அக்கூ குருவி - சிறுகதை - உஷா. வை


யூபோவான். பெங்களுரிலிருந்து கொழும்பு செல்லும் ஸ்ரீலங்கன் விமானம் யூ எல் ஒன்று ஏழு இரண்டுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்…”அறிவிப்பு தொடர்ந்தது. விமானப் பணிப்பெண் ஆபத்துகால வழிகளை சுட்டியபோது மட்டும் எதற்கும் இருக்கட்டும் என்று கவனித்துப் பார்த்துக்கொண்டேன்.
பக்கத்து இருக்கையில் இருந்த சூட் போட்ட மனிதர் சிரித்துவிட்டு “ஃபர்ஸ்ட் டைம்?” என்று கேட்டார். அவர் முகத்தைப் பார்த்தால் பயணம் முழுவதும் பேச விஷயம் வைத்திருப்பார் போல இருந்தது. எனக்குப் பேச மூட் இல்லை. என்ன வேண்டுமோ நினைத்துக்கொள்ளட்டும் என்று பொதுவாய் சிரித்துவிட்டு “டூ நாட் டிஸ்டர்ப்” விளக்கை எரியவிட்டு கண்களை மூடிக்கொண்டேன்.
கொலொம்போவுக்குப் பிரயாணம் எனக்கு ஒன்றும் புதிதில்லை. 2002லிருந்து மூன்று வருடங்களுக்கு மாதத்தில் பதினைந்து நாட்களுக்கு மேல் அங்கே கழித்திருக்கிறேன். நான் வேலைபார்த்த கம்பெனியின் மென்பொருளை ஒரு வங்கியில் வாங்கி அதை சரளமாய் உபயோகிக்கப் பழகும்வரை நான் அங்கு வந்து இருக்கவேண்டும் என்று ஒப்பந்தத்தில் போட்டுவிட்டனர். ஒன்றிரண்டு மாதங்கள் பயிற்சி கொடுத்துவிட்டுக் கொஞ்சம் ஊரைச் சுற்றிப் பார்த்துவிட்டுப் போய்விடலாம் என்று நினைத்திருந்த எனக்கு மகா எரிச்சல்… வேறு வழி கிடையாது. மாட்டேன் என்றால் ‘சரி. இன்னொரு கம்பெனியிடம் வாங்கிக் கொள்கிறோம்’’’ என்பார்கள். கீரை வியாபாரம் மாதிரிதான். அத்தனை போட்டி.


முதலில் சலிப்போடு ஒத்துக்கொண்டாலும் சில மாதங்களிலேயே ஊரும் மக்களும் பழகிப்போய், பிடித்தும் போய்விட்டது. அவர்களுக்கும். ஒரு வாரம் போகவில்லை என்றால் தினம் ஒரு மணி நேரமாவது போனில் யாராவது ஒருவர் பேசுவார்கள். அடுத்துப் போகும்போது ‘எங்கே பல நாட்களாய் காணும். லீவா?’ என்பார்கள், ஏதோ நான் அவர்கள் வங்கியின் பணியாளர் போல.
வங்கியின் ஐ.டி துறையிலோ பலருக்கும் நான் ஆலோசகர், சிலருக்குத் தோழி. அப்படி நெருக்கமான ஒரு தோழிதான் மாலினி. இவள் அந்தத்துறையின் ஜெனெரல் மானேஜெரின் செகரடரி. நான் வங்கியில் காலடி எடுத்து வைத்த முதல் நாள் அவளது பாஸ் அவளிடம் சொன்னது: “மேடம் இங்கே இருக்கும் வரையில் ஒரு குறையும் இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டியது உன் பொறுப்பு’’. என்னிடமும் “உங்களுக்கு என்ன வேண்டுமானாலும் மாலினியிடம் சொன்னால் போதும்” என்று சொன்னார். எஙகள் கம்பெனியின் கொள்கை ஆன்-சைட்டில் இருக்கும்போது அவர்களை எந்த வகையிலும் தொந்தரவு செய்யக்கூடாது என்பது. அதனால் பல நாட்கள் வரை நான் மாலினியைப் போய் பார்க்கவே இல்லை. ஒரு நாள் அவளே என்னைத்தேடி வந்தாள்.
“ஏன் என்னிடம் எதுவுமே கேட்பதில்லை?” சுத்தத் தமிழைக் கேட்டதும் எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. அவளது முகம் உடை இவற்றைக்கொண்டு அவள் சிங்களப்பெண் என நினைத்திருந்தேன்.
“என்ன இத்தனை சரியான தமிழை எதிர்பார்க்கவில்லையோ? வாங்கள் ஒன்றாய் சாப்பிடலாம்” என்றாள்.
“கொஞ்சம் வேலை இருக்கிறது…” தப்பிக்கப் பார்த்தேன்.
“நோ. பாஸுடைய ஆர்டர். உங்களை லஞ்சுக்குக் கூட்டிப் போய் உங்களுக்கு இங்கு ஏதானும் குறை இருந்தால் அதை சரி செய்ய வேண்டுமாம்’’ என்றாள்.
அழகான தமிழ்ப் பேச்சு. வெட்டி வெட்டிப் பேசும் ஆஙகிலத்தில் மட்டும் முழு இலங்கை வாசனை.
அன்றிலிருந்து அடிக்கடி ஒன்றாய்ச் சாப்பிடுவோம். சில நாட்கள் தன் வீட்டிலிருந்து ஏதானும் ஸ்பெஷலாய் செய்து கொண்டு வருவாள். ஒரு வார இறுதியில் அங்கேயே தங்க வேண்டி வந்தபோது அவள் வீட்டுக்கும் அழைத்துச் சென்றாள்.
சாப்பிட்டு முடித்து சம்பிரதாயமான போட்டோ ஆல்பம் பார்க்கும் தருணம்.
“இதுதான் என் அம்மா. கேண்டியில் என் தம்பியுடன் இருக்கிறாள்.”
“சொந்த ஊரா?”
“இல்லை சொந்த ஊர் யாழ்ப்பாணம். இப்போது அங்கே நிலமை சரி இல்லையே. அதான் கேண்டிக்கு வந்து விட்டார்கள்.
இது என் பெண் ராதிகா. கெனடாவில் இருக்கிறாள். இதோ பார் என் பேத்தி.”
“பார்த்தால் பாட்டி மாதிரியா இருக்கிறாய்?”
“ராதிகா பிற்ந்த போது எனக்கு 18 வயது. அவள் பெண் பிறந்த போது அவளுக்கு 19. நான் 37 வயதிலேயே பாட்டி” எனச் சிரித்தாள்.
முதல் முறையாய் அவள் கணவனைப் பற்றிக் கேட்டேன்.
“நான் அவரைக் கடைசியாய் பார்த்தது பத்து வருடங்களுக்கு முன்பு” என்று சொன்னாள். மேலே கேட்பது நாகரீகம் அல்ல என்று விட்டுவிட்டேன். ஆனால் ஆல்பத்தில் பார்த்த போட்டோக்களில் என்னமோ இருவரும் அன்னியோன்னியமாய்தான் தோன்றினர். இத்தனை நெருக்கமாய் இருப்பவர்கள்கூட ஒருநாள் பிரிந்து போகக்கூடும் என்று நினைக்கவே சற்று ஆச்சரியமாய் இருந்தது.
இவளிடம் என்ன குறை? எப்போதும் மலர்ந்த முகத்துடன் இருப்பாள். அழகாய் உடை உடுத்துவாள். வேலையில் மகா சுறுசுறுப்பு. இவள் கணவன்தான் தவறு செய்திருப்பான், இவள் ’போடா’ என்று விட்டு வந்திருப்பாள் என்று எனக்குத் தோன்றியது.
இவளைப் போல் இன்னும் இருவருடைய நட்பும் கிட்டியதில் அந்த மூன்று வருடங்கள் வேலைப்பளுவே உறைக்காமல் ஓடிப்போயின. வங்கியில் என் வேலை முடிந்தது. பின்னும் ஃபோன், ஈமெயில் மூலம் எங்கள் தொடர்பு தொடர்ந்தது. ஒருமுறை மாலினியும் அருணியும் என்னுடன் வந்து தங்கி ஊரெல்லாம் சுற்றிப் பார்த்து, சேலை ஷாப்பிங் செய்துகொண்டு போனார்கள்.
“அடுத்தது உன்னுடைய முறை. முன்பெல்லாம்தான் வேலை வேலை என்று எங்கேயும் போக நேரம் இல்லை. இப்போது ஓய்வாய் வா. கேண்டி, அனுராதபுரம் எல்லாம் போகலாம். என் அம்மாவும் உன்னைப் பார்க்க வேண்டும் என்கிறா” என்றாள் மாலினி.
“யூ மஸ்ட் ஸ்டே வித் மீ ஆல்ஸொ’’ இது அருணி. இவள் சிங்களப்பெண். தமிழ் தெரியாது. வங்கியில் உயர் அதிகாரி. திருமணம் செய்து கொள்ளவில்லை. தன் தாயுடன் இருந்தாள்.
கடந்த சில வருடங்களில் தொடர்பு மெது மெதுவே தேய்ந்து வருடப்பிறப்பு, பொங்கல், பிறந்தநாள் போன்ற நாட்களில் வாழ்த்தும் அளவில் மட்டுமே தொடர்ந்துகொண்டிருந்தது. மாலினி வங்கிவேலையை ராஜினாமா செய்துவிட்டு இன்னொரு நல்ல வேலையில் சேர்ந்த பின்னும் அவர்கள் இருவரும் அவ்வப்போது சந்திப்பதை விடவில்லை. “பார்க்கும்போதெல்லாம் உன்னைப் பற்றி நினைப்போம், பேசுவோம்’’ என்பார்கள்.
க்றிஸ்துமஸ்ஸிற்கு சில நாட்கள் முன்பு அருணியை வாழ்த்துவதற்காக ஃபோன் செய்தபோது அவள் ஃபோனை எடுக்கவில்லை. பலமுறை முயற்சித்தபின் மாலினிக்கு ஃபோன் செய்து அருணியின் நம்பர் மாறிவிட்டதா என்று கேட்டேன்.
“நானே உனக்கு ஃபோன் செய்ய வேண்டும் என்றிருந்தேன். அருணி ஆஸ்பத்திரியில் இருக்கிறாள். அவள் அம்மா போனதிலிருந்தே மிகவும் தனித்துப் போயிருந்தாள். இப்போது டிப்ரெஷன் அதிகமாகி இருக்கிறது. ஒரு நாள் வங்கியிலேயே ஏதோ சின்ன விஷயத்துக்காக விசித்து விசித்து அழுதாளாம். அவளை ஹாஸ்பிடலில் சேர்த்து ஆஸ்த்ரேலியாவில் இருக்கும் அவளது அண்ணனுக்கு போன் செய்திருக்கிறார்கள். அவர் வந்திருக்கிறார். அவளை சில மாதங்களுக்கு தன்னுடன் கூட்டி போவார் என நினைக்கிறேன்” என்றாள்.
சிறுவயதில் தந்தையை இழந்ததினால் அருணிக்குத் தாயின்மேல் மிகவும் பிரியம். அவள் திருமணம் செய்து கொள்ளாமலிருப்பதே தன் தாயைப் பிரிய விருப்பம் இல்லாததினால் என்று கூட வங்கியில் அவளுடைய தோழி ஒருத்தி ஒருமுறை என்னிடம் சொன்னாள். அது நிஜம் என எனக்கு இப்போதுதான் தெரிந்த்து.. அவள் தாய் இறந்தபோது மிகவும் உடைந்து போனாள். போய்ப் பார்க்க வேண்டும் என நினைத்திருந்தேன். ஏதேதோ வேலைகளின் மத்தியில் அப்படியே தள்ளிப்போட்டுவிட்டேன். இப்போது இரண்டு நாட்களாவது போய் வரலாம் என்று இதோ இப்போது கிளம்பி விட்டேன்.
“ஆயூபோவான். பண்டாரநாயகே பன்னாட்டு விமான நிலயத்துக்கு உங்களை வரவேற்கிறோம்…” அறிவிப்பு ஆரம்பித்தது. விமானம் கொலொம்போவில் தரை இறங்கிக்கொண்டிருந்தது.
விமான நிலயத்துக்கு மாலினி வந்திருந்தாள்.
‘கடைசியில் இப்போதுதான் உனக்கு வர முடிந்தது பார்’’ என்று பொய்க்கோபம் காட்டிவிட்டு அன்புடன் அணைத்துக் கொண்டாள்.
“களைப்பாய் இருக்கிறாய். முதலில் என் வீட்டுக்கு போகலாம். சாயங்காலம் அருணியைப் பார்க்கப் போகலாம்” என்றாள். வழியில் இருவருமே அதிகம் பேசவில்லை. எத்தனையோ மனதில் இருந்தும் அருணியைப் பற்றிய கவலையில் வேறொன்றும் பேசத் தோன்றவில்லை.
மாலினியின் வீட்டுக்குப் போய் சற்று நேரத்துக்கெல்லாம் எனக்கு இருப்புக் கொள்ளவில்லை. “போகலாம், போகலாம்’’ என்று சின்னக் குழந்தை போல் பிடுங்கி எடுத்துவிட்டேன்.
ஒரு தனியார் நர்சிங் ஹோமின் அறையில் அருணியைப் பார்த்ததும் எனக்கு அதிர்ச்சி. இளைத்து குச்சி போல் ஆகியிருந்தாள். கண்களில் ஒரு வெறுமை. தலைமுடி எல்லாம் வெளுத்துப்போய் பல வருடங்கள் கூடிப்போனது போல் இருந்தாள். பல மாதங்களாய் சரியாய் சாப்பிட்டிருக்க மாட்டாள் எனத் தோன்றியது. எங்களைப் பார்த்து மெதுவாய்ப் புன்னகைத்தாலும் யார் என்று தெரிந்து கொண்டாளா என்பது சந்தேகமாகத்தான் இருந்தது. அவள் கையை எடுத்து என் கையில் வைத்துக் கொண்டு தடவிக் கொடுத்தேன். அவள் கண்களிலிருந்து நீர் கொட்ட ஆரம்பித்த்து. எனக்குப் பேச்சே வரவில்லை. அரை மணி நேரத்தில் அவளுக்கு களைப்பாகிப் படுத்துக்கொண்டாள். மருந்துகளின் விளைவில் அப்படியே தூங்கி விட்டாள்.
அவளுடைய அண்ணன் வந்தார்.
“அருணிக்காக இத்தனை தூரம் வந்திருக்கிறீர்கள். தாங்க்ஸ்” என்றார்.
“இன்னும் முன்பே வந்திருக்க வேண்டும். டாக்டர் என்ன சொல்கிறார்?” என்றேன்.
“அம்மா போன அதிர்ச்சி, தனிமை, உடல் பலவீனம் எல்லாமாய் சேர்ந்து இப்படி ஆகியிருக்கிறது. டாக்டர் சில நாட்கள் விடுமுறை, இடமாற்றம், துணைக்கு யாராவது கூட இருப்பது இதெல்லாம் அவள் குணமாக அவசியம் என்கிறார். என்னால் வெகுநாட்கள் வேலையிலிருந்து விடுப்பு எடுத்து இங்கு இருக்க இயலாது. அதனால் அருணியை என்னுடன் கூப்பிட்டுப் போகலாம் என்றிருக்கிறேன். இப்போது மூன்று மாதங்களுக்கு. பின்னால் தேவைப்பட்டால் நிரந்தரமாய்,” என்றார்.
“தூங்கிப் போய் விட்டாள். நாங்கள் போய் நாளை வருகிறோம். இல்லை இங்கே அவளுடன் இருந்தால் உங்களுக்கு உதவியாய் இருக்குமா?”
“இல்லை. நான் இங்கேதான் இருக்கப் போகிறேன். நீங்கள் போய் ரெஸ்ட் எடுத்து நாளை வாருங்கள்” என்று விடை கொடுத்தார்.
வழி எல்லாம் அருணி முன்பு எப்படி இருப்பாள், வேலையில் எத்தனை நேர்த்தி, கண்டிப்பு, பழகுவதில் எவ்வளவு தாராள குணம் என்பதைப் பற்றித்தான் பேச்சு. வீடு வந்தபோது மணி பத்தாகிவிட்டது. இருவருக்கும் பசி இல்லை. தூக்கமும் வரவில்லை. அதனால் பால்கனியில் நாற்காலிகளை இழுத்துப் போட்டுக் கொண்டு ஆளுக்கொரு கோப்பை ஹாட் சாக்லேட் கலந்துகொண்டு வந்து உட்கார்ந்தோம். வீதியில் நடமாட்டம் இல்லை. அக்கம்பக்கத்தில் சில வீடுகளின் ஜன்னல்களின் வழியே டி.வி. சப்தம் மட்டும்.
“மாலினி, இதுவரை உன் சொந்த வாழ்வைப் பற்றி நான் பேசியதில்லை. ஆனால் இன்று உரிமையுடன் சொல்லத் தோன்றுகிறது. இன்னும் எத்தனை நாள் நீ தனியாகவே இருக்கப் போகிறாய்?” என்று கேட்டேன்.
“ராஜன் இருந்த இடத்தில் இன்னொருவரை நினைத்துப் பார்க்க முடியவில்லை. என்ன செய்யட்டும்?’’ என்றாள்.
“அவரை அவ்வளவு காதலிக்கிறாய் என்றால் ஏன் அவரை விட்டு வந்தாயாம். கஷ்டமோ நஷ்டமோ கூடவே இருந்திருக்க வேண்டியதுதானே’’ என்றேன்
“என்ன சொல்கிறாய் நீ?” என்றாள் அதிர்ச்சியுடன்.
‘பின்னே ஏன் தனியாய் இருக்கிறாய்?’’ என்றேன் குழப்பத்துடன்.
“எனக்கும் ராஜசேகரனுக்கும் திருமணம் ஆன போது எனக்கு வயது 17. அவருக்கு 25. அதிகமாய் யாருடனும் பேச மாட்டார். ஆனால் மிக மென்மையான மனிதர். என்னை ஒரு பூ போல நடத்துவார். கான்ட்ராக்ட் எடுத்து கட்டுமான வேலைகள் செய்யும் தொழிலில் நல்ல வருமானம். மிகவும் சந்தோஷமாய் இருந்தோம். எனக்குப் பதினெட்டு வயதில் ராதிகா பிறந்தாள். இரண்டு வருடத்துக்குப் பின் குமரன். நாங்கள்தான் அவருக்கு உலகமே.
யாழ்பாணத்தில் கலவரம் ஆரம்பித்தது. எல்லாம் பாழாய் போச்சு. ஒரு நாள் ராஜன் ஊரில் இல்லை. எங்கள் ஊரில் ராணுவத்தினர் வீடுகளில் புகுந்து சோதனை நடத்துகிறார்கள் என்று செய்தி. இதற்கு முன்னால் இதுபோல் நடந்த சில இடங்களில் ராணுவம் நுழைந்தபோது நடந்திருந்த பயங்கரங்களைக் கேள்விப்பட்டிருந்த்தினால் ஏதும் தவறு செய்யவில்லை என்றாலும் கூட ரொம்ப பயந்து போனேன். ராஜனும் ஊரில் இல்லை. நான் மட்டுமே பிள்ளைகளுடன். அக்கம்பக்கத்து வீடுகளில் இருந்தவர்களின் ஆலோசனைப்படி ஒரு பள்ளியினுள்ளேயே நாள் முழுதும் ஒளிந்து இருந்தோம். பலரும் கூடி இருந்ததில் சற்று ஆறுதல். ஆனால் சின்னப்பிள்ளை பசியால் குரல் கொடுத்து விடப்போகிறானே என பயந்து கிட்டதட்ட நாள் முழுதும் அவனுக்கு பாலூட்டியபடியே இருந்தேன். ஒரு பக்கம் இனம்புரியாத கிலி. இன்னொரு பக்கம் குழந்தைகளை எப்படியாவது பாதுகாக்க வேண்டும் என்ற உத்வேகம். மார்பகங்களில் தாங்க முடியாத வலி. ஒரு வழியாய் மறுநாள் காலையில் வீடு போனோம்.
மறுநாளே ராஜன் பதறி ஓடி வந்துவிட்டார். ‘உனக்கோ பிள்ளைகளுக்கோ ஏதானும் ஆகி இருந்தால் நானும் செத்துப் போய் விடுவேன்’ என்று கலங்கி விட்டார். அடுத்த இரண்டு மூன்று வருடங்களில் வடக்கில் நிலைமை மோசமாகிக்கொண்டே போனதால் கேண்டியில் என் தம்பி வீட்டருகேயே வீடு பார்த்துக் கொண்டு வந்துவிட்டோம். யாழ்பாணத்தில் லட்சங்கள் செலவழித்துக் கட்டிய புது வீடு ஒரு நாள் கூடப் போய் இருக்காமலே பாழாய்க் கிடந்தது. கேண்டியிலும் மகளையும் மகனையும் பொத்திப் பொத்தி பாதுகாக்க வேண்டிய நிலைமை. மகளை ஏதானும் செய்துவிடுவார்களோ, மகனை விசாரணை என்று அழைத்துச் சென்றுவிடுவார்களோ அல்லது இயக்கத்தில் சேர்த்து விடுவார்களோ என்று தினமும் செத்து செத்துப் பிழைப்பேன். ராஜனும் முடிந்த வரையில் ஊரிலேயே இருக்க ஆரம்பித்தார்.
ஒருநாள் இரவு வீட்டுக்கு உறவினர்களை விருந்துக்கு அழைத்திருந்தோம். அவர்கள் எல்லாம் விடைபெற்றுப் போனபின் நான் சமையலறையை சுத்தம் செய்து கொண்டிருந்தேன். பனிரெண்டு வயது ராதிகாவும், ஒன்பது வயது குமரனும் உறங்கப் போய்விட்டனர். விருந்தினர்களில் ஒருவருடன் வாக்குவாதம் கொஞ்சம் மீறிப்போனது. அதில் ராஜன் இன்னும் சூடாய் இருந்தார். தனியாய் உட்கார்ந்து விஸ்கி குடித்துக் கொண்டிருந்தார்.
கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. யாராய் இருக்கும் பத்தரை மணிக்கு?
நானும் விரைந்து வாசலுக்குப் போனேன். ராஜன் யாரோ இரண்டு பேருடன் பேசிக் கொண்டிருந்தார்.
‘என்ன?’ என்றேன் கலவரத்துடன்.
‘கொஞ்சம் இவர்களுடன் வெளியில் போய் வருகிறேன்’ என்றார்.
எனக்கு பயமாயிற்று. யார் இவர்கள்? ‘ராஜன் கொஞ்சம் இப்படி வருகிறீர்களா?’ எனக் கூப்பிட்டேன்.
வந்தவர்களில் ஒருவர் புன்னகைத்துக் கொண்டே,
‘ஒன்றும் இல்லை. சாதாரணமாய்தான். அவரிடம் சில கேள்விகள் கேட்க வேண்டும். காலையில் அனுப்பி விடுவோம்’ என்று சிங்களத்தில் சொன்னார்.
‘காலையில் போகலாமே’ என்று கெஞ்சினேன்.
‘இல்லை இப்போதே வரவேண்டும்’ என்றார். குரல் கொஞ்சம் கடுமை ஆனது.
‘அப்படியானால் நானும் கூட வருகிறேனே’ என்றேன்.
‘ஒன்றும் பயப்படாதே. காலையில் வந்து விடுவேன். பிள்ளைகளை எழுப்பாதே. தூங்கட்டும்’
அதுதான் நான் ராஜனை கடைசியாய் பார்த்தது. மறுநாள் போலிஸ் ஸ்டேஷனுக்குப் போய் கேட்டால் வேறு இடத்துக்கு விசாரணைக்கு அழைத்துப் போயிருக்கிறார்கள் என பதில் வந்தது. அதுவரையில் அவ்வளவாய் வெளி உலக அனுபவம் கூட கிடையாது. வெளிவிவகாரங்கள் எல்லாமே ராஜன்தான் பார்த்துக்கொள்வார். எப்படித்தான் எனக்குத் துணிச்சல் வந்ததோ அடுத்த சில வருடங்களில் நான் போகாத ஸ்டேஷன் இல்லை விசாரிக்காத கேம்ப் இல்லை. எங்குமே சரியான பதில் இல்லை. என் அம்மாவும் தம்பியும் என்னுடன் வந்து இருந்தார்களோ என் குழந்தைகள் உயிருடன் இருந்தார்கள். இல்லயானால் நான் சமைப்பது சாப்பிடுவது எல்லாம் மறந்து போனேன். ஒரு பிணம் போல் நடமாடிக்கொண்டிருந்தேன். இப்படி இரண்டு வருடங்கள் போயின.
ஒரு நாள் என் தம்பி மெதுவாக என்னிடம் கேட்டான்: ‘அக்கா இனிமேலும் உன் கணவர் வருவார் என்ற நம்பிக்கை உனக்கு இருக்கிறதா?’
‘அவர் உயிருடன் இருந்தால் வராமல் போகமாட்டார். அவர் உடலை நான் பார்க்கவில்லையே. அப்போ உயிருடன்தானே எங்கோ இருக்கவேண்டும்.’ என்றேன் நான்.”
மாலினி சொல்லச் சொல்ல நான் உறைந்தே போனேன். இத்தனை பயங்கரங்களை சந்தித்த முகமா இது. இன்னும் இவளால் எப்படி சிரித்துப் பேச முடிகிறது? இப்போதுகூட யாரோ இன்னொருவருடைய கதை போலத்தான் அவள் சொல்லிக்கொண்டிருந்தாள்:
“வேலைக்குப் போய் வருவேன். ஆனால் இரவெல்லாம் விழித்திருப்பேன். அவர் வந்துவிடுவார் என்ற நப்பாசையில். சாப்பிடும் வேளையில் அவருக்கும் ஒரு தட்டு போட்டு வைத்திருப்பேன். அலமாரியில் அவருடைய துணிகளை மடித்து அழகாய் வைத்திருப்பேன் அவர் வந்தால் போட்டுக் கொள்ள வேண்டுமே என்று. இப்போதும் பார்.’’
என்று ஒரு அலமாரியைத் திறந்து காண்பித்தாள் அதில் ஒரு தட்டில் அழகாய் மடித்து வைக்கப்பட்டிருந்த பாண்டுகள் ஷர்ட்டுகள். அரை பாட்டில் விஸ்கி, ஒரு சிறிய பாட்டில் செண்ட்.
“ஏன் அவரைக் குறிவைத்தார்கள்.என்ன காரணத்துக்காக அவரிடம் விசாரணை? இயக்கத்துக்கு அதரவு கொடுத்தாரா?”
“ஒருபோதும் கிடையாது. அவருக்கு எல்லாமே அவரது பிஸினெஸ், நாங்கள் அவ்வளவுதான். நெருங்கிய நண்பர்கள் கூட விரல்விட்டு எண்ணி விடலாம். மிஞ்சிப் போனால் என்றாவது விவாதங்களில் தமிழர் உரிமை பற்றி ஏதானும் சொல்வார். அதுவும் நண்பர்களிடையே வீட்டின் நான்கு சுவர்களுக்குள். இது போன்ற சமயங்களில் ஏன், ஏதற்கு என்ற கேள்விகளே அர்த்தமற்றுப் போய் விடுகின்றன. இந்த நாட்டில் இந்த சமயத்தில் தமிழராய் இருந்தது மட்டுமே சிலர் செய்த பாவம்.
முதலில் நானும் கேள்விகள் கேட்டேன். பின்பு புரிந்தது சில கேள்விகளுக்கு பதிலே கிடையாது என்று. பிள்ளைகளை வளர்க்கவேண்டுமே. அதனால் உயிருடன் இருந்தேன். பதினெட்டு வயதிலேயே ராதிகாவுக்கு நல்ல மாப்பிள்ளை அமைந்தார். கனடாவில் நல்ல உத்தியோகம். அவரே உதவி செய்து மகனையும் கனடாவில் படிப்புக்கு கூட்டிச் சென்று விட்டார். நான் மட்டும் இங்கே. சில வருடங்களுக்கு முன் வரை அவ்வப்போது நெருங்கிய நண்பர்கள் மூலம் என் கதை தெரிந்த சிலர் என்னைத் திருமணம் செய்து கொள்ள முன்வந்தார்கள். ஆனால் ‘ஒருவேளை ராஜன் திரும்பி வந்தால்’ என்ற எண்ணத்தில் நான் அதைப் பற்றி யோசிக்கவே இல்லை. கொழும்பு வந்தபின் யரிடமும் என் கதையை சொல்லவில்லை. வீண் வம்பு பேசுவார்கள். சிலர் தவறாய் நடக்கவும் முற்படுவார்கள். எதற்கு என்றுதான் அவர் எங்களுடன் இல்லை என்று மட்டும் பொதுவாய் சொல்லிவிடுவேன்.’’
“இன்னும் அவர் வருவார் என நம்புகிறாயா?” என்று கேட்டேன்.
“சில வருடங்கள் முன்பு வரை தீவிரமாய் நம்பினேன். பிறகு ஆர்மியில் ஒரு பெரிய ஆபீசரை ஒரு நண்பர் மூலம் சந்தித்து அவரைக் கெஞ்சினேன். அவர் விசாரித்துப் பார்த்துவிட்டு சொன்னது: இனிமேல் தேட வேண்டாம். அவர் வர மாட்டார்.”
இதை சொல்லும்போது அவலது பார்வை அனிச்சையாய் மேசை மேலிருந்த ராஜனின் போட்டொ மேல் சென்றது. எழுந்து சென்று அவருடைய உருவத்தைக் கையால் தடவிக்கொண்டே வந்தாள். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இந்தக் கொடுமையைப் பற்றி என்ன சொல்ல முடியும்!
முதலில் சுதாரித்துகொண்டது அவள்தான்.
“வா நேரமாகிறது. உள்ளே போய் படுப்போம்.”
என்னை எழுப்ப நீட்டிய அவள் கையைப் பிடித்தபடியே உட்கார்ந்திருந்தேன்.
“கவலைப்படாதே. நானும் அருணியைப் போல் ஆக மாட்டேன். அப்படி இருந்தாலும் பத்து வருடங்களுக்கு முன்பே அதுபோல ஆகி இருக்க வேண்டும். என் பிள்ளைகள், அம்மா முக்கியமாய் என் தம்பி இவர்கள் எல்லோரும் எனக்கு அப்படி எதுவும் ஆகாமல் என்னைத் தாங்கி இருக்கிறார்கள்.
இன்னும் சில பேருடைய கதை எல்லாம் கேட்டால் எனக்கு நடந்தது ஒன்றுமே இல்லை போல் இருக்கும். குழந்தைகளை, கணவன்மாரை இழந்த பல பெண்கள், பெற்றோரை இழந்த சின்னச் சின்னக் குழந்தைகள், தாய், சகோதரி ஆகியோர் பலாத்காரப்படுத்தப்பட்டதை கண்ணால் பார்த்து உடைந்து போனவர்கள் - அந்தக் கொடுமை எல்லாம் சொல்லக் கூட இயலாது. அது போன்றவர்களுக்காக ஒரு சேவை மையம் இருக்கிறது. ரெட் க்ராஸ் ஆரம்பித்தது. அங்கே வாரா வாரம் போய் என்னால் ஆன உதவி செய்கிறேன். இந்த 25 வருடக்கொடுமைகளில் துவண்டு போனவர்களுக்கு சகோதரியாய் தாயாய் தோழியாய் இருக்கிறேன். நான் எங்கே தனியாய் இருக்கிறேன்?”
இவர்கள் ஒருவருக்கொருவர் என்ன சொல்லி ஆறுதல் சொல்வார்கள் - என் வீட்டிலும் 4 பேர் அனியாயமாய் செத்துப் போனார்கள் என்றா? உனக்கு இரண்டு காலும் போய்விட்டதா எனக்கு ஒரு கண்தான் போச்சு என்றா? போர் முடிந்தாலும் ஊனப்பட்ட இந்த குடும்பங்களுக்கு இந்த வடுக்கள் ஆற எத்தனை தலைமுறைகள் ஆகும்? அப்போதும் ஆறுமா?
“சரி. நீ தனியாய் இல்லை. ஒத்துக்கொள்கிறேன். ஆனால் உனக்கு என்று வாழ்க்கையிலே ஒரு துணை, வீட்டுக்கு வந்தால் பேச, நல்லது கெட்ட்தை பகிர்ந்து கொள்ள, உனக்கு உடம்பு வந்தால் பாத்துக்கொள்ள. வேண்டாமா? அப்புறம் அந்த பேண்ட் ஷர்டெல்லாம் அலமாரியில் இன்னும் எதுக்கு?”
“அவர்கள் ரெகார்டிலும் தப்பு இருக்கலாம் இல்லையா. சரி போய்ப் படு. விடிஞ்சேவிடும் போல் இருக்கு” என்று கதவுகளை மூடினாள்.
எனக்கு தூரத்தில் எங்கெயோ அக்கூ குருவியின் குரல் கேட்டது போல இருந்தது
nantri: Solvanam.com

No comments: