மரணதண்டனையை மறுப்போம்; மூவுயிரையேனும் காப்போம் - வித்யாசாகர்!

.
மரணம். மரணம். எத்தகு கொடியது மரணமென, மரணம் நிகழ்ந்த வீடுகளே சொல்லும். ஒரு திருடனின் தாயிற்குக் கூட தன் பிள்ளை திருடன் என்பதற்கு முன்னாக தன் மகனாகவே தெரியப் படுகிறான். உதிக்கும் சூரியன் கூட மறுபுறம் இருட்டை அப்பிச் செல்கையில் இருபுறம் சரியென்று இவ்வுலகில் யாருண்டு எனும் கேள்வி எழாத மனிதர்கள் அரிதே.

தவறுகள் எல்லோரிடத்திலும் நிகழ்கிறது. சிலது தவறுகளாக காட்டப் பட்டும் சிலது வெளியில் தெரியாமல் மறைக்கப்பட்டும் போக' எங்கோ யாரோ ஒரு சிலரைமட்டும் குற்றவாளி என்ற பெயரில் தண்டிப்பதென்பது சரிதானா' என்று முற்றிலும் ஆராய இருக்கையில், ஒரு குற்றத்தின் காரணமாக ஒருவரை மட்டும் கொல்லும் பின்னணியில்' நாம் சமூகக்குற்றம் கண்டு தட்டிக்கேட்காத பங்கும், அவனவன் சுயநல காரணத்திற்கென அவனவன் செய்த பங்கிற்கு யாரோ ஒருவன் தண்டிக்கப் படுவதும், முற்றிலும் உயிர்பிக்க முடியாத மனிதன் ஒருவனால் ஒரு உயிர் கண்ணெதிரே வீழ்த்தப் படுவதும் சம்மதிக்கத் தக்கதா?

மரணம் நிகழ்ந்த வீடுகளில், நிலையில் கிடத்தப் பட்ட உயிரற்ற உடலின் உயிர் போகும் நேரத்து வலி ஒவ்வொரு முறை அவரைப் பற்றி எண்ணும் நேரமும் வாழ்வோருக்கு உண்டென்பதை' உறவுகளைப் பிரிந்து அழும் ஒவ்வொரு சொட்டுக் கண்ணீரும் எச்சரித்தே வழிகிறது. மரணம் எங்கு நடந்தாலும் தடுக்கும் மனமொன்று எல்லோருக்கும் வேண்டுமெனும் எண்ணம்' அந்த வலி தெரிந்தோருக்கே வருமென்பது ஞானமல்ல, நாம் புரிந்துக் கொள்ள வேண்டிய ஒன்று.

ஒரு கண்ணைப் பிடுங்கினால் இரு கண்ணைப் பறிப்பதென்பது மிருக குணம், மன்னிப்பதே மனிதரின் மாண்பு. பிறகு, நீ உன் சகோதரனைக் கொன்றவனை சும்மா விடுவாயா' என்று கேட்கலாம். விடமாட்டேன், தண்டிப்பேன், அவன் தவறை அவன் உணருமளவிற்குத் தண்டிப்பேன். ஆயினும், அதை உணர்த்த துடிக்கும்' என் இழப்பின் பெருவலிக்கு என் கோபம் ஒரு ஆயுதமெனில், பின்விளைவுகள் பற்றிய அறிவும், மனிதம் இழக்கா மனசாட்சியும் கூட என் மற்றிரண்டு ஆயுதங்களென்று பக்குவமுறுவேன். எது எப்படியாயினும் மரணம் நிச்சயம் எவரும் எடுத்து எவர்மீதும் வீசி தலை வெட்டும் ஆயுதமோ' அல்லது அத்தனை இலகுவாக கொடுத்துவிடும் இறுதி தீர்ப்போ அல்ல.

தண்டனை என்பது ஒருவரை திருத்தும் வகையில் மட்டுமல்ல அது பிறருக்குப் பாடமாகவும் இருக்கிறது, எனும் வகையில் தவறுசெய்வோர் தண்டிக்கப் படவேண்டியவராகின்றனர். என் மனைவியை ஒருவன் கண்முன் கொன்று விட்டுப் போவானெனில், என் தங்கையை ஒருவன் கொளுத்திவிட்டுச் செல்வானெனில், என் குழந்தையை கத்திமுனையில் வைத்து ஒருவன் மிரட்டுவானெனில் நிச்சயம் நான் அவன் வாயைப் பார்த்துக் கொண்டு நிற்பது கருணை என்று ஆகிவிடாது. தவறு உள்ளோரை தட்டிக் கேட்டே தீரவேண்டும்.

ஆனால் அந்த வரிசையில் எல்லோரின் தண்டனைக்கும் மரணமொன்றே தீர்வென்று நம்மால் உறுதி செய்துவிட இயலாது. எதிரி என்றாலும் மன்னிக்க வேண்டிய மனிதம் பெற்றவர்கள் நாமெல்லோரும். இழந்தால் பெற முடியாத மரணத்தின் முன் நின்று செய்யென்றோ கொல் என்றோ கட்டளையிட எந்த ஒரு பொது மனிதருக்கும் உரிமை இருக்க இயலாது.

அதிலும், இங்கு எல்லோரும் குரலெழுப்பி நிற்பது, நியாயமற்ற ஓர் அநீதிக்கு மரணம் எப்படி பரிசாகும் என்று மட்டுமே எனில், நானும் அவர்களோடு சேர்ந்து இல்லை மரணம் இங்கு சரியான தீர்ப்பல்ல, இது மறுக்கத் தக்கதே என்றே வாதிடுவேன். எக்காலும் தீர விசாரிக்க இயலாத அல்லது தண்டனைக்கு உட்பட்டு பின் திருத்தங்களோடு வாழ முற்படும் ஒரு அப்பாவியை கொல்ல எந்த உரிமையும் எந்த கொம்பனுக்கும் கிடையாது.

அதே நேரம், மிருக குணமுற்று 'பிறருயிரெடுத்து தன் உயிரைக் காத்துக் கொள்ளும், சுயநலவிசமிகள் இருந்தால் அவர்களால் பலர் அழியக் கூடுமெனில், அந்த ஒருவர் வாழத் தக்கவறல்ல தான், அதாவது அவர் மக்கள் மத்தியில் மக்களுக்கு ஊறுவிளைவிக்கும் அளவிற்கு வெளியில் புழங்க ஏற்புடையவரல்ல என்பதே சரியேத் தவிர; பொட்டென யாரைக் கொல்லவோ, தன் அறிவிற்கெட்டிய நீதியென்று சொல்லி' யாரைத் தூக்கிலிடவோ நமக்கு எந்த உரிமையும் இல்லை என்பதே ஆழமான உண்மை.

அப்படி அவன், ஒருவரைக் கொன்றது தவறெனில், அதற்கு பதிலாய் நாம் அவனைக் கொல்வதும் தவறுதான். மரணம் எதற்கும் விடை இல்லை. மரணத்திற்கு; மரணம் பதிலில்லை. மரணத்தை விடுத்து, மரணம்வரை வலுக்கிறது பல தண்டனைகள் என்பது வேறு, சுயமாக நான் பாதிக்கப் பட்டவன் 'அவன் தலை கொய்து வருவேன் என்பது வேறு. அது உணர்வின் அடிப்படையிலானது. பொதுவில், தண்டனை ஒருவனை திருத்தவோ அல்லது அவனை அந்த தவறை மீண்டும் செய்ய விடாமல் தடுக்கவோ அல்லது கட்டுப் படுத்தவோ அவன் தவறு பொருத்து எண்ணம் பொருத்து செய்கை பொருத்து தொடர்காவலில் வைக்க நீதியை வழங்கலாமே யன்றி, உடனே கொன்றுவிடும் அளவிற்கு அல்ல.

ஆனால், அப்படி கொன்றபின், அதே நீதி வேறு சாட்சியங்களோடு மறுக்கப் படுமெனில், அந்த உயிரை உடனே மீட்டுக் கொல்ல இயலாத நாம்' அவனைக் கொல்லவும் தகுதி அற்றவர்களே" என்பதைச் சொல்ல வருகையில்' அந்த கோயம்பத்தூர் மாணவிகளின் பேருந்தைக் கொளுத்தி, உள்ளே துடிக்க துடிக்க அந்தக் குழந்தைகளை எரித்தவனை எண்ணுகையில் கொன்றுபோடு அவனை உடனே என்றே கோபம் வருகிறது.

ஆனால் இங்கு அந்த ஒருவன் மீது மட்டும் வரும் ஒட்டுமொத்தக் கோபம்' எத்தகு சரி என்பது அவரவர் பார்வையையும், அதன் பின்னணிக் காரணங்களையும் பின்னாலிருப்பவர்களையும் பொறுத்தது. பிறகு ஒருவரை மட்டுமே கொள்வதும் சரியாக வழங்கப்பட்ட நீதியில்ல என்ற உண்மை நிதானித்து யோசித்தால் புரிகிறது. தீர்வாக சொன்னால், மரணம் பொதுவில் மிக யோசிக்கத் தக்கது. மிக அலசி ஆராய்ந்து, தீர விசாரித்தப் பின் மட்டுமே ஆம் சரி இல்லை என்று முடிவுகொள்ளத் தக்கது. யாரையும் நம்பி யாரையும் கொல்வதற்கில்லை..

எனவே, தவறு செய்பவர்களை திருந்துமாறு தண்டிக்கலாம், அல்லது தவறை அறவே ஒழிக்குமாறு அவர்களை தடுக்கலாம். கட்டுப்படுத்தலாம். கடுங்காவலில் வைக்கலாம். இன்னொருவன் அதை தொடர்ந்து மீண்டும் செய்யாதவாறு எச்சரிக்கைப் படுத்தலாம், மரணம் ஒன்றைத் தவிர வேறேதேனும் யோசிக்கலாம்!!

அதிலும், நீதிபதி மனைவியை மிரட்டி, குழந்தைகளை கொன்று விடுவேன் என்று சொல்லி, பணம் கொடுத்து வாங்கி, போலிகளை வைத்து வாதாடி, இல்லாத சாட்சிகளை பணம் போட்டு அல்லது சாராயம் ஊற்றி தயார்செய்து, அரசியல் மூக்குநுழைய, செல்வந்தன் காலாட்டி மீசை தடவி வழக்கை சாதகமாக்கிக் கொள்ளவென, இப்படி நீளும் பல ஓட்டைகளை நீதித் துணியினில் வைத்துக் கொண்டு' அதை மரணத்தின் கண்களில் மட்டும் கட்டுவேன் என்று சொன்னால் எங்கோ தவறு நம் எல்லோரிடமுமே இருப்பதாய் தெரியவில்லையா?

நம் அக்காத் தங்கை கொல்லப்பட்டால் கோபம் வராதா என்கிறார்கள், வரும். அதேநேரம் என் அண்ணன்தம்பி நீதி தவறி கொல்லப் பட்டாலும் கோபம் வருமென்பதே யதார்த்தமும் இல்லையா? அதற்காக குற்றவாளிகளின் செயல் சரி என்றோ, அவர்கள் எது செய்தாலும் மன்னிக்கத் தக்கவர்கள் என்றோயெல்லாம் அர்த்தமல்ல. செய்துவிட்டால் மீண்டும் சரி செய்துக் கொள்ளயிலாத மரணத்தை மட்டும் இயன்றவரை கடைசியாக தள்ளிவைப்போம். முயற்சித்தேனும் அதை விட்டொழிப்போம்' என்பதே வேண்டுகோள்.
அடிமைப்பட்டு அடிமைப்பட்டு அடிதாங்காமல் ஒர்தினம் 'உயிரை எடுப்பாயா..டா ம்ம்ம்ம் எடுத்துக் கொள்' என்று மார்பை விரித்துக் காட்டி தன் உயிரையும் தன் மக்களின் விடுதலைக்கென துச்சப் படுத்திக் கொண்ட ஒரு இனம் இன்று உலக கண்களில் தீவிரவாதியாகவும், தன் செயலை தண்டனைக்குரியதாகவும் காட்டிக் கொண்டிருப்பது எத்தனை வருத்தத்திற்குரியது?

அந்த இனத்தின் விடுதலைக்கென நாம் உடன் நின்று ஒட்டுமொத்தமாய் கொடுக்காத ஒற்றைக் குரலால் உயிரிழந்தோர் எண்ணற்றோர். சரிதவறு' நீதி அநீதி அலசுவதற்குள் அத்தனைப் பேரை இழந்துவிட்டோமே, இனி இருப்பவர்களையேனும் மிச்ச மனிதத்தின் ஆதாரத்திற்கேனும் காத்துவிடமாட்டோமா? என்று தவித்திருக்கையில், இருக்கும் கொடுங்கோலன்களுக்கு மத்தியில் இறக்க மறுக்கும் இம்மூவரை இப்படி இத்தனை துரிதநடவடிக்கையாக இத்தனை வருட தண்டனைக்குப் பிறகும் தூக்கிலுட தீர்ப்பளித்துள்ளது நம்மை சிந்திக்கவைக்க வேண்டாமா?

இவர்களை எதன்பொருட்டோ கொன்று தீர்க்க எண்ணுமரசியல் கிருமிகளால் இவர்களுக்குப் பின் நிற்பவர்களையும் நாளை கொண்டுவந்து தூக்கிலிடும் வலிமையுண்டா? லட்சாதிலட்சம் பேரைக் கொன்றவனை ஏனென்றே கேட்க இயலாத அரசிற்கு இந்த மூன்று உயிர் என்ன அத்தனை இளசா? தமிழரெனில் என்ன அத்தனை துச்சமா? ஒரு கொலையை ஒருவர் செய்தால் அது கொலை அதையே பலர் செய்தால் அது போராட்டம் என்று சொல்லி தண்டனையை துண்டு போடும் சட்டத்திற்கு 'ஒரு உயிருக்கு எப்படி இத்தனை உயிர்கள் சமமாயின? அரசியல் சம்மட்டி கையிலிருந்தால் அதைக் கொண்டு யார்தலையில் வேண்டுமாயினும் அடிப்பேன் என்பது அதிகார வர்க்கத்தின் எதிர்க்க வேண்டிய இழிசெயலில்லையா?

தவறை யார் செய்தாலும் தவறெனில், ஈழத்தில் அன்று அத்தனைப் பேரைக் கொன்றதோ அல்லது அதற்கு துணைப் போனதோ மட்டுமெப்படி நீதியாகும்? தனிப்பட்ட ஒருவரின் எந்த ஒரு விருப்புவெருப்பும் இத்தனைக் கோடி மக்களின் தேசத்தை ஆளும் தலைமைக்கு இருக்கவேண்டாத ஒன்றெனில்; வேறென்ன கோபமிருந்துவிடும் என் தமிழ்மக்களின் மேல் இழைக்கப்பட்ட அதர்மத்தை ஏனென்றுக் கூட தட்டிக் கேட்காமைக்கு?

என் தேசம் என்தேசம் என்று உயிரினும் மேலாக இந்தியாவை தலையிலேந்தி நடக்கும் தமிழினத்திற்கு எதிராகவே இயங்கும், 'இந்த அரசியல் கைக்கூலிகளால் உடையும் இந்தியரென்னும் ஒற்றுமையை இனி யார் வந்து மீட்டெடுப்பார்? அத்தகு ஒரு நல்ல தலைவனில்லையே எம் தேசத்திலென்று சிந்திக்கும் முன் யாரிருப்பவர்களை தட்டிக் கேட்பார்?

சுயம் பற்றி மட்டுமே நாம் சிந்தித்து சிந்தித்து மெல்ல மெல்ல இழந்த ஒட்டுமொத்த நம் சுதந்திரத்தின்' சாட்சியே இந்த லட்சாதிலட்ச மக்களின் உயிரிழப்பு' என்பது கண்முன் தெளிவாகும் ஒரு காலகட்டத்தின் கடைசி திருப்பமாய், இந்த தூக்குதண்டனை இனி நம்மால் மாற்றி அமைக்கப் படட்டும் உறவுகளே.., உயிர் எந்த ஒரு விலைக்குமகப் படாத ஒன்று; என்பதைப் புரிந்து மரணதண்டனையை மாற்றியமைப்போம்.

மனிதர்கள் நாம் மனிதம் குறைந்து அலைவதால் தான் நாட்டில் இத்தனை சீர்கேடுகள் நிகழ்கின்றன. அதை முழுதாக மீட்டெடுக்க, மரணத்தை அவரவர் விருப்பிற்கு முடிவுகட்டுமிந்த மூடத்தனத்தை முற்றிலுமாய் மாற்றிக் கொள்வோம். தலையில் இருக்கும் ஒரு முடியை பிடுங்கக் கூட தகுதியற்றோர் நாம் பிறகு, பிறர் உயிரைப் பறிக்கும் எண்ணத்தை கையிலெடுக்க மட்டும் எவ்வழியில் தகுதியுற்றோம்' என்று மீண்டும் மீண்டும் சிந்திப்போம்.

சரி, முடியை பிடுங்கத் தகுதியில்லை, விடுவாய் சரி; ஒரு மனிதனை கொன்றபின் இரண்டாம் மனிதரை கொள்ளட்டுமே என்று விட்டு வைக்கலாமா என்றால்? வேண்டாம் அவன் கைகளை உடனே முறிப்போம், திருந்தும் வரை சிறையில் அடைப்போம், திருந்த இயலாதவனை கடைசி வரை காவலில் இருத்துவோம், உயிரை எடுப்பதை விட்டுவிட்டு கொலையை உறுதியாய் தடுப்போம். உயிர்; யாருடயதாயினும் வலியதே என்று எல்லோருமே உணர்வோம்.

இப்போதைக்கு, கண்முன் உயிர்வாழ மிச்சமிருக்கும் நாளை ஒவ்வொன்றாய் இழந்து, தன் வாழ்வின் கணக்கை வெகு சொற்பமாக எண்ணிக் கொண்டிருக்கும் இம்மூவுயிரையேனும் நம் ஒற்றுமையினால் காப்போம். ஈழத்து விடியலுக்கு இது முதற்புள்ளியென்று உலகெங்கும் முரசொலிப்போம்!!

வித்யாசாகர்

1 comment:

திருநந்தகுமார் said...

நல்ல கருத்துகள். நீதி வழங்கப்பட்டால் மட்டும் போதாது. அது வழங்கப்பட்டதாகக் காட்டப்படவும் வேண்டும். மூவர் தொடர்புடைய வழக்கு விசாரணை ஆரம்பம் முதலே வெளிப்படை இன்றி நடத்தப்பட்டது. உள்நோக்கத்துடன், அப்போதய சட்ட அமைச்சர் இன்னார் தான் செய்துள்ளனர் என்ற அனுமானத்தை மெய்ப்பிப்பதற்காக ஒரு தமிழரை தலைவராகக் கொண்ட விசாரணைக்குழு அமைக்கப்பட்டு நடத்தப்பட்டது. நீதிமன்ற விசாரணைகளும் கூட நான்கு சுவர்களுக்குள் நடத்தப்பட்டது. பல உள்நோக்கங்களைக் கொண்டு, பலரைக் காப்பாற்றும் நோக்கம் கொண்டு நடத்தப்பட்ட நீதி விசாரணையின் முடிவில் மூவரை தூக்கு மேடைக்கு அனுப்புவது நீதியல்ல. தமிழ் நாட்டிலும் டில்லியிலும் அரசியல் பிழைத்தவர்கள் அதிகம் உள்ளனர்.
வித்தியாசாகருக்கு நன்றிகள்.