வானொலி மாமா நா. மகேசனின் குட்டி நாடகம்



குறளில் குறும்பு

“இருக்காது அபிடி இருக்காது”


ஞானா: அப்பா......அப்பா......திருவள்ளுவர் கூடாஒழுக்கம் துறவியளுக்குத்தான் இருக்கக்கூடாது எண்டு சொல்லியிருக்கிறார் எண்டால் ஏற்றுக்கொள்வியளே?

அப்பா: அதெப்பிடிச் சொல்லலாம் ஞானா? கூடா ஒழுக்கம் உலகத்திலை உள்ள எல்லாருக்கும் கூடாதுதானே.

ஞானா: அப்பிடியெண்டால் அப்பா திருவள்ளுவர் கூடாவொழுக்கம் எண்ட அதிகாரத்தை ஏன் கொண்டுபோய் துறவறம் எண்ட பகுதியிலை வைச்சிருக்கிறார்?

அப்பா: அது வந்து ஞானா......இல்லறம் நடத்திற மக்களே உங்களுக்கு நல்லொழுக்கம் தேவையில்லை நீங்கள் நினைச்சபடி நடவுங்கோ துறவியளுக்குத்தான் நல்லோழுக்கம் தேவை. ஆனபடியாலை கூடாவொழுக்ம் எண்;ட அதிகாரத்தைத் துறவறத்திலை கொண்டுபோய் வைக்கிறன் எண்டு சொல்லித்தான் வைச்சிருக்கிறார்.

சுந்தரி:  இதென்ன அப்பா நீங்கள். அவள் பிள்ளை ஞானா குறுக்குக் கேள்வி கேக்கிறாள் நீங்கள் போய் எடக்கு முடக்காய்ப் பதில் சொல்லுறியள்.

அப்பா: பின்னை என்ன சுந்தரி.....திருவள்ளுவர் ஒரு நியாயமும் இல்லாமல் கூடாவொழுக்கம் எண்ட அதிகாரத்தைத் துறவறத்திலை வைச்சிருப்பாரே? இல்வாழ்க்கை வாழிறவை கட்டவிட்டு விட்ட மாடுகள் மாதிரித் திரியலாமே? இல்லறவியலிலை ஒழுக்கமுடைமை எண்ட ஒரு அதிகாரம் வைச்சிருக்கிறார் தானே.



ஞானா: அது சரி அப்பா. அப்பிடி எண்டால் அந்த ஓழுக்கமுடைமை எண்ட அதிகாரத்திலை சொல்லப்பட்டிருக்கிற அறிவுரைகள் எல்லாருக்கும் பொது எண்டு எடுக்கலாம்தானே. துறவியளுக்கு எண்டு ஏன் ஒரு தனி அதிகாரம் எழுத வேணும்?

அப்பா: ஞானா திருவள்ளுவப் பெருந்தகை இல்லறத்தாருக்கும் துறவறத்தாருக்கும் வேண்டிய பல அறிவுரைகளைச் சொல்லியிருக்கிறார். அதிலை இல்லறத்தானுக்குச் சொல்லப்பட்டவை சில, துறவறத்தானுக்குப் பொருந்தாது. ஆனால் துறவறத்தானுக்குச் சொல்லப்பட்டவை பல இல்லறத்தானுக்குப் பொருந்தும். அவரவர் தங்களுக்குப் பொருந்தும் அறிவுரைகளை ஏற்று நடக்க வேணும்.

சுந்தரி: அப்பிடி எண்டால் அப்பா இந்தக் கூடாவொழுக்கம் எண்ட அதிகாரத்திலை இல்லறத்தானுக்கும் துறவறத்தானுக்கும் சொல்லப்பட்ட அறிவுரைகள் இருக்கு எண்டு எடுக்கலாமோ?

அப்பா: சுந்தரி என்னைக் கேட்டால் இரண்டு பகுதியினருக்கும் எச்சரிக்கைகள் விடப்பட்டிருக்கு துறவறத்தானுக்கு ஆசைகளை அடக்கிறது கடினம். திருட்டுத் தனமாக ஆசைகளை நிறைவேற்றப் போகாதையுங்கோ எண்டு எச்சரிக்கிறர். இலறத்தானுக்கு இந்தப் பொய்
வேடதாரியளை நம்பி ஏமாராதையுங்கோ எண்டு எச்சரிக்கை செய்யிறார். இவை எல்லாம்; இந்தக் காலத்துக்கு அவசியமாய்த் தேவைப் படுகிற எச்சரிக்கைகள் எண்டுதான் சொல்ல வேணும்.

ஞானா: ஏன் அப்பிடிச் சொல்லிறியள் அப்பா?

அப்பா: ஞானா ......இந்தக் காலத்திலைதான் பொய் வேடம் போட்டுக்கொண்டு உலகத்தையே ஏமாற்றுகிற துறவிகள் பெருகி இருக்கிறார்கள். இவர்களைப் பற்றி நிறைய இந்த அதிகாரத்திலை வள்ளுவர் சொல்லியிருக்கிறார். ஒரு குறளைப்பார்

ஞானா: நெஞ்சிற் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து

வாழ்வாரின் வன்கணார் இல்.

அதாவது மனத்திலை உள்ள ஆசைகளை விட்டு விடாமல், விட்டுவிட்டவாகள் போல் உலகத்தை ஏமாற்றிச் சீவிக்கிறவர்களைப் போலப் பாவங்களக்குப் பயப்பிடாத நெஞ்சழுத்தம் உள்ளவர்கள் வேறு யாருமில்லை.

சுந்தரி: அப்பா நான் ஒண்டு சொல்லட்டே?

அப்பா: சொல்லும் சுந்தரி சொல்லும். என்ன சொல்லப் போறீர் கள்ளத் துறவியள் உலகத்திலை இல்லை எண்டே சொல்லப்போறீர்.

சுந்தரி: இல்லை அப்பா. இந்தக் கள்ளத் துறவியளைப் பின்பற்றுகிற பக்த கோடிகள்தான் அவையள் பெருகிறத்துக் காரணம் எண்டு சொல்லவாறன். இந்தக் கள்ளத் துறவிகளின்ரை கள்ளத்தனம் வெளியிலை வந்தால்....இந்தப் பக்தகோடிகள் அது அப்பிடி இருக்காது, அவர் நல்ல சுவமியார், அவர் அது செய்தார், இது செய்தார், அவர் மெஞ்ஞானி என்டு மழுப்பிப் போடுவினம். அது வந்து இந்தப்பொய்துறவியள் மேலும் மனத்துணிவோடை பிழையாய் நடக்கிறதுக்குத் து}ண்டிவிடுகிது.

அப்பா: சரியாய் சொன்னீர் சுந்தரி திருவள்ளுவர் உதை இந்தக் கூடாவொழுக்கம் எண்டஅதிகாரத்திலை இன்னும் ஒரு குறளிலை சொல்லியிருக்கிறார்.

பற்று அற்றேம் என்பார் படிற்று ஒழுக்கம்

எற்று எற்று என்று ஏதம் பலவும் தரும்.

ஞான, உன்ரை புத்தகத்திலை உள்ள விளக்கத்தை ஒருக்கால் படிபிள்ளை பாப்பம்.

ஞானா: படிக்கிறன் கேளுங்கோ. ஆசைகளை எல்லாம் விட்டொழித்தோம் என்று சொல்லிக்கொள்ளும் துறவிகள் திருட்டுத்தனமாக அந்த ஆசைகளைப் பூர்த்தி செய்து கொள்ளும் முறை “இருக்காது, இருக்காது” என்று பிறர் நம்பும்படியாகவே பல துன்பங்களையும் உண்டாக்கி விடும்.

அப்பா: இப்ப வந்து ஞானா சாதாரணமான மனிசர்கள் செய்யிற வெளிப்படையான குற்றங்கள் ஓரிரு இடங்களிலைதான் நடக்கும். அதைக் கண்டிப்பதும் தண்டிப்பதும் சுலபம். ஆனால் தவவேடம் போட்டுக்கொண்டு, ஆசைகளை எல்லாம் விட்டுவிட்டவன் போல் பாசாங்கு செய்துகொண்டு கள்ளத்தனமாகச் சிற்றின்ப வாழ்க்கை நடத்துகிற துறவி பல இடங்களில் பலருக்குத் துன்பத்தையும் தீமையையும் உண்டாக்கி விடுவான்;;.

சுந்தரி: அதுமட்டும் இல்லை அப்பா அப்பிடியான கள்ளத் துறவி செய்யிற குற்றங்கள் கன நாளைக்கு வெளிவராது. பிறகு அவனிலை சந்தேகப்பட்டு ஆராவது அவனைப்பற்றிக் குறைகூற முற்பட்டால், மற்றவர்கள் ஏதேது? அப்படி இருக்காது எண்டு அதட்டி அடக்கி விடுவார்கள்.

அப்பா: சரியாய்ச் சென்னீர் சுந்தரி. இதையெல்லம் முற்கூட்டியே அறிஞ்சுதான் திருவள்ளுவர் இந்தக் கூடாவொழுக்கம் என்ட அதிகாரத்தை எழுதித் துறவறம் எண்ட பகுதியிலை வைச்சிருக்கிறார்.

ஞானா: இப்ப விளங்குதப்பா. இந்தக் கூடா ஒழுக்கம் எண்ட அதிகாரம் பொது சனத்துக்கும் சுவாமி மாருக்கும் நல்ல எச்சரிக்கைதான்.

-இசை-















1 comment:

Anonymous said...

கொச்சைத் தமிழிலே எழுதினால்தான் அது நாடகமா? கேவலம்.
“நக்கீரனின் தம்பி சுப்பு”