புகலிடம் கோரியுள்ளோரை மலேசியாவுக்கு அனுப்ப முடியாது அவுஸ்திரேலிய நீதிமன்றம் உத்தரவு

Thursday, 01 September 2011

courtsபுகலிடம் கோருவோரை மலேசியாவுக்கு அனுப்ப முடியாது என்று அவுஸ்திரேலிய நீதிமன்றம் நேற்று புதன்கிழமை வழங்கியுள்ள தீர்ப்பினால் அந்நாட்டு அரசாங்கத்தின் திட்டத்துக்கு பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

படகுகளில் அவுஸ்திரேலியாவுக்கு வருகைதரும் வறிய மற்றும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட புகலிடம் கோருவோரை மலேசியாவுக்கு அனுப்பும் திட்டத்தை அரசாங்கம் கொண்டிருந்தது.

புகலிடம் கோரி விண்ணப்பத்திருக்கும் 800 பேரை மலேசியாவுக்கு அனுப்புவதெனவும் பதிலாக 4000 அகதிகளை மீள்குடியேற்றத்திற்காக மலேசியா,அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பும் எனவும் மேற்கொள்ளப்பட்டிருந்த உடன்படிக்கையைத் தடுத்து நிறுத்துவதற்கான நிரந்தர உத்தரவை அவுஸ்திரேலிய மேல் நீதிமன்றம் 61 பெரும்பான்மை தீர்மானத்தின் பிரகாரம் பிறப்பித்துள்ளது.

இலங்கை, ஆப்கானிஸ்தான், ஈரான், ஈராக்கைச் சேர்ந்த சுமார் 6200 பேர் கடந்த வருடம் அவுஸ்திரேலியாவுக்கு புகலிடம் கோரி சென்றிருந்தனர். மலேசியா அல்லது இந்தோனேசியாவை இடைத்தங்கல் இடமாக பயன்படுத்தியே அவர்கள் தமது பயணத்தை மேற்கொண்டிருந்தனர்.

அகதிகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகராலயத்துடன் (யூ.என்.எச்.சி.ஆர்.) கலந்தாலோசித்தே இந்த அகதிகள் பரிமாற்ற உடன்படிக்கையை மேற்கொண்டதாக அரசாங்கம் கூறிவந்தது.

ஆனால், இந்த விடயம் எந்தவொரு சட்ட ரீதியான பெறுமானத்தைக் கொண்டிருக்கவில்லை. மனித உரிமைக் குழுக்கள் இத்திட்டத்தை கடுமையாக விமர்சித்திருந்தன. அகதிகளுக்கான ஐ.நா. சாசனத்தில் கைச்சாத்திட்டிராத மலேசியா அகதிகளை மோசமாகவே நடத்துவதாக மனித உரிமைக்குழுக்கள் விமர்ச்சித்தன.

அகதிகளுக்கான ஐ.நா. சாசனத்தில் மலேசியா கைச்சாத்திட்டிருக்காததால் அவுஸ்திரேலியாவுடன் அந்த நாடு செய்து கொண்ட உடன்படிக்கையானது தனது உள்நாட்டு சட்டத்தின் பிரகாரம் அகதிகளின் அந்தஸ்தை அங்கீகரிப்பதற்கு சட்டரீதியான கடப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை என்று அவுஸ்திரேலிய நீதிமன்றத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகலிடம் கோருவோர் அல்லது அகதிகளை பாதுகாப்பதற்குரிய சர்வதேச அல்லது உள்நாட்டுச் சட்டத்தின் கீழான கடப்பாடுகளை மூன்றாவது நாடொன்று கொண்டிருக்க வேண்டுமென நீதிமன்றம் கூறியுள்ளது. அத்துடன் புகலிடம் கோருவோரின் விண்ணப்பங்கள் தொடர்பாக இன்னமும் தீர்மானிக்கப்படாததால் அவுஸ்திரேலியாவிலிருந்து அவர்களை அகற்றுவதற்குரிய சட்டரீதியான அதிகாரத்தை குடிவரவுத்துறை அமைச்சர் கிறீஸ் போவன் கொண்டிருக்கவில்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஆனால், மலேசியாவுடன் மே மாதம் உடன்படிக்கை செய்த பின்னர், படகில் அவுஸ்திரேலியாவுக்கு வருவோரின் தொகை வீழ்ச்சி கண்டிருப்பதாகவும் இப்போது நீதிமன்றத்தின் தீர்ப்பினை பயன்படுத்தி ஆட்களை கடத்தி வருவோர் அனுகூலம் பெறக்கூடுமென்றும் போவன் கூறியுள்ளார். "மேல் நீதிமன்றத்தின் இன்றைய தீர்மானம் ஏமாற்றம் தரும் ஒன்று' என்றும் அவர் கூறியுள்ளார்.

நன்றி தினக்குரல்

No comments: