மனச்சாட்சியின் கைதியின் பாராளுமன்றப் பிரவேசம்

.
மியன்மாரின் ஜனநாயக இயக்கத் தலைவி ஆங் சான் சூகி நேற்றைய தினம் பாராளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டதன் மூலமாக, சுமார் கால் நூற்றாண்டுக்கு முன்னர் எதேச்சாதிகார ஆட்சிக்கெதிராக போராட்டத்தை ஆரம்பித்ததற்குப் பிறகு முதற்தடவையாக அரசியல் பதவியொன்றை ஏற்றிருக்கிறார். அரை நூற்றாண்டுக்கும் அதிகமான காலமாக இராணுவ கும்பல்களின் கொடுங்கோன்மையின் கீழ் இருந்து வந்த மியன்மாரைப் பொறுத்தவரை சூகியின் பாராளுமன்ற பிரவேசம் புதியதொரு அரசியல் யுகத்தின் ஆரம்பமாக அமைகிறது. ஏப்ரல் முதலாம் திகதி நடைபெற்ற இடைத்தேர்தல்களில் 44 தொகுதிகளில் போட்டியிட்ட சூகியின் ஜனநாயகத்திற்கான தேசிய கழகம் 43 தொகுதிகளில் வெற்றிபெற்றது. இடைத் தேர்தல்களுக்குப் பிறகு ஏப்ரல் 23 ஆம் திகதி பாராளுமன்றக் கூட்டத் தொடர் ஆரம்பமான போது "அரசியலமைப்பை பாதுகாப்பதற்கு' உறுதிமொழியெடுத்து பதவிப் பிரமாணம் செய்ய முடியாதென்று சூகியும் அவரது கட்சி உறுப்பினர்களும் மறுத்துவிட்டனர். அரசியலமைப்பைப் "பாதுகாப்பது' என்ற சொல்லுக்குப் பதிலாக அரசியலமைப்பை "மதிப்பது' என்ற சொல்லைப் பயன்படுத்தி பதவிப் பிரமாணம் செய்யவே அவர்கள் விரும்பினார்கள்.


இராணுவ ஆட்சியினால் வரையப்பட்ட அரசியலமைப்பை மாற்ற வேண்டுமென்ற நிலைப்பாட்டைக் கொண்ட சூகியைப் பொறுத்தவரை அதே அரசியலமைப்பைப் பாதுகாப்பது என்று உறுதிமொழி எடுத்து பதவிப் பிரமாணம் செய்வதென்பது அடிப்படையில் இலட்சியம் சம்பந்தப்பட்ட ஒரு விடயமாகும். அதனால் அவரும் அவரது கட்சி உறுப்பினர்களும் பதவிப் பிரமாணம் செய்ய மறுத்ததையடுத்து உருவான இழுபறி மியன்மாரின் அரசியல் மாற்றங்களை தாமதிக்கக்கூடுமென்ற அச்சம் சர்வதேச சமூகத்தின் மத்தியில் ஏற்பட்டது. ஆனால், திடீரென்று கடந்த திங்கட்கிழமை தனது மனதை மாற்றிக்கொண்ட சூகி"அரசியல்' என்பது கொடுத்து எடுக்கும் ஒரு விவகாரமாகும். தாங்கள் எதையும் கைவிடவில்லை. எமது மக்களின் அபிலாசைகளுக்காக ஒரு நெகிழ்வுப் போக்கையே காட்ட முன்வந்திருக்கிறோம்' என்று அறிவித்தார். இதையடுத்து நேற்றைய தினம் அவரும் 34 உறுப்பினர்களும் பாராளுமன்றத்தில் சபாநாயகர் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர். ஏனைய உறுப்பினர்கள் நாட்டுக்கு வெளியே இருப்பதால் பதவியேற்க முடியவில்லை.

இராணுவத்திற்கு ஆதரவான அரசியல் கட்சியின் உறுப்பினர்களை அதிகப்பெரும்பான்மையாகக் கொண்ட பாராளுமன்றத்தில் சூகி தலைமையிலான எதிரணியின் பிரவேசம் பெருமளவுக்கு அடையாளபூர்வமானதாகவே இருக்குமென்று கூறுகின்ற அரசியல் அவதானிகள் இருக்கிறார்கள். இராணுவத்திற்கு ஆதரவான அரசியல் கட்சியின் உறுப்பினர்களை அதிகப்பெரும்பான்மையாகக் கொண்ட பாராளுமன்றத்தில் சூகியின் கட்சி பங்கேற்பதன் மூலம் அந்த அரசாங்கத்தை நியாயப்படுத்துவதாக அமைந்துவிடுகிறது என்ற அபிப்பிராயத்தை முன்வைப்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால், சூகியைப் பொறுத்தவரை தனது இலட்சியத்தை அதாவது மியன்மாரில் ஜனநாயகத்தை முழுமையாக நிலைநிறுத்துவதற்கான படிப்படியான அரசியல் செயன்முறைகளை, தற்போதைய உள்நாட்டுசர்வதேச நிலைவரங்களுக்கு இசைவான முறையில் முன்னெடுப்பதில் சிறிதேனும் உறுதி தளராதவராகவே காணப்படுகிறார். நேற்றைய தினம் கூட அவர் பாராளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களுக்கு மத்தியில் பேசியபோது, கடந்த இரு தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக பாராளுமன்றத்திற்கு வெளியே ஜனநாயகத்திற்கான எமது கடமையை எவ்வாறு செய்தோமோ அதேபோன்றே வரும் நாட்களில் பாராளுமன்றத்திற்குள்ளும் எமது கடமையைச் செய்வோம் என்று கூறியிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

சர்வதேச சமூகத்தின் முன்னணி வல்லாதிக்க நாடுகள் ஜனநாயக இயக்கத் தலைவி சூகி தற்போதைய ஜனாதிபதி தீய்ன் சீனன் அரசாங்கத்திற்கு ஒத்துழைத்து செயற்படுகின்ற ஒரு போக்கைக் கடைப்பிடிப்பதன் மூலமே ஜனநாயகத்தை நோக்கிய மாற்றங்களை முன்னெடுக்க முடியுமென்று நம்பிக்கை கொண்டிருக்கின்றன. அண்மைக் காலத்தில் மியன்மாருக்கு விஜயம் செய்திருக்கக்கூடிய மேற்கு நாடுகளின் தலைவர்கள் இந்தச் செய்தியையே வெளிப்படுத்தியிருந்தார்கள். சில தினங்களுக்கு முன்னர் மியன்மார் சென்ற ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீமூனும் கூட அந்த நாட்டில் தற்போது முன்னெடுக்கப்படுகின்ற அரசியல் மாற்றங்களுக்கு குந்தகமான சூழ்நிலைகள் தோன்றக்கூடியதாக எந்தத் தரப்பினரும் செயற்படக்கூடாது என்ற கருத்தையே வலியுறுத்தியிருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.

சூகியிற்கும் ஜனாதிபதி தீய்ன் சீனுக்கும் இடையேயான பதற்றத்தணிவுக்கு குந்தகத்தை ஏற்படுத்தக்கூடிய எந்தச் செயன்முறையையும் எவரும் முன்னெடுக்கக்கூடாது என்ற கருத்து உண்மையில் மியன்மாரில் தற்போதைய யதார்த்த நிலைவரங்களை சரியாக புரிந்துகொண்டதன் விளைவு என்பதில் சந்தேகமில்லை. இதுகாலவரையில் ஆளுங்கட்சியின் மிகை ஆதிக்கத்திலுள்ள மியன்மார் பாராளுமன்றத்தில் விவாதங்கள் நடைபெற்றதில்லை. ஆனால், தற்போது சூகி தலைமையிலான உறுப்பினர்களின் பிரவேசம் அரசியல் விவாதம் சபைக்குள் மூளக்கூடிய ஆரோக்கியமான சூழ்நிலையைத் தோற்றுவிக்கப்போகின்றது. இது உண்மையில் வரவேற்கப்படவேண்டிய ஒரு நிகழ்வுப்போக்காகும். இந்தப் போக்கு இடையூறின்றித் தொடரக்கூடியதாக இருக்குமேயானால் 2015 ஆம் ஆண்டு அடுத்த பொதுத் தேர்தல் மியன்மாரில் நடைபெறும்போது நிச்சயமாக கணிசமான அளவுக்கு ஆரோக்கியமான ஜனநாயக சூழல் வளர்ந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. உலகின் மிகவும் பிரபல்யமான ஒரு மனச்சாட்சியின் கைதி தனது நிதானமானதும் விவேகமானதுமான செயற்பாடுகளினால் தனது மக்களுக்கு தொலைநோக்குடைய தலைமைத்துவத்தை வழங்கிக் கொண்டிருப்பதைக் காண்கிறோம்.

nantri thinakkural

No comments: