காலையும் அவள் கனவும் -கவிதை -செ.பாஸ்கரன்.


.

காலை இளம் சூரியனும்
கண்விழித்து தரைபார்க்க
காவிரியின் நீரலைகள்
காய்ந்த நிலம் பாய்ந்துவர
சேவலொன்று விடிந்ததற்காய்
செய்தியொன்றை சொல்லி நிற்க
சேயிழையாள் கண்மலர்ந்து
புலர் பொழுதைப் பார்த்திருப்பாள்.
நாளை வரும் காதலனின்
நிலைவலைகள் பரந்துவிட
நாணி முகம் சிவந்து கொள்வாள்
ஜன்னல் இடைவளியே
வந்து விழும் வானம்
விரட்டியது யாரென்று
தலை தூக்கிப் பார்த்திடுவாள்காற்று வந்து மோதி
யன்னல் கதவை அடைத்துவிடும்

ஓ நீதானா
வானப் பெண்ணவளை
விரட்டிவந்த கள்வனென
காற்றதனைக் கடிந்து கொள்வாள்
காற்றுக்கு கடும் கோபம்
சேலைத் தலைப்பை இழுத்தெறிந்து
சேட்டை செய்யும்
நாணித் தலைகுனிவாள்
காற்றல்ல தன் காதலனே
வந்திங்கு நிற்பது போல்
கற்பனையும் செய்திடுவாள்
சேலை அகன்று விட்ட
செம்பவள மார்புதனை
கை கொண்டு மூடிடுவாள்
நாட்டியத்தின் முத்திரையா
நல்லதொரு அபிநயமா?
ரவிவர்மா ஓவியத்தின்
சாயல் கொண்டு நிற்கின்றாள்
காணாத காட்சி கண்டு - இப்போ
காற்று தலைகுனியும்
மூடிக் கிடந்த கதவுதனை
முட்டித் திறந்து கொண்டு
ஓடி ஒளிந்து கொள்ளும்
சுயநினைவு கொண்டவளாய் - இப்போ
சுற்றியவள் பார்க்கின்றாள்
யாருமில்லை
காதல் தரும் வேதனையில்
கண்மூடிக் கொள்கின்றாள்
நாளை அவன் வருவான்
நம்பி இரு என்பது போல்
சேவல் குரல் எழுப்ப
சேயிழையாள் எழுகின்றாள்.

6 comments:

kirrukan said...

ஒவியத்திற்கு ஏற்ற கவிதை...அதுசரி பெண்களின் காதல் ஏக்கத்தைதான் கவிதை வடிகின்றனர் கவிஞர்கள்,ஏன் ஆண்களின் காதல்(காம ஏக்கமும்) ஏக்கத்தை உந்த ஆண் கவிஞர்கள் படம் போட்டு கவிதை வடிப்பதில்லையோ தெரியவில்லை

C.Paskaran said...

வருகைக்கும் இடுகைக்கும் நன்றி கிறுக்கன். போடப்பட்டுள்ள ஓவியம் உலகப் புகழ் பெற்ற ஓவியரான ரவிவர்மாவின் ஓவியம்.

அது சரி இந்தப் படத்தைப் போட்டதினால்தானே நீங்களும் எழுதுகின்றீர்கள். எனது படத்தையோ உங்கள் படத்தையோ போட்டால் எவரய்யா பார்ப்பார்கள்.

நன்றி கிறுக்கன்

karuppy said...

நீண்ட நாட்களின் பின் நல்லொதொரு கவி தந்த தின முரசுக்கு நன்றி. நல்ல கவி வரிகள் , உங்கள் கற்பனைக்கும் கவி வரிக்கும் யாருமே இணையில்லை .
கறுப்பி

திருநந்தகுமார் said...

பெரும்பாலும் ஓசைநயம் மிக்க சொற்சுவை தோய்ந்த கவிதை. கற்பனையின் வீச்சைக் காட்டிநிற்கும் வரிகளுள் என்னைக் கவர்ந்தவை:
“ நாட்டியத்தின் முத்திரையா
நல்லதொரு அபிநயமா”
நன்றே இரசித்தேன் பாஸ்கரன்.
வாழ்க!

C.Paskaran said...

நன்றி கறுப்பி
தினமுரசுக்கு நன்றியா தமிழ் முரசிற்கு நன்றியா? இந்தக் கவிதந்த எனக்கு இல்லையா? வருகைக்கும் இடுகைக்கும் நன்றி கறுப்பி

C.Paskaran said...

நன்றி திரு
கம்பனை ரசித்த நீங்கள் இந்த அன்பனின் புதுக்கவிதையை ரசித்ததற்கு மகிழ்ச்சி.

வருகைக்கும் இடுகைக்கும் நன்றி