1991 ஆகஸ்ட்டு 30 : கவிஞர் செல்வியின் நினைவில் : ஏழு கவிதைகள் -



20 வருடங்களின் பின்.....1991 ஆகஸ்ட்டு 30 : கவிஞர் செல்வியின் நினைவில் : ஏழு கவிதைகள் -

1991ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30ம் திகதி யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு அருகில் தான் தங்கியிருந்த வீட்டிலிருந்து கவிஞர் செல்வி விடுதலைப் புலிகளால் கைது செய்யப்பட்டார். செல்வியின் இருப்பிடத்திலிருந்து செல்வியின் கையெழுத்துப் பிரதிகள் குறிப்புக்கள் கடிதங்கள் புத்தகங்கள் அனைத்துமே அவர்களால் எடுத்துச் செல்லப்பட்டது. விடுதலைப் புலிகள் உள்ளிட்ட சில இயக்கங்களின் மனித உரிமை மீறலை விமர்சிக்கின்ற நாடகமொன்றை அரங்கேற்றத் தயராகிக் கொண்டிருக்கையிலேயே அவர் கடத்தப்பட்டதாக நம்பப்படுகிறது. செல்வி தமது படைப்புகளுக்கூடாக பெண் விடுதலை கருத்துக்களை பரப்பியவர். பூரணி பெண்கள் இல்லத்தின் செயல்பாட்டாளர்களில் ஒருவராகவும் முக்கியப் பங்கினை வகித்தார் செல்வி. 1993 டிசம்பரில் வெளியான கொழும்பு சரிநிகர் பத்திரிகையில் விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தின் பேட்டியில் செல்வி தமது தடுப்புக் கைதியாகவே இருப்பதாக ஒப்புக் கொண்டிருந்தார். செல்வியின் விடுதலைக்காக பல சர்வதேச நாடுகள் குரல் கொடுத்து வந்தன. சர்வதேச மன்னிப்புச் சபை உள்ளிட்ட பல மனித உரிமை நிறுவனங்களும் அவரது விடுதலையைக் கோரியிருந்தன. பிற்பாடு செல்வி கொல்லப்பட்டதனை இலண்டன் அம்னஸ்டி இன்டர்நேஷனல் செவிவழிச் செய்தியொன்றில் உறுதிப்படுத்தியது. தேசத்தை நேசித்தது தான் செல்வி செய்த குற்றம். மனிதத்தைக் கோரிய அவரது அர்ப்பணிப்பு தான் அவர் செய்த குற்றம். அவரது கவிதைகள் யுத்தத்தினால் நலிவுற்ற பெண்கள் பற்றியதும் யுத்தம் பற்றியதுமான சித்திரங்களையே வெளிப்படுத்தியது. அவர் கைது செய்யப்பட்ட 20 ஆண்டுகளின் நினைவில் உலகின் மிகச் சிறந்த பெண்கவிஞர்களின் தொகுப்பு ஒன்றினை வாசகர்கள் முன்பு வைக்கிறோம்.


ஓலம்
எவ்ஜனியா மரியா பிரேவோ
சிலி

இன்னுமோர் அலறல் கிழிக்கிறது இரவை
இரத்தம் வடிய வானில் தொங்கும் ஒரு செந்நாக்கு
அந்தகாரத்தில் மங்கலாய்க் கண்சிமிட்டும்
கொடிய நட்சத்திரங்களின் கூட்டம்
மனித ஓலத்தைச் சுமந்து செல்லும் காற்று
ஒரு கொடுங்கனவின் நடையாய்
உடனே மற்றுமோர் அலறல்
காயம்பட்ட விலங்குகளின் ஊளை
வாழ்வை வசைபாடிச் செல்லும்

இன்னும் இருந்து கொண்டிருக்கும் அனைத்தையும்
இவ்வுலகின் இரவனைத்தையும்
குரூரம் கொண்டு நிரப்பியபடி
எதிரொலிக்கும் அலறல்கள்
பின்
இருக்குமனைத்தும் அதிர்ந்தாடும்
ஊழியாட்டம்!

செந்நாக்கின் கீழ்
தொங்கும் குடல்களின் கீழ்
உதிரம் கொட்டும் வானில் உடல்கள் தொங்க
பிரமாண்டமான கொலைக்கூடமாய்

இது உலகின் அழிவு

இந்த இடத்தில்தான்
சிலியின் நட்சத்திரத்தைத்
தங்கள் சீருடையில் பதித்திருக்கின்றனர்
சித்திரவதை புரிவோர்
இங்கே அவர்கள் நிர்வகிப்பது வதையும் சாவும்

சாகத் தயாராய் இருக்க வேண்டும் என்று
எனக்குச் சொல்லவும் செய்கிறார்கள்
வதைபடும் குழந்தைகளின் தொலைதூர வீறல்கள்
இது உலகின் முடிவென்று எனக்கு அறிவிக்கின்றன

கொடுநோயால் பீடிக்கப்பட்டவளைப் போல
மரணவாசலில் நிற்பவளைப் போல
அனைத்தையும் இழந்துவிட்டதை உணர்கிறேன்
இறுதி நம்பிக்கை என்றிருக்கும் அனைத்தையும்
எல்லா நம்பிக்கையும் இழந்து
தட்டுத் தடுமாறி
நீளுகின்றன என் கரங்கள்
கடவுளின் ஒரு விரலைப் பற்றிக்கொள்ள
ஏதாவதொன்றைப் பிடிகொள்ள
அவனுடைய ஏதாவதொரு சிறு துணுக்கை
அல்லது நிழலையாவது பற்றிக்கொள்ள

ஏதும் கிட்டவில்லை
என்னருகே எரிந்து கிடக்கும் சாம்பற்குவியலாய்
என் ஆன்மா
எவ்வளவு முடியுமோ அவ்வளவு திரட்டி எடுக்கிறேன்
உண்மையாகவே இறந்து கொண்டிருப்பவளைப் போல
அதை அணிந்து கொள்கிறேன்
அடுத்த நாளின் அடுத்த வதைக்குத் தயாராக

நான் ஒரு பெண்
ஜூமானா ஹத்தாத்
லெபனான்

எவரும் ஊகிக்க முடியாது
நான் மௌனமாய் இருக்கையில் என்ன பேசுவேன் என்று
கண்மூடி இருக்கையில் எவரைக் காண்பேன் என்று
உணர்ச்சிவசப்படுகையில் எப்படி உணர்ச்சிவசப்படுவேன் என்று
கைகளை நீட்டுகையில் என்ன தேடுகிறேன் என்று

எவரும் அறிய மாட்டார்
நான் எப்போது பேசிகொள்வேன்
எப்போது பயணங்கொள்வேன்
எப்போது நடப்பேன்
எப்போது மறைந்து போவேன்
எவருமே அறிய மாட்டார்

எவரும் அறிய மாட்டார்
எனது செல்கை ஒரு மறுவருகை என்று
எனது மறுவருகை ஒரு தவிர்ப்பு என்று
என் பலவீனம் ஒரு முகமூடி என்று
என் பலம் ஒரு முகமூடி என்று
வந்து கொண்டிருப்பது ஒரு புயல் என்று

அவர்கள் நினைக்கிறார்கள் தங்களுக்குத் தெரியுமென்று
அப்படியே அவர்கள் நினைத்துக்கொள்ள விடுகிறேன்
நானோ நிகழ்ந்து கொள்கிறேன்

என்னை ஒரு கூண்டில் அடைக்கிறார்கள்
என்னுடைய சுதந்திரம் என்பது
எனக்கு அவர்கள் அளிக்கும் பரிசாக இருக்கும்படி
நான் அவர்களுக்கு நன்றிக்கடன்பட்டவளாக
பணிந்தவளாக இருக்கும்படி

ஆனால் நான் அவர்களுக்கு முன்பே சுதந்திரமானவள்
அவர்களுக்குப் பின்பும்
அவர்கள் உடனிருக்கவும்
அவர்கள் உடனில்லாமலும்

எனது கீழடக்கத்தில் நான் சுதந்திரமானவள்
எனது தோல்வியில் நான் சுதந்திரமானவள்
என் சிறையே நான் விரும்புவது!
சிறைச்சாவி வேண்டுமானால் அவர்களுடைய நாக்காய் இருக்கலாம்
ஆனால் என் காமத்தின் விரல்களில்
திருகுண்டு கிடக்கிறது அவர்களின் நாக்கு
என் காமத்தையோ அவர்களால் என்றும் ஆட்டுவிக்க முடியாது

நான் ஒரு பெண்
அவர்கள் நினைக்கிறார்கள்
என் சுதந்திரத்துக்கு அவர்களே எஜமானர்கள் என்று
அப்படியே அவர்கள் நினைத்துக்கொள்ள விடுகிறேன்
நானோ நிகழ்ந்து கொள்கிறேன்

தலிபான்களுடன் நேருக்கு நேர் ஒரு உரையாடல்
கிஸ்வர் நஹீத்
பாகிஸ்தான்

சிறுமிகளைப் பார்த்துக் கூட அச்சப்படுபவர்கள்
அறிவைக் கண்டு அசூசைப்படுபவர்கள்
அறிவை ஆளுகை செய்கிற
எல்லாம் வல்ல இறைவனைப் பற்றிப்; பேசுகிறார்கள்
அவரது கட்டளைகளுக்குச் சம்பந்தமில்லாமல்
இந்தப் பிரகடனங்களை அவர்கள் வெளியிடுகிறார்கள்:

எந்தக் கைகளிலும் எந்தவொரு புத்தகமும்; இருக்கக் கூடாது
விரல்களுக்கிடையில் பேனா இருக்கக் கூடாது
பெயரை எழுதுவதற்கென ஒரு இடமும்
விட்டுவைக்கப்பட்டிருக்கக் கூடாது
பெண்கள் பெயரிலிகள்

சிறுமிகளைக் கூடப் பார்த்து அச்சப்படுபவர்கள்
எல்லா நகரங்களிலும் அறிவிக்கிறார்கள்:
சிறுமிகளின் முகிழ்க்கும் குறுமார்புகளை முக்காடிட்டு மூடவேண்டும்
கேள்வி கேட்கும் ஒவ்வொரு இதயத்துக்கும்
இந்தப் பதிலைச் சொல்லுங்கள் -
இந்தச் சிறுமிகள் சிட்டுக்கள் போலப் பறந்து திரிய அவசியமில்லை
ஏந்தப் பள்ளிக் கூடத்திற்கோ அல்லது அலுவலகங்களுக்கோ
இந்தச் சிறுமிகள் போகவேண்டிய அவசியமுமில்லை
ஜொலிக்கும் அழகென எவரையும் கண்டால்
அவளது இருப்பிடம் சுவர்களுக்கு உள்ளே தான்
இதுதான் சட்டம்
இது எழுதப்பட்டிருக்கிறது

சிறுமிகளைக் கண்டால் கூட அச்சம் கொள்கிறவர்கள்,
இங்கே இருக்கிறார்கள், எங்கோ நமக்குப் பக்கத்தில்,
அவர்களை உணருங்கள், அவர்களைத் தெரிந்து கொள்ளுங்கள்,
அவர்களிடமிருந்து எதனையும் எதிர்பார்த்திருங்கள்
இந்த வீழ்ந்துபட்ட நகரத்தில்
தைரியமாயிருங்கள், சிறுமிகளைக் கண்டால் கூட அச்சப்படும் இவர்கள்
என்ன மாதிரியிலான குள்ளமனிதர்கள் இவர்கள்
எல்லா நகரங்களிலும் அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள்
தைரியமாயிருங்கள், இதை நம்புங்கள்
சிறுமிகளைக் கண்டால் கூட அச்சம் கொள்ளும் இவர்கள்
படுகேவலமான குள்ளமனிதர்கள்;

உலகம் அழியத் தொடங்கும்போது
ஒருவரால் என்னதான் எழுத இயலும்?
சுஜாதா பட்
ஜெர்மனி

பூமி எழுந்து நின்று தன்னை
ஒரு பெண்ணாக மாற்றிக் கொள்ளுமானால் -
இமாலயத்தின் அடிவாரத்தில்
வேத காலத்தில் அவள் தேடிச் சென்ற அந்தப் புராதன
நாட்கள் போல்
அது மிகச் சுலபமாக ஆகிவிடும்

அங்கே நின்றிருந்து அவள் சிவனிடம்
சொல்லலாம்,
‘எனது தலை நாளெல்லாம் வலிக்கிறது’
அவள் விசும்பலாம்,
‘எனது வயிறு எரிகிறது. இவர்களின்
கத்திகள் துப்பாக்கிகள்
ஏவுகணைகள், செயற்கைக் கோள்கள்
மைக்ரோபோன்கள்
ரேடியோக்கள்...
இப்படியே நான் தாங்கிக் கொண்டு போக முடியாது
நீ ஏதேனும் செய்ய வேண்டிய நேரம்
வந்து விட்டது’

சிவன் உடனே புருவம் நெறித்து
இந்த முறை அவன் தலையில் ஏழுதலை நாகம்
அவை படமெடுக்கும்
ஏழு தலைகளும் சீறி எழுந்தாடும்
மிகப் பெரிய கோபமான தனது படத்தை எடுத்துச் சீறும்
சிவன் ஆணையிட
ஏழுதலை நாகம் மிகச் சரியான திசையில் தாக்கி
இந்தப் படைகளை
அழிந்துபோகச் செய்துவிடும்
நிரந்தர அமைதி வந்துவிடும்
இது மிகமிகச் சுலபமாகும்

உலகம் அழியத் தொடங்கும்போது ஒருவர்
என்னதான் செய்ய முடியும்?
எங்கேதான் ஒருவர் தப்பிப் போக முடியும்?
எவ்வௌற்றை ஒருவர்
தன்னுடன் எடுத்துப் போக முடியும்?
நாளை யார் நம் புத்தகங்களைப் படிப்பார்கள்?
நமது இசையை
எவர் கேட்பர்?
கிதாருக்கு வயலினுக்கு யார்
சுருதி கூட்டுவார்?
நான் கேட்பதென்னவென்றால் என்ன
ஜீவராசி அது?

நானும் என்னளவில்
ஒரு சேமித்த கனவை காலை நேரத்துக்குப் பின்
கொண்டிருப்பேன்
கண்ணாடி முகமூடிகளும் பிளாஸ்டிக் உடல்
பைகளும் சிதறிக் கிடக்கும்
பூமியை நான் பார்ப்பேன்
எலும்புகள் காற்றில் ஒன்றுடன் ஒன்று மோதும்
சப்தம் கேட்பேன்

ஆமாம், சில பல்லிகள் தப்பிப் பிழைக்கலாம்
சில பாம்புகள்
கற்களினிடையில் இருந்து அவை படமெடுத்து ஆடி
சீறுவதைப் பார்ப்பேன்

ஒரு பல்லியின் வால் அசைந்து
ஒரு வாயு முகமூடியின் கண்குழியிலிருந்து
நடனமிடும்

ஒரு பாம்பின் வெட்டுண்ட நாக்கு
வெளிவந்து உள்போய்
மறுபடி வெளியே ஊர்ந்து
பிளாஸ்டிக்கின் ருசியை நாக்கில் தொட்டும்
தடவிக் கொண்டிருக்கும்...

பயங்கரம்
தஸ்லீமா
பங்களாதேஷ்

நிமிர்ந்த கூர்மையான துப்பாக்கிகளுடன்
படையினர் எங்கெங்கிலும் சூழந்திருக்கிறார்கள்
அவர்களுக்கு மத்தியில் நான்
பாதுகாப்பற்றவளாக அமர்ந்திருக்கிறேன்
படையினருக்கு என்னை யாரெனத் தெரியாது
அவ்வப்போது விநோதமான பார்வையில் அவர்கள் என்னை வெறித்துப் பார்ப்பார்கள்

நான் ஏன் திடுமென்று இங்கே வந்திருக்கிறேன்
என அவர்களுக்குத் தெரியாது
அழுக்கான உடம்புடன்
பழுப்பேறிய உடுப்புகளுடன்
கலைந்து வாரப்படாத தலையுடன்
என் மீது விலங்குகள் பூட்டப்படவில்லை எனினும்
வேறெங்கோ அது இப்போதும் இருந்தாலும்
அவர்களால் அதனை உணரமுடியும்
அவர்களால் அதனை அறியமுடியும்
நான் விரும்பினாலும் கூட எந்தப் பக்கம் நோக்கியும்
ஒரு காலடியும்; வைக்க என்னால் முடியவில்லை

அவர்களது விழிகளில்;
அச்சந்தருகிற  கவனிப்பு இருப்பதை நான் காண்கிறேன்
துப்பாக்கிகள் பயங்கரத்தைக் கொண்டு தருவன
என்பதை அவர்கள் அறிவார்கள்
துப்பாக்கியின் பின்பகுதி
அவர்களது காலணிகள் என அவைகளும்
பயங்கரத்தைக் கொண்டு தருபன என்பதை
அவர்கள் அறிவார்கள்
பயங்கரத்தை அவர்கள் ஏவுவார்களானல்
இவைகள் கொடுமையாகக் காயப்படுத்தும்
என்பதனையும் அவர்கள் அறிவார்கள்
எவரையும் காயப்படுத்துகிற சட்டபூர்வமான உரிமை
எனக்கு இல்லை

இவளைப் பீதியூட்ட முடியவில்லை என
தமது மேலதிகாரிகளுக்கு இவர்கள் அறிவிப்பார்கள் --

தொடர்ந்து தனது விலங்குகளால்
இடைவெளியில்லாதபடி ஒலியெழுப்பியபடி இருக்கிறாள் இவள்
எனச் சொல்வார்கள்
மேலதிகாரிகள் இவளைத் தூக்கிலிடுங்கள்
என ஆணையிடுவார்கள்;
தூக்கிடுவதற்கான நாளும் நேரமும்  குறித்த பிறகு
ஹில்ஸா மீனும் இறால் மீனும் கொண்ட சமையலை
அவர்கள் எனக்குத் தருவார்கள்

நான் சாப்பிட மாட்டேன் என மறுத்தால்
தூக்குக் கயிற்றின் முன் நான்
எனது மனத்துயரை காண்பிக்காது விட்டால்
சுருக்கக் கயிற்றை என் கழுத்தில் இறுக்கினால் கூட
என்னைப் பீதியூட்டமுடியாது எனும் துணிவை
நான் கொண்டிருந்தால்

இவளைப் பீதியூட்ட முடியவில்லை என
தமது மேலதிகாரிகளுக்கு இவர்கள் அறிவிப்பார்கள்

சித்திரவதைகள்
விஸ்லாவா சிம்போரஸ்க்கா
போலந்து

எதுவும் மாறிவிடவில்லை
உடல்
வேதனைகளின் கிடங்கு இன்றும்
உண்ணவும் சுவாசிக்கவும் தூங்கவும்
வேண்டும் அதற்கு
மெலிதான சருமம்
அதன் கீழோடும் குருதி
நியமமான வரிசைப்பற்களும்
விரல் நகங்களும் அதற்குண்டு
அதன் எலும்புகளை உடைக்கலாம் நீட்டலாம்

சித்திரவதைகளில்
இதுவெல்லாம் கவனத்தில் கொள்ளப்படும்

எதுவும் மாறிவிடவில்லை
முன்னெப்போதும் நடுங்கியதைப் போலவே         
உடல் இன்றும் நடுங்குகிறது
ரோம சாம்ராஜ்யம் நிறுவப்படும் முன்னும் அதற்கு பின்னும்
இருபதாம் நூற்றாண்டில்
கிறிஸ்துவுக்கு முன்னும் பின்னும்
சித்திரவதையைப் பொறுத்து
அது இருந்த மாதிரியேதான் இருக்கிறது
பூமிதான் சுருங்கிப் போய்விட்டது

நடக்கிற எல்லாமும்
பக்கத்து அறையில் நடக்கிற மாதிரி
கேட்கிறது

எதுவும் மாறிவிடவில்லை
அதிகப்படியான மனிதர்கள் என்பதைத் தவிரவும்

பழையவற்றுக்கு அருகே
புதிய வகையிலான ஒடுக்குமுறைகள்
எழுந்திருக்கின்றன
ஸ்தூலமானதாக இன்னும் நம்பத்தக்கதாகத்               
தற்காலிகம் என்று சொல்லிக்கொண்டு
இல்லவே இல்லையென மறுத்துக் கொண்டு
இவற்றுக்கெல்லாம் பதில் சொல்லத்தக்கதான
உடலின் கதறல் மட்டும்
இருந்து கொண்டேயிருக்கிறது

பழிபாவமற்ற எளியோரின் கதறலாக அது ஆகியிருக்கிறது

அதே பழைய அளவுகோல்கள்
அதே வேகம்
எதுவும் மாறிவிடவில்லை
மனிதனின் சைகைகள் கொண்டாட்டங்கள்
நடனங்கள் மாறியதைத் தவிரவும்

முகத்தை மறைக்கும் கைகுலுக்கல்கள்
மாறாமல்
அதே மாதிரித்தான் இருக்கிறது
உடல் அதிர்கிறது
பதைபதைக்கிறது
வேதனையின் வலிப்பில் வெட்டிக் கொள்கிறது
நெட்டித் தள்ளும் போது
தரையில் வீழ்கிறது
நசிகிறது, உப்புகிறது, கோணலாகிறது,
இரத்தம் பீய்ச்சுகிறது

எதுவும் மாறிவிடவில்லை
நதிகளின் ஓட்டம்
காடுகளின் தோற்றம்
கடற்கரைகள்
பாலைவனங்கள் பனிச் சறுக்குகள்
மாறியதைத் தவிரவும்

சின்ன ஆன்மாவொன்று அந்நிலப் பரப்புகளில்             
அலைந்து திரிகிறது
மறைந்து போய்த் திரும்பவும் வருகிறது
பக்கம் வந்து தூர விலகிப் போகிறது
தனக்கே அன்னியமாகி தப்பிப் போகிறது
சந்தேகமேயில்லாமல்
அதன் இருத்தல் குறித்தே நிச்சயமற்று

ஆனால்

உடல் இருக்கிறது
உடல் இருக்கிறது
உடல் இருக்கிறது

அதற்கெனப் போக்கிடம் வேறேதும் இல்லை

அர்த்தமற்ற நாள்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்
செல்வி
இலங்கை

அர்த்தமற்ற நாள்களில்
வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்
அவலத்திலும் அச்சத்திலும்
உறைந்து போன நாள்கள்..
காலைப் பொழுதுகளில்
பனியில் குளிக்கும் ரோஜாக்களை விட
பக்கத்தில் இளமொட்டு முகையவிழ்க்கும்
தொட்டாற் சிறுணுங்கியில்
கண்கள் மொய்க்கின்றன
இன்னுமெப்படி களையெடுப்பவன்
இதனைக் காணாது போனான்?
கேள்வியில் கனக்கும் மனது
விரிவுரைக்காய் வகுப்பறைக்குப் போனால்
அவிழ்க்கப்படும் பொய்கள்
விசிறிகளில் தொங்கிச் சுழல்கின்றன
அவை என் மீது விழுந்து விடும் பயத்தில்
அடிக்கடி மேலே பார்த்துக் கொள்கின்றேன்
மின்சாரம் அடிக்கடி நின்று போவதும்
நன்மைக்குத் தான்
செவிப்பறைமென் சவ்வுகள்
கொஞ்சம் ஓய்வெடுக்கின்றன.
திட்டங்களில் புதைந்து போன மூளைகள்
திட்டமிட்டுத் திட்டமிட்டே
களைத்த மூளைகள்
முகில்களில் ஏறியிருந்து சவாரி செய்கின்றன
மூச்சுத் திணறும் இரத்தவாடை பற்றிய
சிந்தனையில்லாதது
நான் களைத்துப் போனேன்
புகை படிந்த முகத்துடன்
வாழும் நாள்கள் இது.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------
கவிதைகள் மொழியாக்கம் : ஆர்பாலகிருஷ்ணன், வி.உதயகுமார் மற்றும் யமுனா ராஜேந்திரன். செல்வியின் கவிதை : செல்வி சிவரமணி கவிதைகள் : தாமரைச் செல்வி பதிப்பகம் சென்னை தமிழ்நாடு. : நன்றி - பா.திருநாவுக்கரசு. 
Nantri:globaltamilnews

No comments: