உழைப்பை உறிஞ்சும் ஊர்வலம் - கவிதை - செ.பாஸ்கரன்


.
கிழக்குச் சூரியன் இருள் கிழித்து
மெல்ல எழுந்து வருகிறான்
வழமைபோலவே வானம் செம்பொன்னாய்
கோடுகாட்டி சிரித்து வரவேற்கிறது
வடக்குத்திசை நோக்கி கதிரெறிந்து
மெல்லப் பார்த்த கதிரவன்
திகைத்து நிற்கின்றான்
பூமியெங்கும் செங்கம்பளம் விரித்து
என் வரவிற்காய் காத்துக் கிடக்கிறதா
மணப்பெண்ணின் மனம்போல
குளப்பமும் திகைப்பும்
ஒன்றாய் ஒட்டிக்கொள்ள
விரைந்து மேலெழுந்து மீண்டும் பார்க்கிறான்
செங்கொடிகள் காற்றில் கையசைக்கின்றன
செஞ்சேலை சுற்றிய கட்டிடங்களும்
செங்கம்பளங்கள் விரித்த புல்தரையுமாய்
வடபுலத்தின் யாழ்நகர் சிவந்து கிடக்கிறது
மேதினக் கூட்டங்களும் ஊர்வலங்களும்
பட்டுக்களால் அலங்கரிக்கப்பட
மாற்றுத்துணிகூட இல்லா மனிதக் கூட்டம்
மருட்சியுற்றுப் பார்த்து நிக்கிறது
வறுமையே தேசியமான நாட்டில்
உழைப்பாளர் உதிரம் குடிப்பவரே
ஊர்வலத்தின் முன்னணியில்
உதிரம் குடிக்கும் அடையாளம்தான்
செங்கொடியாய் மாறியிருக்கிறதா?
புரியாத புதிருக்கு விடைதேடி
கதிரவன் மேற்கே விழுந்து
 மறைந்து கொள்கிறான்


6 comments:

putthan said...

[quote]உதிரம் குடிக்கும் அடையாளம்தான்
செங்கொடியாய் மாறியிருக்கிறதா?
புரியாத புதிருக்கு விடைதேடி[quote]


நல்ல ஒரு கவிதை ...உலகம் பூராவும் இந்தநிலைதான்.புரியாத புதிருக்கு விடைதேடி கதிரவன் மட்டுமல்ல நாமும்தான்...... மே தினத்தில் ஒரு ரூபாவில் ப‌டம் பார்க்கமுடியும் இப்பவும் அந்த சலுகை உண்டோ?

Ramesh said...

நல்ல கவிதை செ.பாஸ்கரன் ஆனால் என்னத்தை எழுதினாலும் ஏழைமக்களுக்கு விடிவு கிடைக்காது என்பது தான் உண்மை. ஒன்றாக சேர்ந்து கொடி தூக்கினவர்கள் ஒன்றாக சேர்ந்து உரிமையை கொடுப்பதற்கு கதைப்பார்களா. அவர்கள் சிங்கள இனவாதம் பேசுவார்கள் இவர்கள் தமிழினவாதம் பேசுவார்கள் எல்லாம் பதவிக்காக மட்டும்தான்.

Anonymous said...

[quote] மேதினக் கூட்டங்களும் ஊர்வலங்களும்
பட்டுக்களால் அலங்கரிக்கப்பட
மாற்றுத்துணிகூட இல்லா மனிதக் கூட்டம்
மருட்சியுற்றுப் பார்த்து நிக்கிறது.

அருமையான வரிகள் அந்தமக்களைப் பற்றி எந்த அரசியல் வாதியும் கவலைப்படப் போவதில்லை. இதுதான் கொடுமை.

காந்தன்

C.Paskaran said...

நன்றி ரமேஸ்

அடிமேல் அடிஅடித்தால் அம்மியும் நகரும் எண்டுவாங்கள். அரசியல் வாதிகள் மட்டும் நகரவே மாட்டார்கள்.

Anonymous said...

நல்ல கவிதை உழைப்பாளர்களின் வாழ்வின் அவலத்தை சொன்னவிதம் சூரிய உதயத்தில் தொடங்கி மறைவில் முடித்திருப்பது தனிச்சிறப்பு

பாராட்டுக்கள்

Anonymous said...

எத்தனை தடவைதான்
நீ உன் காதுகளை மூடுவாய்?
கேட்டுக் கொண்டே இருக்கிறது
அங்கு வெடிச் சத்தம்!

ஒரே நிறமெனினும் தமிழா
செவிடாய் இருந்த
காரணம் கொண்டு இனி
இன எதிரி என அழைக்கப்படுவாய்!

செங்கோல் சிவப்பைச் சிந்த
கொடுங்கோல் கோலோச்ச
சிதறிய தலைகள் சிந்தின துளிகளை
சில எதிர்பார்ப்புகளையும் சேர்த்து!

இங்கு இன்னவர் யாரென்று
அடையாளம் காட்டத்தானோ
அங்கு உருண்டன நம்மவர் சிரங்கள்
இவ்விடம் இல்லை காக்கும் கரங்கள்

இனி அங்கு இல்லாமல் இருக்கலாம்
ஆனால் என்றும் மூடி வைத்த
எரிமலையாய் வெடிக்க துடித்திருக்கும்
அந்த சிவப்பு தினங்கள்..