இலங்கைச் செய்திகள்

*  உயிர்வாழ்வு இல்லாமல நீதியென்று ஒன்றில்லை

*  போர்க் குற்றச்சாட்டு விசாரணைகளில் வெளிப்படைத் தன்மை வேண்டும் அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தல்


*  முல்லைத்தீவு மணலாறில் சிங்களவர்களை குடியேற்றி உதவி அரசாங்க அதிபர் பிரிவை புதிதாக ஏற்படுத்த முயற்சி'

*  கவலைக்குரியதாக விட்ட தமிழ்ச் சமூகத்தின் புரிதலும் அக்கறையும்

     - அரவிந்தன்









உயிர்வாழ்வு இல்லாமல நீதியென்று ஒன்றில்லை
Tuesday, 30 August 2011

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளிகளான இலங்கையைச் சேர்ந்த சாந்தன், முருகன் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த பேரறிவாளன் ஆகியோருக்கு தூக்குத் தண்டனையை இன்னமும் பத்து நாட்களில் நிறைவேற்றுவதற்காக திகதி குறிப்பிடப்பட்டிருக்கும் நிலையில் அத்தண்டனையை இரத்துச் செய்ய வேண்டுமென்று கோரி தமிழகத்தில் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், மனிதச் சங்கிலி என்று போராட்டங்கள் தீவிரமடைந்திருக்கின்றன. காஞ்சிபுரத்தில் நேற்று முன்தினம் யுவதியொருவர் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்ட அதேவேளை, நேற்றைய தினம் தீக்குளித்து தற்கொலை செய்ய முயன்ற மூவரை மதுரையில் பொலிஸார் கைது செய்திருக்கிறார்கள். தமிழகத்தில் அரசியற் கட்சிகள் தூக்குத் தண்டனையை இரத்துச் செய்ய வேண்டுமென்று இந்திய மத்திய அரசாங்கத்துக்கும் மாநில அரசாங்கத்துக்கும் தொடர்ச்சியாகக் கோரிக்கை விடுத்த வண்ணமிருக்கின்றன. தண்டனையை நிறுத்தக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரபல வழக்கறிஞரான "தடா' சந்திரசேகர் தாக்கல் செய்த மனுமீதான விசாரணை இன்று ஆரம்பமாகவிருக்கிறது. இதில் ஆஜராகி வாதிடுவதற்காக இந்தியாவின் மூத்த சட்டவல்லுனர்களில் ஒருவரான ராம் ஜெத்மலானி சென்னை வந்து சேர்ந்திருக்கிறார்.

அதேவேளை, தமிழக சட்ட சபையில் நேற்றைய தினம் இந்த விவகாரம் குறித்து அறிக்கையொன்றை விடுத்த முதலமைச்சர் ஜெயலலிதா கருணை மனுக்களை இந்திய ஜனாதிபதி நிராகரித்த பிறகு தண்டனையை மாற்றுவதற்கான அதிகாரம் மாநிலத்தின் முதலமைச்சர் என்ற வகையில் தனக்கு இல்லை என்று கூறியிருக்கிறார். அத்துடன் மரண தண்டனையைக் குறைப்பதற்கான அதிகாரம் தனக்கு இருப்பதைப் போன்று பிரசாரங்களைச் செய்ய வேண்டாமென்று அரசியற் கட்சிகளுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கும் ஜெயலலிதா முன்னைய தீர்மானத்தை மாற்றிக் கொள்ளுமாறு ஜனாதிபதிக்கு மீண்டும் கருணை மனுவை சம்பந்தப்பட்டவர்கள் அனுப்ப முடியுமென்றும் குறிப்பிட்டிருக்கிறார். ராஜீவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளிகளைத் தண்டிக்கும் விடயத்தில் சட்டம் அதன் கடமையைச் செய்ய அனுமதிக்க வேண்டுமென்று தமிழ் நாடு மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் தங்கபாலு போன்ற அரசியல்வாதிகள் பேசினாலும் கூட, தமிழகத்தில் பொதுவாக தூக்குத்தண்டனையை அந்த மூவருக்கும் நிறைவேற்றக்கூடாது என்ற கருத்தே வலுப்பெற்றிருப்பதை உணரக்கூடியதாக இருக்கிறது.

கருணை மனுவை ஜனாதிபதியாகப் பதவிவகித்த காலம் முழுவதுமே அப்துல் கலாம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளவில்லை. அவர் வழியில் தற்போதைய ஜனாதிபதி பிரதீபா பட்டீலும் அதைக் கிடப்பில் போட்டிருக்கலாம். நாட்டில் எத்தனையோ விவகாரங்கள் முன்னுரிமை பெறக்காத்திருக்கும்போது இந்தக்கருணை மனுவை நிராகரித்ததன் மூலமாக அரசுக்குக் கிடைத்த நன்மைதான் என்ன என்று தமிழகத்தின் முன்னணி நாளேடுகளில் ஒன்றான தினமணி நேற்றைய தினம் அதன் ஆசிரிய தலையங்கத்தில் கேள்வியெழுப்பியிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. இது தமிழகத்தில் பரவலாக நிலவக்கூடிய அபிப்பிராயத்தின் ஒரு பிரதிபலிப்பாக அமைகிறது என்பதில் சந்தேகமில்லை. சென்னையில் இருந்து வெளியாகும் பிரபல ஆங்கிலத் தினசரியான "இந்து' மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டுமென்ற அதன் பல தசாப்தகால நிலைப்பாட்டை கடந்த சனிக்கிழமை தீட்டிய ஆசிரிய தலையங்கத்தில் மீண்டும் வலியுறுத்தியதுடன் ராஜீவ்காந்தி கொலை வழக்கின் குற்றவாளிகளுக்கு வழங்கப்படக்கூடிய பொருத்தமான தண்டனை எந்தவிதமான குறைப்புக்குமே சாத்தியமில்லாத ஆயுட் காலச் சிறைத் தண்டனையே என்று குறிப்பிட்டிருக்கிறது. மரண தண்டனையை எதிர் நோக்கி நிற்பவர்கள் முன்னாள் இந்தியப் பிரதமரின் கொலையுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்று குற்றவாளிகளாகக் காணப்பட்ட காரணத்தினால் இந்த விவகாரம் மிகையான அரசியல் உணர்வேற்றப்பட்ட தொன்றாக விளங்குகின்றது என்பது உண்மையே. ஆனால், அந்த உண்மை உயிர்வாழ்வதற்கு இன்னொருவருக்கு இருக்கின்ற உரிமையைப் பறிப்பதற்குப் பயன்படுத்தப்படக் கூடாது.

மரண தண்டனை உயிர் வாழ்வதற்கான உரிமையை மீறுவதாக இருக்கிறது. தடுப்புக்காவலில் இருப்பவர்களிடம் ஒப்புதல் வாக்கு மூலத்தைப் பெறுவதற்காக சித்திரவதைகள் சர்வசாதாரணமானதாகிவிட்ட இன்றைய உலகில் நீதித்துறையில் காணப்படக்கூடியதாக இருக்கும் குறைபாடுகளை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது அப்பாவிகள் மரணதண்டனைக்குள்ளாகும் வாய்ப்புகளே அதிகம் என்பது எமது அபிப்பிராயமாகும். உலகில் மரண தண்டனைகள் நிறைவேற்றப்படுவதென்பது மனிதகுலம் கண்டு வருகின்ற மகத்தான முன்னேற்றங்களுக்கு மத்தியில் ஒரு நிலையான பின்னோக்கிய அடியாகவே அமைகிறது. உயிர்வாழ்வு இன்றி நீதியென்று ஒன்றில்லை.
நன்றி தினக்குரல்


போர்க் குற்றச்சாட்டு விசாரணைகளில் வெளிப்படைத் தன்மை வேண்டும் அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தல்
Saturday, 27 August 2011

அவசர கால நிலையை நீக்குவதற்கு இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட முன்நகர்வை சாதகமான முன்னேற்றம் என வர்ணித்துள்ள அமெரிக்கா அதேசமயம், போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை நடவடிக்கைகளை வெளிப்படைத்தன்மையுடனும் பொறுப்புக் கூறும் கடப்பாட்டுடன் ஆரம்பிக்க வேண்டுமென தெரிவித்துள்ளது.

30 வருடங்களுக்கு பின்னர் அவசரகால நிலையை அரசாங்கம் நீக்குவதாக அறிவித்துள்ளது. இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் அவசரகாலச் சட்டம் வாபஸ்பெறப்படுமென அறிவித்திருப்பதை நாங்கள் வரவேற்கிறோம். இது இலங்கை மக்களுக்கு சாதகமான நடவடிக்கையென நாங்கள் பார்க்கிறோம் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் விக்டோரியா நியூலாண்ட் நேற்று முன்தினம் இடம்பெற்ற தினசரி செய்தியாளர் மாநாட்டின் போது குறிப்பிட்டுள்ளார்.

வெளிப்படைத்தன்மை பதிலளிக்கும் நடவடிக்கைகளைக் கொண்டிருக்க வேண்டுமென இலங்கைக்கு நாம் அழைப்புவிடுக்கிறோம் என அவர் கூறியுள்ளார். அடுத்த வாரம் இலங்கைக்கு உதவி வெளிவிவகார அமைச்சர் ரொபேர்ட் பிளேக்கை அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் அனுப்பி வைக்கவுள்ளார்.

ராஜபக்ஷவின் அறிவிப்பானது பிளேக்கின் சிறப்பான விஜயத்திற்கு வழிவகுத்திருக்கிறது. அவர் இலங்கை விஜயத்தின் போது அரசாங்க மற்றும் மனித உரிமைக்குழுக்கள், அரசசார்பற்ற தொண்டர் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடனும் சந்திப்பை மேற்கொள்வார். அரச அதிகாரிகள் சிவில் சமூக பிரதிநிதிகள் பல்கலைக்கழக மாணவர்கள் கொழும்பிலுள்ள அரசியல் தலைவர்கள் ஆகியோரைச் சந்திக்கவுள்ள பிளேக் யாழ்ப்பாணத்திற்கும் செல்வார் என்று நியூலாண்ட் கூறினார்.

சர்வதேச மனிதாபிமான சட்டம், சர்வதேச மனித உரிமைகள் சட்ட கடப்பாடுகள் ஆகியவற்றை இலங்கை அரசாங்கம் எதிர்கொள்ள வேண்டுமென்று நாம் தொடர்ந்தும் வலிறுத்துகின்றோம். தேசிய மட்டத்தில் இவற்றை அவர்கள் செய்யமுடியாது விட்டால் அந்த விடயத்தில் சர்வதேச சமூகம் ஈடுபட வேண்டி ஏற்படும் என்று நாங்கள் தொடர்ந்தும் கூறிவருகிறோம். தனது பயணத்தின் போது இந்த சகல விடயங்கள் குறித்தும் பிளேக் பேசுவார் என்று நியூலாண்ட் குறிப்பிட்டதாக பி.ரி.ஐ செய்திச் சேவை தெரிவித்திருக்கிறது.

நன்றி தினக்குரல்


முல்லைத்தீவு மணலாறில் சிங்களவர்களை குடியேற்றி உதவி அரசாங்க அதிபர் பிரிவை புதிதாக ஏற்படுத்த முயற்சி'
Thursday, 01 September 2011

முல்லைத்தீவு மணலாறு பகுதியில் சிங்கள மக்களைப் பலவந்தமாகக் குடியேற்றி இப்பகுதிகளை உள்ளடக்கிய புதிய உதவி அரசாங்க அதிபர் பிரிவு ஒன்றினை ஏற்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிகின்றது. இந்த நடவடிக்கையை அரசாங்கம் உடனடியாகக் கைவிடவேண்டும் என்று வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஊடகங்களினூடாக அரசாங்கத்திற்குத் தெரிவித்துள்ளார்.


இவ்விடயம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;

வடக்குகிழக்கு தமிழர்களின் பூர்வீக தாயகம் என்பது இதற்கு முன்னர் இந்த நாட்டை ஆட்சிசெய்த பல்வேறு ஆட்சியாளர்களினாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்தியஇலங்கை உடன்படிக்கையிலும் இது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இப்பொழுது அதனை இல்லாதொழிக்கும் வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் சில பகுதிகளில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களைத் தோற்றுவித்து புதிய சிங்கள உதவி அரசாங்க அதிபர் அலுவலகத்தையும் அமைத்து தமிழ் மக்களின் காணிகளைக் கபளீகரம் செய்யும் முயற்சி நடைபெறுகிறது. இது தமிழர்களின் அடையாளத்திற்கு விடப்பட்டிருக்கும் பாரிய சவாலாகும் என்பதுடன் தமிழ் மக்களின் இருப்பிற்கு விடப்பட்டிருக்கும் பாரிய அச்சுறுத்தலுமாகும்.

திம்புப் பேச்சுவார்த்தையிலும் அதனை ஒட்டி ஏற்படுத்தப்பட்ட இந்தியஇலங்கை ஒப்பந்தத்திலும் வடக்குகிழக்கு பிரதேசம் தமிழ் மக்களின் பூர்வீகத் தாயகம் என்பது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் யுத்த வெற்றியின் மாயையில் இலங்கை அரசாங்கம் இனி தமிழர்களுக்கு எதுவும் கொடுக்க வேண்டியதில்லை என்ற எண்ணத்தில் செயற்படுவதாகவே அரசாங்கத்தின் இந்தச் செயலினை நாம் பார்க்க வேண்டியுள்ளது. எமது பகுதியில் முன்னர் இருந்த சிங்கள சகோதரர்களை அரவணைக்க நாம் தயாராக இருக்கிறோம். ஆனால் வேண்டுமென்றே திட்டமிட்டு எமது நிலங்களை அபகரிக்கும் நோக்குடன் புதிதாக சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்வதை அரசாங்கம் கைவிட வேண்டும்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் அமையப்போகும் உதவி அரசாங்க அதிபர் பிரிவிற்கான எல்லையை நிர்ணயம் செய்யும் பணியினை அநுராதபுரம் மாவட்ட அரசாங்க அதிபர் பணிமனை மேற்கொண்டுள்ளதாகத் தெரிகிறது. புதிதாக அமையவிருக்கும் உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்கு வெலிஓயா பிரதேசம் மட்டும் போதாது. எனவே, மேற்கொண்டு சில தமிழ் கிராமங்களும் முல்லைத்தீவின் கரைதுறைப்பற்று உதவி அரசாங்க அதிபர் பிரிவிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு புதிய அலுவலகத்துடன் சேர்க்கப்படவிருப்பதாகத் தெரியவருகிறது. குறிப்பாக கொக்கிளாய் கிழக்கு மேற்கு, கருநாட்டுக்கேணி, கொக்குத்தொடுவாய் கிழக்கு, மேற்கு, மத்தி, வடக்கு, நித்தியாகுளம், குமுளமுனை, முந்திரிகைகுளம், தண்ணீர் முறிப்புகுளம், கடற்கரை எல்லைப் பிரதேசம், தென்னைமரமாவடி, டொலர் பண்ணை, கென்பண்ணை போன்ற பல பூர்வீகக் கிராமங்கள் புதிதாக அமையவுள்ள சிங்கள பிரதேச செயலகத்துடன் இணைக்கப்படவுள்ளது. இது அப்பட்டமான தமிழரின் நில அபகரிப்பு நடவடிக்கையாகும். இனப்பரம்பலில் பெரிய அளவில் மாற்றத்தினை ஏற்படுத்தும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதோ என்ற அச்சத்தை எமது மக்கள் மத்தியில் அரசாங்கத்தின் இச்செயல் தோற்றுவித்துள்ளது.

இதில் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவெனில், வெலிஓயா பிரதேசம் முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைப்பற்று பிரதேசம் செயலகத்துக்குட்பட்ட பகுதியாக இருப்பதினால் இதற்குத் தனியான பிரதேச செயலகம் தேவையற்றது என்பது இங்கு கவனிக்கத்தக்கது. ஏற்கனவே நெடுங்கேணியில் உள்ள மக்களை வெலிஓயாவுடன் இணைந்து கொள்ளுமாறும் அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருவதாகவும் அரசாங்கம் விடுத்த வேண்டுகோளை நெடுங்கேணி மக்கள் நிராகரித்த பின்னர், சிங்கள மக்கள் செறிந்துவாழும் வெலிஓயாவைச் சேர்ந்த ஆறு கிராமசேவையாளர் பிரிவை தனியான உதவி அரசாங்க அதிபர் பிரிவாக மாற்றுவதற்காக தமிழர்களின் மேற்கண்ட கிராமங்களும் பல்லாயிரக்கான ஏக்கர் காணிகளும் அனுராதபுரம் மாவட்ட அரசாங்க அதிபர் பணிமனையினால் எல்லை நிர்ணயம் செய்யப்பட்டு இணைக்கப்படவுள்ளன. புதிய உதவி அரசாங்க அதிபர் பணிமனைக்கான சிங்கள உதவி அரசாங்க அதிபரை நியமித்து பிரதேச அபிவிருத்திக்கான நிதியை தாராளமாக வழங்குவதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதில் இருந்தே சிறிய அளவில் சிங்கள மக்களைக் கொண்டுள்ள புதிய பிரதேச செயலகத்தில் உள்ள தமிழ் மக்களின் காணிகளில் சிங்கள மக்களைக் குடியேற்றுவதேஅரசாங்கத்தின் நோக்கம் என்பது தெளிவாகத் தெரிகின்றது.

நாட்டில் நல்லிணக்கமும் சமாதானமும் அபிவிருத்தியும் ஏற்பட வேண்டுமானால் அவரவர்களின் தனித்துவங்கள் பேணப்பட வேண்டும். இனங்களின் அடையாளங்கள் மதிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி தினக்குரல்


கவலைக்குரியதாக விட்ட தமிழ்ச் சமூகத்தின் புரிதலும் அக்கறையும்

- அரவிந்தன்

வடக்குக் கிழக்கில் இப்பொழுது இரண்டு பிரச்சினைகள் முதன்மையடைந்திருக்கின்றன. ஒன்று மிக அதிகளவானவர்கள் மன அழுத்தத்திற்குள்ளாகியுள்ளனர். இதற்கான பிரதான காரணம், போரின் வடுக்களாகும். போரிலே தங்கள் உறவினர்களை இழந்தவர்கள், உடல் உறுப்புகளை இழந்தவர்கள், பொருளாதர அடிப்படைகளை இழந்தவர்கள், பெருங்காயங்களுக்குட்பட்டவர்கள், தங்கள் உறவினர்கள் (கணவனோ, பிள்ளையோ, சகோதரர்களோ) எங்கே என்று தெரியாத நிலையில் இருப்போர், போரின்போது நடைபெற்ற கொலைக் காட்சிகளைக் கண்டோர், இன்னும் போர் குறித்த அச்சங்களுக்கு உட்பட்டோர்... எனப் பலவகையினர் இதில் அடங்குகின்றனர்.

குறிப்பாகப் பிரிவும் இழப்புகளும் அவற்றின் விளைவுகளால் உருவாகிய தாங்கமுடியாத துயரங்களும் இவர்களுடைய மனதைப் பாதித்திருக்கின்றன என்று இந்தப் பகுதிகளில் கடமையாற்றும் உளவியல் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

அடுத்தது, மிகக் கூடுதலான அளவில் சிறுவர் பாலியற் துஸ்பிரயோகங்கள்.

பதிவு செய்யப்பட்ட முறைப்பாடுகள், வழக்குகள் மற்றும் இந்தப் பகுதிகளில் உள்ள சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளின் தகவல்களின்படி மிகக் கவலையளிக்கும் வகையில் இந்தச் சீர்கேடுகள் நடைபெறுகின்றன. இதில் கூடுதலான பாதிப்பைச் சந்திப்போராகச் சிறுமிகளே உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

போரின் காரணமாகத் தங்கள் பெற்றோரை இழந்த சிறார்கள் உறவினர்களின் பராமரிப்பிலும் பொது மையங்களிலும் இருக்கின்றனர். பொதுவாகவே இவர்களின் மீதான கவனங்கள் குறையும்போது இவர்களின் மீது துஸ்பிரயோகங்கள் அதிகரிக்கின்றன என்று இந்த நன்னடத்தை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த இரண்டு, பிரச்சினைகள் தொடர்பாகவும் மிக விரைவாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுவது அவசியமாகும்.

முதலில் மன அழுத்தங்களுக்கு உட்பட்டோர் தொடர்பாக:

போரொன்று நடைபெற்றால், அது பாரிய அழிவுகளையும் சேதங்களையும் சிதைவுகளையும் ஏற்படுத்தும் என்பது வழமை. இதில் ஈடு செய்யவே முடியாதவை உயிரிழப்புகள். இந்த உயிரிழப்புகளின் வலியை அந்தப் போரினால் பாதிக்கப்படும் சமூகத்தினரே ஏற்க வேண்டியிருக்கிறது. இந்த வகையில் இன்னும் கண்ணீரோடு வாழும் பல ஆயிரக்கணக்கானவர்களை வடக்குக் கிழக்கில் பார்க்க முடியும். இதில் கூடுதலான தாக்கத்துக்குள்ளாகியிருப்பவர்கள் பெண்கள்.

முக்கியமாகத் தாய்மார் தங்கள் பிள்ளைகளுக்காக அழுது கொண்டிருக்கிறார்கள். அடுத்தது, மனைவியர்கள், தங்கள் கணவர்களுக்காக அழுது கொண்டிருக்கின்றனர். அரசியற் கைதிகளாக இருப்போரின் உறவினர்களிற் பலரும் கூட மன அழுத்தத்திற்குள்ளாகியிருக்கின்றனர்.

கீழைத் தேயச் சமூகங்களில் பொதுவாகவே பெண்களுக்கே அதிக நெருக்கடிகள் சமூகநிலையில் ஏற்படுவதுண்டு. போரின்போது இந்த நெருக்கடிகள் மேலும் அவர்களுக்கே அதிகமாகின்றன. அடுத்த தரப்பினரில் அதிகமான மன அழுத்தத்திற்குள்ளாகியிருப்போர் சிறார்கள். போரினால் பெற்றோரை இழந்த சிறுவர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்துக்கும் அதிகமானது. இவர்கள் தாய், தந்தை இருவரையும் இழந்தவர்கள். எனவே, இவர்களுக்கான உளவிற் பாதிப்புகளை ஈடுசெய்ய வேண்டிய பொறுப்பும் மிக அவசியமாக உள்ளது. குறிப்பாகப் பாடசாலை மட்டத்திலேனும்.

இந்த நிலையில், இந்த மன அழுத்தத்திற்கான நெருக்கடிகளைத் தீர்க்கவேண்டிய பணிகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டியிருக்கின்றன.

இந்தப் பணிகள் இரண்டு பிரதான வழிகளில் அமையும்.

1 மன அழுத்தத்திற்குக் காரணமான காரணிகளைக் கண்டறிந்து, அவற்றிற்குத் தீர்வு காணுவது.

இதன்படி, உயரிழப்புகள், சொத்திழப்புகள், வருமான இழப்புகளுக்கான நஷ்ட ஈட்டை வழங்கி, அவர்களுடைய வாழ்வாதார நெருக்கடிகளிலிருந்து அவர்களை மீட்டெடுப்பது.

காணாமற்போன பிள்ளைகளை, கணவரை, சகோதரர்களைக் கண்டறிய வழிசெய்தல். அல்லது அவர்களுக்கு என்ன நடந்தது என்ற தகவலை வழங்குதல். அதாவது, விவரமறிய முடியாத நிலையில் காலம் முழுவதும் தேடியலையும் அவலத்தை முடிவுக்குக் கொண்டு வருதல்.

மேலும் இந்த மாதிரியான நடவடிக்கைகளை அரசாங்கம் அதற்கான அமைப்புகளின் மூலமாகவும் சம்மந்தப்பட்ட திணைக்களங்கள், அமைச்சுகள் மூலமாகவும் இதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதற்கு நாட்டிலுள்ள ஏனைய அரசியற் தலைவர்களும் அரசியற் கட்சிகளும் அரசாங்கத்தை நிர்ப்பந்திக்க வேண்டும். அரசுக்கு வழிகாட்ட வேண்டும். அரசை ஊக்கப்படுத்த வேண்டும்.

இதேவேளை இந்த மன அழுத்தத்துக்குள்ளாகியிருப்போரைத் தனியே மருத்துவர்களால் மட்டும் அவர்களுடைய மன அழுத்தங்களில் இருந்து காப்பாற்றி விட முடியாது. அல்லது அரசாங்கத்தின் உதவி நடவடிக்கைகளால் மட்டும் அவர்களுடைய மனக்கவலைகள் தீர்ந்து விடாது.

அதற்கப்பால், இவர்களைப் பராமரிக்க வேண்டிய பொறுப்பு உளவியல் சார்ந்த செயற்பாட்டாளர்களைச் சேர்ந்ததாக இருக்கிறது.

2. உளவியல் ஆற்றுப்படுத்துகைகளின் மூலமாக மன அழுத்தத்தைக் குறைத்து நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்துதல்.

வடக்குக் கிழக்குப் பகுதிகளில் உளவியல் நடவடிக்கைகள் சார்ந்த அமைப்புகள் சில செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. கிளிநொச்சியிற் கூட அன்னை இல்லம் என்ற ஒரு அமைப்பு முன்னர் செயற்பட்டது.

இவற்றைத் தவிர, சர்வதேசத் தொண்டு நிறுவனங்களிற் சிலவும் இந்த உளவியலை ஆற்றுப்படுத்தும் நடவடிக்கைகளில் செயற்பட்டன. ஆனால், இப்போது போர் நடைபெற்ற பிரதேசங்களில் இந்த அமைப்புகளின் செயற்பாடுகளுக்கு மட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக சில அமைப்புகளின் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர். இதை உறுதிப்படுத்திக் கொள்ள முடியவில்லை.

ஆனால், மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மருத்துவ மனைகளிலும் நடமாடும் நிலையிலும் உளவியலை ஆற்றுப்படுத்தும் நடவடிக்கைகளைச் சில மருத்துவர்கள் செய்து வருகின்றனர். இது பாராட்டப்பட வேண்டியது. நன்றிக்குரியதும் கூட.

மேலும் சில இடங்களில் தெற்கிலிருந்து சில அமைப்புகளைச் சேர்ந்த உளவியல் ஆற்றுப்படுத்துநர்கள் வந்து சில இடங்களில் ஆற்றுகை நிகழ்ச்சிகளைச் செய்து சென்றிருக்கின்றனர்.

இதைத் தவிர்த்து, இன்று ஒருங்கிணைக்கப்பட்ட அளவிலோ முழுமைப்படுத்தப்பட்ட மாதிரியாகவோ, போதியவாறோ தமது செயற்பாடுகளை எந்த உளவளத்துணை அமைப்புகளும் மேற்கொள்ளவில்லை.

ஆனால், உளவியலை ஆற்றுப்படுத்த வேண்டிய தேவைகள் மிக மிக அவசியமாக இருக்கின்றன. இல்லையெனில் மிகவும் அபாயகரமான ஒரு நிலையை இந்தப் பகுதிச் சமூகம் எதிர்கொள்ள நேரிடும்.

போர் நடைபெற்ற பிரதேசங்களில் உள்ள மக்கள் போரினால் பல விதமான பாதிப்புகளைச் சந்தித்திருப்பர். அந்தப் பாதிப்புகளை வகைப்படுத்தி, அவற்றுக்கு நிவாரணமளிக்க வேண்டியதும் அவற்றை நிவர்த்திக்க வேண்டியதும் அரசாங்கத்தினதும் புத்திஜீவிகளினதும் மனித நேய அமைப்புகளினதும் அரசியற் கட்சிகளினதும் பணிகளாகும்.

ஆனால், இந்த நாட்டில் இந்தப் பணிகளை ‘எம்.எஸ். எவ்’ என்ற வரையறைகளற்ற மருத்துவக் குழுவைத்தவிர்ந்த – எந்தத் தரப்பினருமே செய்யவில்லை. அதேவேளை ஒவ்வொருவரும் தாம் செய்யாது விட்டுள்ள இந்த அவசியப் பணிகளுக்கான காரணங்களை மட்டும் மிகத்துணிச்சலாகச் சொல்லி வருகின்றனர். இப்படிச் சொல்வது குறித்து இவர்கள் ஒருபோதுமே வெட்கப்பட்டதாகவோ, தமது மனச்சாட்சியைக்குறித்துக் கவலைப்பட்டதாகவோ இல்லை.

முக்கியமாக வடக்குக் கிழக்குப் பகுதிகளில், அதிலும் போர் நடைபெற்ற பிரதேசங்களில் மக்களுக்கான மனமகிழ் நிகழ்ச்சிகள் நடைபெறுவதே இல்லை எனலாம். கிராமங்களில் சமயம் சார்ந்த கலை நிகழ்ச்சிகள், சடங்குகள், விழாக்களைத் தவிர்த்து வேறு எந்த ஆற்றுப்படுத்துகை அரங்குகளும் நடக்கவில்லை.

ஆனால், வடக்குக் கிழக்கில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமும் கிழக்குப் பல்கலைக்கழகமும் நாடகமும் அரங்கியலும் மற்றும் நுண்கலைகள் சார்ந்த பிற கலை வெளிப்பாடுகளுக்குமான கற்கைகளைக் கொண்டியங்குகின்றன. இந்தத் துறைகளில் ஆண்டு தோறும் பலர் கற்கையை முடித்து வெளியேறுகின்றனர். இந்தக் கற்கைகளை முடித்தவர்களில் ஒரு தொகுதியினர் கடந்த காலங்களில் சர்வதேச தொண்டு நிறுவனங்களுக்காக நிகழ்ச்சித்தயாரிப்புகளில் ஈடுபட்டும் இருக்கின்றனர்.

இப்படியெல்லாம் இருந்தும் இந்தப் பல்கலைக் கழகங்களாயினும் சரி, இங்கே இந்தக் குறிப்பிட்ட துறைகளில் கற்கைகளை முடித்தவர்களானும் சரி, எவருமே போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கான ஆற்றுகைக் கலைகளை அளிப்பதைப் பற்றியோ, தேவையான ஆற்றுகைக்கலைகளை உருவாக்குவதைப் பற்றியோ சிந்திக்கவேயில்லை. (ஒரு காலம் மண்சுமந்த மேனியர் நாடகத்தை, அன்றைய சமூகத் தேவைக்காக ஆற்றிய கலைஞர்களை- அவர்களுடைய அந்த அர்ப்பணிப்பை, இந்த நேரம் நினைத்துக் கொள்கிறேன்).

குறைந்த பட்சம் தற்போது உருவாகியுள்ள சூழலில் இணைந்து செயற்படக் கூடிய தமிழ், சிங்கள, முஸ்லிம் படைப்பாளர்கள், கலைஞர்கள், கலைக் கற்கையாளர்களை இணைத்துக்கூட இவற்றைச் செய்வதைப் பற்றி யாரும் சிந்திக்கவேயில்லை.

இதில் முக்கியமாகப் பங்காற்றியிருக்க வேண்டியவர்கள் தமிழ்த்தரப்பைச் சேர்ந்த அக்கறையாளர்களே. ஏனெனில் அதிக வலிகளையும் அதிக பாதிப்புகளையும் தமிழ் மக்களே சந்தித்துக் கொண்டிருக்கின்றனர் என்ற காரணத்தினால்.

அரசாங்கமோ இதற்கு மாறாகவே நடந்து கொள்கிறது. அது தனது அரசியல் நிகழ்ச்சிகளுக்காக, தெற்கிலிருந்து இசை நிகழ்ச்சிகளை இறக்குமதி செய்து நடத்துகிறது. இந்த நிகழ்ச்சிகள் ஒரு குறிப்பிட்ட தரப்பினரான இளவயதினரை (இளைஞர்களை) ஈர்க்கின்றது. ஆனால், பாதிக்கப்பட்டோர் இந்த நிகழ்ச்சிகளால் மேலும் பாதிக்கப்படுகிறார்கள். இவர்களுடைய மனநிலைக்கு அப்பால், எரிச்சலூட்டும் வகையில் இந்த நிகழ்ச்சிகளின் பிரமாண்டங்களும் களியூட்டல்களும் அமைகின்றன.

அண்மையில் இது குறித்த உரையாடல் ஒன்றுக்காக சர்வதேச ஊடகமொன்றின் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களுடன் பேசியபோது, போரினால் பாதிக்கப்பட்டோரின் வெளிப்பாடுகள் எப்படியிருக்கின்றன? குறிப்பாக சிறார்களின் வெளிப்பாடுகள் எவ்வாறுள்ளன? என்று அவர்கள் கேட்டனர்.

இதற்கான களத்தைப் பாடசாலைகள் கூட இன்னும் திறக்கவேயில்லை. பாடசாலைகளில், உளத்தை ஆற்றுப்படுத்தக் கூடிய நிகழ்ச்சிகளை நடத்துதல். அடுத்தது, பிள்ளைகளின் ஆக்கத்திறனுக்கு வாய்ப்பளிப்பதன்மூலம் பிள்ளைகளின் மனதில் உள்ள உணர்வுகளுக்கும் மன நெருக்கடிகளுக்கும் ஒரு வடிகாலை ஏற்படுத்திக் கொடுத்தல். இதன் மூலம் மன அழுத்தத்திற்குள்ளாகியிருக்கும் பிள்ளைகளின் நிலைமையை அறியவும் வாய்ப்புண்டு. அத்துடன் அவர்களுக்கும் அதுவொரு ஆறுதலளிக்கும் விசயமா இருக்கும். ஆனால், அப்படியான நிகழ்ச்சிகளுக்கு இடமளிக்கப்படவேயில்லை.

ஆகவே, பொதுவாக வடிகால்கள் இல்லாத நிலையில் உளநெருக்கடிகளின் பாதிப்புக்கு இவர்கள் தொடர்ந்தும் ஆட்பட்டுக்கொண்டேயிருக்கின்றனர்.

உளநெருக்கடி என்னும் மாபெரும் அபாயக்கூற்றைக் குறித்துக்கூட தமிழ்ச் சமூகத்தின் புரிதலும் அக்கறையும் கவலையளிப்பதாகவே உள்ளதா? என்ற கேள்வியே இதுகுறித்து எழுகிறது.

அடுத்த விடயம், சிறுவர் துஸ்பிரயோகம் குறித்தது.

கிளிநொச்சி மாவட்டத்தில் மட்டும் மாதாந்தம் 6 – 7 வரையான முறைப்பாடுகள் சிறுவர் பாலியற் துஸ்பிரயோகம் தொடர்பாக வந்து கொண்டிருக்கின்றன என சிறுவர் நன்னடைத்தைப் பிரிவைச் சேர்ந்த அதிகாரியொருவர் தெரிவிக்கின்றார். எனினும் இதைக் கட்டுப்படுத்தும் வகையில், தாம் விழிப்புணர்வூட்டும் நடவடிக்கைகளைப் பரவலாக நடைமுறைப்படுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவிக்கின்றார்.

எனினும் வருகின்ற முறைப்பாடுகளின் படியும் மருத்துவ மனைத்தகவல்களின் படியும் உறவினர்களாலேயே அதிகமான சிறார்கள் இவ்வாறு துஸ்பிரயோகம் செய்யப்படுகிறார்கள். அதிலும் அதிகமானவர்கள் சிறுமிகள். இவர்கள் தந்தையாலும் மாமன், பெரியப்பா, சித்தப்பா, ஒன்றுவிட்ட அண்ணன்மார், அக்காவின் கணவர் போன்ற நெருங்கிய இரத்த உறவினர்களாலேயே அதிகமாகப் பாதிப்புக்குள்ளாகின்றனர் என இந்த அதிகாரி மேலும் தெரிவிக்கிறார்.

பல சிறுமிகள் சோர்வடைந்திருக்கும்போதும் மயக்கடைந்த நிலையிலும் மருத்துவமனைகளில் சேர்க்கப்படுகிறார்கள். அங்கே இது தொடர்பாக சிகிக்சைக்காக விசாரணை செய்யும் போதும் மருத்துவப் பரிசோதனை செய்யும்போதும்தான் நிலைமை என்னவென்று தெரியவருகிறது.

மருத்துவ மனைக்கு வராத முறையில் நடைபெறும் பாலியற் துஸ்பிரயோகங்கள் நடைபெறும். ஆனால், அதுதொடர்பாக தம்மால் சரியான புள்ளி விவரங்களைத் தரமுடியாது என்றும் அந்த அதிகாரி கூறுகிறார்.

இந்தச் சிறார்களின் எதிர்காலம், அவர்களுடைய பாதுகாப்பு, அவர்களுக்கான சட்ட உரிமைகள், அவர்களுக்கான வசதிகள் போன்றவற்றைச் செய்வதற்கும் கண்காணிப்பதற்கும் உரிய அமைப்புகளும் செயற்றிட்டங்களும் இதுவரை சரியாக மேற்கொள்ளப்படவில்லை.

மாவட்டச் செயலகங்களில் இவற்றுக்கான உத்தியோகத்தர்கள் இருக்கின்றபோதும் அவர்கள் செயற்படுவதற்கான வளங்கள், நிதி, உதவி அமைப்புகள் போன்றவை இல்லாத நிலையில் பெரும்பாலும் பேரளவிலேயே இந்தப் பிரிவுகளும் இருக்கின்றன எனலாம்.

ஆகவே, இந்த இரண்டு முக்கியமான விசயங்களைக் குறித்தும் மிகமிக அவசியமாகவும் அவசரமாகவும் கவனங்களைக் குவிக்க வேண்டிய அவசியம் அரசாங்கத்துக்கும் இந்தச் சமூகங்களுக்கும் பொது அமைப்புகளுக்கும் உண்டென்பதே இங்கே சுட்டிக்காட்டப்படுகின்றது.

நன்றி தேனீ



No comments: