அவுஸ்திரேலியாவில்..........கலை, இலக்கிய ஊடகவியலாளரின் வருடாந்த ஒன்றுகூடல்

.

மெல்பனில் 12 ஆவது தமிழ் எழுத்தாளர் விழா

மாலதி முருகபூபதி (செயலாளர் அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம்)

அவுஸ்திரேலியாவில் வருடாந்தம் தமிழ் எழுத்தாளர் விழா மற்றும் அனுபவப்பகிர்வு இலக்கிய சந்திப்புகளை நடத்திவரும் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஆண்டுப்பொதுக்கூட்டம் கடந்த ஆண்டு மெல்பனில் நடைபெற்றபோது அதன் நடப்பாண்டு தலைவராக எழுத்தாளரும் வானொலி ஊடகவியலாளருமான திரு. பாடும்மீன் சு. சிறிகந்தராசா ஏகமனதாக தெரிவானார்.

அவரது தலைமையில் தொடர்ச்சியாக நடைபெற்ற பல செயற்குழுக்கூட்டங்களில் பேசுபொருளாக இருந்தது சங்கம் வருடாந்தம் நடத்தும் எழுத்தாளர் விழாவாகும்.. தமிழ் கலை, இலக்கிய, ஊடக குடும்பமாக இயங்கும் எமது சங்கம் இம்மாதம் 13 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மெல்பனில் 12 ஆவது எழுத்தாளர்விழாவை சில அரங்குகளில் நடத்துவதற்கு தீர்மானித்துள்ளது.

மெல்பனில் பிரஸ்டன் நகர மண்டபத்தில் சங்கத்தின் தலைவர் பாடும்மீன் சிறிகந்தராசா தலைமையில் இடம்பெறும் இவ்விழாவில், மெல்பன், சிட்னி, கன்பரா வாழ் கலை, இலக்கியவாதிகளும் ஊடகவியலாளர்களும் பங்கேற்று கருத்துப்பரிமாற்றம் மேற்கொள்ளவுள்ளனர்.


மூத்தவர்கள் மட்டுமன்றி இளம்தலைமுறை தமிழ் மாணவர்களும் குழந்தைகளும் கலந்துகொள்ளும் மாணவர் அரங்கு, சிறுவர் அரங்கு ஆகிய நிகழ்ச்சிகளை எழுத்தாளர் ஆவூரான் சந்திரன் ஒழுங்குசெய்துள்ளார். அத்துடன் சிட்னியில் உயர்வகுப்பு தமிழ் மாணவர்களுக்கு தமிழை பயிற்றுவிக்கும் இலங்கை கம்பன் கழக ஸ்தாபகர்களில் ஒருவரும் தமிழ் இலக்கிய ஆய்வாளருமான திரு. திருநந்தகுமார் மற்றும் மெல்பனில் தமிழ் கற்பிக்கும் திரு. சிவசம்பு ஆகியோரின் மாணவர்களும் இந்த மாணவர் அரங்கில் கட்டுரைகள் சமர்ப்பித்து உரையாற்றவுள்ளனர்.

கவிஞர் கல்லோடைக்கரன் தலைமையில், ‘புலம்பெயர்ந்ததால் தமிழர்கள் நாம் நிலை உயர்ந்தோமா?’ என்ற தலைப்பில் பல கவிஞர்கள் பங்கேற்கும் கவியரங்கும், எழுத்தாளர் திரு. மாத்தளை சோமுவின் தலைமையில் ‘ புலம்பெயர்ந்த தமிழ்ப்படைப்பாளிகளின் படைப்புகளும், தமிழ் ஊடகங்களும் தமிழுக்கு வளம் சேர்க்கின்றனவா?’ என்ற தொனிப்பொருளில் கருத்தரங்கும் நடைபெறும். இக்கருத்தரங்கில் சிறுகதை, நாவல், கவிதை மற்றும் வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகைகள், சிற்றிதழ்கள், இணயத்தளங்கள், வலைப்பூக்கள், நுண்கலைகள் தொடர்பாக கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படும்.

முன்னாள் இலங்கை வானொலி மாமா எழுதிய ‘திருக்குறளில் புதிய தரிசனங்கள் இரண்டு’ நூலும் பெண்போராளிகளின் கவிதைகள் தொகுக்கப்பட்ட ‘பெயரிடப்படாத நட்சத்திரங்கள்’ நூலும் இவ்விழாவில் அறிமுகப்படுத்தப்படும்.

அத்துடன் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் ஜீவநதி கலை, இலக்கிய சஞ்சிகை இம்மாதம் வெளியிட்டுள்ள அவுஸ்திரேலிய சிறப்பிதழும் வெளியிடப்படும். இச்சிறப்பிதழில் அவுஸ்திரேலியாவை புகலிடமாகக்கொண்டுள்ள பல படைப்பாளிகள் எழுதியுள்ளனர்.

இடம்பெறவுள்ள கலையரங்கத்தில் மெல்பனில் நீண்டகாலமாக இயங்கிவரும் நிருத்தா இந்தியன் நடனக்கல்லூரியின் மாணவர்களது நடன நிகழ்ச்சி அரங்கேறும். இதனை நடன ஆசிரியை திருமதி நிருத்தா தர்மகுலேந்திரன் தயாரித்து இயக்கியுள்ளார்.

சிட்னி சோலைக்குயில் அவைக்காற்றுக்களம் வழங்கும் ஈழத்தின் மூத்த கவிஞர் மகாகவியின் ‘மீண்டும் தொடங்கும் மிடுக்கு’ பா நாடகமும் அரங்கேறவுள்ளது. இதனை பிரபல எழுத்தாளரும் சீர்மியத்தொண்டருமான திருமதி கோகிலா மகேந்திரன் நெறிப்படுத்தியுள்ளார்.

இறுதி நிகழ்வாக விழாவில் கலந்துகொண்ட அனைவரும் பங்கேற்கும் இராப்போசன விருந்தும் இடம்பெறும்.

No comments: