இலங்கைச் செய்திகள்
இன, மத, கலாசார சமத்துவமே அவசியத் தேவை

ஜெனீவா தீர்மானத்தின் விளைவுகளை சமாளிக்க சிவில் சமூகத்தைப் பலப்படுத்தலாம்

விதப்புரைகளை நடைமுறைப்படுத்த முடியாதென்றால் ஆணைக்குழுவை ஏன் அரசு நியமித்தது?

இன முரண்பாடுகளால் பல தசாப்தங்களாக துருவமயப்படுத்தப்பட்டிருக்கும் இலங்கைச் சமூகங்கள் மத்தியில் நல்லுறவையும் சௌஜன்யத்தையும் ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாக அரசாங்கம் தொடர்ச்சியாக பிரகடனங்களை விடுத்துவரும் நிலையில் தம்புள்ள பள்ளிவாசல் மீதான தாக்குதலும் அதன் பின்னரான ஆர்ப்பாட்டங்களும் இனங்கள் மத்தியிலான வடுக்களை ஆற்றுப்படுத்துவதற்குப் பதிலாக காயங்களை ஊதிப்பெருப்பிக்க வைப்பதற்கான அறிகுறிகளாகவே தென்படுகின்றன. 26 வருடங்களுக்கும் மேலாக நீடித்த உள்நாட்டு யுத்தமானது அளவிட முடியாத உயிர், உடமை இழப்புகளை ஏற்படுத்தி மக்களை வறுமையின் கோரப் பிடிக்குள் தள்ளியிருந்தது. இந்நிலையில் இனங்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான பாதையில் நாடு துரிதமாக நடைபோடுமென்ற எதிர்பார்ப்பு பரவலாகக் காணப்பட்டதுடன் உலக நாடுகளும் இனங்களுக்கான நல்லிணக்கத்துக்கே முன்னுரிமை கொடுத்து செயற்படுமாறும் அதற்குத் தேவையான அடிப்படைக் காரியங்களை தயக்கமின்றி முன்னெடுக்குமாறும் தொடர்ந்து குரல்கொடுத்து வருகின்றன. 

இன, மத, கலாசார சமத்துவமே அவசியத் தேவை

ஆனால், யுத்தம் முடிவடைந்து மூன்று வருடங்களை அண்மித்திருக்கும் நிலையில் தமிழ் மக்களின் பகுதிகளில் தமிழர்களின் கலாசாரத்தையும் மத அடையாளத்தையும் அழித்தொழிக்கும் கைங்கரியம் இடம்பெற்றுவருகின்றது என்ற பரந்தளவிலான எண்ணப்பாடு தமிழ் மக்களின் மத்தியில் காணப்படுகிறது. அதேபோன்று மற்றொரு சிறுபான்மை சமூகமான தமிழ் பேசும் முஸ்லிம் மக்கள் மத்தியிலும் தமது மத, கலாசார அடையாளங்களுக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கின்றது என்ற கவலையும் விரக்தியும் தம்புள்ள சம்பவத்தின் பின்னர் ஆழமாக பரவியிருப்பதை அவதானிக்க முடிகிறது.

தம்புள்ள பள்ளிவாசலை வேறொரு இடத்திற்குக் கொண்டு செல்லும் அரசாங்கத்தின் அறிவிப்பை நாட்டிலுள்ள சகல முஸ்லிம் தலைவர்களுமே ஒட்டுமொத்தமாக நிராகரித்துள்ளனர். "தங்கத்தில் நிர்மாணித்து தந்தாலும் வேறு ஒரு இடத்திற்கு பள்ளிவாசல் கொண்டு செல்லப்படுவதை முஸ்லிம் சமூகம் ஏற்றுக்கொள்ளாது' என்று முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் ஹசன் அலி கூறியிருந்ததார். சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா, மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா போன்ற முஸ்லிம் அரசியல் தலைவர்களும் பள்ளிவாசல் இடமாற்ற யோசனைக்கு தமது எதிர்ப்பை வெளியிட்டிருக்கின்றனர்.

பள்ளிவாசல் இடமாற்றம் தொடர்பாக முஸ்லிம் மக்களும் தலைமைகளும் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருக்கும் நிலையில் ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க இந்த விடயம் தொடர்பாக இன்னமும் பகிரங்கமாக தனது நிலைப்பாட்டை விடுக்கவில்லை. ஆயினும் பிரதான எதிர்க்கட்சியைச் சேர்ந்த முஸ்லிம் எம்.பி.க்களிடமிருந்து கடும் கண்டனங்களும் எதிர்ப்புகளும் வெளிவந்திருக்கின்றன. யுத்தம் முடிவடைந்த பின்னர் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டிய நிலைமை தொடர்ந்தும் இருந்து வருகிறது. நிலையான சமாதானத்துக்கு பல்லின, பல்மத சமூகத்தை உருவாக்குவது அடிப்படைத் தேவையாகும். சகல இனங்களைச் சார்ந்தவர்களுமே தாங்கள் சமவுரிமை உடைய பிரஜைகளாக நடத்தப்படுகின்றனர் என்று உணரப்பட வேண்டும். இந்த மாதிரியான வெற்றியை பலவந்தமாக திணிக்கப்படுவதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியாது.

யுத்தம் முடிவடைந்து மூன்றாண்டை எட்டுகின்ற போதிலும் இந்த அமிலப் பரீட்சையில் சிறப்பான புள்ளிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு உள்ளது. சகல சமூகங்களையும் உள்ளீர்த்த தன்மையுடன் நியாயமான செயற்பாடுகளை முன்னெடுத்தால் மாத்திரமே அந்நியமயப்படுத்தப்பட்டு வரும் சிறுபான்மை சமூகங்களையும் பொதுவோட்டத்தில் ஒன்றிணைக்க முடியும். இன, மத, கலாசாரத்தின் பன்முகத்தன்மையை ஏற்றுக்கொள்வது மட்டுமன்றி இவற்றுக்கான சமத்துவமே இன்று இலங்கைக்கு அவசியமாகத் தேவைப்படுகிறது. இதனை செம்மைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை இதய சுத்தியுடன் முன்னெடுக்காவிடின் சமூகங்களுக்கிடையிலான இடைவெளி அதிகரித்துச் செல்வதை ஒருபோதுமே தடுக்க முடியாத நிலைமை ஏற்படும்.
nantri thinakkuralஜெனீவா தீர்மானத்தின் விளைவுகளை சமாளிக்க சிவில் சமூகத்தைப் பலப்படுத்தலாம்

Tuesday, 01 May 2012
கலாநிதி ஜெகான் பெரேரா

ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உ ரிமைகள் பேரவையின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நான்கு வாரங்களை அடுத்து இலங்கை அரசாங்கம் அதனை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் கலப்பான தகவல்களை வெளியிட்டு வருகிறது. அரசாங்கத்தின் கூட்டணிக்குள்ளேயே முனைவாக்கம் பெற்ற வகையிலான அபிப்பிராயங்கள் நிலவுகின்றன. தேசீயத்துவ கட்சிகள் ஜெனீவா தீர்மானத்தை ஜெனீவா தீர்மானத்தின் மைய கருத்தான அதுவும் கற்றுக் கொண்ட பாடங்களுக்கும் நல்லிணக்கத்திற்குமான ஆணைக் குழுவின் அறிக்கை உட்பட யாவும் நிராகரிக்கப்படல் வேண்டும் எனக் கூறுகின்றன. அரசாங்கத்தின் கூட்டணியிலுள்ள இடது சாரிக் கட்சியினர் முரண்பட்ட ஒரு நிலைப்பாட்டை எடுத்துள்ளனர். அவர்கள் சர்வதேச சமூகத்தின் விருப்புகள் எதனையும் குறிப்பாகக் கொள்ளாத வகையில் கற்றுக் கொண்ட பாடங்களுக்கும் நல்லிணக்கத்திற்குமான ஆணைக்குழுவின் அறிக்கை நடைமுறைப்படுத்தப்படுதல் வேண்டும் என்ற நிலைப்பாட்டினைக் கொண்டுள்ளனர்.

ஜெனீவா தீர்மானம் பற்றிய அரசாங்கத்தின் கருத்து யாதென நிச்சயமாக தெரியாத நிலையில் பல்வேறு அரசாங்க அங்கத்தவர்கள் மேற்கூறிய இரண்டு நிலைப்பாடுகளுக்கு இடையிலான கருத்துக்களைக் கூறிவருகின்றனர். இலங்கையின் நல்லிணக்க ஆணைக் குழு அதற்கு வழங்கப்பட்ட ஆணையினை மீறியுள்ளதாகவும் அதனால் அதன் சிபாரிசுகள் சீர்தூக்கிப் பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் ஒரு சாரார் கூறி வருகின்றனர். அடுத்த ஒரு பிரிவினர் இலங்கையின் நல்லிணக்க ஆணைக் குழுவின் சிபாரிசுகளில் ஒரு சிலவற்றை நடைமுறைப்படுத்தலாம் என்றும் ஏனையவை நடைமுறைச் சாத்தியமற்றவை என்றும் கூறி வருகின்றனர். நடைமுறைப்படுத்த முடியாததெனக் கூறப்படும் சிபாரிசுகளில் முன்னாள் விடுதலைப் புலிகளின் கிழக்கு பிராந்திய தளபதி கருணா , 600 பொலிஸ்காரர்கள் அரசாங்கத்தின் கட்டளையின் பேரில் புலிகளிடம் சரணடைந்த போது கொன்றுகுவித்தமை தொடர்பில் புலனாய்வு செய்யப்பட வேண்டும் என்பது ஒன்றாகும்.

இவ்வாறான சூழ்நிலையில் கலப்பான கருத்துகளை அரசாங்கம் வெளியிட்டு வருவதனால் பொது மக்கள் இவை தொடர்பான பிரச்சினைகள் பற்றி முற்றாக அறிந்தவர்களாக இல்லை. அவர்களுக்கு ஓரளவுக்கு சில விபரங்களே தெரியும். இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை சட்டத்தின் வாயிலான ஆட்சியை நிலை நிறுத்த சிபாரிசு செய்துள்ளமை, அரச நிறுவனங்கள் அரசியல் மயமாக்கப்பட்டதால் ஏற்பட்டுள்ள அரசியல் தலையீடுகளால் அவை செயலிழந்து காணப்படுகின்றமை என்பன பற்றி மிகக்குறைந்த அளவிலேயே அவர்கள் அறிந்தவர்களாக இருக்கலாம். பொது மக்களுக்கு இவை பற்றி தெரிய வேண்டியமைக்கு பதிலாக புலிகளை தோற்கடித்தமைக்காக அரசாங்க தலைமைத்துவத்தை ஜெனீவா தீர்மானம் தண்டிக்க முயற்சிக்கின்ற வேளையில் நல்லிணக்க ஆணைக்குழு அரசாங்கத்தினை அதன் மீதான நியாயமற்ற குற்றச்சாட்டுகளில் இருந்து பாதுகாக்க முயலுவதாகவும் அவர்களுக்கு செய்திகள் சென்றடைந்துள்ளன அல்லது அவ்வாறான செய்திகளை அவர்களுக்கு கிடைத்த தகவல்களில் இருந்து அவர்கள் அனுமானித்துக் கொண்டதாகவும் கூறலாம். எவ்வாறாயினும் இவ்வாறான கருத்துக்களும் அனுமானங்களும் இலங்கை சமூகத்திற்கு அரசியல் நிலை மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதனை தனது அறிக்கை வாயிலாக எடுத்துக் கூறியுள்ள ஆணைக்குழு அங்கத்தவர்களது முயற்சிகளுக்கு நியாயம் வழங்கியதாகாது.

மக்களுடைய பங்கேற்பு

ஜனநாயகத்தின் மிக அடிப்படையான ஒரு அம்சம், மக்கள் அவர்களை ஆட்சி செய்வது தொடர்பில் அவர்களும் பங்கேற்க வேண்டும் என்பதாகும். ஜெனீவாத் தீர்மானம் தொடர்பில் இலங்கைக்குள் பெரும் ஆர்வங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளமை உண்மை தான் என்ற போதிலும் அது தொடர்பான பொது கலந்துரையாடல்களில் ஒன்றில் அவர்களிடம் தவறான தகவல்கள் கூறப்பட்டுள்ளன. அல்லது ஒரு பக்கச்சார்பானதும் உ ண்மைக் கருத்தை சிதைத்த வகையிலுமான முறையிலேயே தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. பொதுவான அனுமானம் , ஜெனீவாத் தீர்மானம் என்பது இலங்கை அரசாங்கத்தைப் பற்றியது என்பதனை விட இலங்கைக்கு எதிரானது என்ற பாணியிலேயே நிலவுகிறது. இதனால் அரசாங்கத்தை ஜெனீவாத் தீர்மானம் தொடர்பாக சார்பான முறையில் ஆவனம் செய்யும்படி மக்கள் தூண்டுவிக்கும் அழுத்தம் ஏற்படாதுள்ளது. எனவே இவ்வாறான நிலைமை சீர்திருத்தப்படுதல் வேண்டும். இல்லாவிடில் இத் தீர்மானத்தை (ஜெனீவா) பிரேரித்தவர்கள் எதிர்பார்த்த எதிர்மறையற்ற தாக்கங்களும் சுதந்திரமான முறையில் நல்லிணக்க ஆணையாளர்கள் எடுத்துக் கூறிய சிபாரிசுகளின் விளைவாக ஏற்படக் கூடிய நன்மைகளும் நாட்டினால் இழக்கப்பட்டனவாகி விடலாம்.

ஜெனீவா தீர்மானம் ஏற்படுத்த முனைந்தவற்றில் இலங்கையில் ஏற்பட்ட பாதகங்களுக்கு பொறுப்புக் கூறுதல், நல்லாட்சி, சமாதானத்தை கட்டியெழுப்புதல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் என்பனவே முக்கியமானவை. இவ்வாறான நீதியொழுக்கத்தினை அடிப்படையாகக் கொண்ட வகையிலேயே ஜெனீவாத் தீர்மானத்தை வரைந்தவர்கள் தமது பிரேரணையை நியாயப்படுத்துவதாக செயற்பட்டுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உ ரிமைகள் பேரவையில் இத் தீர்மானம் விவாதிக்கப்பட்ட போது அதனை ஆதரித்த மேற்கத்தைய நாடுகள் இத் தீர்மான ஆவணம் நடு நிலை வகிக்கும் பண்பானதென்றும் இலங்கையில் யுத்தத்தை அடுத்து வரும் காலப் பகுதியில் நீதியும் , நல்லிணக்கமும் ஏற்பட ஆக்கபூர்வமான பங்களிக்கக் கூடியது என்றும் கருத்து தெரிவித்துள்ளன. ஆனால் அவ்வாறான நல்ல நோக்கங்கள் நிறைவேற வேண்டுமானால் அதற்கு இலங்கையின் பொது மக்களும் நிலைமாறாச் செய்முறையில் பங்காளராக இருக்க வேண்டியது அவசியம். சர்வதேச சமூகத்தின் நல்ல நோக்கங்கள் வெறுமனே இலங்கைச் சமூகத்தின் மீது மேலிருந்து கீழ் நோக்கி திணிப்பதாக இருக்க முடியாது. எவ்வாறாயினும் இதுவரையில் இங்கே காணப்படும் நிலைவரங்களில் இருந்து ஜெனீவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் மக்களின் பங்கேற்பு ஏற்பட்டதாகவோ அல்லது கோரப்பட்டதாகவோ தெரியவில்லை.

ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள இலங்கையின் நல்லிணக்க ஆணைக் குழு அறிக்கையைக் கூட இன்னும் அரசாங்கம் சிங்களம் , தமிழ் மொழிகளில் மொழி பெயர்க்கத் தவறியுள்ளது. இலங்கையின் பெரும்பாலான மக்களுக்கு அவ்விரு மொழிகளின் ஊடாகவே தெளிவாக எதனையும் விளங்கிக் கொள்ள முடியும். மொழி பெயர்க்காத காரணத்தினால் பொது மக்களால் அறிக்கை செய்துள்ள பகுப்பாய்வினையும் சிபாரிசுகளையும் பெற்று தெரிந்து கொள்ள முடியாதுள்ளது. இந் நிலையில் மக்கள் தாமாக அறிக்கையை வாசித்து அதன் உள்ளடக்கம் தொடர்பில் பொது விவாதங்களை செய்து கொள்ள முடியாதவர்களாக உள்ளனர். இதனால் பொது மக்கள் இலங்கையின் நல்லிணக்க ஆணைக் குழுவின் அறிக்கை பற்றி இருளிலிலேயே வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையின் சிவில் சமூகத்தினரிடையே இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை பற்றி கற்றறிதல் வேண்டும் என்ற ஆர்வம் கொண்ட பிரிவினரது முயற்சியால் பொது மக்கள் இது பற்றி கற்றுக் கொள்வது மற்றும் விழிப்புணர்வு அடைதல் வேண்டும் என்பதற்காக அவர்களது ஊக்கமிக்க நடவடிக்கைகளிலும் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. அவ்வாறானவர்களில் பெரும்பாலானோர் தமது கடந்த காலத்தில் நல்லாட்சி பற்றிய செய்திகளை மக்களிடையே கொண்டுசெல்லுதல், மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய கருத்துக்களை கொண்டு செல்லுதல் போன்றவை நல்லிணக்க ஆணைக் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள சிபாரிசுகளும் பகுப்பாய்வுகளும் காரணமாக ஈடேறியுள்ளதாக நம்பிக்கை அடைந்துள்ளனர். இருந்தபோதிலும் நல்லிணக்க ஆணைக் குழு அறிக்கை கூறியுள்ள ஜனநாயகம் தொடர்பான செய்திகளை மக்கள் மத்தியில் பரப்புவதற்கான அவர்களது (சிவில் சமூகத்தினரது) தகுதிகளை வலுப்படுத்த வேண்டியுள்ளது. இதற்காக அடி மட்டத்தில் உள்ள சமூகங்களைச் சென்றடையக் கூடியதாக பொது மக்களுக்கு இவை தொடர்பாக அறிவூட்டும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அவர்களுக்கு உதவிகளை வழங்க வேண்டிய தேவையும் உண்டு.

சர்வதேச ஆதரவு

இலங்கை அரசாங்கத்தை ஜெனீவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும்படி அழுத்தங்களைக் கொடுத்து வரும் சர்வதேச சமூகம் அதன் தீர்மானத்தில் மைய நிலைவகிக்கும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை பற்றி பொது மக்களிடம் அறிவூட்டுதல் தொடர்பாக பங்களிப்பது இன்னும் இடம்பெறாதுள்ளமை துரதிர்ஷ்டவசமானதாகும். சர்வதேச சமூகம் தனது பொறுப்புகள் ஊடாக இப் பிரச்சினை பற்றி சிந்திக்க வேண்டிய தேவையுண்டு. ஆனால் இலங்கை இப்போது தான் மத்திய வருமான நாடுகளில் ஒன்று எனக் கூறிக் கொண்டிருப்பதால் பொது மக்களுக்கு இது பற்றிய அறிவூட்டலுக்கான வளங்களை அதுவே ஒதுக்கீடு செய்தல் வேண்டும் என்ற ஒரு சிந்தனை காணப்படுவதாக உள்ளது. கட்டுப்படுத்த முடியாத பிரச்சினைகளுடன் செயற்படும் போது தீர்க்கப்படாதனவாக தோன்றுவதால் மனச்சோர்வு ஏற்படுகின்றது. சிவில் நிறுவனங்களுக்கு பெருமளவு ஆதரவு வழங்கப்படுவதாகக் கூறப்படுதல் ஒரு புறம் காணப்படுவதன் காரணமாக ஏமாற்ற மனப்பான்மையும் ஏற்படுகிறது. நல்லாட்சி, மனித உரிமைகள் தொடர்பில் இலங்கை கடந்த பல ஆண்டுகளாக எதுவித முன்னேற்றமும் காணாது பின்னடைவினையே கண்டுள்ளதாகவே தோன்றுகின்றது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் 19 ஆவது கூட்டத் தொடர் பற்றிய கூட்ட நிகழ்ச்சிகள் பற்றிய ஐ.நா. சபையின் அறிக்கையை வாசித்துப் பார்த்தால் இலங்கை மீதான தீர்மானம் என்பது அப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு தீர்மானங்கள் பலவற்றிலும் இதுவும் ஒன்று என்பது தெரியவரும். சர்வதேச மட்டத்தில் கொழுந்து விட்டு எரியும் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக இலங்கை மீதான தீர்மானம் மழுங்கடிக்கப்பட்டதாக அல்லது வீரியம் குறைந்ததாக காணப்படுகிறது. இலங்கைக்கு அதன் அபிவிருத்தி, ஜனநாயக மயமாக்க முயற்சிகள் என்பவற்றிற்கு பல தசாப்தங்களாக உதவி வழங்கி வந்த பல மேற்கத்தைய நாடுகள் தமது சொந்த பொருளாதார குறைபாடுகள் , பலவீனம் காரணமாகவும் இலங்கை இப்போது மத்திய வருமான நிலையினை அடைந்து விட்டதாகக் கூறப்படுவதன் காரணமாகவும் இப்போது உதவிகளை நிறுத்திக் கொண்டுள்ளன. இத்தகைய சூழ்நிலையில் அந் நாடுகள் இலங்கையில் நியாயம், நீதி என்பன ஏற்பட நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையை நடைமுறைப்படுத்துமாறு கூறிவருவதால் அதனை அடைவதற்காக இலங்கைக்கு உதவிவழங்கும் கடன்பாடு அவற்றிற்கு உண்டெனக் கூறலாம்.

இலங்கை மீதான ஜெனீவா தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு சர்வதேச சமூகம் பெரும் பங்களித்துள்ளது. பொது மக்களிடையே கீழ் மட்டத்தில் கூடிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபடும் சிவில் சமூகக் குழுக்களுக்கு ஆதரவு வழங்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மக்களுடைய பங்களிப்புடன் அரசாங்கம் நல்லிணக்க ஆணைக் குழுவின் சிபாரிசுகளை நடைமுறைப்படுத்துவதற்காக களநிலையை தயார்படுத்த வேண்டிய பங்கினை சிவில் சமூகம் ஆற்ற வேண்டியுள்ளது. இலங்கையின் அரசியல் கலாசாரத்தினை நிலைமாற்றம் செய்வதில் சிவில் சமூகம் ஆற்றக் கூடிய பங்கினை அரசாங்கமும் சர்வதேச சமூகமும் (அங்கீகரிப்பதனை) புறக்கணிப்பதாகவே தோன்றுகிறது.

இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழுவினர் எதிர்பார்த்தது போன்ற வகையில் இலங்கையின் அரசியலில் நிலை மாற்றம் ஏற்பட வேண்டுமானாலும் ஜெனீவாவில் ஏற்பட்டவற்றை சார்பான வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்வதனை உறுதி செய்து கொள்ள வேண்டுமானாலும் அவற்றுக்காக இப்போது சிவில் சமூகத்தின் முழுமையான பங்களிப்பு தேவைப்படுகின்றது.
nantri thinakkural

நடைமுறைப்படுத்த முடியாதென்றால் ஆணைக்குழுவை ஏன் அரசு நியமித்தது?


Wednesday, 02 May 2012

suresh_parachandraதந்தை செல்வாவின் 35 ஆவது நினைவு தினம் கடந்த சனிக்கிழமையன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி.ஆனந்தசங்கரி தலைமையில் கிளிநொச்சியில் நடைபெற்ற போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ்பிரேமச்சந்திரன் ஆற்றிய உரை;


தென்பகுதியில் ஐக்கிய தேசியக் கட்சியும் அதிலிருந்து பிரிந்து சென்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆகிய இரண்டும் தென்பகுதியின் அரசியல்கட்சிகளாகத் திகழ்ந்தன. அதேபோன்று வடக்குகிழக்கில் ஜி.ஜி. பொன்னம்பலம் அவர்களின் இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் மற்றும் அதிலிருந்து பிரிந்து சென்ற தந்தை செல்வாவின் இலங்கைத் தமிழரசுக் கட்சியும் அன்று தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் பலம்பொருந்திய கட்சிகளாக விளங்கின. அன்றைய காலகட்டத்தில் அவர்களுடைய போராட்டங்களில் தமிழ் மக்கள் ஒரு தனித் தேசிய இனம் என்பதை நிலை நாட்டுவதில் தந்தை செல்வாவிற்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் ஒரு தனித்துவம் இருந்தது.

அந்த வகையில்தான் பல இடங்களில் நாங்கள் குறிப்பிட்டிருக்கின்றோம். தந்தை செல்வா என்ன சொன்னாரென்றால் இலங்கையில் தமிழ் மக்களும் சிங்கள மக்களும் ஒன்றாக வாழ்வதற்கு நான் பலமுயற்சிகள் செய்தேன். ஆனால் அந்த முயற்சிகள் எல்லாம் தோல்வியடைந்துவிட்டன. இலங்கை அரசாங்கம் அது சிறிலங்கா சுதந்திரக் கட்சியாக இருந்தாலென்ன ஐக்கிய தேசியக்கட்சியாக இருந்தால் என்ன தமிழ் மக்களை இணைத்து ஆள்வதற்கு அவர்கள் தயாராக இல்லை. 1956 இல் ஒப்பந்தம் செய்தேன் அதனைக் கிழித்தெறிந்தார்கள். 65 இலும் அப்படித்தான் நடந்தது. 72 இல் அரசியல் சாசனத்தில் திருத்தங்களைக் கொண்டுவந்தோம். அதனையும் ஏற்றுக்கொள்ளவில்லை. 1978 இல் ஜே.ஆர்.ஜெயவர்தன கொண்டுவந்த அரசியல் சாசனத்திலும் கூட தமிழ் மக்களினதும் தமிழ்ப் பிரதிநிதிகளினதும் கருத்துக் கேட்கப்பட வில்லை. மொத்தத்தில் தமிழ் மக்களுடன் இணைந்து வாழ்வதற்குச் சிங்கள மக்கள் ஒருபொழுதும் வரவில்லை என்பதை தந்தை செல்வா மிகத் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கின்றார்.

ஆகவே எமக்குரிய ஒரேயொரு மாற்றுவழி இழந்துபோன எமது இறைமையை மீள ஸ்தாபிப்பதுதான் என்றும் தந்தை செல்வா அன்று கூறியுள்ளார். அந்த அடிப்படையில்தான் 1976 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அந்தத் தீர்மானத்திற்குப் பின்னர் நடைபெற்ற மிக நீண்ட போராட்டத்தை நீங்கள் நன்கறிவீர்கள். வட்டுக்கோட்டை தீர்மானத்தை நிறைவேற்றிய ஓராண்டின் பின்னர் அவர் காலமாகிவிட்டார். அந்தத் தீர்மானம் அன்றைய இலங்கை அரசால் நிராகரிக்கப்பட்ட போது போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் சென்றவர்கள் தமிழ் இளைஞர்கள். போராட்டத்திற்கு முன்பு இலங்கைத் தமிழ் காங்கிரஸ் மற்றும் இலங்கைத் தமிழரசுக்கட்சி என்ற இரண்டு கட்சிகள் இருந்தன. ஆனால், போராட்டம் ஆரம்பமானபோது பல இயக்கங்கள் தோன்றின. 1976, 77, 81 மற்றும் 1983 போன்ற பல்வேறு காலகட்டங்களில் எமது மக்கள் தென்பகுதியிலிருந்து கப்பலில் அடித்துவிரட்டப்பட்டார்கள். அவ்வாறு கொழும்பிலிருந்து வந்தவர்கள் அனைவரும் நாங்கள் மீண்டும் கொழும்புக்குச் செல்ல முடியாது என்று தெரிவித்தனர். அவர்கள் உயிருடன் எண்ணெய் ஊற்றிக் கொளுத்தப்பட்டார்கள். அவர்களது சொத்துக்கள் சூறையாடப்பட்டன. வீதிகளிலே வாளால் வெட்டினார்கள். இவ்வளவு கொடுமையும் அந்த நாட்களில் நடந்ததை யாரும் மறக்க முடியாது. இவையெல்லாம் இலங்கையில்தான் நடந்தது. இது எமது கடந்த கால வரலாறு; நாங்கள் மனிதர்களாக இருக்க வேண்டுமாக இருந்தால், நாங்கள் தமிழர்களாக இருக்க வேண்டுமாக இருந்தால் நாங்கள் போராடுவதைத் தவிர வேறு வழி இல்லை என்று சொன்னார்கள். தந்தை செல்வா தனது இறுதி நாட்களில் தமிழ் மக்களை இனி கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று சொன்னார். ஏனெனில் அவரால் முடியவில்லை. முயற்சிகளுக்கு மேல் முயற்சி செய்து பார்த்தார். அறவழிப் போராட்டங்கள், பேச்சுவார்த்தைகள், ஒப்பந்தங்கள் போன்ற பலவழிகளிலும் முயன்று பார்த்தார் முடியவில்லை. அதனால்தான் இனி தமிழ் மக்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் கூறினார். அதன் பின்னர்தான் இயக்கங்கள் தோன்றின. அரசாங்கம் எமது போராட்டங்களை வன்முறை கொண்டு அடக்கியபொழுது அந்த நேரத்தில் ஜே.ஆர்.ஜெயவர்தன பிரிகேடியர் விஜயவீரதுங்கவை யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி ஆறுமாதத்தில் பயங்கரவாதத்தை முடிவிற்குக் கொண்டுவர வேண்டும் என்று கட்டளை இட்டிருந்தார். யாழ்ப்பாணத்தின் வீதிகளில் யாரையும் சுட்டு வீழ்த்தலாம் .அதற்கு எத்தகைய தண்டனையும் இல்லை, யாரும் கேள்வி கேட்க முடியாது எனும் அரசியல் சட்டத் திருத்தத்துடன் அந்த பிரிகேடியர் தமது கடமையைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

ஆனால், ஆறு மாதம் அல்ல முப்பத்தைந்து வருடங்கள் அந்தப் போராட்டம் நீண்டது. இலட்சக்கணக்கில் மக்கள் மடிந்தார்கள். பல இலட்சம் மக்கள் தமது உயிரைத் தியாகம் செய்தார்கள். பல்லாயிரம் பேர் தற்கொலைப் போராளிகளானார்கள். இவையெல்லாம் நடந்தன. அப்படியான இயக்கத்தில் இருந்த பலபேர் இன்று இந்த நிகழ்வில் இந்த மேடையில் இருக்கின்றார்கள். ரெலோ இருக்கின்றது. புளொட் இருக்கின்றது. ஈ.பி.ஆர்.எல்.எவ். இருக்கின்றது. விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகின்ற போதிலும் அவர்கள் இருந்த இடங்களில் வசித்து வந்த பல பேர் இருக்கின்றார்கள். இவை எல்லாம் தோன்றுவதற்கு யார் காரணம்? இது எப்படித் தோன்றியது? தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தந்தை செல்வாவின் காலத்தில் தீர்க்கப்பட்டிருக்குமாக இருந்தால் இந்த நிலை வந்திருக்காது. ஆனால், சிங்களத் தலைமை இவ்வளவு அழுத்தங்களின் பின்னர் இன்னமும் கூட யோசிக்கவில்லை. தமிழ் மக்களுக்கு எதனையும் கொடுக்கத் தேவையில்லை. அவர்களது பகுதியில் அபிவிருத்தி செய்தால் போதும் என்று ஆட்சியாளர்கள் நினைக்கின்றார்கள். அதாவது வீதிகள் போட்டால்போதும். மின்சாரம் வழங்கினால் போதும். இனப்பிரச்சினை தீர்ந்துவிடும் என்று யோசிக்கின்றார்கள். தமிழ் மக்கள் மாத்திரமல்ல உங்களுக்குத் தெரியும் நான்கு ஐந்து நாட்களுக்கு முன்பாக தம்புள்ளையில் என்ன நடந்தது? அறுபது வருடம் பழைமைமிக்க ஒரு பள்ளி வாசலை அகற்ற வேண்டும் என பௌத்தபிக்குகள் கோரினார்கள். ஒருவாரத்திற்கு முன்பே கூறினார்கள் அது புனிதப் பிரதேசம் அங்கு பள்ளிவாசல் இருக்க முடியாது என்று கூறினார்கள். அப்படிக் கூறியபோதிலும் அரசாங்கம் அதனை நிறுத்துவதற்கு எந்த முயற்சியையும் செய்யவில்லை. பள்ளிவாசல் உடைக்கப்பட்டது. இராணுவம் பொலிஸ் குவிக்கப்பட்டிருந்தது. யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அங்கு இராணுவம் பொலிஸ் துணையுடன் பள்ளிவாசல் இடிக்கப்படுகிறது. ஏனெனில், அது பௌத்த தர்மம். புனிதப் பிரதேசத்தில் பள்ளிவாசல் இருக்கக்கூடாது, இந்துக் கோயில் இருக்கக்கூடாது.

ஆனால், வடக்கில் ஏ9 வீதியின் நெடுகிலும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மற்றும் கிழக்கில் அனைத்து இடங்களிலும் இராணுவம் மற்றும் பொலிஸ் துணையுடன் புத்த கோயில்கள் கட்டப்படுகின்றன. ஒவ்வொரு அரச மரத்தின் கீழும் புத்தர் சிலைகள் வைக்கப்படுகின்றன. இராணுவம் கையில் ஆயுதத்துடன் திரிகின்றது. யாராவது அதற்கு எதிராகப் போராட முற்பட்டால் அடிக்கப்படுவார்கள், நொருக்கப்படுவார்கள் அல்லது சுட்டுத்தள்ளப்படுவார்கள். யார் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கின்றார்கள்? இந்நாட்டில் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழலை அரசாங்கம் எவ்வாறு திட்டமிட்டு குலைக்கின்றது? சீரழிக்கின்றது? அரசாங்கம் எத்தகைய சூழ்நிலையை உருவாக்குகின்றது?

யுத்தத்திற்குப் பின்னர் அரசாங்கம் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு எனும் ஒரு குழுவை நியமித்தது. அந்தக் குழு பல தீர்மானங்களைக் கொடுத்தது. அவற்றை நடைமுறைப்படுத்தும்படி இன்று உலகநாடுகள் கேட்கின்றன. நீங்கள் நியமித்த குழுவால் முன்னுரைக்கப்பட்ட அந்தத் தீர்மானங்களை நீங்கள் நிறைவேற்றுங்கள் என்று சர்வதேச சமூகம் தெளிவாகக் கூறியிருக்கின்றது. ஆனால், அரசாங்கம் என்ன சொல்கிறது? அது செய்ய முடியாது என்று அப்படியானால் அதற்கு ஏன் குழுவை நியமிக்க வேண்டும்? இரண்டு ஆண்டுகள் அதற்கு ஏன் காசு செலவு செய்ய வேண்டும்? பின்னர் ஏன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த முடியாது என்று சொல்ல வேண்டும்? யாரை ஏமாற்றுவதற்காக இந்தச் செயற்பாடு?

இந்தியப் பிரதமரிடம் பேசுகின்ற பொழுது பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் சென்று அதிகாரங்களைக் கொடுத்து இனப்பிரச்சினையைத் தீர்ப்போம் என்று கூறினார். இங்கு வந்ததன் பின்னர் நான் அவ்வாறு கூறவில்லை என்று சொன்னார்கள். இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இங்குவந்திருந்தார். அப்பொழுது அவரிடமும் பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்திற்கு மேலதிகமாகச் சென்று இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பேன் என்று ஜனாதிபதி கூறினார். இதனை நான் பத்திரிகைகளுக்குச் சொல்ல முடியுமா என்று கேட்டார். தாராளமாகச் சொல்லுங்கள் என்றார். யாழில் எஸ்.எம்.கிருஷ்ணாவும் பத்திரிகையாளர் மாநாட்டில் இலங்கை ஜனாதிபதி எங்களுக்கு பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்திற்கு மேலதிகமாகச் சென்று இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பேன் என்று உறுதியளித்திருக்கிறார் என்று கூறினார். ஆனால், கொழும்பில் ஜனாதிபதி நான் அப்படி எதுவும் கூறவில்லை என்று கூறினார். அண்மையில் இந்தியப் பாராளுமன்ற உறுப்பினர்கள் பன்னிரண்டுபேர் இலங்கை வந்திருந்தனர். அவர்களும் ஜனாதிபதியைச் சந்தித்தனர். அவர்களிடமும் ஜனாதிபதி நான் பதின் மூன்றாவது திருத்தத்திற்கு மேலதிகமாகச் சென்று இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பேன் என்று கூறியிருந்தார். அவர்களும் பத்திரிகைகளுக்குக் கூறினார்கள். ஆனால், அவர்கள் கூறியதற்குப் பின்னர் நான் அப்படிக்கூறவில்லை என்று கூறினார். யாரை யார் ஏமாற்றுகிறார்கள்? இந்த ஏமாற்றத்தின் ஊடாக எதை அவர்கள் நிறைவேற்றப்பார்க்கின்றார்கள்? ஏன் அரசாங்கம் இப்படிச் செயற்படுகின்றது?

யுத்தத்தின் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஒன்றுபட்ட நாட்டுக்குள் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நாம் தயார் என்று மீண்டும் மீண்டும் பல மேடைகளில் தொடர்ந்து கூறிவருகின்றார். அரசாங்கம் ஏன் அதனை ஏற்க மறுக்கின்றது? அரசாங்கம் ஏன் எம்முடன் ஒத்துழைக்க மறுக்கின்றது? அரசாங்கம் ஏன் தமிழ் மக்களுக்கு உரிமைகளை வழங்க மறுக்கின்றது? ஏனெனில் அரசாங்கத்தைப் பொறுத்தவரை ஒட்டுமொத்த இலங்கையும் ஒரு சிங்கள பௌத்த நாடாக இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர்.

ஆனந்தசங்கரி கூறியதுபோல் திருகோணமலையில் கண்மூடித்தனமாக 200 பேரைக் கைது செய்தால் எஞ்சியவர்கள் என்ன செய்வார்கள்? இளைஞர்கள், யுவதிகள் அனைவரும் ஓடிப் பதுங்கத் தான் பார்ப்பார்கள். எதுவித காரணமுமின்றி அவர்களைக் கைது செய்து என்ன செய்ய முயற்சிக்கின்றீர்கள்? நீங்கள் மீண்டும் மீண்டும் அவர்களைத் தூண்டுகின்றீர்கள். இது ஒரு பாரதூரமான தவறு. இராணுவம் இராணவ ரீதியில்தான் சிந்திக்கும். அடிக்கலாம், உதைக்கலாம், நொறுக்கலாம், சுட்டு வீழ்த்தலாம் என்றுதான் அது நினைக்கும். ஆனால், அது மிகவும் தவறானது. வன்னி மக்கள் பலர் பலமுறை இடம்பெயர்ந்திருக்கிறார்கள். பலர் சொந்தங்களை இழந்திருக்கிறார்கள். ஏராளமானோர் சொத்துகளை இழந்திருக்கிறார்கள், ஏராளமானோர் கணவனை இழந்திருக்கிறார்கள், மனைவியை இழந்திருக்கிறார்கள், ஏராளமான இளைஞர்களும் யுவதிகளும் சிறார்களும் அநாதரவாக்கப்பட்டுள்ளனர். இப்பொழுது அவர்களை இந்த இராணுவத்தினர் நிம்மதியாக வாழ விட வேண்டும். ஒரு ஜனநாயக சூழல் வேண்டும் யாரும் தமது கருத்துகளைப் பயமின்றி வெளிப்படுத்த வேண்டும் யாரும் பயமின்றி எழுத வேண்டும். யாவருக்கும் கூட்டம் போடுவதற்கான உரிமை வேண்டும். அவைகள் இங்கு சர்வசாதாரணமாகக் கிடைக்கின்றதா? இல்லை. அதுதான் இன்றைய நிலைமை.

நமது நாட்டில் ஏ 9 வீதியைப் பாருங்கள். எத்தனை பிரிகேட்களின் தலைமை அலுவலகங்கள். 166 ஆவது பிரிகேட் வரவேற்கிறது. 555 ஆவது பிரிகேட் வரவேற்கிறது. 5 ஆவது டிவிஷன் வரவேற்கின்றது. பதினைந்தாவது கம்பனி வரவேற்கின்றது. 35 ஆவது றெஜிமெண்ட் வரவேற்கின்றது என்று பெயர்ப்பலகைகள் காணப்படுகின்றன. இங்கு மக்களை வேறு யாரும் வரவேற்பதில்லை. உள்ளூராட்சி அமைப்புகள் யாரையும் வரவேற்பதில்லை. வரவேற்பதெல்லாம் இராணுவம். இந்த நிலையில் எவ்வாறு தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே அபிவிருத்தி செய்ய முடியும்?

ஆகவே எமது உரிமைகளை வென்றெடுப்பதற்கு தனிமனிதனாலோ, தனி ஒரு கட்சியினாலோ, ஒரு குழுவினாலோ முடியாது. ஒட்டுமொத்த தமிழ்மக்களும் ஒன்றிணைய வேண்டும். தந்தை செல்வாவின் முப்பத்தைந்தாவது நினைவு தினத்தில் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வு என்னும் வைரவரிகளைத் தாரக மந்திரமாகக் கொண்டு நாம் ஒற்றுமையாக ஓரணியில் நிற்போமானால் நாம் மீண்டெழுந்து தலைநிமிர்ந்து வாழ முடியும்.

எமது ஒற்றுமையைக் குலைப்பதற்கு அரசாங்கம் சகல வழிகளையும் கையாளுகின்றது. இராணுவத்தினர் ஒருபுறம், அரசாங்க அமைச்சர் ஒருபுறம் என்று எமது ஒற்றுமையை எவ்வாறாவது குலைத்துவிட வேண்டும் என்று தீவிரமாக முயற்சித்து வருகின்றனர். அதனை நாம் மாற்ற வேண்டுமானால் நாம் வலுவான ஒரு அமைப்பாக இருக்க வேண்டும். ஒரு வலுவான கட்சியாக இருக்க வேண்டும். தந்தை செல்வா அவர்கள் தமிழ்க் காங்கிரஸ் மற்றும் தமிழரசுக் கட்சி என்பனவற்றை இணைத்து தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற ஒரு வலுவான கூட்டணியை விட்டுச் சென்றார். அவர் விட்டுச் சென்ற இடத்தில் இருந்து தான் இன்றுகூட எம்மால் பேச முடிகின்றது. ஒரு வலுவான கட்சி இல்லை என்று சொன்னால் நாங்கள் கூறுகின்ற மக்கள் போராட்டம் எல்லாம் தோல்வியடைந்துவிடும். ஒரு வலுவான அமைப்பினால் முன்னெடுக்கப்படும் போராட்டத்தின் ஊடாக தமிழ் மக்களும் சிங்கள மக்களுக்கு நிகரான உரிமைகளைப் பெற்று இந்த மண்ணில் சீரோடும் சிறப்போடும் வாழும் நிலையைத் தோற்றுவிக்க முடியும். இவ்வாறு சுரேஷ் பிரேமச்சந்திரன் உரையாற்றினார்.
nantri thinakkural


No comments: