மனதைக் கவரும் மட்டக்களப்பு நாட்டுப்பாடல்கள் -பகுதி 7


.
                                                                      பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா


 பெற்றமனம் நோதல்


காதல் வயப்பட்டுவிட்ட பெண்ணொருத்தியின் நிலைமை, அதனை உணர்ந்துகொண்ட பெற்றோரின் கவலை, அக்கறை, அறிவுரை போன்ற விடயங்கள் சம்பந்தமான சில பாடல்கள் இப்பகுதியில் தொகுத்துத் தரப்படுகின்றன.

வயதுக்கு வந்துவிட்ட பெண்பிள்ளை ஏதாவது தப்புத் தண்டாவுக்கு ஆட்பட்டுவிடக் கூடாதே என்கிற கவலை எல்லாத் தாய்மாருக்கும் இருப்பதுண்டு.  அதிலும் தன்பிள்ளை அழகாகவும் இருந்து விட்டால் அந்தக் கவலை ஒரு பயமாகவே மனதில் நிலைகொண்டிருக்கும். நல்லவன் ஒருவனுடைய கையில் பிடித்துக் கொடுக்கும்வரை அந்தப் பயம் நீடிக்கும்.  கிராமத்தில் வாழ்கின்ற தாய்மாருக்கு இந்தக் கிலி பண்பாட்டின் ஒரு பகுதியாகவே உள்ளது.பெண்பிள்ளை வயதுக்கு வந்துவிட்டால் பெற்றவள் மடியிலே நெருப்பைக் கட்டிக்கொண்டிருப்பது போன்ற நினைவோடும், உணர்வோடும் வாழ்வது கிராமத்து மண்ணுக்கேயுரிய தனிக்குணம். அத்துடன் தன்மகளின் கடைக்கண்பார்வை ஒரு காளைமேல் படுகிறது என்று சந்தேகமும் வந்துவிட்டால் கெடுபிடிதான்.  கைபடாத ரோஜாவாக கல்யாணம் வரை தன் மகள் இருக்கவேண்டும் என்ற கருத்தினை அந்தத் தாய் அறிவுறுத்தும் அழகு இது.

எண்ணங்கவலை புள்ள
எல்லாருக்கும் உள்ளதுதான்
பைய நட கண்டே உன்ர
பால் அமுதம் சிந்திடாமல்

மகளின் மனம் பருவ உணர்ச்சிகளால் அலைபாய்வதை உணர்ந்துகொண்ட தாயானவள் மனதைக் கட்டுப்படு;த்திநடக்கவேண்டும் என்பதை எவ்வளவு நாசூக்காகச் சொல்கிறாள். அத்துடன் தங்கள் குடும்ப நிலையை மகளுக்குக் கூறிப் புத்தி சொல்கிறாள் இப்படி-

தோட்டம் துரவுமில்லை
தொகையான காசுமில்லை
சீதனமாய்க் கொடுத்து - மகளே
சீராக மணம் முடிக்க

எனவேதான் நாம் கவனமாக இருக்கவேண்டும் என்பதை உணர்த்தும் தாய், “கரும்பு கட்டோடிருந்தால் எறும்பு தானேவரும்” என்கிற தோரணையில்,

பட்ட மரத்தில் புள்ள
பழமிருந்து என்னசெய்யும்
இலையிருந்து காத்தடிச்சா - கிளி,
எங்கிருந்தும் தங்கவரும்

என்று கூறுகிறாள்.

வாய்க்காலில் ஓடுகின்ற தண்ணீரை அள்ளி வருவதற்காகக் குடத்தை எடுத்துக் கொண்டு செல்லும் மகளைப் பார்த்து தாயின் அறிவுரை பின்வருமாறு உள்ளது.

தண்ணிக்குப் போ மகளே
தரியாமல் வா மகளே
கன்னங் கரியவனைக்
கண்ணெடுத்தும் பாராதே

தனது மகளில் ஆசைப்பட்டு வட்டமிட்டுத் திரியும் அந்தப் பணக்காரன் தண்ணிக்குப் போகின்ற தன் மகளைக் கண்ணி வைத்துப் பிடித்து விடுவானோ என்கிற பயம் தாய்க்கு.

போறாய் மகளே உனக்குப்
புத்திசொல்லத் தேவையில்ல
ஊரார் மணிக்கோவை
உடைஞ்சுபோனால் வந்திவரும்

இப்படியெல்லாம் சொல்லித் தண்ணீருக்கு அனுப்பிவிட்டுத் தன் வேலைகளில் ஈடுபட்டிருந்த தாய், மகள் வருவதற்குத் தாமதிப்பதை உணர்கிறாள்.  ஆவளுக்கு நெஞ்சில் ஒருவித பயம், நினைவில் பதற்றம்.  சிறிதுநேரத்தில் மகள் வந்து விடுகிறாள்.  ஆனால் மகளின் தோற்றத்திலே சிறிது மாற்றம்.  தாய்க்கு வருகிறது சீற்றம்.  இருந்தாலும் பக்குவமாக விசாரிக்கின்றாள் - என்னவென்று

வார்ந்து முடித்த கொண்டை
மகிழம்ப+க் கமழும் கொண்டை
சீர்குலைந்து வேர்வை சிந்தச்
செய்த கடும் வேலையென்ன

என்று;மில்லாதவாறு இன்று கட்டிய கொண்டை கலைய, காயாம் ப+ மேனி வியர்த்தொழுக மகள் வருகின்ற கோலம் தாய்க்குச் சஞ்சலத்தை ஏற்படுத்தி விடுகிறது.

பொட்டுக்கரைய
பிறைநெற்றி நீர் துளிக்க
கட்டுத் துகில் கலைய
கழுத்துவடம் புரிபுரள
மார்பு பதைத்ததென்ன
மலர்க்கண்கள் சுரப்பதென்ன
சோர்வு கதிப்பதென்ன
சொல்லிடுகா என்மகளே

மகள் எதுவுமே சொல்லவில்லை.  இடுப்பிலிருந்து தண்ணீர்க் குடத்தை இறக்கி வைத்துவிட்டு, தரையைப் பார்த்தபடி தாவிக்குதித்து வீட்டுக்குள் சென்று கதவைப் ப+ட்டிக்கொள்கிறாள்.

கனிந்தும் கனியாத நிலையிலிருந்த மகளின் காதல் விவகாரம் பற்றித் தெரிந்தும் தெரியாதிருந்த தாய் இப்போது ஒரு முடிவுக்கே வந்து விடுகிறாள்.  தடுக்கக்கூடிய கட்டம் தாண்டிவிட்டாலும், தன்மையாக எடுத்துரைத்து வழிக்குக் கொண்டுவர முடியாதா என்றொரு நப்பாசை பெற்றவளுக்கு. அதனால்,

நடுக்கடலில் புன்னைமரம்
நாலுதிக்கும் வேரோடி
பூத்து மலர்ந்ததுபோல் - உன்ர,
புத்தி மங்கிப் போனதென்ன?

வண்டான வண்டிருக்க
வாசமுள்ள வண்டிருக்க
பீயுருட்டி வண்டோட
பேராசை கொண்டதென்ன?

இப்படியும் சொல்லிப் பார்த்து விட்டாள்.  அப்போதும் பயனில்லை.
இனி, கல்யாணம் வரை வீட்டுக் காவலில் வைப்பதைத் தவிர வேறு வழியில்லை என்ற முடிவுக்கு அவள் வந்து விடுகிறாள்.  அதனால், இப்படிக் கட்டளையிடுகிறாள்.

கடப்பக்கடந்து நீ
காலெடுத்து வைச்சயெண்டால்
இடுப்பை முறி;த்து அந்த
இலுப்பையின் கீழ் போட்டிடுவேன்

வாசலைக் கடந்து நீ
வழிகண்டு போனையெண்டால்
வேசிமகளே உன்னை
வெட்டிடுவேன் ரெண்டுதுண்டா

ஆத்திரம் அதிகமாகி விட்டதால் என்ன வார்த்தை சொல்லி ஏசுகிறோம் என்றில்லாமல், தாறுமாறாகப் பேசிவிடுகிறாள் தாய் - தன் மகள் மீது கொண்ட தணியாத அக்கறையால், பாசத்தால்.


No comments: