மனதைக் கவரும் மட்டக்களப்பு நாட்டுப்பாடல்கள் -பகுதி 3


.
                                                                                      பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா


சொந்த உறவுக் காதல்

பிறப்பிலேயே மச்சான்-மச்சாள் உறவுமுறை அமைந்துவிட்ட  இருவருக்கு
இடையிலான காதல் சம்பந்தமான பாடல்கள் சிலவற்றின் தொகுப்பை இவ்வத்தியாயத்தில் காணலாம்.

அவன் முறை மச்சான்.  தன் சொந்த மச்சாளைக் காதலிக்கிறான்.  அவளும் அவனில் உயிரையே வைத்திருக்கின்றாள். சிறு வயதிலே இருவரும் சேர்ந்து விளையாடியதுண்டு என்றாலும் அவள் பருவ வயதை அடைந்தபின்னர் ஒருவரையொருவர் பார்த்துக் கதைப்பதற்கே பெரும் பாடாகவிருக்கிறது. அத்துடன் அவர்களிருவரதும் குடும்பங்களுக்குகிடையே சிறு மனத்தாங்கல். இருவரும் சந்திப்பதற்கு இப்போதிருக்கும் பிரச்சினையே அதுதான்.



நீண்ட நாட்களுக்குப் பின்னர் தண்ணீர் அள்ளிவருவதற்கு வழமைக்கு மாறாக அவள் தனியே செல்லும்போது அவன் கண்டுவிடுகின்றான். சிறிதுதூரம் அவள் பின்னால் சென்று அவள் நடையை இரசிக்கிறான்.

அன்ன நடைதானோ
இது அவள் நடைதானோ
என்ன நடையென்று
எடுத்தியம்பக் கூடுதில்லை

பின்னர், அவளின் கவனத்தை ஈர்ப்பதற்காக இப்படிப் பாடுகிறான்.

காவல் பரணில நான்
கண்ணுறங்கும் வேளையில
கண்ணான மச்சி வந்து
காலூன்றக் கண்டேனே.

மச்சானின் குரல்போல் கேட்கிறதே என்று திரும்பிப் பார்த்த அவள் அவனைக் கண்டதும் ஒரு புன்சிரிப்பை உதிர்த்துவிட்டுத் தொடர்ந்து நடக்க, அவனும் தொடர்கின்றான்.

சீப்பெடுத்துச் சிக்கிழுத்து
சிமிழ் திறந்து மாப்போட்டு
மடிப்புடுத்துப்போற பெண்ணே - உன்ன,
மதிக்க மனம் கொள்ளுதில்லை.

சிறுவயதில் வாடி, போடி என்று கதைத்தவன் இப்போது பெண்ணே என்று அழைக்கிறான். மதிக்க மனம் கொள்ளுதில்லை என்பது, உன்னை என் மச்சாள் என்று எண்ணும்போது, என்மனம் நிலைகொள்ளாமல் தவிக்கிறது என்ற கருத்தில் சொல்லப்பட்டுள்ளது.  தன் மனநிலையைப் பற்றி மேலும் சொல்கிறான்.

தண்ணிக் குடமெடுத்துத்
தனிவழியே போறபெண்ணே
தண்ணிக்குடத்தினுள்ளே
தளம்புதடி என்மனது.

அது மட்டுமா?

குஞ்சி முகமும் உன்ர
கூர்விழுந்த மூக்கழகும்
நெற்றி இளம்பிறையும் என்ர
நித்திரையில் தோணுதுகா.

நாணத்தால் முகம் சிவந்து, அச்சத்தால் எதுவும் பேசாமல் அவள் நடக்கிறாள். என் முறை மச்சாளான நீ என்னைவிட்டு வேறு யாருக்கும் உன்னைக் கொடுத்துவிட எண்ணாதே என்று விநயமாகக் கேட்கிறான்.

    தாலிக் கொடியே என்ர
    தாய்மாமன் ஈன்ற கண்டே
மாமிக் கொருமகளே மச்சி
மறுகுதலை பண்ணாதகா.


இதைக் கேட்டதும் அவளுக்கு நெஞ்சிலே நெருஞ்சி முள் குத்தியதுபோல இருக்கிறது. திரும்பி ஓரக்கண்ணால் கோபமாக அவன்மேல் ஒரு பார்வையை வீசிவிட்டு அவள் நடக்கிறாள். அந்தப்பார்வையின் அர்த்தம் அவனுக்குப் புரிந்தும் புரியாமல் இருக்கிறது. சற்றுத் தெளிவாக அறிந்துகொண்டால் மனதுக்குத் திருப்தியாக இருக்குமே என்று சற்று உரிமையோடு பாடுகிறான்.

சட்டபோட்டுப் பொட்டுவச்சித்
தண்ணி கொண்டு போறமச்சி
உன்ர சட்டபோட்ட கையால கொஞ்சம்
தண்ணிதந்தால் ஆகாதோ.

கிளுக் என்று அவளுக்குச் சிரிப்பு வந்துவிடுகிறது. பாவம் மச்சான். இனியும் பேசாமல் விட்டால் தாங்கமாட்டார் என்று, பதில்சொல்கிறாள் இப்படி-

வாய்க்கால் தண்ணியில
வண்டு விழும் தும்பி விழும்
வீட்டுக்கு வாங்க மச்சான்
வெந்த தண்ணி நான்தாறேன்

அப்பாடா! மச்சாள் வாய்திறந்து விட்டாள். அவனுக்குத் தென்பு வந்துவிட்டது,
தெளிவும் பிறந்துவிட்டது. சற்று நெருக்கமாக வந்து, உருக்கமாகச் சொல்கிறான்.

     சுற்றிவர வேலி
     சுழலவர முள்வேலி
எங்குமே வேலியெண்டா
எதால புள்ள நான்வரட்டும்?.

களவெடுக்கச் செல்பவர்கள் காவலைப் பற்றி நினைக்கலாமோ? நான் உங்களுக்கு வேண்டுமென்றால் வேலியொரு பொருட்டா? வேலியிருள்ள முள் ஒரு பொருட்டா? கேட்கிறாள்-

காவலரணோ மச்சான்
கள்ளனுக்கு முள்ளரணோ
வேலியரணோ மச்சான்
வேணுமென்ற கள்ளனுக்கு

கேட்டதோடு மட்டும் விட்டாளா? வழியும் சொல்கிறாள்.

வெத்திலையைக் கைப்பிடித்து
வெறும்புளகை வாயிலிட்டு
    சுண்ணாம்பு இல்லையெண்டு
    சுத்திவந்தால் கண்டிடலாம்.

தன் மனநிலையை அவன் இப்படிச் சொல்கிறான்,

வாழைப்பழமே என்ர
வலது கையில் சர்க்கரையே
உள்ளங்கைத் தேனே நான்,
உருகிறண்டி உன்னாலே.

அவளது முகம் வாட்டமுறுகிறது. கவலை அவளது கண்களில் கசிகிறது. அதைக் கண்டு அவன் கேட்கிறான்.

சீனத்துச் செப்பே என்ர,
சிங்காரப் பூ நிலவே
வானத்தைப் பார்த்து மச்சி,
வாடுவது என்னத்துக்கோ ?

உடனே அவள் ஒரு பெருமூச்சோடு,

ஒண்டாய் இருந்தோம்
ஒருகல்லையிலே சோறுதின்றோம்
    ஆகாத காலம்வந்து - இப்ப,
    ஆளுக்கொரு திக்கிலயாம்

எப்படியும் இருவரும் ஒன்றுசேரவேண்டும் என்ற எண்ணம் இருவருக்குமே உண்டு. சேரவேண்டுமே என்ற ஆசையும், அது முடியாமல் போய்விடுமோ என்ற கவலையும் தன்னை விட அவளுக்கு அதிகமாகவே இருக்கிறது என்பதால் அவன் மேலும் வருந்துகிறான். அவனுக்கு வைராக்கியம் பிறக்கிறது. அதனால் அவன்,

காட்டுக்கிளியே- என்
கதைபழகும் நங்கணமே
கூண்டுக்கிளியே- நீ
சொல்மதனி சம்மதத்தை

என்று சம்மதம் கேட்கிறான். நீ மட்டும்; ஒரு வார்த்தை சொல்லிவிட்டால்,

கூண்டுக் கிளியாளே
கோலஞ்செய் மச்சாளே
ஆசைக் கிளியே
அடுத்தநிலவில் நம்கல்யாணம்

அவளுக்கு நெஞ்சு பொறுக்கவில்லை. சம்மதம் என்று உடனேயே பதில் சொல்லிவிட அவளால் முடியுமா? துக்கம் தொண்டையை அடைக்கிறது. கண்கள் குளமாக அப்படியே அவனது மார்பில் சாய்ந்துவிடுகிறாள். அவளை அணைத்தபடியே, அவளின் தலையைத் தடவிக்கொண்டு, மெல்லிய குரலில் அவள் காதுக்குள் சொல்கிறான்,

உன்னை மணந்து
உயர்ந்த கட்டில் மேல வைத்து
கன்னந் திருப்பிக் கதைக்க
வெகு நாட்களில்லை

அவனது நெஞ்சிலே முகத்தைப் புதைத்துக்கொண்டு நிற்கும் அவளின் அழகிய கருங்கூந்தலில் வீசுகின்ற மணம் அவனுக்கு இன்ப மயக்கத்தைத் தருகிறது. கேட்கிறான் குழைந்துகொண்டே-

சந்து சவ்வாதோ
சரியான பன்னீரோ
குங்குமப் பூவோ உன்
கூந்தலிலே வீசுவது

இருவரும் இவ்வாறு ஒருவரையொருவர் அணைத்துக்கொண்டு, சோகத்தையும் இந்த உலகத்தையும் மறந்திருக்கும் வேளையிலே, அந்தப் பூவலடிக்கு தண்ணீர் எடுக்க வந்த ஒரு பாட்டி இவர்களைக் கண்டு இப்படிப் பாடுகிறாள்.

பூவலக் கிண்டிப்
புதுக்குடத்தக் கிட்டவைச்சு
ஆரம் விழுந்த கிளி
அள்ளுதுகா நல்ல தண்ணி

திடுக்கிட்டுப் பிரிந்தனர் இருவரும். நீர் அள்ளுவதையும் மறந்து குடத்தை எடுத்துக்கொண்டு ஓடுகிறாள் அவள்.

No comments: