இலங்கை தமிழ் நாவலாசிரியர்களின் நம்பிக்கை நட்சத்திரம் வீரகேசரி முன்னாள் முகாமையாளர் பாலச்சந்திரன் நினைவுகள் - முருகபூபதி

.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு 11 மணிக்கு (அவுஸ்திரேலியா நேரம்) கனடாவில் வதியும் நண்பர் பிரேம்ஜி ஞானசுந்தரனுடன் தொலைபேசியில் உரையாடியபோதுதான் எமது விPரகேசரி முன்னாள் முகாமையாளர் பாலச்சந்திரன் மறைந்துவிட்டார் என்ற துயரமான செய்தி எனக்குக்கிடைத்தது. உடனடியாகவே. இலங்கையில் அமரரின் தொலைபேசி இலக்கம் பெற்று எனது ஆழ்ந்த அனுதாபங்களை திருமதி ஞானேஸ்வரி பாலச்சந்திரனுக்கு தெரிவித்து அவரது துயரத்தில் பங்குகொண்டேன்.

மறுநாள் சனிக்கிழமை அதிகாலை எழுந்து எனது மின்னஞ்சலில் வீரகேசரியின் முன்னாள் விளம்பர, விநியோக முகாமையாளர் திரு. து. சிவப்பிரகாசம் அவர்களின் அனுதாபச்செய்தியில் அவருடன் நீண்டகாலம் பணியாற்றிய அன்பின் நெருக்கத்தை பார்க்கமுடிந்தது.

யாழ்ப்பாணத்தில் பிரபலமான ஹார்ட்லி கல்லூரியில் தனது ஆரம்பக்கல்வியை பயின்ற பாலச்சந்திரன், அதன்பின்பு கொழும்புக்கு இடம்பெயர்ந்து புனித ஜோசப் கல்லூரியில் உயர்கல்வி கற்று பேராதனைப்பல்கலைக்கழகத்திற்குத்தெரிவானார். பொருளாதார அரசியல் விஞ்ஞான பட்டதாரியான பாலச்சந்திரன் தமது பட்டப்படிப்பை முடித்துக்கொண்டு ஊடகத்துறையில் தொழில் நிமித்தம் இணைந்துகொண்டார். ‘தங்கப்பேனா’ என்று ஓருகாலத்தில் விதந்துபேசப்பட்ட எஸ்மண்ட் விக்கிரமசிங்கா அவர்கள் நிருவாக இயக்குநராக பணியாற்றிய ஏரிக்கரை பத்திரிகை நிருவனத்தில் பாலச்சந்திரனின் பணி தொடர்ந்தது. இன்றைய எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்காவின் தந்தையார்தான் எஸ்மண்ட் விக்கிரமசிங்கா.

1966 இல் வீரகேசரியில் இணைந்துகொண்ட பாலச்சந்திரன் முதலில் அங்கு விநியோக முகாமையாளராகவும் பின்னர் நிருவாக மேலாளராகவும் பணியாற்றி பொது முகாமையாளராக பதவி உயர்வு பெற்றார்.

1970 களில் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் தலைமையில் இடதுசாரிகளும் இணைந்த கூட்டரசாங்கம் பதிவிக்கு வந்த பின்னர் தமிழகத்திலிருந்து இலங்கைக்கு தாராளமாக வந்து குவிந்த தரமற்ற இதழ்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இந்தக்காலகட்;டம் குறித்து இன்றளவும் விமர்சிக்கப்படுகிறது.

ஆனால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட கால கட்டத்தில் விமர்சனங்களுக்குள் ஈடுபட்டு காலத்தை விரையம் செய்யாமல் ஆக்கபூர்வமாக சிந்தித்தவர் பாலச்சந்திரன். மாதம் ஒரு தமிழ் நாவல் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி சுமார் நூறு நாவல்களை வீரகேசரி பிரசுரமாக வெளியிட்டு சாதனை நிகழ்த்தினார். அச்சமயம் இவருக்கு பக்கபலமாக இருந்தவர் வீரகேசரியின் விளம்பர, விநியோக முகாமையாளர் திரு. து. சிவப்பிரகாசம் என்பதையும் இங்கு பதிவுசெய்ய விரும்புகின்றேன்.

இலங்கை தமிழ் எழுத்தாளர்களுக்கு இந்த வீரகேசரி பிரசுரத்திட்டம் வரப்பிரசாதமாகவே அமைந்தது. பல மூத்த மற்றும் இளைய தலைமுறை படைப்பாளிகளின் நாவல்கள் அக்காலப்பகுதியில் வெளியாகி இலங்கையின் பல பாகங்களுக்கும் வாசகர்களைச்சென்றடைந்தது. இலங்கை எழுத்தாளர்களினதும் வாசகர்களினதும் பொற்காலம் என்றும் அக்காலப்பகுதியை வர்ணிக்கலாம்.

இலங்கையின் முன்னணி படைப்பாளிகள் கே. டானியல், தெளிவத்தை ஜோசப், செங்கை ஆழியான், சொக்கன், நா. பாலேஸ்வரி, தெணியான், உட்பட பலரதும் புத்தம் புதிய நாவல்கள் பாலச்சந்திரன் அவர்களின் தீவிர கவனிப்புடனும் அக்கறையுடனும் வெளியாகின.

இதில் முக்கியமான ஒரு தகவலும் சொல்லப்படவேண்டியது. தற்போது டென்மார்க்கில் புலம்பெயர்ந்து வதியும் பாலமனோகரனை எவரேனும் விளிக்கும்போது நிலக்கிளி பலமனோகரன் என்றுதான் அழைப்பார்கள் எழுதுவார்கள். சும்மா பாலமனோகரன் என்றால் யார் என்று கேட்பார்கள். ஆனால் நிலக்கிளி பாலமனோகரன் என்றால் அவர் பிறந்து வாழ்ந்த வன்னியிலிருந்து உலகம் பூராவும் வாழும் இலங்கைத்தமிழ் வாசகர்களுக்கு நன்கு தெரியும்.

அதற்கு வித்திட்டவர்கள் இருவர். ஒருவர் அமரர் பாலச்சந்திரன் மற்றவர் நான் மேலே குறிப்பிட்ட து. சிவப்பிரகாசம் அவர்கள். நிலக்கிளி நாவல் தற்போது தொடர்கதையாக கனடா வீரகேசரி இணையத்தில் பதிவாகிறது.

வீரகேசரியை வெறுமனே பத்திரிகை வெளியீட்டு நிர்வாகமாகவே நடத்தாமல் அதற்கும் அப்பால் அதன் பணிகளை பதிப்புத்துறையில் விரிவுபடுத்தவேண்டும் என்ற தனது கனவை நனவாக்கினார். வீரகேசரி பிரசுரங்களை வெளியிட்டவாறே ஜனமித்திரன் பிரசுரங்களையும் வெளியிட ஆவன செய்தார். ஜனரஞ்சக படைப்புகளை வாசிக்க விரும்பிய வாசகர்களை ஜனமித்திரன் வெளியீடுகள் சென்றடைந்தன.

சில வீரகேசரி பிரசுர நாவல் வெளியீட்டு விழாக்களிலும் கலந்துகொண்டு உரையாற்றிய பாலச்சந்திரன் படைப்பாளிகளுக்கு ஆதர்சமாகத்திகழ்ந்தவர். ஈழத்து இலக்கிய உலகில் அவர் ஏற்றிய நம்பிக்கைச்சுடர் சிலகாலம் மங்காமல் பிரகாசித்தது.

பாலச்சந்திரன் வீரகேசரியில் பணியாற்றிய காலப்பகுதி அரசியல் நெருக்கடி மிக்கது. 1977, 1981, 1983 ஆண்டுகளை தமிழர்கள் மறக்கமாட்டார்கள். இந்நெருக்கடிகள் வீரகேசரி நிருவாகத்தையும் அங்கு பணியாற்றிய ஊழியர்களையும் பாதித்தபோதிலும் நிதானமாக இயங்கியவர் பாலச்சந்திரன். வீரகேசரியின் ஊழியர்களை ஒருங்கிணைக்கும் கலைமகள் விழா போன்ற நிகழ்வுகளையும் சக நிருவாக அதிகாரிகளுடனும் ஆசிரியர்களுடனும் இணைந்து நடத்தினார்.

பாலச்சந்திரன் பொதுமுகாமையாளராக பணியாற்றிய காலப்பகுதியில் வீரகேசரியின் பொன்விழாவும் நடந்தது. அதனை முன்னிட்டு நாவல் போட்டியை அறிமுகப்படுத்தினார். பல படைப்பாளிகள் ஆர்வமுடன் கலந்துகொண்ட இலக்கியப்போட்டி அதுவாகும். பரிசுக்குரிய தேர்வுகள் முடிவுற்று எதிர்பாராத நிருவாகச்சிக்கல்களினால் பரிசு வழங்கும் வைபவம் பகிரங்க பொது நிகழ்வாக நடைபெறுவதில் தாமதம் நீடித்ததையடுத்து பங்கேற்ற படைப்பாளிகளையும் தேர்வு செய்த குழுவினரையும் சோர்வடையச்செய்யாமல் வீரகேசரி அலுவலகத்திலேயே எளிமையாகவும் அமைதியாகவும் குறிப்பிட்ட பரிசளிப்பு வைபவத்தை நடத்தினார். அந்தப்போட்டியில் முதல் பரிசு படைப்பாளி செம்பியன் செல்வனின் நெருப்பு மல்லிகைக்கு கிடைத்ததாக ஞாபகம்.

1983 இற்குப்பின்னர் யாழ்ப்பாணப்போக்கு வரத்தில் இடையூறுகள் ஏற்பட்டதனால் வீரகேசரி தினப்பதிப்பும் வாரவெளியீடும் மித்திரனும் வாரமலரும் வடபகுதி வாசகர்களுக்கு உரிய நேரத்தில் கிடைக்கவில்லை. இதனை கவனத்தில் கொண்ட நிருவாகம் யாழ்ப்பாணத்தில் வீரகேசரியை அச்சிட்டு வெளியிட முன்வந்தது. அதற்கான நிருவாகக்கட்டமைப்பை பாலச்சந்திரன் வரைந்தார். அச்சமயம் செய்தி ஆசிரியராக பணியாற்றிய திரு. நடராஜா மற்றும் அன்னலட்சுமி இராஜதுரை உட்பட சில ஊழியர்கள் யாழ்ப்பாணம் அனுப்பிவைக்கப்பட்டனர். யாழ். பதிப்பு தயாரகவிருந்தவேளையில் எதிர்பாராதவிதமாக அதனை சில சக்திகள் தடுத்தன.

கணினியினதோ கைத்தொலைபேசியினதோ அறிமுகம் இல்லாத அக்காலப்பகுதியில் துணிந்து வடபகுதி வாசகர்களுக்கு உரியநேரத்தில் வீரகேசரியை கிடைக்கச்செய்யவேண்டும் என்ற நிருவாகத்தின் எண்ணத்திற்கு உயிரூட்ட முனைந்த ஒருவராக பாலச்சந்திரன் திகழ்ந்தார்.

இலங்கை பத்திரிகை உலகம் பற்றிய விரிவான ஆய்வுகள் வெளியாகும் பட்சத்தில் பாலச்சந்திரனின் அயராத பணிகளுக்கும் சில பக்கங்கள் ஒதுக்கப்படலாம்.

பாலச்சந்திரனின் அன்புத்துணைவியார் ஞானேஸ்வரி கொழும்பில் பிரபலமான மகளிர் கல்லூரி வெள்ளவத்தை சைவ மங்கையர் கழகத்தில் அதிபராக பணியாற்றியவர். சுமார் நாற்பது ஆண்டுகள் தனது வாழ்வை வீரகேசரியுடன் பிணைத்திருந்த பாலச்சந்தரன் அதன்பிறகு தீவிரமாக ஆன்மீகத்தில் ஈடுபட்டார். விட்டகுறை தொட்ட குறை என்பதுபோன்று தனியாக அச்சுக்கூடம் நிறுவி தன்பணி தொடர்ந்தபோதும் ஆன்மீகம் அவரை உள்வாங்கிக்கொண்டது.

பிரம்ம குமாரிகள் சமாஜத்தில் பாலச்சந்திரன் இணைந்து ஆன்மீகப்பணிகளில் ஈடுபட்டார். நிதானம், பதட்டமின்மை என்பன நாம் அவரிடம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள். அவரது மறைவால் துயரில் மூழ்கியிருக்கும் திருமதி ஞானேஸ்வரி பாலச்சந்திரன் மற்றும் உறவினர்கள் அவரது நண்பர்கள் அனைவரினதும் துயரத்தில் நாமும் பங்கேற்கின்றோம்.No comments: