எட்டிவிட்டது.பலவிதமான நிகழ்ச்சிகளையும் மனதிற்கு இதமாக வளங்கும் வானொலியின் 10வது ஆண்டு விழா அன்சாக் தினத்தில் மெல்பேணில் கலையொலி மாலை 2012  என கொண்டாடப்பட்டது.
சம்பிரதாய விளக்கேற்றல் தமிழ்வாழ்த்து என்பவற்றை அடுத்து மெல்பேண் கலையக பொறுப்பாளரும் சிட்டுக்குருவி நிகழ்ச்சித் தயாரிப்பாளருமான சாந்தினி புவனேந்திரராஜா வரவேற்புரை நிகழ்த்தினார்.  ATBC   யின்  நிர்வாக அமைப்பாளரான திரு. வை.ஈழலிங்கம் அவர்கள் வானொலியின் நோக்கம் பற்றி சுருக்கமாக எடுத்துக் கூறினார்.  ATBC  யின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகித்தோரையும் நினைவு கூர்ந்தார்.





கலை நிகழ்ச்சியின் ஆரம்பமாக ருஷானி றஜீத் சங்கத்தமிழ் பாடலொன்றிற்கு நடனம் ஆடினார்.அழகிய பெண்,  பாடலை உணர்ந்து ரசித்து,  முகபாவம் பொழிய ஆடியமை பாராட்டுக்குரியது. அடுத்து சிட்னியில் இருந்து வருகை தந்த  ATBC  யின் இயக்குனர்கள் , நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் ,தொழில்நுட்பக் கலைஞரென, பல வகையிலும் தொண்டாற்றுவோர் மெல்பேண் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டனர்.


மட்டுநகர் கல்முனையை பிறப்பிடமாகக் கொண்டு, லண்டனில் புகழ்பெற்ற இப்ராகிம் ஸ்மாயில் அருமையாக சில பாடல்களைப் பாடி மக்களின் கரகோசத்தைப் பெற்ரார். புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே பாடி புல்லரிக்க வைத்தார். TMS பாடல்களைப் பாடக்கூடிய கம்பீர குரல்படைத்தவர். பாவாடை தாவணியில் பார்த்த உருவமா, பொன்மகள் வந்தாள் , ஒளிமயமான எதிர்காலம் என எல்லோர் உள்ளத்திலும்  ATBC  யின் ஒளிமயமான எதிர்காலத்தை எதிர்கொண்டு வரவேற்கும் உணர்வை ஏற்படுத்தினார்
வாகினி சிவகுமார், புஸ்பவனம் குப்புசாமியின் முத்துமாரி பாடலுக்கு முதலிலே குடத்துடன் ஆடி பின் அபிநயித்தார். சிறுமி துறு துறு என்ற கண்ணுடன் கூடிய அழகிய தோற்றம் உடையவர். இதே நடனம் ஒரு குழுவாக ஆடியிருந்தால் மேலும் அழகாக இருந்திருக்கும் என தோன்றியது.


இடைவேளையைத் தொடர்ந்து அன்றைய நிகழ்ச்சிக்கு விஷேசமாக தமிழகத்திலிருந்து வருகை தந்திருந்த கிராமிய இசைக்கலைஞர்களான புஸ்பவனம் குப்புசாமி, அனிதா குப்புசாமி ஆகியோர் பாடினார்கள். விறுவிறுப்பேற்றும் நாட்டார் பாடல்கள், அதற்கேற்ற இசை இருந்தும் பக்கவாத்தியங்கள் பல்வகை வாத்திய கருவிகளையும் தன்உள்ளே கொண்ட KEY BOARD அதை வாசித்த கலைஞர் முருகானந்தம் நன்றாக இணைந்து வாசிக்கும் அருமையான கலைஞர். ராஜகோபாலன் தபேலா வாசிக்க கறுப்பன் கிணத்தடியான் தவிலை வாசித்தார். தேவைப்படும்போது தவிலாகவும் நையாண்டி மேளமாகவும் வாசித்து பாடலுக்கு சுவை சேர்த்தார். அவர்களுடன் மெல்பேண் கலைஞர்கள் வாசவ ன் , அக்ஷன் ,விக்னேஷ் இணைந்து மெருகூட்டினர்.



புஸ்பவனம் குப்புசாமி தமது பாடலை கிராமிய பாடல் என கூறுவதைவிட மக்கள் பாடல் என அழைப்பதுதான் சிறந்தது என்றார். கிராமிய நாட்டார் பாடல்கள் ஒரு காலத்திலே மக்கள் வாய்மொழியாக அவர்களின் உணர்வின் வெளிப்பாடாக செய்யும் தொழிலுடன் இணைந்து பாடப்பட்டது. கடுமையான தொழிலை பாட்டுடன் இணைந்து பாடிக்கொண்டு செய்யும்போது மக்கள் கஸ்டம் குறைவாக உணர்ந்தனர்.வீட்டுக்கு வீடு குழந்தைக்கு தாலாட்டு அவரவர் குடும்ப வழக்கு அல்லது பிரதேச வழக்கு.


நாட்டார் பாடல்களை ஆராய்ந்த அறிஞர் வானமாமலை மக்களின் வாழ்க்கை முறையை நாட்டார் பாடல் மூலம் ஆராய்து அறிந்தார். தமிழக கிராமங்களிலே ஒரு காலத்தில் சொத்து சுகம் உள்ள வீடுகளில் தம் பையனுக்கு 17 ,18 வயதிலே திருமணம் செய்து விடுவார்கள். அதேவயதில் திருமணமாகி பையனைப் பெற்ற தந்தையும் வயோதிகர் அல்ல . வயோதிகராக நடித்து மருமகளைக் கால் பிடித்து விடுமாறுகேட்டு மருமகளை அனுபவிக்கும் மாமன்களும் உண்டு. அப்படியான நிலையில் புதுமாப்பிள்ளை மனைவியை சைகையால் அழைக்க அவளோ மாமனுக்கு பாடுவதாக பாசாங்கு பண்ணி கோட்டான் உறங்கையிலே குருவி துணைதேடி பறக்க காத்திருக்கு ,காத்திரு வந்திடுவேன் என பாடினாளாம். இன்றோ சினிமா வளர்ச்சிஅ த்தனையையும் முழுங்கி ஏப்பம் விட்டு விட்டது. களனிக் காட்டிலும் சினிமாப் பாட்டேதான்.


இந்தவகையிலே சினிமா சம்பந்தம் இல்லாமல் மக்களின் உணர்வுகளையே பாடலாக அமைத்து மகிழ்வூட்டும் கலையாக அனிதா குப்புசாமி தம்பதிகள் பாடிவருகிறார்கள். எந்தக் கவிதையைக் கொடுத்தாலும் சளைக்காமல் உடனே மெட்டமைத்து பாடிவிடுவார் குப்புசாமி.  கலையொலி  மாலையில் ஸ்ரீதரன்  LIGHT POST  பற்றி ஒரு பாடல் எழுதிக் கொடுத்தார் உடனேயே குப்புசாமி யாவரும் ரசிக்கும்படி பாடினார். தம்பதியர் தனித்தும் இணைந்தும் பாடுவது கேட்போருக்கு உற்சாகம் ஊட்டுவதாக இருந்தது. யாழ் மக்களை நன்கு அறிந்தவர் குப்புசாமி யாழ்ப்பாணத்தை வெகுவிரைவில் கடல்மார்க்கமாக வந்தடையும் வேதாரணியத்தை பிறப்பிடமாகக் கொண்டவர். சிறுவனாக பல தடவைகள் யாழ்வந்தவர் இவர்.  யாழ்ப்பாணம் ஒடியல்கூழும், மீன்பொரியலும் பற்றி மேடையிலே தமாசாக பேசி மகிழ்வித்தார். யாழ் பேச்சுமொழியில் வல்லவர்.  அவுஸ்ரேலிய  தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் பற்றி அவர் பாடிய பாடலில் சில வரிகள்.

எங்கள் அசதியை நீக்கிடவே
தமிழரின் நெஞ்சம் நிறைந்த வானொலி
உணவை சமைக்கயிலே
நீ உணர்வை சமைக்கிறாய்
ஊருதி ஓட்டுகையில்  – எங்கள்
உள்ளங்களை ஓட்டுகிறாய்

பத்து வருடங்களை பாய்ந்து கடந்துவிட்டது ATBC,  பலவகையான  நிகழ்சிகளையும் வழங்கும் வானொலி, ஊடக தர்மத்தை உள்ளத்தில் கொண்டு இயங்கும் வானொலி, மக்கள் ஆதரவைப் பெற்ற வானொலி ATBC.
மெல்பேண் கலையொலி மாலை 2012 இதை எடுத்துக்காட்டியது.








No comments: