படம் பார்த்து வெளியே வருகையில் வளைந்து நெளிந்து திரும்பும் பாதையை கண்டாலும் பயம் வருகிறது பாம்பின் நினைவு எழுகிறது. வீட்டில் கால் கழுவ தண்ணீர் ஊற்றினாலும் தண்ணீர் கரைந்து கீழே போகும் நெளிவில் கூட பாம்பின் அசைவு தெரிகிறது. திரும்பினால் நீர் வரும் குழாய், கொடியில் வளைந்து கிடக்கும் புடவை, கீழே அறுந்துக் கிடக்கும் கொடிக்கயிற்றை கண்டால்கூட பாம்பும் நஞ்சுபுரம் திரைப்படத்தின் நினைவும் வருவதை தடுக்கவே முடிவதில்லை.
காதலும் வீரமும் செறிந்ததவன் தான் தமிழன் என்பார்கள். காதலின்றி காவியங்களோ, கடைத்தெரு முனையில் நடக்கும் நாடகமோ, வீட்டில் தினமும் ஒளிபரப்பப்பட்டு வயதில் முதிர்ந்தவர்களுக்கு பொழுதுபோக்காக அமையும் சீரியலோக் கூட முடிவதில்லை. அப்படி காதல் நாளத்தின் வழியே ஓடும் ரத்தமாகக் கரைந்த தமிழரின்’ பல ஐதீக முறைகள் அக்காலத்திலிருந்தே பின்பற்றப்பட்டு வருவதை உற்றுநோக்கி அதில் ஒன்றை எடுத்து ஒரு கிராமாம் வளைத்து காதலின் வழியே ஜாதி வெறியின் கொடூரத்தையும் திறம்பட சொல்லி இருக்கிறார் இயக்குனர் சார்லஸ்.
படத்தின் ஒவ்வொரு சட்டத்திற்குள்ளும் பாம்பின் பயம் இருப்பதுபோல் காதலின் சுவையும் கிராமத்தின் வாசனையும் நிறைந்தே இருக்கிறது. அதிலும், காட்சிகளுக்கிடையே வரும் ஒவ்வொரு அழகான மலைப்பாங்கான தோற்றமும் எம் அழகிய தமிழகத்தை ரம்யமாய் நினைவுறுத்திப் போயின என்பதே உண்மை.
நரேன், ராகவ்வை வைத்துக் காட்டிய அப்பா மகன் உறவு நேர்த்தியிலும் பாசத்திலும் சற்றும் குறையாதவை என்றாலும், என்னதான் நல்ல அப்பாவானாலும் நல்லதும் கெட்டதுமாய் தனிமனித குணங்கள் பல இருப்பவன்தானே மனிதரெல்லோருமே என்பதை வெகு நாசுக்காக சொல்கிறது ‘அவரும் தம்பி ராமையாவும் கலந்து பேசும் காட்சியும், இந் நஞ்சுபுரம் திரைப் படமும்.
பாம்பை கண்டு பயமே இல்லாத ராகவ் ஒரு கட்டத்தில், சமூகத்தால் கூட கெட்டுப்போகும் இளைஞரைப் போல்; தனைச் சுற்றியுள்ளவர்கள் சொல்லும் கதைகளால் பாம்பின் மீது பயம் கொள்ள ஆரம்பிக்கிறார். ஒரு கட்டத்தில் அவரால் அடிக்கப் பட்டு சாகாமல் விட்டுவிட்ட அதே பாம்பு அவரை விடாது துரத்துவதை கண்டுக் கொள்ள, பாம்பின்மேல் பயம் கொண்டவனாகவும் அப்படி இருக்காது என்றும் இரண்டுமனதோடு வந்து கயிற்றேணியில் அமர்ந்துக் கொள்ள, அவரின் அப்பா தன் மகனின் மீதுள்ள அத்தனை பாசத்தையும் வார்த்தையில் நிறைத்துக் கொண்டு “தம்பி எங்களுக்கு உங்க உயிர் முக்கியம் தம்பி, அதுக்காகத் தான் இத்தனை பாதுகாப்பும் பயமும் தம்பி, உங்களுக்கு வேணும்னா அதுல நம்பிக்கை இல்லாம இருக்கலாம், எங்களுக்காகவாவது நாங்க சொல்றதை கேளுங்க தம்பி”ன்னு நரேனும் பிரியாவும் அழும் காட்சியும், அதை ஏற்றுக் கொண்ட நல்ல மகனாக ராகவ் கயிற்றேணி பிடித்து மேலேறும் இடமும், நம்மைக் கூட அவர்கள் சொல்வதை ஆமென்று நம்பவைத்து விடுகிறது.
காட்சியில் தெரியும் அத்தனை முகங்களும் பாத்திரத்திற்கு மிகப் பொருத்தமாகவே தேர்வு செய்யப் பட்டுள்ளன. தம்பி ராமையா வந்து போகும் காட்சிகளில் அவரின் மிரட்டும் உருண்டை கண்களிரண்டும், இரண்டாவதாய் ‘நம்பியாருக்குப் பின் இவர்தான் வருவார்போலென்று யாருக்கும் தெரியாமல் காதில் பச்சியொன்று சொல்வதை கேட்டுக் கொள்ளதான் வேண்டியுள்ளது.
தமிழ் திரைப்படங்களில் திருப்பத்தை ஏற்படுத்திய பலரில் ஒருவரின் படமான 'அழகி'யின் இருட்டொளியில் தெரிந்த அதே அழகிய தேவதை மோனிக்காவின் விழிகளில் சுரக்கும் நடிப்பு அவரின் பாத்திரத்தை முழுமை படுத்துகிறது. நகரும் காட்சியெங்கும் மோனிக்காவும் ராகவும் தெரிந்தாலும் கதை வடிவம் அப்படியென்று சம்மதிக்க வைத்துவிடும் திரைக்கதை அமைப்பு படத்திற்கு போதுமானதாகவே இருந்தது.
ராகவ் பல கலைகளில் வல்லவர் என்பதை தெரிந்தவர் திரைத்துறை வட்டாரத்தில் பலர் இருந்தாலும் அதை அனைவருக்கும் தெரிய திரைப்படமாக்கி பதிவு செய்துவிட்ட படம் நஞ்சுபுரம் எனலாம். தனக்குள் இருக்கும் நடிப்புத் திறனுக்கும் இசைத் திறனுக்கும் முழுமையாகக் கிடைத்திடாத வாய்ப்பை பெரும்நம்பிக்கையில் 'தானே அமைத்துக் கொள்ளத் துணிந்திருக்கிறார் இப்படத்தின் மூலம்.
இசையில் சில இடங்கள் இன்னும் கூட நன்றாகப் பண்ணியிருக்கலாம் என்று தோன்றினாலும் ‘பரவாயில்லையே முதல் படம் தானே என்று ஏற்றுக் கொள்ளுமிடங்களும் ஆங்காங்கே இல்லாமலில்லை.
இயக்குனர் சார்லஸ் இன்றும் தனைச் சுற்றியிருக்கும் நட்புவட்டத்தை மதிக்கக் கூடியவர் என்பதால் அவர் மீது ஒரு கவனமும் அவரின் முதலாவதாக வெளிவரும் படம் என்பதால் இப்படம் பார்க்கும் ஒரு ஆர்வமும் மிகுந்து இருந்த வேளையில் படம் வெளிவந்ததையொட்டி அவர்கள் தொலைகாட்சிக்குக் கொடுத்த பேட்டி ஒன்றினைக் கண்டேன். அதில் குறிப்பாக “ஊரில் உனக்கொரு மேடை, வானில் உனக்கொரு வீடு, காணும் காட்சி கடவுள் காட்சியடா” என்று வரும் ஒரு பாடலைப் பற்றி சிலாகித்துப் பேசியிருந்தனர். ஆனால் படம் பார்க்கையில் தான் உண்மையில் அத்தனை சிலாகிப்பின் காரணம் புரிந்தது. மிகுந்த அழகாக காட்சிப் படுத்தியிருந்தார் அப்பாடலை ஒளிப்பதிவாளர்.
படம் முழுக்கவே ஒளிப்பதிவு பாராட்டத் தக்க ஒன்று தான் என்றாலும் இப்பாடலில் சற்றுக் கூடுதலாகவே ரசிக்கத் தக்கக் காட்சிகள் உள்ளன. அதிலும் இயக்குனரை இதுபோன்ற இடங்களில் அதிகமாகவே மெச்சிக் கொள்ளவைக்கிறது ராகவ்வின் தோற்றமும் நடிப்புத் திறனும். உண்மையில் அவரின் பல திறன்களைக் கடந்தும், நடிப்பு அவருக்கு பெரிதும் கைகொடுக்கும் என்பதை நிருபிக்கிறதிந்த நஞ்சுபுரம் திரைப்படம்.
அடித்து சாகாமல் விட்டுவிட்ட பாம்பு எங்கு கடித்துவிடுமோ என்று பயந்து பச்சிலை மருத்துவர் சொல்வதற்கிணங்க காட்டிற்கு மத்தியில் நாலு கால் நட்டு மேலே மேடை அமைத்து ராகவ் அதன்மேலே தங்கிவிட, அவரை காண வரும் காதலி மோனிகாவை சுற்றியமைந்த பல காட்சிகள் ரசனையும் உருக்கமும் கொண்டவை. ஓரிடத்தில், ராகவ்விற்கே தெரியாமல் அவரின் காதல் விவகாரம் அவர்களின் வீட்டிற்குத் தெரிந்துவிட, அவர் தம்பிராமையாவிடம் பேசி, தம்பிராமையா மோனிகா அம்மாவிடம் சொல்லி மோனிகாவிற்கு வேறு இடத்தில் திருமணம் நிச்சயித்துவிடுகிறார்கள்.
அதை மோனிகா ராகவ்விடம் சொல்வதற்காக பகலெல்லாம் அந்த நாலுகால் மேடையின் கீழே வந்து நின்று ராகவ்விடம் சொல்லிட இயலாமல் தவிக்கும் காட்சிகளும், ஒவ்வொரு இரவும் அவர்கள் தனியாக சந்தித்த இடத்தில் அவள் தனியாக வந்து நின்று அழுமிடமும், கடைசியில் வேறு வழியின்றி நேரே அவனிருக்கும் அந்த நாலுகால் மேடையின் கீழே வந்து நின்று மேலிருக்கும் ராகவ்வை பார்த்து கூச்சலிட்டு அழைக்கப் பார்க்கிறாள், கீழே நான்கு பேர் அவனுக்காக காவலிருக்கிறார்கள். வேறு செய்வதறியாது அவர்கள் கண்ணயர்ந்த நேரம் பார்த்து உஸ்ஸ்ஸ்ஸ் உச்ச்ச்ச்ச்ச்ச்ஸ் என்று குரல் கொடுக்க, பாம்பு எங்கு தன்னை கொத்தித்தான் விடுமோ என்ற பயத்தில் ஒடுங்கி கண்மூடி அமர்ந்திருக்கும் ராகவிற்கு அந்த சப்தம் பாம்பின் சப்தமாகவே கேட்டுவிட அவன் "ஐயோ பாம்பு பாம்பு என்று கத்த, கீழே கண்ணயர்ந்துக் கிடந்த காவலாளிகளும் எழுந்து பாம்படிக்கப் புறப்பட்டுவிட, தனக்கு திருமண ஏற்பாடு நடப்பதை சொல்லவந்த மோனிகா சொல்லமுடியாமலே அழுதுக் கொண்டப் போக, அப்போதுதான் அதை மேலிருந்து பார்த்த ராகவ் உஸ்ஸென்று கத்தியது அவள் தானோ என்று உணர்ந்து தலையில் கைவைத்துக் கொள்ளும் தருணம்’ படம் பார்க்கும் நமக்கும் சேர்ந்தே வலித்தது.
உண்மையில் ஒரு திரைப்படம் என்பது எத்தனைப் பேரின் வெற்றி என்பதை அப்படம் வெளிவந்து வென்றுவிட்ட பிறகே ஓரளவு வெளியில் தெரிய ஆரம்பிக்கிறது. ஆனால், வென்ற படங்களைக் கடந்து வெளிவந்தும் வெளிவராமலுமேக் கூட தோற்றுப் போய் குப்பைத் தொட்டியில் விழுந்த ஒவ்வொரு படச்சுருள்களிலும் எத்தனைப் பேரின் தோல்விகளும் மரணமும் சேர்ந்துக் கிடக்கின்றன என்பதை வெற்றிபெரும் படங்களிலிருந்துமட்டும் நம்மால் அறிந்துக்கொள்ள முடிவதில்லை.
திரையுலகைப் பொருத்தவரை மேல்வந்துவிட்டவர்களை தங்கத் தட்டிலும், வராமல் கீழ்வீழ்ந்தவர்களை பல அவதூருக்கடியிலும், பட்டினியின் வெப்பம் தீர்க்க வெற்று வயிற்றில் நனைத்து போட்ட துணியின் கிழிசலிலும், பசிக் கொடுமையைக் காட்டிலும் கடன் சுமையில் உயிர்விட்ட நிலையிலுமே திரைக்கலை வைத்திருக்கையில், ஒரு கிராமத்தின் வாழ்தலுக்கு காதல் வர்ணம் பூசி, அதைவைத்து ஜாதிவெறி கோடழிக்க முற்பட்ட இயக்குனர் திரு.சார்லஸ் அவர்களையும், அவரின் திறனையும் தன் மீது தான் கொண்ட அசரா நம்பிக்கையினையும் மூலதனமாகப் போட்டுப் படமெடுக்கத் துணிந்த ராகவ் அவர்களையும், படம் முழுக்க நடிப்பாகவும் இசையாகவும் வியாபித்திருக்கும் அவரின் உழைப்பையும் பாராட்டியேத் தீரவேண்டும்!
வெற்றி ஜாம்பவான்களைத் தாண்டி, முதற்படம் தோற்றாலும் இரண்டாம் படம் ஜெயிக்கும் என்றொரு சூத்திரமும்' நம்பிக்கை கனவும் கூட திரையுலகின் மற்றொரு மதில்களாக நிற்கிற இக்கால கட்டத்தில் அடுத்த படம் இன்னும் நன்றாக செய்வார்கள் எனும் நம்பிக்கையை தருமளவிற்கே இந்த நஞ்சுபுரமும் அமைந்துள்ளது!
கலை என்பதே' மொத்தத்தில் காலத்திற்கேற்ப காலத்தின் ஊடாக நிகழ்வது, நிகழ்காலத்தை எதிர்காலதிற்கென தக்கவைத்துச் செல்வது எனில், இப்படமும் ஒரு ஊரின், சில மனிதர்களின், ஒரு இனத்தின் அடையாளத்தை காலப் பதிவேட்டில் பதிவுசெய்து, ஜாதிவெறியின் கண்களில் தன் கலைநகம் கொண்டு கீறியே முடிகிறது.
எந்த கீழ்ஜாதிப் பெண்ணை தன் மகனுக்குக் கட்டினால் தன் வம்சத்திற்கே இழுக்கென்று எண்ணினாரோ அதே ஜாதிப் பெண்ணின் வயிற்றில் தான் 'தன் வீட்டின் விளக்கு அணைந்து வேறொரு ஜோதியாக எரிவதை எந்த மேல்சாதி மக்களும் இத்தனை காலத்திற்கும் தடுத்து ஒன்றும் நிறுத்திவிட்டதில்லை. மனிதன் தன் உடம்பின்மேல் ரத்தமாகக் கீறி போட்டுக் கொண்ட கோடாகவே ஜாதி நாற்றமெடுத்து பல தலைமுறைகளைக் கடக்கிறது.
அதை அதே ரத்தத்தால் அலைத்து, எல்லாம் ரத்தமும் சதையும் ஒன்றே, மனிதர்கள் ஒத்த வகையினரே என்று காட்டிவிடத் துடிக்கும் கலைஞர்களுக்கும் படைப்பாளிகளுக்கும் மத்தியில் நின்றுகொண்டு 'காலமும் இதுபோன்ற நிறைய படங்களைப் பார்த்துக் கொண்டும், ஜாதிக் கயிற்றால் பல மனிதரின் கழுத்தை நெறித்து தன் தீரா தாகத்திற்கு பல உயிர்களைக் குடித்துக் கொண்டும், ஆங்காங்கே ஒருசார்மக்களை கீழுமாய் மேலும் வகுந்துக் கொண்டுமேக் கடக்கிறது.
பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு அப்பாலும், நேற்றையினைவிட இன்று குறைவு, இன்றையை விட நாளைக் குறையலாம் எனும் அளவிற்கே, முற்றும் அற்றுப் போகாத நஞ்சாகவே இருக்கிறதே சாதி’ என்று வருந்தும் மனிதநேயத்தின் கண்ணீரை இதுபோன்ற படங்களேனும் இனியும் வந்து துடைத்தெறியட்டும். அதற்கு சார்லஸ், ராகவ், மோனிகா, தம்பி ராமையா, நரேன் பிரியா போன்ற கலைஞர்களும் மேன்மையுறட்டும்!!
வித்யாசாகர்
No comments:
Post a Comment