ஏழு நாட்களில் பாகவதம்

         \

ஆச்சாரியர் ஒருவர் புராணம் ஒன்றைச் சொல்ல அதை மக்கள் கேட்டுத் திளைப்பதுதான் மரபுவழி. செவின்ஹில்ஸ் (Seven Hills) பாடசாலை மண்டபத்தில் ஆச்சாரியார் (Acharya) ஸ்ரீ சச்சிதானந்த சாயி பாகவதம் எனும் மதுரமான பெட்டகத்திலிருந்து பகவானுடைய லீலைகளையும் பக்தர்களின் அனுபவங்களையும் ஏழு நாட்களாக, 5-4-2012ம் திகதி தொடக்கம் 12-4-2012ம் திகதி வரை, அள்ளி அள்ளித் தந்தார். நாமும் நு}று பேர் வரையில் பருகிப் பருகித் திளைத்தோம். காலை 9 மணி தொடக்கம் மாலை 7 மணி வரையும் சில இடைவேளைகளுடன் இறைவனைப் பற்றியும் பக்தர்களைப்பற்றியும் கேட்டுப் பரவசமானோம். ஒருவர் வாழ்க்கையில் இப்படியான அரிய சச்தர்ப்பம் கிடைப்பது அருமையிலும் அருமை. வேதங்கள் உபநிஷத்துக்களான ஒரு அடர்ந்த மிக உயர்ந்த மரமொன்றின் உச்சிக்கிளையில் ஒரு கனிந்த பழமொன்று தொங்கிற்று. பழங்களில் சிறப்பானதை உணரும கிளியொன்று அதனை ஒரு கொத்துக் கொத்திற்றாம். மதுரமான ரசம், பாகவதம், அதிலிருந்து ஒழுக பலரும் அதைப் பருகித்திளைத்தனர் எனக்கூறப்படுகிறது. பாகவத சப்தாகம் (ஏழுநாட்கள்) மிக இனிமையாகத்தானிருந்தது.
பாகவதம் முதலில் ஏழு நாட்களில் கூறப்பட்டது இளமையான, முனிகளின் சக்கரவர்த்தியாகிய சுகப்பிரம்மரால.; பாகவத புராணம் பாடப்பட்டது வேதவியாசரால். தர்மவழிநின்ற பாண்டவர் பேரனான பரீஷித்துக்குக் கூறப்பட்டது. இது நடந்த இடமோ புனிதமான கங்கைக் கரை. எல்லாவகையிலும் மிகச்சிறப்பான மன்னன் தன் அரச பதவியை சிறுவனான ஜனமேஜயனான மகனிடம் ஒப்படைத்து விட்டு பசி, தாகத்தைத் துறந்து பகவான் நினைவாக கங்கைக் கரையிலிருக்கத் துணிந்தார். முனிகுமாரனால் சபிக்கப்பட்டதால் அவர் ஏழு நாட்கள்தான் உயிர் வாழலாம். இச்சந்தர்ப்பதில் மகிமை படைத்த இம்மன்னன் இருந்த இடத்தைநாடி அத்ரி, வசிஷ்டர், பிருகு, அங்கீரஸ், பராசரர், விசுமாதித்திரர், பரசுராமர், வியாசர், நாரதர் போன்ற முனிவர்கள் பலர் அங்கு வந்து குழுமத் தொடங்கினர். கங்கைக் கரையே முனிபுங்கவர்களால் நிறைந்து காணப்பட்டதைக் கண்டு பரீஷித் ஆனந்த மடைந்தார். சிறப்பான தவச்செல்வர்கள் மத்தியில் தன் கடைசி நாட்களைக் கழிக்கக் கிடைத்தமை தனது பாட்டனார்களாலும் தான் பிறக்க முன்பும் இறக்கும் தறுவாயிலும் பகவானின் அருளாலும்தான் என நன்றியுணர்ச்சி மிக்கிருந்த பரீஷித் மிகுதி நாட்களில் பகவானைப் பற்றியே இவர்களிடம் கேட்டுணரத்தலைப்பட்டார். உங்களிடம் ஒரு கேள்வி கேட்கின்றேன். தயவுசெய்து விடையளியுங்கள் என்றார். மரணத் தறுவாயில் இருக்கும் மனிதன் எதனைச் செய்தால் (தான் செய்த) பாபங்களிலிருந்து விடுபடுவான்? முனிவர் பலரும், தவம், தானம், யாகம், யோகம் எனப் பலவாறாகக் கூறிக் கொண்டிருந்த பொழுது எஞ்சியிருக்கும் நாட்களோ ஏழுதான் என யோசிக்க, தேஜஸ் மிகுந்த முனிசிரேஷ்டர் சுகப்பிரம்மர், வியாச பகவானின் மகன் அங்கு தோன்றினார். எல்லோரும் எழுந்து மரியாதை செலுத்தினர். அன்னையின் உதரத்திலிருந்த பொழுது காப்பாற்றிய நாராயணனேஇப்பொழுதும் காக்கதிருவுளம் கொண்டதாக எண்ணிமகிழ்ந்த பரீஷித் அவரை வணங்கியெழுந்தான். முனிகளின் திலகமாகிய சுகப்பிரம்மருக்கு அளிக்கப்பட்ட ஆசனத்தில் அவர் அமர்ந்தபின் எல்லோரும் அமர்ந்து கொண்டனர். பரீஷீத் அவரிடமும் அதேகேள்வியைக் கேட்டான். உடனே சுகப்பிரம்மர் நாரயணனின் புகழைப்பற்றி வியாச பகவான் புனைந்த பாகவத புராணத்தைத் தான் தந்தையாரிடம் கேட்டதையும் அதை இப்பொழுது கூறி ஏழு நாட்களையும் ஒருவர் வாழ்வின் மிகச்சிறப்பான நாட்களாக ஆக்கப்போவதாகவும் கூறினார். இதனால் மக்கள் பாவங்களிலிருந்து விடுபட்டு முத்தியடையலாம். பரீஷித் தர்மவழி நின்று அரசாண்ட மன்னனுக்கு சுகப்பிரம்மர் அவரது ஐயங்களை அறிந்து பாகவத பக்த புராணத்தை ஓதிக் கொண்டேயிருந்தார். ஏழு நாட்களுக்கு, ஓரிடத்தில் சில கணங்களே தங்கும் சுகப்பிரம்மர் பக்திப் பெருக்கெடுக்கும் பாகவதத்தை  ஓதியதால்      அங்கேயே ஏழு நாட்கள் தங்கினார்.

துவாபரயுக வியாசபகவான் தியானத்திலிருந்த பொழுது அடுத்துவரும் கலியுகத்தில் மக்கள் தர்மநெறிகளைக் கைவிட்டு அதர்ம வழிகளைப் பின்பற்ற முனைவதையும் இறைவனை வணங்குவதை விட்டு உலகாயுத வாழ்க்கையில் மூழ்கிப் போவதையும் கண்ணுற்றார். வேதங்கள் எல்லாம் ஓதுதல் கேட்டல் முறையால் முனிவர்கள் சீடர்களுக்குக் கொடுத்தனர். வியாச பகவான் மக்கள் வாழும் காலம் குறுகுவதையும் ஞாபகசக்தி குறைவதையும் கண்டார். இதனால் வேதங்களை முழுமையாகக் கற்க முடியாதாகையால் வேதங்களை மக்கள் கற்க வேண்டுமென்பதற்காக அதை நான்காக அதாவது இருக்கு, யஜர் (yajur), அதர்வண, சாம என வகுத்து தனது நான்கு சீடர்களான பைலர், வைசம்பாயனர், சுமந்து, ஜைமினிக்கும் முறையே ஓதிவைத்தார். பின்னர் இதன் சுருக்கமாக பிரம்ம சூத்திரத்தையும் பாடினார். வேதங்களை ஓத முடியாதவர்களுக்காக வேதங்கள்தரும் தரும நெறியை வைத்து மகாபாரதத்தைப் பாடினார். பதினேழு புராணங்களையும் மக்கள் கதைகள் மூலம் எளிதில் உணர எழுதினார். அப்படியிருந்தும் வியாசபகவானுக்கு மன நிறைவு ஏற்படவில்லை. சரஸ்வதி நதியோரம் அவர் இவ்வாறு சிந்தனையிலாழ்ந்த பொழுது நாரதமுனி வீணையை ஒலித்துக்கொண்டு நாரயணா நாரயணா என்ற நாம சங்கீர்த்தனத்துடன் வந்தடைந்தார். இவ்வளவு செய்தும் ஏன் தனக்கு இன்னும் மனநினைவு ஏற்படவில்லை என வியாசர் நாரதரிடம் வினைவிய பொழுது நாரதர் புன்முறுவலுடன் மக்கள் தர்மவழிசெல்ல எல்லாம் செய்துள்ளீர்கள். இதனால் மக்கள் கர்மவழி நிற்பர். பாண்டவர்கள் மூலம் தர்மவழி வெற்றிக்கு வழிவகுக்கும். பகவானை நம்பியவர்கள் வெற்றி பெறுவர் என்பதையும், உபநிஷத்துக்களின் மூலம் ஞான யோகத்தினையும், வேதங்கள் மூலம் கர்ம யோகத்தையும் விளக்கிக் காட்டியுள்ளீர்கள். ஆனால் இறைவன் புகழை அன்போடு பாடி பக்தி மார்க்கத்தைக் கடைப்பிடித்து மக்களை இவ்வுலக வாழ்க்கையில் வரும் துன்பம், அதிருப்தி, ஏமாற்றம், போட்டி, பொறாமை ஆகிய சூழல்களிலிருந்து காப்பாற்றுங்கள். இறைவனின் அவதாரங்களையும் புகழையும் பாடப்பாட ஆனந்தம் மேலிட்டு இறை சிந்தனையினால் பாவச் சுமையே விலகிவிடும் என்றார்.

வியாச பகவான் அப்படியே யோகநிஷ்டையிலாழ்ந்தார். நாராயணன் பாற்கடலில், பரிசுத்தமான இடத்தில், பள்ளி கொள்வதையும் அவரது பலவான அவதாரங்களையும் உணர்ந்து பாடத்தொடங்கினார். பகவானது லீலைகளும் பக்தர்களின் பலவிதமான அனுபவங்களும் பாடல்களாக வெளிவந்தன. பாகவத புராணம் இவ்வாறு 18,000 பாடல்களாகப் பாடப்பட்டது. பக்தர்களுக்கு வயதெல்லையோ, ஆண் பெண் பாகுபாடோ சாதி மத வேறுபாடோ கிடையாது. ஐந்து வயதுச் சிறுவன் பக்த பிரகலாதன், துருவன் முதல் யசோதா, ராதா, கோபிகள், மீராபாய், ஆழ்வார்கள் ஹனுமான், நாரதர், பகவானின் பத்து அவதாரங்களும் அவர்களது பக்தர்களும் என பக்திக் காவியமாக பாகவத புராணம் மிளிர்கின்றது. கிருஷ்ண பகவானே தான் ஒவ்வொரு அட்சரத்திலும் இப்புராணத்தில் புகுந்;திருப்பதாக உத்தவருக்குக் கூறியுள்ளார். பற்பல பக்தர்களின் வாழ்க்கையும் அனுபவங்களும் தத்ரூபமாகத் தரப்படுகின்றன. பக்தர்களின் அனுபவமாகிய மாலைக்கு பக்தி ஊடு நிற்கும் நு}லாகின்றது. அழகிய நறுமணமிக்க மலரின் மொட்டுவிரியும் பொழுது விளம்பரமெதுவுமில்லாமலே வண்டுகள் தாமாகவே அம்மலரைத் தேடியடைந்து தேனைப் பருகித்திளைக்கின்றன. அப்படியே பக்திரசம் சொட்டும் பாகவதத்தையும் கேட்டுப் பருக தேடியடைகின்றனர் பக்தர்கள.; இந்த பாகவதத்தைக் காதாரக் கேட்டு இதயமலரில் பரவசமடையும் பக்தர்கள் பாக்கியசாலிகள்.பாகவத புராணம் நைமிசாரண்ய             வனத்தில் ஒதப்பட்டது. காலையில் யக்ஞம், மாலையில் முனிவர்கள் சாதுக்கள் ஒன்று கூடி பகவான் புகழ் பாடினர். உக்கிரசிரவஸ் பாகவதபுராணத்தை சுகப்பிரம்மர் சொல்லும் பொழுது கேட்டவர். மிகக்கவனமாக வேறுசிந்தனையின்றிக் கேட்பவராகையால்தான் அவருக்கு இந்த பெயர் அமைந்தது. அவரும் மாலையில் பாகவத புராணத்தை நைமிசாரண்ய வனத்தில் விளக்கிப் பாடினார். இவையெல்லாம் கலியுகத்தில் மக்கள் வழிதவறிப் போகாமல் காப்பாற்றவே நடந்தது. இப்பாகவத புராணம் பன்னிரண்டு பெரும் பிரிவுகளுடன் காண்ப்படுகின்றது. ஒவ்வொன்றிலும் பக்தர்களின் கதைதான். ஓவ்வொன்றிலும் ஊடுருவி ஒளிகாலிக் கொண்டிருப்பது சத்தியம் மிக மேலானது எனும் உண்மையே. (Satyam Param Dheemahi). துருவன் மிகச் சிறுவனாக இருந்த பொழுது தகப்பனின் மடியிலிருக்க ஆசையோடு போனான். ஆனால் சிறிய தாயார் தன் மகனைத் தகப்பன் மடியிலிருந்து எடுக்க விரும்பாமல் உனக்கு அந்தப் பாக்கியமில்லை நீ போய் கடவுளை வேண்டு எனக்குப் பிள்ளையாகப் பிறக்க வேண்டுமென்று எனக் கூறிவிட்டாள். தகப்பனும் மாயை மயக்கத்தில் ஒன்றும் செய்யவில்லை. அழுது கொண்டு தாயாரிடம் சென்ற சிறுவன் நடந்தவற்றைக் கூறினான். தாயார் சமாதானம் செய்ய பலவிதங்களில் முயன்றும் முடியவில்லை. சரி உனக்குத்தான் இறைவனை வணங்கும்படி கூறியுள்ளார்கள்தானே நீ அப்படியே செய் என்றார். உடனே துருவன் திட சங்கர்ப்பத்துடன் காட்டை நோக்கித்தன் சிறுகால்களால் விரைவாக நடந்து சென்றான். இதைக் கண்ணுற்ற நாரதர் குறுக்கிட்டு அவனை மீண்டும் அரண்மனையை நோக்கிச செல்ல எல்லா முயற்சிகளும் செய்தார். சிறுவன் துருவன் பிடிவாதமாகத்தான் தவஞ்செய்யப் போவதாகக் கூறியபொழுது நாரதர் பகவான் நாராயணனின் நாமத்தைச் சொல்லி அந்ந நாமஸ்மரணையுடன் தவஞ்செய்யும் படி கூறிப் போய்விட்டார். பழங்கள், பின்னர் நீர், பின் வாயு, பின் அதனையும் தவிர்த்து தவஞ்செய்த பாலகனுக்கு நாரயணபகவான் பிரத்தியட்சமாகக் காட்சி கொடுத்து வரங்கள் பல அருளி அரசனாக்கி துருவலோகத்தையும் கொடுத்தருளினார். 
பக்த பிரகலாதன் அசுரவம்ச அரசன் ஹிரண்ய கசிப்புவிற்கு மகனாக அவதரித்தான். அவன் தாய் வயிற்றில் சிசுவாயிருந்த சமயத்தில் தந்தையார் தன்னுடைய பதவியை ஸ்திரமாக்கத் தவஞ்செய்யப் போய்விட்டான். இந்தச் சந்தர்ப்பத்தில் விதிவசமாக நாரதர் தாயாருக்கு கொடுத்த உபதேசம் வயிற்றிலிருந்த சிசுவின் மனதில் நன்றாகப் பதிந்து கொண்டது. தந்தையார் வேண்டிய வரம் பெற்றுத்திரும்பிய பொழுது தானே எல்லோர்க்கும் மேலானவன் என்றும் ஹிரணயாய நம என்று எல்லோரும் வணங்க வேண்டுமென்றும் கட்டளையிட்டான். பிரகலாதனை முறைப்படி குருகுலத்துக்கு மனுப்பிவைத்தான். அசுர குருவின் மக்களே குருவாக மன்னன் கட்டளைப்படி சொல்லிக் கொடுத்த போதும் பிரகலாதன் நாராயணனே பரம்பொருள் என உணர்ந்து நாராயணாய நம எனக் கூறிக் கொண்டேயிருந்தான். ஹிரண்ய கசிப்பு சிறுவனை மகனென்றும் பாராமல் மிகக் கொடுமையான தண்டனைகள் கொடுத்தான். மலையின் உச்சியிலிருந்து உருட்டிவிடுதல், கொடிய பாம்புகள் மத்தியில் எறிதல்    என்றின்னும் பலப்பல. நாராயண நாமத்தைக் கைவிடாது இருந்த பிரகலாதனுக்கு ஏதொரு ஊறுமேற்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அசுரச் சக்கரவர்த்தி நாராயணன் எங்குமுள்ளதாகக் கூறுகின்றாயே இத்தூணிலுமிருக்கின்றாரா எனக் கேட்க பிரகலாதன் ஓம் என்றான். உடனே அந்தத் தூணை ஓங்கித் தாக்கிய பொழுது பக்கன் சொல்தவறாது நரசிம்ம அவதாரமாக ஸ்ரீமன் நாராயணன் வெளிப்பட்டு ஹிரண்யகசிப்புவை அழித்து பக்த பிரகலாதனை மடியிலமர்த்தி கோபந்தணிந்து அவனை அரசனாக்கினார். பிரகலாதனின் நாராயண பக்தி அந்த வரலாறு முழுவதும் மயிர்க் கூச்செறியச் செய்வதாகும்.

மக்கள் எல்லோரும் எக்காலத்தும் விரும்புவது மகிழ்ச்சியேயாகும். குழந்தைகள் பொம்மைகளில் மகிழ்ச்சியடைகின்றன. வயதேற இல்வாழ்க்கையும், வயது முதிர சிந்தனையும் வந்தடைகின்றன. புற உலகப் பொருட்கள் முதலில் இன்பம் தருவது போலத் தோற்றினாலும் இறுதியில் மிகுந்த துன்பத்தையே கொடுக்கும். ஆனால் இறைவனைத் தொழுவதால் அச்சக்தியுடனான தொடர்பால் ஆத்மதிருப்தி, மன அமைதி, ஆனந்தம் ஏற்படுகின்றது. இவற்றை ஆதாரங்களுடன் விளக்கும் காவியம் கலிகாலத்திற்கு மிக உன்னதமான சாதனமாகும்.

தர்மத்தைக் காக்க அதர்மம் ஓங்கும் காலத்தில் அவதரித்து அருளுவேன் என்று கண்ணபிரான் கீதையில் கூறியுள்ளது எல்லோருக்கும் தெரியும். இதற்காக பகவான் பற்பல அவதாரங்கள் எடுத்தபோதும் அதில் பத்தவதாரம் மிக முக்கியமானதாகும். இராமாவதாரத்தில் இராமர் தர்மத்துக்கு இலக்கணமாக பதினாறு வகைச் சிறப்புகளோடு அவதரித்தார். பக்திக்கு இலக்கணமாக இங்கு அனுமாரைக் காண்கின்றோம். சீதா பிராட்டியை மீட்டு வர இலங்கைக்கு இராமரும் வானரப் படைகளும் செல்ல வேண்டும். பக்தியோடு இராம நாமத்துடன் போடப்பட்ட கற்பாறைகள் மிதக்கவே அவற்றைக் கொண்டமைந்த பாதை மூலம் இராமரும் வானரப்படையும் இலங்கை சென்றடைந்தனர். அரக்கர் குலத்தை யழித்து சீதையுடன் மீண்டார் இராமர். பக்தியோடு ராமநாமத்துடன் ஒரு குடிசையிலிருந்து அரசாண்ட பரதன் இராம ரூபத்தையே இறுதியில் கொண்டிருந்தார்.

இறைவனையடைய ஞான, வைராக்கிய, கர்ம, பக்தி மார்க்கங்கள் இந்து மதத்தில் கூறப்பட்டுள்ளது. ஞானம் பூரண அறிவைப் பெறுவதன் மூலம் இறைவனையடையும் மார்க்கமாகும். இது சுலபமானதல்ல, பூரணஞானியான குருவையடைந்து அவர் மூலம் ஞானத்தைப் பெற்று அதைத்தம்வாழ்வில் அனுபவமூலம் பெற வேண்டும். சத்திய, திரேதா யுகங்களில் இவை சிரமமல்ல. ஆனால் இக்காலத்தில் உண்மையான ஞானியாகிக குருவைக் காண்பதும் ஞானம் பெறுவதும் சுலபமல்ல. வைராக்கியம் என்பது மாறிக்கொண்டே போகும். இவ்வுலக ஆசைகளையும் இன்பங்களையும் துறப்பதாகும். இக்காலத்தில் போக வாழ்க்கையில் மூழ்கிப்போகும் மக்களால் கைக்கொளப்படுதல் மிகக்கடினமாகும். பாகவதத்தில் துவாபரயுகத்தில் நாரதமுனிவர் ஆனந்தமாக நாராயண நாமத்தைப் பாடிக் கொண்டு போகையில் ஒரு அழகிய இளம் பெண்  அழுது கொண்டு ஒரு காட்டு வழியில் இரண்டு ஒன்றுமே செய்ய இயலாத ஒட்டி உலர்ந்த உடலைத் தாங்கிய இரு வயோதிபர்களுடன் இருக்கக்கண்டார். நாரதர் அவர்களைத் தாண்டிக்கொண்டு ஆகயமார்க்கமாகப் போவதைக் கண்ட அப்பெண் அநாதரவாக அழுது கொண்டு உதவிக்கு அவரைக் கூப்பிட்டாள். என்ன விடயம் என அவர் வினவ தனது இரண்டு பிள்ளைகளும் ஒன்றுமே செய்ய இயலாது கிடப்பதையும் அவர்களைக் காப்பாற்ற உதவும் படியும் கேட்டாள். நாரதருக்கோ ஒரே ஆச்சரியம். தாயோ இளம் பெண் பிள்ளைகளோ மிகுந்த கிழவர்கள்! நீ யார் என அப்பெண்ணை நாரதர் வினவ அவள் தான் பக்தியென்றும் அவளது பிள்ளைகள் இருவரும் ஞானமும், வைராக்கியமுமென்றாள். நாரதர் வேத மந்திரங்கள் ஏனைய சாஸ்திரங்கள் எல்லாம் கூறக்கூற முனகலுடன் அசைந்து விட்டு மீண்டும் விழுந்துவிட்டனர். பின்னர் அவர்களை யமுனைக்கரைக்கு பிருந்தாவனங்கொண்டு சென்றபின் பாகவத கிருஷ்ண லீலைகள் சொல்லச் சொல்ல அவர்கள் மௌ;ள எழுந்தனர்.

பூரணமான அவதாரமான கிருஷ்ண லீலைகள் அனந்தம், அத்ரி, அனசு10யா பெற்ற தத்தாத்ரேயர், கூர்ம, மத்சிய அவதாரங்கள் பாற்கடல் கடைந்தபொழுது தோன்றிய மோகினி, தன்வந்திரி, இப்படி பகவானை பக்தர்களுடன் இணைக்கும் கதைகள் பலப்பல. பகவானுடன் கொள்ளும் அன்பு புனிதமானது. போட்டி பொறாமைகளுக்கு அப்பாற்பட்டது, தூய்மையானது. மனிதன் உழைப்பதெல்லாம் உடம்பைப் பேணுவதற்கே. ஆனால் தர்ம சாஸ்திரங்களின்படி ஒருவரது உழைப்பு தனது, தன்னைச் சார்ந்தோரது அத்தியாவசிய தேவைகளுக்குப் போக மிகுதி சேவைக்கே அர்ப்பணிக்கப்படவேண்டும். இது முக்தியைத் தரும். முன்னையது இன்பமாகக் காட்சி தந்து முடிவில் சோகத்தையும் சேவைக்கு செலவிடுதல் அளவிலா ஆனந்தத்தையும் தரும். உண்மை மிக மேலானது. பாகவதம் முழுவதும் இது வலியுறுத்தப்படுகின்றது. (Sathyam Param Dheemahi) பகவான் எங்கும் நிறைந்துள்ளான், ஒவ்வொருவருள்ளும் ஒளிவிடுகின்றான். இந்த விஸ்வரூபத்தை யாவரும் உணர்ந்தால் உலகத்தில் வேறுபாட்டுக்கு இடமேது. எங்கெங்கெல்லாம் பகவான் புகழ் பாடப்படுகின்றதோ அங்கங்கெல்லாம் சாந்தி, அமைதி ஆனந்தம நிலவும். எங்கெங்கு பாகவதம் பாடப்படுகின்றதோ சொல்லப்படுகின்றதோ அங்கு சென்று து}ய்மையாக மனமொருமித்துக் கேட்டு நிலையான ஆனந்தத்தினை அடைவோமாக.

செவின் ஹில்ஸ் பாடசாலையில் பாகவதத்தை விளக்கிய பகவானின் வழி வந்த ஆச்சாரியர் ஸ்ரீ சச்சிதானந்த சாயிக்கு எமது தாழ்மையான அன்பு வணக்கங்கள். இந்த வாய்ப்பை இலவசமாக எமக்களித்து, இனிய தூய்மையான உணவும் தந்த ஞான வேதாந்த சபைக்கும் இதனை நன்கமைக்க அயராது உழைத்த பெரியோர்களுக்கும் எமது இதயங்கனிந்த நன்றிகள்.

ஓம் சாயி ராம்.

   No comments: