ஹெலிகொப்டர் விபத்தில் இந்தோனேசியாவில் 10 பேர் பலி

 .

Friday, 05 August 2011

ஜகார்த்தா: இந்தோனேஷியாவில் ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

அவுஸ்திரேலிய சுரங்கத் தொழில் கம்பனியொன்றுக்குச் சொந்தமான பெல் 412 ரக ஹெலிகொப்டர் ஒன்று கிழக்கு இந்தோனேஷியாவிலுள்ள மலைப் பகுதியொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த பயணிகள் மற்றும் பணியாளர் உள்ளிட்ட 10 பேர் உயிரிழந்துள்ளனர்.


குறித்த ஹெலிகொப்டரானது இந்தோனேஷியாவின் சுலவெஸித் தீவிலுள்ள மனடோ நகரிலிருந்து புறப்பட்டதாகவும் அவ்வேளையில் குறித்த ஹெலிகொப்டரில் 2 அவுஸ்திரேலியர்கள், 2 தென்னாபிரிக்கர்கள் மற்றும் 6 இந்தோனேஷியர்கள் ஆகியோர் இருந்ததாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இக் ஹெலிகொப்டரானது ஹல்மஹேரா தீவிலுள்ள நியு கிறஸ்ற் கொசோவொங் சுரங்கத்தினை நோக்கிப் புறப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாகியதைத் தொடர்ந்து அதிகாலை வேளையிலேயே மீட்புப்பணியாளர்களால் அதன் சிதைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்தை அவர்கள் சென்றடைந்த போது உயிருடன் இருந்த ஒருவரை மீட்டதுடன் உடனடியாக அவரை வைத்தியசாலைக்கு அனுப்பியதாகவும் அவரது காயம் காரணமாக பின்னர் அவர் உயிரிழந்து விட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அவுஸ்திரேலிய சுரங்கத் தொழில் கம்பனியான பீரீ நியுசா ஹல்மஹேரா மின்ரல்ஸ் கம்பனிக்குச் சொந்தமான இக்ஹெலிகொப்டரானது விபத்துக்கு உள்ளானதன் காரணம் இதுவரை அறியப்படவில்லை.

240 மில்லியன் சனத்தொகையைக் கொண்ட இந்தோனேஷியாவில் விமானம், ரயில், வாகன விபத்துகளும் படகுகள் மூழ்கி விபத்துக்குள்ளாகும் சம்பவங்களும் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரைம்ஸ் ஒவ் இந்தியா (நன்றி தினக்குரல்)



No comments: