உயர்திரு 420
வெறும் 420தாக இருக்கிற ஒருத்தன் எப்படி உயர்திரு 420 ஆகிறான்ங்கிறதுதான் கதை.
திருடர்களிடமே லூட் அடிக்கும் தில்லாலங்கடி திருடன் சினேகன். ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்கவே வங்கிக் கடனை நம்பி இருக்கும் வசீகரனின் ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் ஜெனரல் மேனேஜராய் போலி சர்ட்டிபிகேட்டுகளை கொடுத்து சேர்கிறார் சினேகன். ஹோட்டல் தொழிலில் முத்திரை பதிக்க ஆசைப்படும் வசீகரனுக்கு, தமிழின் முன்னணி நடிகையுடன் காதல்.
வங்கிக் கடனைக் கட்டச் சொல்லி வங்கி அதிகாரிகள் நெருக்கடி கொடுக்கும் வேளையில், காதல் திருமணம் மூலமும் சிக்கலை எதிர்கொள்கிறார் வசீகரன். அதேவேளையில் தொழில் போட்டியில் வசீகரனை வீழ்த்த ஜெயப்பிரகாஷும், சந்திரசேகரும் திட்டமிடுகின்றனர். இந்த பிரச்சினைகளில் இருந்து விடுபட சினேகன் உதவுவார் என்று நினைக்கும்போது, வசீகரனைக் கொல்ல முயற்சிக்கிறார் அவர். ஏன், எதற்கு..? என்பது விறுவிறுக்க வைக்கும் மீதிக்கதை!
புதிய பின்னணியில் சஸ்பென்ஸ் முடிச்சுக்களை அடுக்கி, அதை ஒவ்வொன்றாக அவிழ்க்கும் விதத்தில் கவனத்தை கவர்கிறார் அறிமுக இயக்குநர் எஸ்.பிரேம்நாத். 'கண்களால் கைது செய்' படத்தில் நடித்த வசீகரன் நீண்ட நெடுநாளைக்குப் பிறகு இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். பெரும்பாலும் கூலிங்கிளாஸ் அணிந்தபடி ரிச் லுக் பாயாக வலம் வருகிறார். இறுதி வரை கனவு, லட்சியம் என்று ஆசை ஆசையாகப் பேசிக்கொண்டே இருக்கும் வசீகரன், படம் முடியும் வரை அதற்காக உருப்படியாக ஒரு நடவடிக்கையும் எடுப்பேனா என்கிறாரே!
'420' ஆகப் பாடலாசிரியர் சினேகன் நடித்திருக்கிறார். 'இத்தாலி மெஷின்' என்று ஆசை காட்டி, பேட்டை தாதாவிடமே 10 லட்சம் லபக்குவது, சரவணா ஸ்டோர் அட்ரஸ் சொல்லி, முரட்டு ரவுடியைக் குழப்புவது, மேக்னா ராஜைக் குழப்பி, சாப்பாடு பார்சல் வாங்குவது போன்ற தகிடுதத்தங்களின்போது ஓ.கே. ஆனால், படத்தின் எல்லா சூழலிலும் முறைத்த விழிகளும் விறைத்த நடையுமாகவே சினேகன் அலைவதால் இவரது கேரக்டர் குழப்பம், மேலும் இன்வால்வ் ஆக முடியாமல் தடுக்கிறது. ஒன்று ஹீரோவாக இருக்க வேண்டும், இல்லை வில்லனாக இருக்க வேண்டும் இப்படி ரெண்டும் கெட்டான் கேரக்டரில் எதிலும் ஒட்டாமல் படம் பார்ப்பது கஷ்டமாய் இருக்கிறது. இவரும் பாதி நேரம் கூலிங்க்ளாஸ் போட்டு நடித்திருப்பது கொஞ்சம் எரிச்சலாகவே இருக்கிறது. ரூமில் இருக்கும்போதுகூட க்ளாஸ் போட்டு பேசுவது என்பது நடிப்பு வராதவர்களுக்கான ஆப்ஷன் அதை தொடர்வது ஒரு நடிகனுக்கு சரியானதல்ல. சினேகனுக்கு குரல் கொடுத்த சஞ்சீவுக்கு வாழ்த்துகள். அருமையாய் நடித்திருக்கிறார் குரலில்.
மேக்னா நாயுடு கொஞ்சம் நயன்தாரா போல் இருக்கிறார் சிரிக்கும் போது. ஆனால், சீட்டிங் என்று தெரிந்தும் ஹீரோவை லவ்வும் வழக்கமான லூசுப் பெண் கேரக்டருக்குள் சிக்கிச் சின்னாபின்னமாகிறார். இன்னொரு கதாநாயகி அக்ஷரா ஆங்காங்கே எக்ஸ்போஸ் செய்கிறார். வில்லனாக நடித்திருக்கிறார் ஜெயப்பிரகாஷ். எந்த கேரக்டரையும் அல்வா சாப்பிடுற மாதிரி பண்றவராச்சே.... இந்தப் படமும் அதற்கு விதிவிலக்கல்ல. பாஸ்கி, தீபக், ரமேஷ்கண்ணா எல்லோருமே கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தியிருக்கிறார்கள். படத்தின் தயாரிப்பாளர் சந்திரசேகரும் சில காட்சிகள் வந்து போகிறார். வில்லியாக நடித்திருக்கும் அக்ஷயாவும் ரசிகர்களை கவருகிறார்.
இம்மாதிரியான கதைகளில் ஒரு கேட் அண்ட் மவுஸ் கேம் இருந்தால்தான் சுவாரஸ்யம் மிகும். ஆனால் இயக்குநர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. சினேகனின் புத்திசாலித்தனத்தை அவ்வளவு டீடெயிலாக காதல் காட்சிகளில் காட்டியவர். வசீகரனின் தொழிலை எப்படி புத்திசாலித்தனமாய் விரிவுபடுத்தினார் என்பதை காட்டவில்லை.
எதற்காக சினேகன், வசீகரனின் ஹோட்டலுக்கு வந்து சரி செய்ய வேண்டும்?. அவருக்கும் வசீகரனுக்கு எந்த விதத்தில் நட்பு?. எதற்காக அவர் வசீகரனுக்கு நேர்மையாக இருக்க வேண்டும்?. வசீகரனுக்கும் நடிகைக்குமான காதல்?. ஜெயபிரககுக்கும் வசீகரனுக்கும் வெறும் தேர்தலில் நின்றதினால்தான் ரைவலரியா? அது போதாமல் இருக்கிறது. தீடீரென வரும் ஒலக பிஸினெஸ்மேன் சந்திரசேகர் கேரக்டர் எதற்கு?. அந்த மலேசிய அரண்மனையை வாங்கி கொடுத்துவிட்டால் வசீகரனின் கனவு முடிந்துவிடுமா?. சினேகன் ஏன் சந்திரசேகருடன் போக வேண்டும். இப்படி பல கேள்விகள் துரத்துகிறது.
மேக்னா வில்லன்களிடம் மாட்டிக்கொள்வதும் அவர்களிடமிருந்து சினேகன் மேக்னாவைக் காப்பாற்றுவதும் விறுவிறு காட்சிகள். கேமராவை ஹோட்டல் ரூமிற்குள் வைத்துவிட்டு காரில் போகும் பெண்ணை காரில் சினேகன் துரத்திச் செல்லும் காட்சி ரசிகர்களை சீட்டின் நுனிக்கே வர வைத்திருக்க வேண்டும். அந்த அளவுக்கு கார் சேசிங்கை பிரமிக்கிற மாதிரியாக படம் பிடித்திருக்கிறார்கள். ஆனால் என்ன பண்றது. அந்த காட்சி ரொம்ப ரொம்ப நீளமாக இருப்பதால் எவ்வளவு நேரம்தான் அதை ரசிப்பது.
வசீகரன்-நடிகையின் படுக்கையறை கேசட்டை ஜெயப்பிரகாஷ் பத்திரிகை செய்தியாக்குவது திருப்பம். அதை சாக்காக வைத்து வசீகரன் தற்கொலை செய்து கொள்வதுபோல் சினேகன் தூக்கில் தொங்க வைப்பது சீட் நுனிக்கு இழுக்கும் பர பர... 'டோலு டோலு...' பாடல் தாளம் போட வைக்கிறது. மேக்னாவும், சினேகனும் சேர்ந்து பாடும் அந்த டூயட் பாடலும் ரசிக்க வைக்கிற ரகம். ஸ்டார் ஓட்டலில் ஒரு கானா பாடலை படம் பிடித்திருக்கிறார்கள். டி.சங்கரின் ஒளிப்பதிவில் கார் டைரடிங் காட்சிகளும், மலேசிய தாஜ்மஹால் காட்சிகளும் பிரமாண்டம். ராதாகிருஷ்ணனின் வசனங்கள் ஆங்காங்கே நச்சென இருக்கிறது. முக்கியமாய் காதலைப் பற்றி பேசும் வசனங்கள். கொஞ்சம் தர்க்கம் செய்யும் காட்சிகளிலும்.
நன்றி விடுப்பு
No comments:
Post a Comment