அசாம் மாநிலத்தில் பிரம்மபுத்ரா ஆற்றில் படகு கவிழ்ந்து 200 பேர் பலி!

_

1/5/2012

அசாம் மாநிலத்தில் பிரம்மபுத்ரா ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 200 பேர் பலியானார்கள். அசாம் மாநிலத்தில் துப்ரி என்ற இடத்தில் இருந்து பகிர்கஞ்சன் என்ற இடத்துக்கும் இடையே பிரம்மபுத்ரா ஆற்றில் படகு போக்குவரத்து நடைபெறுகிறது. நேற்று பிற்பகலில் துப்ரியில் இருந்து பகிர்கஞ்சனுக்கு ஒரு படகு புறப்பட்டு சென்றது. இரண்டு அடுக்கு கொண்ட அந்த படகில் பெண்கள், குழந்தைகள் உள்பட 250 பயணிகள் இருந்தனர்.

ஆற்றில் வெள்ளம் அதிகமாக இருந்தது. நடு ஆற்றில் சென்று கொண்டிருந்து போது பலத்த காற்று வீசியதால் திடீரென்று அந்த படகு கவிழ்ந்தது. இதனால் படகில் இருந்தவர்கள் ஆற்றுக்குள் விழுந்தனர். அவர்களை வெள்ளம் இழுத்துச் சென்றது.

தண்ணீருக்குள் விழுந்தவர்களில் 50 பேர் நீந்தி கரை சேர்ந்ததாக போலீசார் தெரிவித்தனர். மற்றவர்களின் கதி என்ன ஆனது? என்று தெரியவில்லை. மற்ற 200 பேரும் தண்ணீரில் மூழ்கியும், வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டும் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

தகவல் கிடைத்ததும் மீட்புக்குழுவினர் அங்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். ஆனால் வானிலை மோசமாக இருந்ததாலும், இருட்டி விட்டதாலும் மீட்புப்பணிகள் பாதிக்கப்பட்டன.

இந்த விபத்து பற்றிய தகவல் கிடைத்தும் பிரதமர் மன்மோகன்சிங், தன்னை டெலிபோனில் தொடர்பு கொண்டு நடந்த விவரங்களை கேட்டு அறிந்ததாகவும், டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மீட்புக்குழுவினரை அனுப்பி வைப்பதாக உறுதி அளித்ததாகவும் அசாம் முதல்-மந்திரி தருண் கோகாய் கூறினார்.

விபத்து நடந்த இடத்துக்கு ராணுவம் மற்றும் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் மீட்புப்பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து அதிர்ச்சி தெரிவித்து உள்ள பிரதமர் மன்மோகன் சிங், மீட்புப்பணிகளில் அசாம் அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்றும், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து உதவித்தொகை வழங்கப்படும் என்றும் அறிக்கை ஒன்றில் தெரிவித்து உள்ளார்.
வீரகேசரி இணையம்












No comments: