சனல் 4 சந்தேகநபரிடமிருந்தது கைப்பற்றபட்டவை தமிழ் சினிமா பட சீடிக்கள்!

.
சனல் 4 தொலைக்காட்சிக்கு தகவல் வழங்கினார் எனக் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞனை விடுதலை செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷ்மி சிங்கப்புலி இன்று உத்தரவிட்டுள்ளார்.

கந்தவனம் ஜெகதீஸ்வரன் என்ற இளைஞனே இலண்டனில் இருந்து இலங்கைக்கு வந்த போது கடந்த மாதம் 4ஆம் திகதி கண்டியில் வைத்து கைது செய்யப்பட்டார்.

இலங்கையின் படையினருக்கு எதிராக பொய்யான தகவல்களை சனல் 4 தொலைக்காட்சிக்கு வழங்கியுள்ளதாக இவர் மீது குற்றப்புலனாய்வு துறையினர் குற்றம்சாட்டியிருந்தனர்.

அதேவேளை குறித்த சந்தேகநபர் வசித்த வீட்டை சோதனையிட்டதில் 71 சீடிகள் கைப்பற்றப்பட்டதாகவும், இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் குறித்த வழக்கு விசாரணை இன்று மேல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, சந்தேகநபர் தொடர்பான அறிக்கையொன்றை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட புலனாய்வுத்துறையின் பொலிஸ் தளபதி அருண ஜயசிங்க சமர்ப்பித்தார்.

குறித்த நபரின் வீட்டில் இருந்து மீட்கப்பட்ட 71 சீடிக்களும் தமிழ் திரைப்பட சீடிகள் என்றும், சனல் 4 தொலைக்காட்சியினால் வெளியிடப்பட்ட வீடியோக்கள் தொடர்பில் எவ்வித காட்சிகளும் அவற்றில் இடம்பெறவில்லை என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 71 சீடிகளிலும் 70 சீடிகள் தமிழ் திரைப்படங்கள், ஏனைய ஒன்று ஆங்கிலத்திரைப்படம் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. குறித்த சந்தேகநபரின் இலண்டன் வீட்டு முகவரியில் அவரது மனைவியின் சகோதரனான விஸ்வநாதர் ஜனராஜா என்பவர் விடுதலைப்புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தவர் என தெரியவந்துள்ளதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்தனர்.

அத்துடன் இது தொடர்பாக குறித்த சந்தேகநபர் எவ்வித தகவலையும் வழங்கவில்லை என்று குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மேலும் தெரிவித்தனர்.

எனினும் இவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்பதனால் ஜெகதீஸ்வரனை விடுதலை செய்வதற்கும், அவரது பிரித்தானிய கடவுச் சீட்டை திருப்பிக் கொடுப்பதற்கும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

எனவே குறித்த சந்தேகநபரை விடுதலை செய்யுமாறு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷ்மி சிங்கப்புலி இன்று உத்தரவிட்டுள்ளார். கந்தவனம் ஜெகதீஸ்வரனை விடுதலை செய்வதற்கு பிரித்தானியாவில் இருந்து அழுத்தம் பிரேயோகிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


நன்றி தமிழ்வின்


No comments: