புதுமைகள் செய்து புகழ்படைக்கும் புதியபூபாளம் இசைக் கலைஞர்கள்

.
அண்மையில் மெல்பேணிலும் சிட்னியிலும் நடைபெற்ற இளம்துளிர் 2012 இசை நிகழ்ச்சி அவுஸ்திரேலிய தமிழ் இசை நிகழ்சிகளின் வரலாற்றில் மற்றுமொரு மைல்கல்லைப் பதித்துள்ளது.      பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசாபுகழ்பூத்த இளம் இசைக் கலைஞரான நிரோசன் சத்தியமூர்த்தியும் அவரது புதிய பூபாளம் இசைக் குழுவினரும் எத்தகைய மாபெரும் பாடகர்களுக்கும் இசைவழங்கக்கூடிய திறமை படைத்தவர்கள் என்பiதை மீண்டும் நிரூபித்துள்ளனர். பிரபல தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகர்களான முகே~;, பிரியதர்சினி, அனித்தா மற்றும் பாடகரும் நடிகருமான சியாம் ஆகியோரும் உள்ளுர்க் கலைஞர்களும் மிகவும் சிரமமான பாடல்களையும் அற்புதமாகப் பாடினார்கள்.புதிய பூபாளம் இசைக்குழுவில் இருப்பவர்கள் எல்லோருமே இளைஞர்கள். பல்கலைகழகங்களில் படித்துக்கொண்டிருப்பவர்கள். நிரோசன் சத்தியமூர்த்தியின் நெறியாள்கையிலும், பயிற்சியிலும் அத்தனைபோருமே கைதேர்ந்த இசைக் கலைஞர்களாகவே விளங்குகின்றார்கள்.

பாடகர் முகேஸ் எப்படிப்பட்ட பாடல்களையும் மிகவும் இயல்பாகப் பாடக்கூடியவர். அவரைப் போலவே அவரோடு வந்திருந்த அனித்தா, பிரியதார்சினி, சியாம் ஆகியோரும் மிகத் திறமைவாய்ந்த கலைஞர்களாகவே நிகழ்ச்சியை அலங்கரித்தார்கள். அவர்களது பாடல்களுக்கு இசை வழங்கிய புதியபூபாளம் இசைக் குழுவின் வாத்தியக் கலைஞர்கள் அத்தனைபேருமே தத்தமது வாத்தியங்களைத் தக்க திறமையோடு கையாண்டார்கள். அந்த இளம் கலைஞர்களின் திறமைபற்றி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தென்னிந்தியப் பாடகர்கள் ஒவ்வொருவரும் அவ்வப்போது விதந்துரைத்துப் பாராட்டியமை உள்ளுர் இளம் கலைஞர்களுக்கு மட்டுமன்றி அவுஸ்திரேலியத் தமிழர்களுக்கும் பெருமை சேர்த்தது.

“கொஞ்சும் சலங்கை” என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற, “சிங்கார வேலனே தேவா”: என்ற பாடலை வாத்தியக் கருவிகளோடு மேடையில் பாடவைத்த நிரோசனின் துணிவைப் பாராட்டாமல் இருக்க முடியாது. அந்தப் பாடலிலே பெரும் சவாலாக அமைகின்ற நாதஸ்வரத்தை தொழில்ரீதியான ஒரு கலைஞர் மூலம் வாசிக்க வைத்து, அதற்கிணையாக விளங்கும் தவில் வாத்தியத்தைத் தானே வாசித்து மிகத் திறமையாக அந்தப்பாடலுக்கு இசைவழங்கினார். பாடலைப் பாடிய பிரியதர்சினியும் பாராட்டுக்குரியவரே.எத்தகைய இசை வாத்தியத்தினையும் வித்தை பிசகாமல் வாசிக்கக்கூடிய நிரோசன் திறமையானதொரு பாடகர் என்பதையும் நிரூபித்தார். அவருக்குள்ள நல்ல குரல் வளத்தினை நன்றாகவே பயன்படுத்திக் கொண்டார். மேலும் நிகழ்ச்சியிலே பாடிய உள்@ர்ப் பாடகர்களான திரியும், நீத்து, நிகிதா, காவியா சகோதரிகளும், லக்~ன், கோகுலன், விந்தன் ஆகியோரும் வயதில் மிகவும் இளையவர்களாக இருந்தும், தமது அசாத்தியத் திறமையினால் இருக்கைகளின் விளிம்புகளுக்கே பார்வையாளர்களை நகர்த்தி இருக்கவைத்து அசத்தினார்கள். அதிலும் இளைஞர் திரியை அவுஸ்திரேலியத் தமிழ் இசை மேடைகளின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரமாகக் கருதலாம்.

அவ்வப்போது சில பாடல்களுக்குப் பொருத்தமாக அழகிய நடன மணிகளின் நடனங்கள் இடம்பெற்றன. அவை கவர்ச்சிகரமாக அமைந்து நிகழ்ச்சிக்கு மேலும் மெருகூட்டின.

மெல்பேண் நிகழ்ச்சியில் ஒளியமைப்பின் தொழில் நுட்பம் கொடிகட்டிப் பறந்தது. மேலும், பாடல்களுக்குப் பொருத்தமான காட்சியமைப்புக்களைப் பின்னணித்திரையில் ஒளிபரப்புச் செய்தமையிலும் ஒரு புதுமை தெரிந்தது. அதிலும் இசைக் குழுவில் இடம் பெற்றவர்களை அறிமுகம் செய்தபோது, இன்றைய அவர்களது இளம் தோற்றத்தையும், பலவருடங்களுக்கு முன்னர் இசைக்குழுவில் அவர்கள் சிறுவர்களாக இடம்பெற்றபோது எடுக்கப்பட்ட படங்களையும் இணைத்து ஒவ்வொருவரையும் தனித்தனியாகத் திரையில் காட்டியபோது பார்வையாளர்கள் எல்லோரது முகங்களிலும் மகிழ்ச்சிப் பிரவாகம் அலை மோதியது. அந்த இளைஞர்களின் பெற்றோர்களின் கண்களை ஆனந்தப் பனித்திரை சில வினாடிகள் மறைத்திருக்கும். இத்தனை தொழில் நுட்பங்களோடு வானவில்லின் வர்ணஜாலம் அரங்கம் முழுவதையும் நிறைத்திருந்தமையை உளமார இரசித்தபோது இவற்றுக்குப் பின்னால் எத்தனை திறமைசாலிகளின் உழைப்பு இருந்திருக்கும் என்ற எண்ணம் நமது உள்ளத்தில் எதிரொலிக்காமல் இல்லை.அறிவிப்பாளர்கள் நல்ல முறையில் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்கள். அதிலும் எட்வேட் அருள்நேசதாசன் தனக்கேயுரித்தான வெள்ளைச் சிரிப்பொடு விவரிக்கின்ற அழகு நிகழ்ச்சிக்கு அணியாக விளங்கியது. நிகழ்ச்சியில் இடைக்கிடை வந்து நகைச்சுவை வெடிகளை அள்ளி வீசிவிட்டுப் போன சபார் நானாவையும் மறக்கவே முடியவில்லை.

நிரோசனின் தாயாரான பிரபல இசைக் கலைஞர் திருமதி சுமதி சத்தியமூர்த்தி தனது இனிமையான குரல் வளத்தாலும், எந்தப் பாடலையும் மிகவும் இயல்பாகவும், அழகாகவும் பாடுகின்ற திறமையாலும் அவுஸ்திரேலிய தமிழ் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்திருப்பவர். ஓவ்வொரு நிகழ்ச்சியிலும் ஒன்றிரண்டு பாடல்களையாவது அவர் பாடுவது வழக்கம் இம்முறை ஏனைய பாடகர்களுக்கு இடம் கொடக்க வேண்டும் என்பதற்காக அவர் பாடாமல் விட்டதால் கடைசிவரை அவரது பாடலைக் கேட்க ஆவலாயிருந்த இரசிர்களுக்கு ஏமாற்றமாகப்போய்விட்டது. நிகழ்ச்சிமுடிவில் அந்த ஏமாற்றத்தைப் பலர் வாய்விட்டுச் சொல்வதைக் கேட்கக்கூடியதாகவிருந்தது.

மேல்பேணிலும், சிட்னியிலும் நடைபெற்ற நிகழ்ச்சிகள் மூலம் திரட்டப்பட்ட நிதி இலங்கையில் வடக்கிலும், கிழக்கிலும் வாழ்கின்ற மக்களின் மருத்துவ மற்றும் சமூகநலத் திட்டங்களக்காக வழங்கப்பட்டமை போற்றப்படவேண்டியதாகும்.

நாளைய சமுதாயத்தினை வழிநடத்திச் செல்லவுள்ள இன்றைய இளைஞர்களுக்கு முன்மாதிரியாக விளங்குகின்ற புதிய பூபாளம் இசைக்குழுவினரின் திறமைகளைப் பாராட்டுவோம். தாயகத்தை நேசிக்கும் அவர்களது தன்னலமற்ற உழைப்பிற்குத் தலை வணங்குவோம்.

No comments: