என்னைப் பெற்ற அம்மா - கவிதை

.






அன்னையர் தினத்தையொட்டிப் பிரசுரிக்கப்படும்   சிறுவர் கவிதைகள்

என்னைப் பெற்ற அம்மா

      - பல்வைத்திய கலாநிதி இளமுருகனார் பாரதி,
        
                             
என்னைப் பெற்ற அம்மா விற்கு
எத்தனை அன்பு - அதை
எடுத்துக் கூற வார்த்தை ஏது
இயம்புவேன் நம்பு!           
                                                                                              (என்னை)                  

ஆசையோடு உச்சி மோந்து                
அணைத்து மடி இருத்திப்                  
பாசத்தோடு அமுது தந்து                  
பாலை ஊட்டும் அம்மா,                    

                                                                                                                       
நெஞ்சில் தலையைச் சாய்த்து முடியை                                       
நீவி மகிழும் அம்மா
கெஞ்சும் விழியால் அன்பைச் சிந்திக்
கொஞ்சும் தெய்வ அம்மா,
                                                                                                   (என்னை) 
கிள்ளை மொழியிற் பேசும் என்னை
மெள்ள அள்ளித்    தூக்கி
வெள்ளைப் பட்டுச் சட்டை போட்டுப்
பள்ளிக் கனுப்பும் அம்மா,

பள்ளிக் கூடம் விட்ட வுடன்
பட்ச ணங்கள் தருவாள்
கொள்ளை அன்பு பொங்க முத்தம்
கொட்டி வீட்டிற் சேர்ப்பாள்,
                                                                                                                       (என்னை)

அந்தி மாலை கெந்தி ஓடிப்
பந்த டிக்கச் செய்வாள்
சந்த மோடு சிந்து பாடித்
தழுவித் தினம் மகிழ்வாள்,
                        
ஓங்கு புகழ் பெற்ற வர்தம்
உண்மைச் சரிதம் கூறித்
தூங்கும் போது நீதி நேர்மை
துலங்கும் கதைகள் சொல்வாள்
                                                                                                       (என்னை)


நீதிக் கதைகள் ஓதி ஒழுக்க
நெறியில் என்னை வளர்த்தாள்
சாதி இல்லைத் தெய்வம் ஒன்று
சமயம் அன்பே என்பாள்.
                         
விழியைக் காக்கும் இமைபோல் அன்பு
வேலி கட்டி வளர்த் தாள்
வழிந டத்தும் தந்தையின் சொல்
மந்தி ரமே என்பாள்.
                                                                                                        (என்னை)




3 comments:

Anonymous said...

Dear Anna

Wounder full poem.I wept after reading it because I could remember the days when I was with my mother.
yours
Dr R.Kuppusamy - Chennai

Anonymous said...

இதயத்தை ஈர்க்கும் கவிதைகள். சிறுவர்களுக்கு உகந்தவை.
சிறீ – மெல்பேர்ண்

Anonymous said...

Beatiful song. It brings me memories of my devoted mother.
Siva(USA)