உலகச் செய்திகள்


.
அமெரிக்க கடன் உச்சவரம்பு பிரச்சினைக்கு தீர்வு 

1/8/2011
அமெரிக்காவின் கடன் பெறும் உச்சவரம்பை உயர்த்தும் விடயத்துக்கு தீர்வு கிடைத்துள்ளது. இதனால் உலகையே மீண்டும் பொருளாதார நெருக்கடியில் தள்ளிவிடும் அபாயகரமான நிலையில் இருந்து இறுதி நேரத்தில் தப்பியுள்ளது அமெரிக்கா.

அமெரிக்காவின் கடன் அளவு எவ்வளவு இருக்கலாம் என்பது குறித்து நிர்ணயிக்க அந் நாட்டு நாடாளுமன்றம் கடந்த 1971ம் ஆண்டில் ஒரு விதியை வகுத்தது. அதன்படி இந்தக் கடன் அளவு குறித்து நாடாளுமன்றத்தில் (US congress) அந் நாட்டு அரசு ஒப்புதல் பெற வேண்டும்.



இப்போது அமெரிக்காவின் கடன் சுமை 14.3 டிரில்லியன் டொலர் வரை இருக்கலாம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. (இது அமெரிக்காவின் மொத்த உற்பத்தியில் (GDP) 95 சதவீதமாகும்.) நாளை (ஆகஸ்ட் 2ம் திகதி செவ்வாய்க்கிழமை) இந்த அளவை அமெரிக்கா தொட உள்ளது.

இதனால் இந்தக் கடன் அளவை உயர்த்தி நி்ர்ணயிக்க வேண்டிய நிலைக்கு அதிபர் பராக் ஒபாமா அரசு தள்ளப்பட்டது. ஆனால் பிரதிநிதிகள் சபை (House of representatives) எதிர்க் கட்சியான குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு ஒபாமாவின் ஜனநாயகக் கட்சிக்கு பெரும்பான்மை இல்லை.

கடன் அளவை உயர்த்த குடியரசுக் கட்சி ஒப்புக் கொள்ளாததால் செனட் சபையில் ஒபாமா கட்சிக்கு பெரும்பான்மை இருந்தாலும் பிரதிநிதிகள் சபையில் அது தொடர்பான தீர்மானம் தோல்வி அடையும் நிலை ஏற்பட்டது.

இது தொடர்பான தீர்மானத்தை ஆதரிக்க வேண்டுமானால் அரசு தனது பொருளாதார ஊக்குவிப்பு செலவுகளைக் குறைக்க வேண்டும் என குடியரசுக் கட்சியினர் நிபந்தனை விதி்க்க அதை ஏற்றால் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும் என்பதால் ஒபாமா அதை ஏற்க மறுக்க அமெரிக்கா இன்னொரு மாபெரும் நிதிச் சிக்கலை நோக்கி சென்றது.

கடன் அளவை உயர்த்தாவிட்டால் எந்த அமைப்பிடமிருந்தும் அமெரிக்காவால் நிதி திரட்ட முடியாது. அந்த நிலை ஏற்பட்டால் அரசு ஊழியர்களுக்கு இந்த மாதம் சம்பளம் தர முடியாது, ஓய்வூதியதாரர்களுக்கு பணம் தருவது உள்ளிட்ட சமூகப் பாதுகாப்பு திட்டங்களுக்கு நிதி இருக்காது, இராணுவத்துக்கும் பணம் தர முடியாது, அரசு மருத்துவமனைகளுக்கு மருந்து கூட வாங்க முடியாது என்ற நிலை உருவானது.

கடன் நெருக்கடியால் பாதிக்கப்படாமல் இருக்க முதலீட்டாளர்கள் தங்களது பணத்துக்கு அதிக வட்டி கோரினால் அவர்களைச் சமாளிக்க வீட்டுக் கடன் கார் கடன் சொந்த கடன்கள் உள்ளிட்டவற்றுக்கு வட்டியை வங்கிகள் அதிகரிக்கும் அபாயமும் உருவானது.

அமெரிக்கா இந் நிலைக்கு வந்தால் அந் நாட்டு நிறுவனங்களின் பங்குகளில் முதலீடுகள் கூட வாபஸ் ஆகி முழுப் பொருளாதாரமும் மூழ்கும் நிலை உருவானது.

அமெரிக்காவுக்கு சளி பிடித்தால் உலகமே தும்மியாக வேண்டுமே.. இந்த நிதி நெருக்கடி உலகம் முழுவதும் எதிரொலித்து பெரும் பொருளாதார சிக்கல் உருவாகியிருக்கும்.

இதையடுத்து கடந்த ஒரு வாரமாக சரியாக தூங்கக் கூட நேரமில்லாமல் எதிர்க் கட்சிஇ தனது கட்சி பிரதிநிதிகள் அதிகாரிகளுடன் இரவு பகலாக இந்த விவகாரம் குறித்துப் பேச்சு நடத்தி வந்தார் ஒபாமா.

இன்று ஒருவழியாக இந்தத் தீர்மானத்தை ஆதரி்ப்பதாக குடியரசுக் கட்சி அறிவி்த்துவிட்டதால் ஒட்டு மொத்த அமெரிக்காவே நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொண்டுள்ளது.

ஆமாம் அமெரிக்காவின் கடன் அளவு ஏன் இவ்வளவு ஆனது என்றால்.. அதற்கு முக்கிய காரணங்கள் அந்த நாடு நடத்தி வரும் யுத்தம் தான். ஜோர்ஜ் புஷ் காலத்தில் ஈராக் ஆப்கானிஸ்தான் யுத்தத்திற்காக செலவிடப்பட்ட தொகை 6.1 டிரில்லியன் டொலர். பராக் ஒபாமா இதுவரை யுத்த செலவுக்காக ஒதுக்கிய தொகை 2.4 டிரில்லியன் டொலர்.

இதேவேளை இப்போது அமெரிக்காவின் கடன் அளவு மேலும் 2.5 டிரில்லியன் டொலர்கள் வரை உயர்த்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி வீரகேசரி

இராணுவத்தினரின் தாக்குதலில் சிரியாவில் 140 பேர் படுகொலை


1/8/2011
சிரியாவில் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட மக்கள் மீது இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதலில் இதுவரை சுமார் 140 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிரியாவில் அதிபர் பஷர் ஆட்சிக்கு எதிரான ஜனநாயக ஆதரவு போராட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் மாதம் ஜனநாயக சீர் திருத்தங்களை அறிவிக்ககோரி பொது மக்கள் பிரமாண்ட போராட் டத்தை நடத்தினர்.

அதன் பிறகு இந்த போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனிடையே ஹமா உள்ளிட்ட நகரங்களில் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. இதனை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. ஹமாவில் போராட்டக்காரர்களை அடக்க ராணுவம் அழைக்கப்பட்டது. அப்போது இராணுவம் போராட்டக்காரர்களை நோக்கி சுட்டதில் 100 பேர் பலியானார்கள். மற்ற இடங்களில் 40 பேர் பலியானார்கள்.

இந்த படுகொலை சம்பவம் உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. சிரியா வரலாற்றில் இது ஒரு கறுப்பு தினம் என்று மனித உரிமை ஆர்வலர்கள் வர்ணித்துள்ளனர். ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ராணுவ நடவடிக்கையை கடுமையாக கண்டித்துள்ளனர்.

நன்றி வீரகேசரி

முபாரக் மீதான வழக்கு விசாரணை இன்று: தூக்குத் தண்டனை விதிக்கப்படலாம்

3/8/2011
எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்(83) மீதான வழக்குகளின் விசாரணை இன்று ஆரம்பமாகியுள்ளது.

அவர் மீது ஊழல், அரசுக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரை கொலை செய்தமை உட்பட பல குற்றச்சாட்டுக்களின் பேரில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

முபாரக் மட்டுமன்றி அவரது மகன்களான அலா, ஜமால், எகிப்தின் முன்னாள் உட்துறை அமைச்சரான ஹபிப் அல்-அடி மற்றும் அவரது 6 உதவியாளர்களின் மீதான குற்றச்சாட்டுகளின் விசாரணையும் தற்போது நடைபெற்று வருகின்றது.

முபாரக் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படுமாயின் அவருக்கு மரண தண்டனை வழங்கப்படும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கெய்ரோவில் உள்ள பொலிஸ் அகடமியிலேயே இவ் விசாரணை நடைபெற்று வருகின்றது.

எகிப்தில் 30 ஆண்டுகளாக ஆட்சி புரிந்து வந்த முபாரக் கடந்த பெப்ரவரி மாதம் மக்கள் நடத்திய போராட்டத்தினைத் தொடர்ந்து பதவி விலகியமை குறிப்பிடத்தக்கது.

நன்றி வீரகேசரி

ஆப்கானில் ஹெலிகொப்டர் விபத்து: அமெரிக்க வீரர்கள் 31பேர் பலி
7/8/2011
ஆப்கானிஸ்தானில் ஹெலிகொப்டர் விழுந்து நொறுங்கியதில் அமெரிக்க சிறப்புப்படை வீரர்கள் 31 பேர் பலியாகியுள்ளனர்.

தலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராக நடக்கும் போரில் நேச நாட்டுப் படை வீரர்கள் ஒரே நாளில் இவ்வளவு அதிக அளவில் இறந்திருப்பது இதுதான் முதல் தடவை.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்கு தென் மேற்கு பகுதியில் உள்ள சயீத் அபட் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு இச்சம்பவம் நடந்துள்ளது.

தலிபான்களுக்கு எதிராக தேடுதல் வேட்டையில் கூட்டுப்படைகள் ஈடுபட்டிருந்தன. அப்போது கூட்டுப்படை ஹெலிகொப்டரை நோக்கி தலிபான்கள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதையடுத்து படை வீரர்கள் திருப்பிச் சுட்டனர்.

அப்போது யாரும் எதிர்பாராத வகையில் கூட்டுப்படை வீரர்கள் சென்ற ஹெலிகொப்டர் திடீரென கீழே விழுந்து நொறுங்கியது. அதில் இருந்த அமெரிக்க சிறப்புப் படை வீரர்கள் 31 பேரும், ஆப்கானிஸ்தான் படை வீரர்கள் 7 பேரும் இறந்தனர். இச்சம்பவத்தில் மொத்தம் 38 பேர் பலியாகியுள்ளனர்.

இது ஆப்கான் அரசுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. இதுதொடர்பாக ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமித் கர்சாய் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நேச நாட்டு ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய சம்பவத்தில் இறந்த வீரர்களுக்கு அதிபர் ஹமித் தனது அனுதாபத்தைத் தெரிவித்துள்ளார். தலிபான்களுக்கு எதிராக 2001ஆம் ஆண்டு துவங்கிய போரில் இச் சம்பவத்தில்தான் அதிக அளவில் படை வீரர்கள் இறந்துள்ளனர்.

இச் சம்பவத்துக்கு அனுதாபம் தெரிவித்து அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கும், இறந்த வீரர்களின் குடும்பத்தினருக்கும் அனுதாபச் செய்தியை ஹமித் அனுப்பியுள்ளார்.

இந்த சம்பவத்தில் ஆப்கன் படை வீரரர்கள் 7 பேரும் இறந்துள்ளனர். அவர்கள் ஆப்கன் சிறப்புப் படையைச் சேர்ந்தவர்கள் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நன்றி வீரகேசரி

No comments: