இலங்கைச் செய்திகள்

.
ஊடகத்துறையினரை அராஜக நடவடிக்கைகளால் முடக்க முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது பிரதியமைச்சர் முத்துசிவலிங்கம் கண்டனம்
Tuesday, 02 August 2011 

 உதயன் பத்திரிகையின் செய்தியாசிரியர் ஞானசுந்தரம் குகநாதன் இனந்தெரியாத குழுவினரால் தாக்கப்பட்ட சம்பவத்தை இ.தொ.கா.வன்மையாகக் கண்டிப்பதாக இ.தொ.கா.தலைவரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான முத்து சிவலிங்கம் தெரிவித்துள்ளார்.


பிரதி அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், மக்களுக்கு சரியான தகவல்களை உரிய வடிவத்தில் வழங்குகின்ற ஊடகத்துறையினரை அராஜக செயற்பாடுகளினால் முடக்குவது வேதனை அளிப்பதுடன் கண்டிக்கத்தக்க விடயமுமாகும்.



சமூக அந்தஸ்து அற்ற காடையர்களைக் கொண்டு அரசியல் இலாபத்திற்காகவும் சுயலாபத்திற்காகவும் ஊடகத்துறையினரை தாக்குவதும் அவர்களுக்கு அச்சுறுத்தல் விடுவதும் தங்களது தவறுகளை மறைப்பதற்கான செயற்பாடுகள் ஆகும்.

இவ்வாறான கீழ்த்தரமான செயல்களை கைவிட்டு நீதியான செயற்பாடுகளை முன் எடுத்துச் செல்வதற்கு சம்பந்தப்பட்டவர்கள் முன்வர வேண்டும். ஊடகத்துறை மூலம் மக்களுக்கு பல உண்மைகள் தெரியவருகின்றன. இதனூடாக பல நன்மைகளை மக்கள் அடைகின்றார்கள்.

ஆகையால் ஊடகத்துறையை கருத்துப் பரிமாற்றங்களை மேற்கொள்ளுவதற்கும் சுதந்திரமாக செயற்படுவதற்கும் உதவ வேண்டியது அனைவரதும் கடமையாகும். அவர்களுக்கான பாதுகாப்பையும் கௌரவத்தையும் வழங்குவதற்கு அரசு உரிய நடவடிக்கையினை மேற்கொள்வதுடன் நாட்டினதும் அரசினதும் நற்பெயரை கெடுக்கும் வகையில் இவ்வாறான கீழ்த்தரமான செயற்பாடுகளில் ஈடுபடும் கும்பல்களை இனங்கண்டு சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனைகளை பெற்றுக் கொடுக்க காவல் துறையினர் துரிதமாக விசாரணைகளை மேற்கொண்டு செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றேன் என பிரதியமைச்சர் தெரியவித்துள்ளார்.
நன்றி தினக்குரல்

உதயன் செய்தியாசிரியர் மீதான தாக்குதல்
Monday, 01 August 2011

இலங்கையில் ஊடகவியலாளர்களும் ஊடக நிறுவனங்களும் எதிர்நோக்குகின்ற அச்சுறுத்தல்கள் தணிவதற்கான அறிகுறியைக் காணக்கூடியதாக இல்லை. ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்கதையாகவே இருக்கின்றன. ஊடகத்துறைக்கு எதிராக வன்முறையைக் கட்டவிழ்த்துவிடும் சக்திகளின் அட்டகாசத்தை உலகிற்கு வெளிக்காட்டி வரும் சம்பவங்களின் வரிசையில் பிந்திய சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை மாலை யாழ்நகரில் நாவலர் வீதியில் இடம்பெற்றிருக்கிறது. யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உதயன் பத்திரிகையின் செய்தி ஆசிரியரான ஞானசுந்தரம் குகநாதன் கடமை முடிந்து அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த வேளையில் இனந்தெரியாத கும்பலொன்றினால் தாக்கப்பட்டிருக்கிறார். இரும்புக் கம்பிகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதலினால் தலையில் படுகாயமடைந்த குகநாதன் யாழ்.போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். உதயன் பத்திரிகையின் செய்தியாளரான எஸ்.கவிதரன் வன்முறைக் கும்பலொன்றினால் யாழ்.இந்துக் கல்லூரிக்கு அண்மையாக தாக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்று இரு மாதங்கள் கடப்பதற்குள் குகநாதன் மீதான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

வடக்கு உள்ளூராட்சிச் சபைகளுக்கான தேர்தல் முடிவடைந்த சில தினங்களுக்குள் குகநாதன் மீதான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளதுடன் பல்வேறு சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது. ஊடகவியலாளர்களுக்கெதிரான ஒவ்வொரு தாக்குதல், கொலைச் சம்பவங்களுக்குப் பிறகும் முழுமையான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு சம்பவங்களுடன் சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன்நிறுத்துவார்கள் என்று அரசாங்கம் உறுதியளிக்கத் தவறுவதில்லை. ஆனால் இதுவரை ஊடகவியலாளர் மீதான வன்முறையுடன் தொடர்புபட்டவர்கள் எவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டதாகவும் தெரியவில்லை. இலங்கையில் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்துவதென்பது தெருநாய்களுக்கு கல் எறிவதை விடவும் சுலபமான விடயமாகிவிட்டது.

உதயன் செய்தியாசிரியர் குகநாதன் கடுமையாகத் தாக்கப்பட்டு உயிருக்குப் போராடி தற்போது ஓரளவு மீண்டுள்ள நிலையில், கொக்காவில் இராணுவ முகாமில் ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வொன்றை சனிக்கிழமை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல இலங்கையில் ஊடக சுதந்திரத்திற்கு எதுவித அச்சுறுத்தல்களும் இல்லை. உதயன் பத்திரிகை ஆசிரியர் குகநாதன் மீதான தாக்குதல் குறித்த ஒரு சம்பவத்தை மட்டும் வைத்துக் கொண்டு இலங்கையில் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்கின்றதெனக் கூறிவிட முடியாததென்ற கருத்தை முன்வைத்துள்ளமை நகைப்புக்குரியதொரு விடயமாகவேயுள்ளது.

இதனை ஒரு சாதாரண சம்பவம் எனக் கூறி புறந்தள்ளி விடுவதற்கு நான் முயற்சிக்கவில்லை. இவ்வாறான ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் நாங்கள் அதிக அக்கறை செலுத்த வேண்டும். அத்துடன் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். இத்தகைய தாக்குதல் சம்பவங்கள் ஒரு கோணத்திலன்றி பல்வேறு கோணங்களில் ஆராயப்பட வேண்டிய தேவை இருக்கின்றது. உதயன் செய்தியாசிரியர் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு நீதியின் முன்நிறுத்தப்படுவார்கள் என்றும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கூறியுள்ளார். அமைச்சரின் இந்த வாக்குறுதியும் வழமையாக இடம்பெறுவதைப் போன்றே மாயமாகிவிடக்கூடாது.

ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் இதுவரை காலமும் மேற்கொள்ளப்பட்டிருக்கக் கூடிய விசாரணைகளின் இலட்சணம் அரசாங்கத் தரப்பினால் ஊடகவியலாளர்களின் பாதுகாப்புத் தொடர்பில் அளிக்கப்பட்டிருக்கக் கூடிய எந்தவொரு உறுதிமொழி மீதும் நம்பிக்கை வைப்பதற்கு உதவவில்லை என்பதே எமது உறுதியான அபிப்பிராயம். இலங்கையில் இன்று ஊடகவியலாளர்களுக்கு எழுதுவதற்கு இருக்கின்ற சுதந்திரத்தை விடவும் அவர்கள் மீது தாக்குதல் நடத்துகின்ற சக்திகள் அதிக சுதந்திரத்தைக் கொண்டிருப்பதையே இந்தத் தாக்குதல் சம்பவம் உணர்த்துகின்றது. இந்த சக்திகள் சட்டத்திலிருந்து விடுபட்டவர்களாக செயற்படும் சூழ்நிலை இருக்கும் வரை ஊடகவியலாளர்களும் ஊடக சுதந்திரமும் எதிர்நோக்குகின்ற அச்சுறுத்தல்களை இல்லாமல் செய்வதென்பது சாத்தியமற்றதொரு விடயமாகவே இருக்கும். ஊடகவியலாளர்கள் மீதான வன்முறைகள் தொடர்பில் அரசு உறுதிமிக்க நடவடிக்கைகளை எடுக்காத பட்சத்தில் குகநாதன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளுக்கும் முன்னைய விசாரணைகளின் கதியே இடம்பெறும் என்பது சொல்லித் தெரிய வேண்டிய விடயமல்ல.

நன்றி தினக்குரல்


சங்கிலிய மன்னனின் புணருத்தாரனம் செய்யப்பட்ட சிலை திறந்து வைப்பு(பட இணைப்பு)


3/8/2011
யாழ்ப்பாணம் மாநகரசபையினால் யாழ்ப்பாண இராச்சியத்தின் இறுதி மன்னனான சங்கிலிய மன்னனின் புணருத்தாரனம் செய்யப்பட்ட சிலை திறப்பு விழா இன்று காலை 7.15 மணியளவில் நடைபெற்றது.

யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட பாரம்பரிய கைத்தொழில்; மற்றும் சிறுகைத் தொழில்கள் அமைச்சர் டக்ளஸ்தேவானந்தா சங்கிலியனின் சிலையைத் திறந்து வைத்ததுடன் நினைவுக் கல்லையும் திறந்து வைத்தார்.

பிரதம விருந்தினர் உட்பட ஏனைய பிரமுகர்களும் பருத்தித்துறை வீதியில் உள்ள குமார வீதிச்சந்தியில் இருந்து மேளவாத்தியத்துடன் ஊர்வலமாக விழா மண்டபத்திற்;கு அழைத்து வரப்பட்டார்கள். தொடர்ந்து சமயத் தலைவர்களின் ஆசியுரைகள் இடம்பெற்றன.

யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும்; யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார், யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரெட்ணம் மற்றும் யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஆளும் கட்சி உறுப்பினர்கள் இலங்கை தமிழரசுக்கட்சியின் உறுப்பினர் றெமேடியஸ் உட்பட பாடசாலை மாணவாகள், அதிபர்கள் யாழ். செயலக அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டார்கள்.






நன்றி வீரகேசரி


இலங்கைக்கு பொருளாதார தடை விதிக்கமுடியாது : பிரதமர் மன்மோகன் சிங்


3/8/2011

லங்கைத் தமிழர்களின் இன்னல்களுக்கு தீர்வுகான தமிழக அரசியல்வாதிகள் கூறுவதைப் போல இலங்கைக்கு பொருளாதார கட்டுப்பாடு விதிக்கமுடியாது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோவிடம் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

மேலும், அவ்வாறு பொருளாதார கட்டுப்பாடு விதிக்கப்படும் சந்தர்ப்பத்தில் இந்தியாவுக்கு பதிலாக சீனப் பொருளாதார நடவடிக்கைகள் இலங்கையில் பலம் பெறக் கூடிய சந்தர்ப்பம் ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, இந்திய மீனவர்களை தாக்குவதற்காக இலங்கைக் கடற்படைக்கு சீனா ஏற்கனவே உதவிகளை வழங்கி வருவதாகவும் இந்தியாவை விட பாகிஸ்தான் இலங்கை உறவு சிறப்பாக காணப்படுவதாகவும் வைகோ தெரிவித்துள்ளார்.

அத்தோடு ராஜீவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளிகளான பேரறிவாளன் மற்றும் நளினி ஆகியோர் வழக்கு குறித்து கவனம் கொள்ளுமாறும் வைகோ, மன்மோகன் சிங்கிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இதன்போது வழக்குக் குறித்து தான் உள்துறை அமைச்சருக்கு தெரியப்படுத்தி கவனத்தில் கொள்ளுமாறு தெரிவிப்பதாக மன்மோகன் சிங் உறுதியளித்தார். இந்த சந்திப்பின் பின் வைகோ உள்துறை அமைச்சர் பி.சிதம்பரத்தினை சந்தித்துக் கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.


நன்றி வீரகேசரி




நல்லூர் கந்தசுவாமி கோயிலின் வருடாந்த மஹோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்(பட இணைப்பு)


4/8/2011
நல்லூர் கந்தசுவாமி கோயிலின் வருடாந்த மஹோற்சவம் இன்று வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. திருவிழா தொடர்ந்து 25 நாட்களுக்கு இடம்பெறவுள்ளது.

இன்று காலை விசேட பூசை, அபிசேகங்கள் இடம்பெற்று முற்பகல் 10 மணிக்கு கொடியேற்றம் இடம்பெற்றது.

நல்லூர் ஆலயத் திருவிழாவுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாக்கப்பட்டுள்ளன. அத்துடன் பக்தர்களின் நலன் கருதி குடிதண்ணீர், சுகாதார வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் நல்லூர் ஆலய வீதியினூடான போக்குவரத்தும் தடைசெய்யப்பட்டுள்ளது.

ஆலய வீதியில் விசேட முதலுதவிச் சிகிச்சைப் பிரிவு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் நல்லூர் உற்சவகாலத்தின் போது தமிழ் பொலிஸார் கடமையில் ஈடுபடவுள்ளனர். அத்துடன் ஆலயத்தின் வீதிகளில் கண்காணிப்பு வீடியோக் கமராக்கள் பொருத்துவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நல்லூர் ஆலய முன்வீதி, பின்வீதி, அரசடி வீதி ஆகியவற்றில் அலங்காரப் பந்தல்களும் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க பெருந்திருவிழாவில் இம்முறை ஏராளமானோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்க்கப்படுகின்றது.
நன்றி வீரகேசரி இணையம்
Pics by: Nirshan Ramanujam, Sujeewa kumar










யாழ். மாவட்ட மக்கள் மத்தியில் உளவியல் பாதிப்பு: அமெரிக்க மருத்துவர் சங்கம்

4/8/2011
யாழ்ப்பாணம் மாவட்ட மக்கள் மத்தியில் யுத்தம் மற்றும் இடப்பெயர்வுடன் தொடர்புடைய உளவியல் பாதிப்பு குறிப்பிடத்தக்க அளவில் காணப்படுவதாக அமெரிக்க மருத்துவர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

யுத்தத்தின் பின்னர், யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்களின் உளநலம் எப்படி இருக்கின்றது என்பதைக் கண்டறிவதற்காகக் கடந்த 2009ஆம் ஆண்டு ஜூலை மாதம் தொடக்கம் செப்டெம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் அமெரிக்க மருத்துவர் சங்கத்தைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்களினால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரீ எஸ்டி எனப்படும் நெருக்கீட்டிற்குப் பிற்பட்ட மனவடு நோய் 13 வீதமாகவும், அங்சைட்டி எனப்படும், பதகளிப்பு நோய் 48.5 வீதமாகவும், டிப்ரஸன் அதாவது மனச்சோர்வு 41.8 வீதமாகவும் இருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

இது உளநலம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள கொசோவா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் போருக்குப் பிந்திய மக்களின் உளவியல் நிலைமையுடன் ஒப்பு நோக்கத்தக்கது என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியிருக்கின்றது.

யாழ். மாவட்டத்தில் உள்ள இடம்பெயர்ந்த மக்களில் 68 வீதமானவர்கள், ஆகக்குறைந்தது ஒரு மன நெருக்கீட்டுச் சம்பவத்திற்கு அல்லது பலதரப்பட்ட மனநெருக்கீட்டுச் சம்பவங்களுக்கு இடப்பெயர்வின்போது ஆளாகியிருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இலங்கையின் இறுதி யுத்தத்தின் போது மூன்று இலட்சம் மக்கள் போரினால் இடம்பெயர நேரிட்டது.

நன்றி வீரகேசரி இணையம்



SLIIT - ஷெஃபீல்ட் ஹலாம் பல்கலைக்கழகம் இணைந்து இலங்கையில் பிரித்தானியாவின் MBA கற்கைகள் அறிமுகம்

4/8/2011
ஐரோப்பாவின் முன்னணி பல்கலைக்கழகங்களில் ஒன்றான ஷெஃபீல்ட் ஹலாம் பல்கலைக்கழகம் மற்றும் இலங்கை தகவல் தொழில்நுட்ப கல்வியகம் என்பன இணைந்து பிரித்தானியாவின் வர்த்தக முகாமைத்துவ துறையில் இளமாணிப்பட்டத்துக்கான கற்கைகளை இலங்கையில் அறிமுகம் செய்துள்ளன.

இலங்கையில் தற்போது நிலவும் வர்த்தக சூழலுக்கு அமைவாக துறைசார் கற்களை பூர்த்தி செய்த இளைஞர்களுக்கான கேள்வி அதிகரித்த வண்ணமுள்ளது.

இத்துறைகளில் நிலவும் கேள்விகளை நிவர்த்தி செய்யும் வகையில், கல்வியகம் இந்த கற்கைகளுக்காக தற்போது விண்ணப்பங்களை கோரியுள்ளது. இந்த கற்கைகளை மாணவர்கள் இலங்கையில் தொடர முடிவதுடன், கற்கையை பூர்த்தி செய்யும் பட்சத்தில் பிரித்தானியாவிலிருந்து அங்கீகாரம் பெற்ற சான்றிதழை பெற்றுக் கொள்ள முடியும்.

இந்த கற்கை குறித்து இலங்கை தகவல் தொழில்நுட்ப கல்வியகத்தின் தலைவர் பேராசிரியர் எஸ்.கருணாரத்ன கருத்து தெரிவிக்கையில், “இந்த கற்கையானது இலங்கை மாணவர்களுக்கு சர்வதேச தர சான்றிதழை பெற்றுக் கொள்ள சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது. இலங்கையர்களும், தெற்காசிய பிராந்தியத்தை சேர்ந்த மாணவர்களும் இதன் மூலம் சிறந்த அனுகூலங்களை பெற்றுக் கொள்ள முடியும் என்றார்.

இந்த கற்கை நெறி எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் முதல் ஆரம்பமாகவுள்ளதுடன், இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நன்றி வீரகேசரி இணையம்



இலங்கைக்கு சமாதானம் கானல் நீரா?


31/7/2011
வடக்கு கிழக்கில் இறைமைக்கு மதிப்புக் கொடுத்து ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்பதுடன் சமமான பிரஜைகளாக பாதுகாப்புடனும் கௌரவமாகவும் வாழும் நிலைமைகள் தங்களுக்கு ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதை நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தல் மூலமாக தமிழ் மக்கள் சர்வதேச சமூகத்திற்கும் பெரும்பான்மை மக்களுக்கும் உரத்துச் சொல்லியிருக்கின்றனர்.

இந்த வெற்றி சொல்லும் பல்வேறு நிலைப்பாடுகள் துல்லியமாக கவனிக்கப்பட வேண்டியவை எனவும் இதில் குறிப்பாகத் தமிழர்களுக்கு தமிழீழம் என்ற ஒன்று வழங்கப்படாவிட்டாலும் தமிழர்கள் வாழும் பகுதிகள் அறிவிக்கப்படாத தமிழீழமாக இருக்கும். இதனை யாராலும் மாற்றிவிட முடியாது என தமிழகத்தின் பிரதான நாளிதழான "தினமணி' தனது ஆசிரியர் தலையங்கத்தில் சுட்டிக் காட்டியுள்ளது. இது மட்டுமின்றி "தமிழர் பகுதியில் சிங்களவர்களைக் குடியமர்த்தி "சிங்களத் தமிழர்' கலப்பினத்தை உருவாக்கி தமிழர் குரலை ஒடுக்கிவிட முடியும் என்கின்ற இலங்கை அரசின் எண்ணத்தில் நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் மூலம் மண் விழுந்திருக்கின்றது'.

"இந்த வெற்றியைச் சிதைப்பதற்கு தமிழர் மத்தியில் புதிய புதிய கட்சிகளை உருவாக்கி இச் சக்தியை வலுவிழக்கச் செய்யும் நடவடிக்கைகளை இலங்கை அரசு மேற்கொள்ளும் வாய்ப்புகளும் அதிகம்' என்றும் அந்தத் தலையங்கம் சுட்டிக் காட்டியிருக்கின்றது.

இதேவேளை நீதியும் நியாயமுமான அடிப்படை உரிமைகள் வழங்கப்பட வேண்டும் அவர்களது அரசியல் அபிலாஷைகள் கிடைக்கப் பெறச் செய்ய வேண்டும் என்பதில் சர்வதேச சமூகம் முன்னரை விட தற்போது அதிகம் கவனம் செலுத்துகின்றது. இந்தக் கவனத்திற்கு ஆதாரமாக நடந்து முடிந்த தேர்தல் முடிவும் அமைந்திருக்கின்றது.

இந்தத் தேர்தலில் எப்படியாவது வெற்றிக் கனியை பறித்துவிட வேண்டும் என்பதில் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் ஒரு குட்டி யுத்தம் போன்றே அமைந்திருந்தன.

ஜனாதிபதி முதல் கடை நிலை அரசியல்வாதிகள் வரை வடக்கே படையெடுத்திருந்தமை உள்ளூராட்சித் தேர்தல் வரலாற்றில் ஒரு புதிய சரித்திரத்தை எழுதியுள்ளது.

அரச வளங்கள் விதிகளை மீறி பயன்படுத்தப்பட்டமை தேர்தலை நோக்காகக் கொண்ட அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டமை தேர்தல் பணிகளில் இராணுவம் ஈடுபடுத்தப்பட்டமை தேர்தலுக்காக முதன் முறையாக இலவசங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டமை என அடுக்கடுக்காக நிகழ்ந்தேறிய சம்பவங்களை வரிசைப்படுத்தலாம்.

என்னதான் செய்தாலும் நாம் எமது அரசியல் அபிலாஷைகளை விட்டுக் கொடுத்துவிடத் தயாராக இல்லை என்பதை தமிழர்கள் அழுத்தம் திருத்தமாக தேர்தல் முடிவின் ஊடாக வெளிக்காட்டியுள்ளனர். இந்த முடிவு அரச தரப்பில் இப்போது பல்வேறு கேள்விகளை எழுப்பி நிற்கிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் வடக்கு கிழக்கில் அரசு எத்தனையோ திட்டங்களை அறிமுகம் செய்தபோதும் அங்கு அரசின் செல்வாக்கை ஏன் வளர் க்க முடியவில்லை? தமிழ்க் கூட்டமைப்பு மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு பிரதான காரணம் என்ன? எடுத்தியம்ப முடியாத வலிகளைச் சுமந்தபோதும் தனது தேசியத்தின் மீதும் அரசியல் அபிலாஷைகள் மீதும் உறுதியாக நிற்கின்றனரே இதனை உøடப்பது எப்படி என்பதே அவற்றுள் சிலவாகும்.

இவை அனைத்திற்கும் உரிய பதிலை எட்டினால் தான் வட மாகாண சபைக்கான தேர்தலை அரசு சந்திக்க முடியும் என்ற சங்கடமும் தற்போது ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அரசு இப்போது மாற்றுவழிகளை அணுகுவதற்கு முனைப்புக்காட்டி வருகின்றது. இந்த முனைப்பின் வெளிப்பாடே அமைச்சர்களின் வார்த்தைகளிலிருந்து வெளிவருகின்றன. ""கூட்டமைப்பினால் அபிவிருத்தி, புனர்வாழ்வு போன்ற எதையுமே பெற்றுக் கொடுக்க முடியாது அவர்கள் இனவாதத்தை விதைத்து அதன் மூலம் இலாபமடைய முனைகின்றனர் என்றும் ""குடிநீர் வசதி, தெருவிளக்கு வசதிகளை அளிக்க மட்டுமே உள்ளூராட்சி சபைகளால் முடியும் எனவும் அதற்கும் அரச ஆதரவு தேவை என்றும் குரல் எழுப்பி வருகின்றனர்.

எவர் எதைக்கூறிய போதும் தமிழர்கள் தமது நிலைப்பாட்டினில் உறுதியாக இருக்கின்றனர் என்பதை சர்வதேசம் தற்போது உணர்வுபூர்வமாக அறிந்து கொண்டுள்ளது.

தமிழர்களின் உரிமைப் போராட்டம் சாதாரணமானதல்ல. இந்தப் போராட்டத்திற்காக கடந்த அறுபது ஆண்டுகளில் ஒவ்வொரு தமிழ் குடும்பமும் சந்தித்த அனுபவங்கள் இழப்புகள் சாதாரணமானவையல்ல. இனத்தின் உரிமையைப் பெற்றெடுப்பதற்காக துயரங்களை எல்லாம் துச்சமாக ஏற்றுக் கொண்ட இந்த மக்களை கிள்ளுக்கீரைகளாக நினைத்து அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கத் தவறினால் அது எந்த விதத்திலும் இந்த நாட்டிற்கு நன்மையைக் கொண்டு வராது.

எனவே, ஜனநாயக ரீதியான வரைமுறைகளுக்கு மதிப்பளித்து தமிழர்களின் பிரச்சினைக்கான அரசியல் தீர்வை முன்வைக்க நேர்மையான சிந்தனையுடன் அரசு செயற்பட முன்வர வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.

தேர்தல் இலாபங்களுக்காக அல்லது சர்வதேச நெருக்குவாரங்களிலிருந்து தப்புவதற்காக எதையாச்சும் செய்து முடிப்போம் என்ற அவசர நிலைப்பாட்டில் அரசு தமிழர்கள் பிரச்சினையை நோக்குமானால் இலங்கையில் சமாதானம் கானல் நீராகவே இருக்கும்!
நன்றி வீரகேசரி இணையம்


ரணிலுக்கு மாற்றாக வரக்கூடிய தலைமைத்துவத்தின் கொள்கைகள்... Friday, 05 August 2011

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்கவின் தலைமைத்துவத்துக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சிக்குள் முன்னாள் ஜனாதிபதியின் மகன் சஜித் பிரேமதாசவின் தலைமையில் கிளர்ந்தெழுந்திருப்பவர்கள் தங்கள் கட்சியை மீண்டும் ஒரு பலமான அரசியல் சக்தியாக மாற்றி ஆட்சியதிகாரத்துக்குக் கொண்டுவர வேண்டுமென்பதே தங்களது இலட்சியம் என்று பிரகடனம் செய்கிறார்கள். கடந்த 17 வருட காலத்தில் 2001 டிசம்பர் பாராளுமன்றத் தேர்தலைத் தவிர ஐ.தே.க. விக்கிரம சிங்கவின் தலைமைத்துவத்தின் கீழ் சகல தேர்தல்களிலும் தோல்வியையே தழுவி வந்திருக்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் ஒருதடவை முன்னாள் ஜனாதிபதி திருமதி குமாரதுங்கவிடமும் இன்னொரு தடவை மகிந்த ராஜபக்ஷவிடமும் ஜனாதிபதித் தேர்தல்களில் விக்கிரம சிங்க தோல்வியடைந்தார். மாகாண சபைகளுக்கான தேர்தல்கள், உள்ளூராட்சி ச்சபைகளுக்கான தேர்தல்கள் என்று சகலவற்றிலும் அவரின் தலைமையில் ஐ.தே.க. தொடர்ச்சியான தோல்விகளையே கண்டுவந்திருக்கிறது. ஒவ்வொரு தடவையும் தேர்தல் தோல்விகளையடுத்து விக்கிரம சிங்கவின் தலைமைத்துவத்துக்கு எதிரான கிளர்ச்சிகள் மூண்டதை நாம் கண்டுவந்திருக்கிறோம்.


ஐ.தே.க. தலைவர் பதவியைத் துறக்க வேண்டுமென்று இடையறாது விடுக்கப்படுகின்ற கோரிக்கைகளை அலட்சியம் செய்து தனது தலைமைத்துவத்துக்கு எதிரான கிளர்ச்சிகளை அவரும் சளைக்காமல் முறியடித்தே வந்திருக்கிறார். ஐ.தே.க.வின் வரலாற்றிலே அதன் முன்னைய தலைவர்களில் எவருமே விக்கிரம சிங்கவைப் போன்று தலைமைத்துவத்துக்கு எதிரான கிளர்ச்சியை எதிர்நோக்கியதில்லை. ஆனால், அவருக்கு எதிராக கிளம்புபவர்கள் கட்சிக்குள் தங்களுக்கு சகல மட்டங்களிலும் ஆதரவை உருப்படியாகத் திரட்டி வெற்றிபெறக் கூடிய வல்லமையைக் கொண்டிருக்கவுமில்லை. ஒரு கட்டத்தில் தற்போதைய பிரதித் தலைவர் கருஜெயசூரிய தலைமையில் சுமார் 20 ஐ.தே.க. எம்.பி.க்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் முதல் அரசாங்கத்தில் இணைந்து அமைச்சர்களாகிக் கொண்டனர். இடைநடுவில் ஜெயசூரிய மாத்திரமே தன்னந்தனியாகத் திரும்பிவந்ததைக் காணக் கூடியதாக இருந்தது. இன்று ராஜபக்ஷவின் இரண்டாவது பதவிக்கால அரசாங்கத்தில் முக்கிய அமைச்சர் பதவிகளை வகிப்பவர்களில் பலர் விக்கிரம சிங்கவுக்கு எதிராகக் கிளம்பி ஐ.தே.க.வில் இருந்து வெளியேறியவர்களாகவே இருக்கிறார்கள்.

1977 ஜூலையில் ஜே.ஆர். ஜெயவர்தன தலைமையில் அதிகாரத்துக்கு வந்த ஐ.தே.க. 17 வருடங்கள் தொடர்ச்சியாக பதவியில் இருந்து வந்தது. அந்தப் 17 வருடகாலத்தில் எதிரணியில் இருந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் பல்வேறு பிளவுகளும் கிளர்ச்சிகளும் மூளவே செய்தன. குடியியல் உரிமைபறிக்கப்பட்டிருந்த தாயாரின் தலைமையில் இருந்த கட்சியைவிட்டு வெளியேறி திருமதி குமாரதுங்க கணவர் விஜே குமாரதுங்க தலைமையில் மக்கள் கட்சியை ஆரம்பித்ததையும் கண்டோம். திருமதி பண்டாரநாயக்கவின் ஏகபுத்திரனும் பண்டாரநாயக்க குடும்பத்தின் அரசியல்வாரிசு என்று நம்பப்பட்டவருமான அநுரா பண்டாரநாயக்க ஜனாதிபதி டி.பி.விஜேதுங்க தலைமையின் கீழ் இருந்த ஐ.தே.க. வில் இணைந்து அமைச்சராகியது மாத்திரமல்ல, தனது தந்தையின் ஆரம்பக் கட்சிக்கே தான் திரும்பிவந்ததாக பெருமையுடன் பாராளுமன்றத்தில் பிரகடனம் செய்த விசித்திரத்தையும் இலங்கை அரசியல் கண்டது.

நீண்டகாலமாக ஆட்சியதிகாரத்தில் இல்லாததன் விளைவாகவே சுதந்திரக் கட்சி அத்தகைய நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க வேண்டியேற்பட்டு பலவீனமடைந்தது. மீண்டும் சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டணி எவ்வாறு ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியது என்பதை இங்கு விளக்கிக் கூறவேண்டிய தேவையில்லை. அது அண்மைக்கால அரசியல் வரலாற்றில் ஒரு அங்கம். ஆட்சியதிகாரத்தில் நீண்டகாலமாக இல்லாத சுதந்திரக்கட்சி எதிர்நோக்கிய நெருக்கடிகளையும்விட கடந்த 17 வருடங்களாக ஆட்சி அதிகாரத்தில் இல்லாத ஐ.தே.க. மிகவும்பாரதூரமான நெருக்கடிகளைச் சந்தித்து மக்கள் செல்வாக்கை இழந்து நிற்கிறது என்பது உண்மையே. அண்மைய எதிர்காலத்தில் எந்தவொரு பெரிய தேர்தல்களிலும் வெற்றி பெறக்கூடிய வல்லமையுடன் இன்று ஐ.தே.க. இல்லை. ஆனால், அதற்கு விக்கிரமசிங்கவின் தலைமைத்துவம் தான் பிரதான காரணமா? விக்கிரமசிங்கவுக்குப் பதிலாக கரு ஜெயசூரியவோ அல்லது சஜித் பிரேமதாசவோ ஐ.தே.க.வின் தலைவரானால் கட்சியின் தேர்தல் வாய்ப்புகளைக் குறிப்பிடத்தக்க அளவுக்கு மேம்படுத்தக்கூடியதாக இருக்குமா ? இன்றைய சூழ்நிலையில் இவ்விரு கேள்விகளும் முக்கியமானவையாகும். ஜனாதிபதி ராஜபக்ஷ அதிகாரத்துக்கு வந்த பின்னர் சுதந்திரக்கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மக்கள் செல்வாக்கு குறிப்பாக தென்னிலங்கைச் சிங்கள மக்கள் மத்தியில் பெருமளவுக்கு அதிகரித்ததற்கான காரணிகளை ஆராய்வதன் மூலமாகவே இக் கேள்விகளுக்கான பதில்களை அறியக்கூடியதாக இருக்கும் என்பது எமது அபிப்பிராயமாகும்.

உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வந்து இனப் பிரச்சினைக்கு சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்புடன் அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்காக விக்கிரமசிங்க 2002 ஆம் ஆண்டு முதல் முன்னெடுத்த சமாதான முயற்சிகளுக்கு எதிரான உணர்வுகளை சிங்கள மக்கள் மத்தியில் கிளப்பி, சிறுபான்மை தேசிய இனங்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளில் எந்த ஒன்றையுமே ஏற்றுக் கொள்ள மறுக்கும் அரசியல் சக்திகளுடன் அணி சேர்ந்துகொண்டே 2005 நவம்பர் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷ விக்கிரமசிங்கவை எதிர்கொண்டார். அந்தத் தேர்தலில் வடமாகாணத்தில் தமிழ் மக்கள் சுதந்திரமாக வாக்களிக்க அனுமதிக்கப்பட்டிருந்தால் முடிவுகள் நிச்சயமாக வேறுவிதமாகவே அமைந்திருக்கும் என்பதிலும் சந்தேகமில்லை. ஒன்றரை இலட்சத்துக்கும் குறைவான வாக்கு வித்தியாசத்திலேயே ராஜபக்ஷ எதிர்க்கட்சி தலைவரைத் தோற்கடிக்கக்கூடியதாக இருந்தது. சமாதான முயற்சிகளுக்கு எதிரான அரசியல் நிகழ்ச்சித் திட்டத்துடன் தனது ஆட்சியை முன்னெடுத்த ஜனாதிபதி ராஜபக்ஷ போரையும் தீவிரப்படுத்தி இறுதியில் இரு வருடங்களுக்கு முன்னர் அதிலும் வெற்றி கண்டார்.

போருக்காகத் தென்னிலங்கைச் சிங்கள மக்களைத் தயார் ப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட அரசியற் பிரசாரங்களும் பின்னர் போர் வெற்றிக் களிப்பில் சிங்கள மக்களை மிதக்க விடுவதற்கு பெரும் பொருட் செலவில் படாடோபமாக முன்னெடுக்கப்பட்டு வரும் பிரசாரங்களும் தென்னிலங்கை அரசியலை சிங்கள பௌத்த கடும்போக்கு சக்திகளின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தன. இதன் விளைவாகவே ஜனாதிபதி ராஜபக்ஷவும் அவரது அரசாங்கமும் அதிக செல்வாக்கைப் பெற்று சகல தேர்தல்களிலும் பெரும் வெற்றிகளைப் பெறக்கூடியதாக இருக்கிறது. எமது இந்தக் கருத்தை விக்கிரமசிங்கவின் கொள்கைகளை நியாயப்படுத்துவதற்கான ஒரு முயற்சியாகப் பார்க்க வேண்டியதில்லை. சிங்கள பௌத்த கடும் போக்கு சக்திகளின் ஆதிக்கத்துக்குட்பட்ட அரசியல் கலாசாரத்தில் விக்கிரமசிங்கவினால் தலைநிமிர்த்த முடியவில்லை. இத்தகையதொரு பின்புலத்திலேயே விக்கிரமசிங்கவுக்கு மாற்றாக ஐ.தே.க.வுக்கு வரக்கூடிய ஒரு தலைமைத்துவம் ஆட்சி அதிகாரத்துக்கு வரவேண்டுமென்ற வேட்கையில் கடைப்பிடிக்க முன்வரக்கூடிய அரசியற்கொள்கைகளை நாம் நோக்க வேண்டும்!
நன்றி தினக்குரல்






No comments: