அவுஸ்திரேலிய நீதிமன்றத்தின் தீர்ப்பை கடுமையாக சாடுகிறார் ஜுலியா

Thursday, 01 September 2011

 மலேசியாவுக்கு அகதிகளை அனுப்பும் திட்டம் சட்டவிரோதமானதென அவுஸ்திரேலிய நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பினை அந்நாட்டு பிரதமர் ஜுலியா கிலார்ட் கடுமையாக விமர்சித்துள்ளார்.

நீதிமன்றின் தீர்ப்பினால் தான் அதிருப்தி அடைந்திருப்பதாக கூறியுள்ள கிலார்ட் குடியகல்வு சட்டத்தினை நீதிமன்றம் திருத்தி அமைக்கவேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவின் உடன்படிக்கையின் கீழ் 800 அகதிகளை மலேசியாவுக்கு அனுப்பிவைக்கும் அந்நாட்டரசு 4 வருடங்களில் 4000 பேரை மீளப்பெறவேண்டும்.

இந்நிலையில் அகதிகளை பராமரிப்பதற்குரிய போதுமான தகுதி மலேசியாவிடம் இல்லையென்பதைச் சுட்டிக்காட்டியுள்ள அவுஸ்திரேலிய நீதிமன்றம் இந்த திட்டம் சட்டத்துக்கு முரணானதெனவும் தீர்ப்பளித்தது.

இத்தீர்ப்பினை மலேசியாவிலும் அவுஸ்திரேலியாவிலும் உள்ள மனித உரிமை ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.

குறித்த தீர்ப்பினை வழங்கியுள்ள நீதிமன்றமே குடியகல்வு விதிகளை மறுசீரமைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதெனவும் கிலார்ட் தெரிவித்துள்ளார்.

குடியேற்றவாசிகள் விவகாரத்தில் கடும்போக்கினைக் கொண்டுள்ள கிலார்ட் அரசாங்கத்திற்கு இத்தீர்ப்பினால் தர்மசங்கடமான நிலைமை ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நீதிமன்றின் தீர்ப்பினை தொடர்ந்து புகலிடம் கோருவோர் மற்றும் அகதிகள் சட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.இதற்கு முன்னர் எவ்வாறு இச்சட்டவிதிகள் விளங்கிக்கொள்ளப்பட்டதோ அதிலிருந்து மாற்றம் பெற்றுள்ளதென கிலார்ட் தெரிவித்துள்ளார்.

இத்தீர்ப்பினை தொடர்ந்து சொலிசிட்டர் ஜெனரலின் ஆலோசனைக்காக அரசு காத்திருப்பதாகவும் கிலார்ட் தெரிவித்துள்ளார்.

அதேவேளை,நீதிமன்றின் தீர்ப்பினால் கடல் மூலமாக பல புகலிடக் கோரிக்கைகள் நாட்டுக்குள் புகும் நிலைமை ஏற்பட்டிருப்பதாக கிலார்ட் எச்சரித்துள்ளார்.

ஐ.நா.வின் அகதிகள் உடன்படிக்கையில் மலேசியா கைச்சாத்திடாத நிலையில் மலேசியாவுக்கு அகதிகளை அனுப்புவது சாத்தியமற்றதென கூறப்பட்டுள்ளது.

பி.பி.சி. (நன்றி தினக்குரல்)No comments: