மாபெரும் திருநாளும் , மண்ணின் நினைவுகளும்

   .       
ஆனிமாதம் பதின்மூன்றாம் திகதி வந்தாலே போதும் ,பாஷையூர் மண் திருவிழாக் கோலத்தினால் களைகட்டத் தொடங்கி விடும் . கடல் அலையில் துள்ளிவிளையாடும் மீன்கள் பாடும் பாட்டையெல்லாம் ,சோழகக் காற்று கரையை நாடி சுமந்து வரும் . தம்திருவிழாவை மக்கள் சிறப்பாகக் கொண்டாட வேண்டுமென்று போலும் கடல் வளங்களை
அந்த நாட்களில் அதிகம் அதிகம் வாரி வழங்குவார் , எம் ஊரின் காவலராக வீற்றிருக்கும் புனித அந்தோனியார் ."என் சீடர் என்பதற்காக இவர்களுக்கு ஒரு குவளை தண்ணீர்
கொடுப்பவர்கள் அதன் பலனை அடையாமல் போகமாட்டார்கள் "என ஆண்டவராகிய இயேசு திருவாய்மலர்ந்தார் . புனித அந்தோனியார் அந்த வாழும் தேவனுக்கு மிகவும்
பிரியமான புனிதன் ,சீடர் . தேவனது வார்த்தைகளை போதிப்பதனையே தம்வாழ்வாகக் கொண்டு வாழ்ந்தவர் . ஒரு தடவை அவரது போதனைகளை யாரும் கேட்கவில்லை
என்பதற்காக ,கடற் கரையில் நின்று கொண்டு போதிக்கும் போது கடலினங்கள் எல்லாம் கரையை நாடி வந்ததாக அவரது புதுமையில் சொல்லப் படுகின்றது .
அதுமட்டுமல்லாமல் வேறு எந்தப் புனிதரும் இறந்தவர்களை உயிரோடு எழுப்பியதாக சரித்திரத்தில் சொல்லப்படவில்லை . புனித அந்தோனியார் ஒருதடவை கோவில் வேலை செய்வதற்கு ஆட்களை தேடிக் கொண்டிருந்த வேளை, அவ்வழியே வந்தவர்கள் இதனையறிந்து அதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக , கூட வந்தவரில் ஒருவரை
இறந்தவர் போல் நடிக்கச் சொல்லி ,அவரைசுமந்து கொண்டு வந்தார்கள் . புனித அந்தோனியார் அவர்களிடம் கோவில் வேலைக்கு உதவுமாறு கேட்டபோது , அவர் இறந்துவிட்டார் ,அவரைப் புதைக்கவேண்டும் என்று கூற ,புனிதரும் அவர்களைப் போகவிட்டார் . சிறிதுதூரம் சென்றபின்பு நடித்தவரை எழுந்திருக்கச் சொன்னபோது அவர்
உண்மையாகவே இறந்திருந்ததைக் கண்டார்கள் . தம் தவறை உணர்ந்தவர்களாய் அவரை சுமந்துகொண்டுவந்து தம்மை மன்னிக்குமாறு வேண்டிக்கொண்டபோது ,புனிதர் அவரை சாவிலிருந்து எழச்செய்தார் . இவ்வாறு எந்தக் காரியத்திற்காக நடிப்பவர்களின் நடிப்பு எல்லாம் அவரிடம் செல்லாது . அந்த அளவிற்கு ஆண்டவர் இயேசுவிற்கு மிகவும்
பிரியமான புனிதர் . அதனால்தான் அவரால் நாளொன்றுக்கு நாலாயிரம் புதுமைகளுக்கும் மேலான புதுமைகளைச் செய்ய முடிகின்றது
என்று சொல்லப்படுகின்றது . அப்படிப்பட்ட புனிதருக்காக எடுக்கப்படுகின்ற திருநாளுக்கும் , அதனை முன்னின்று செய்கின்ற மக்களுக்கும் புனிதர் வழியாக ஆண்டவர் எப்போதும் துணை நிற்பதுண்டு.
எம் ஈழத்தைப் பொருத்தவரைக்கும் எத்தனையோ கத்தோலிக்க தேவாலயங்கள் உண்டு . பதுவையிலே பிறந்த புனித அந்தோனியார் எல்லோருக்கும் பொதுவானவர் என்று
எல்லா ஆலயங்களிலும் திருநாள் கொண்டாடுவதில்லை . ஒருசில ஆலயங்களைத் தவிர . எங்கு யார் கொண்டாடுகின்றார்களோ அந்த ஆலயங்களுக்குத்தான் அனைத்துக்
கத்தோலிக்க மக்களும் ,அதேவேளை பிறசமய அன்பர்களும் சென்று வழிபடுவதுண்டு . அந்த அளவிற்கு அங்கு மக்களிடையே சமத்துவம் , அன்பு , ஒற்றுமை ,இருந்தது.
இவர்கள் யார் கொண்டாடுவதற்கு ? நாங்கள் ஏன் போகவேண்டும் என்ற ,இனத்தை பிரித்தாளும் குறுகிய மனப்பான்மை இல்லாதவர்கள் அங்கு வாழும் எம் ஈழத்துமக்கள் .
ஈழத்துமக்கள் என்று சொல்வதுகூட தப்பு . ஏன் என்றால் கொச்சிக்கடை அந்தோனியார் ஆலயத்திற்கு ,மொழிவேறுபாடு இல்லாமல் தமிழ் ,சிங்கள மக்கள் அனைவரும் கலந்து
கொள்கின்றார்கள் . அங்கு மட்டுமல்லாமல் ,எமது ஊரில் இருந்து கிடைக்கப் பெறும் செய்திகள் சொல்கின்றன , ஒவ்வொரு நாளும் எமது ஆலயத்திற்கு பெருவாரியாக சிங்கள
மக்கள் பஸ்வண்டிகளில் வந்து போகின்றார்கள் என .
ஆரம்ப காலத்தில் ஆனி முதலாம் திகதியே எமது ஊரில் உள்ள கொடிமரத்தின் மூலம் புனிதரது உருவம் தாங்கிய கொடிபறக்கவிடப்பட்டு, நவநாள் ஆராதனைகள் ஆரம்பமாகும் . இடையிலே யாழ் மேற்றிராசனத்தில் இருந்து வந்த கட்டளையை அடுத்து அது நாலாம் திகதியாக மாற்றப்பட்டது . இருந்தாலும் மக்கள் தமது வழமையை
மாற்றிக்கொள்ளவில்லை . அவர்கள் முதலாம் திகதியே தமது விருப்பப் படியே ஆலயத்திலே புனிதருக்கு வழிபாடுகளைச் செய்துகொண்டுதான் இருக்கின்றார்கள் . ஊரில் உள்ள அத்தனை தெருக்களிலும் ஒலிபெருக்கிகள் கட்டப்பட்டு , பாடல்கள் ஒலிபரப்பப்படும். அதிகாலை ஐந்துமணிக்கே தேவாலய மணியுடன் ஆரம்பித்து புனிதரது பாடல்கள்
ஒலிபரப்பப்படும் .அதுபோல் மாலையிலும் நவநாள் ஆராதனைகள் ஆரம்பமாவதற்கு முன்னால் பாடல்கள் ஒலிபரப்பப்படும் . எங்களது ஆலயத்தைப் பொருத்தவரைக்கும் வெளியே இருந்து வரும் எந்த ஒரு புனித அந்தோனியாருக்கான பாடல்களும் அங்கு பாட முடியாது . ஒவ்வொரு வருடமும் எமது மண்ணின் கவிஞர்களால் எழுதப்பட்டு, எமது கலைஞர்களால் இசையமைக்கப்படும் பாடல்களே அங்கு பாடுவதுண்டு . அந்த வகையில் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு பாடல் வெளிவரும் .இந்தமுறை என்னபாடல் என்று கேட்பதற்கு எமது மக்கள் எல்லோரும் ஆவலாக இருப்பதுண்டு . இரண்டொரு வருடங்கள் சிலரது வேண்டுகோளின் படி அந்த நாட்களில் சில்லாலையில்
சிறந்த இசையமைப்பாளராகவும் , சிறந்த பாடகராகவும் திகழ்ந்த ஆசிரியர் யேசுதாசன் அவர்கள் இசையமைத்துப் பாடிய பாடல்கள் இடம்பெற்றது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது . எமது பாடல்களை நாம் பாடியே ,அதனைப் பதிவு செய்து வருடாவருடம் ஒலிபரப்புவதுண்டு . அந்தவகையில் எனது எட்டாவது வயதில் நான்பாடி , பதிவு
செய்த பாடலும் இன்றும் எம் எல்லோரிடமும் இருக்கின்றது என்பதில் நான் இங்கு பெருமைப்பட்டுக்கொள்கின்றேன் . நாங்கள் அமைத்த இசையை , நாங்கள் எழுதிய பாடல் வரிகளையே, அண்மையில் தமிழத்தில் உள்ள நவீன இசைக்கருவிகள் கொண்டு , அங்குள்ள பாடகர்களையும் கொண்டு பாடவைக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் ,பிற்பாடு
இசைத்தட்டுக்களை எம்மவர்கள் அமைத்தார்கள் .
ஆனி மாதம் வந்துவிட்டாலே , அங்குவாழ் இளம் பெண்கள் , இளைஞர்கள் அனைவருக்கும் கோவில் வேலைகள் ஆரம்பமாகிவிடும் . குத்துவிளக்குகள் மினுக்குவது , மலர்கள்
வைக்கும் குவளைகள் எல்லாம் செப்பு என்பதனால் அவைகளை எல்லாம் மினுக்குவது , மரவேலைப்பாடுகள் உள்ள பகுதிகளை துடைத்து துப்புரவு செய்வது . மெழுகு சிந்தப்பட்டிருக்கும் தரையெல்லாம் துப்புரவு செய்வது , திருநாள் பாடல்கள் பழகுவது , எனப் பல வேலைகள் இருக்கும் . ஆடிப்பாடி வேலை செய்தால் அலுப்பிருக்காது என்பது
போல் கலகலப்பாக எல்லோரும் சேர்ந்து அத்தனை வேலைகளையும் செய்து முடிப்போம் .எமது கோவிலுக்குள்ளே உள்ளே உள்ள தரையைப் பார்த்தால் ,மிகச்சிறந்த டைல்ஸ் என்று சொல்லப்படுவது கூடத் தோற்றுப்போகும் அளவிற்கு வழ வழப்பாக இருக்கும் . அதன் கலவையில் தேன் உட்பட பல்வேறு வகையான பொருட்கள் கலந்து அமைக்கப்பட்டதாக சொல்லப்படுகின்றது .எமது ஆலயத்திற்குள்ளே இருக்கும் பொழுது ஏற்படும் ஒருவித    அமைதியை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது .
இணையத்திலே எழுத்தாளர் அருகன் என்பவரின் பதிவில் இருந்து அவர் எழுத்துக்களை அப்படியே இங்கு தருகின்றேன் . " சில ஆலயங்களுக்கு போனால் இனம் புரியாத
நிம்மதி . யாருடனும் பேசத்தோன்றுவதில்லை . ஏதும் சிந்திக்கவும் தோன்றுவதில்லை சற்று நேரம் அப்படியே இருந்து விடத்தோன்றும் . சரி போகலாம் என்று எழும்பும்போது
தான் நீண்ட நேரம் விரயமானது விளங்கும் .நேரம் போனதே தெரியவில்லை என்று புறப்படத்தொன்றும் .ஆனால் மனதிற்குள் ஒரு நிம்மதி ......ஒரு அமைதி ....! ஒரு ஆறுதல் .
எனக்குத் தெரிந்த , என்னால் உணர்ந்த அந்தப் பாஷையூர் அந்தோனியார் ஆலயமும் , ஆச்சிரமம் ஆலயமும் ,நினைவில் நீங்காதவை ! இரண்டு ஆலயங்களுக்கும் நான் தனிமையில் போவேன் . திருப்பலி இல்லாத நேரங்களில் அமைதியாக இருந்து விட்டு வருவேன் -பெறும் திருப்தியோடு !
மனதில் சஞ்சலம் இருக்கும் போது அங்கே போனால் அன்னையின் மடியில் படுத்து உறங்க அன்னையின் விரல்கள் தலை கோதி விடுவது போல் , இடையிடையே வந்து தீண்டும் கடல் காற்று அந்த அந்தோனியார் கோவிலில் எனக்கு கிடைக்கும் . அது ஒரு தனிச்சுகம் . அப்படியே நீண்ட நேரம் கழித்து விடுவேன் .அங்கு இருக்கும் போது சுரூபங்களை ரசிப்பதில்லை ,வந்து போகும் மனிதர்களைப் பார்ப்பதில்லை ,அமைதியாய் விழிகளை மூடி இருக்கையில் அமர்ந்து விடுவேன் .அதில் ஒரு பெறும் நிம்மதி .
இதுதான் ரிசிகளும் ,மகான்களும் செய்யும் தியானம் என்று எண்ணத்தோன்றும் . நோய்வாய்ப்பட்டவன் வைத்தியனைத் தேடுவதுபோல் எனது மன வருத்தத்திற்கு , துன்பம் ,சஞ்சலம் வரும்போது எனக்கு அது ஒரு நல்ல வைத்தியசாலை , அமைதியாய் இருப்பதே நல்ல மருத்துவம்"எனக் குறிப்பிட்டார் திரு அருகன் அவர்கள் .இதுவரைக்கும் அவர் பாஷையூர் மண்ணைச் சார்ந்தவரல்ல என்பது இங்கு குறிப்பிடத்தக்கது . இவ்வாறு அந்த ஆலயத்தில் உள்ள ஒரு சக்தி எல்லோரையும்
இழுத்துவைத்திருக்கும் .திருநாட்காலங்களில் மட்டுமல்லாமல் ,வாராவாரம் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளிலும் திரளான மக்கள் யாழில் உள்ள பல பாகங்களிலும்
இருந்து வந்து போவார்கள் . அண்மையில் கிடைத்த செய்தி . இந்துசமயத்தை சார்ந்த ஒரு பெண்மணி எமது ஆலயத்தின் வேண்டுதலின் மூலம் தாம் பெற்றுக் கொண்ட பலனுக்கு காணிக்கையாக தனது தாலியையே காணிக்கையாக கொடுத்திருக்கின்றார் . அவரது பெயரால் அதனை ஐந்து லட்சங்களுக்கு விற்று கோவிலின் கட்டுமானப்
பணிக்குப் பயன்படுத்துவதாக சொல்லப்படுகின்றது . இவ்வாறு புனித அந்தோனியாரின் மீது பக்தி கொள்பவர்கள் எல்லாம் ஏராளம் ,ஏராளம் , அதனால் எமது ஆலயத்தை நாடி
வரும் பக்தர்களும் ஏராளம் .பதினோராம் திகதிவரைக்கும் மாலையில் திருப்பலியும் ,புனிதருக்கான வழிபாடும் இடம் பெறும் . பன்னிரண்டாம் திகதி அந்தப் புனிதரை வழிநடத்திய எம் ஆண்டவர் இயேசுவின் திவ்விய நற்கருணை வழிபாடுகள் இடம்பெறும் . திவ்விய நற்கருணை வழிபாடு என்பது , வட்ட வடிவமான அப்பவடிவில் ஆண்டவராகிய இயேசு வீற்றிருப்பதான நம்பிக்கையில் அந்தத் திவ்விய நற்கருணைக்கு ஆராதனைகள் இடம் பெறும் . மறுநாள் பதின்மூன்றாம் திகதி காலையில் மூன்று
திருப்பலிகள் திருநாள் திருப்பலிகளாக இடம் பெறும் . என்னைப் பொருத்தவரைக்கும் எந்தக் கோவிலிலும் திருநாள் அன்று மூன்று திருப்பலிகள் இடம்பெறுவதாகவோ, அந்த மூன்று திருப்பலிகளிலும் திரளான மக்கள் கலந்து கொள்வதாகவோ நான் அறிந்திருக்கவில்லை . அந்த அளவிற்கு மக்கள் வெள்ளம் நிரம்பி வழியும் . சாதாரணமாக செவ்வாய்க் கிழமைகளில் போக்குவரத்து சபையினருக்கு நல்ல வருமானம் கிடைக்கும் . அதுவும் திருநாட்காலங்கள் என்றால் சொல்லவும் வேண்டியதில்லை. பாஷையூரார்
கொண்டாடும் திருவிழாவிற்கு நாம் ஏன் போக வேண்டும் என்று எவரும் சின்னத்தனமாக சிந்திப்பதில்லை , யார் கொண்டாடுகின்றார்கள் என்பதையல்ல பக்தர்கள் பார்ப்பது
யாருக்காக கொண்டாடப் படுகின்றது என்பதுதான் அவர்கள் சிந்திப்பது . அதுதான் உண்மையான ஆன்மீகமும் கூட .
பதின்மூன்றாம் திகதி மாலை தேர்ப் பவனி இடம் பெறும் . மாலை நான்கு மணிக்கு ஆரம்பமாகும் தேர்ப்பவனி ஆண்பெண்கள் வடம் இழுக்க பவனி வரும் .தேர் என்பதனால்
அதில் எல்லோரும் கலந்து கொள்வதற்கு இடமளிப்பார்கள் . பகலில் ஆரம்பமாகும் தேர்ப்பவனி மாலை மங்கியும் ஆலயத்தை வந்து சேராது . இருண்ட பின் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அந்தக் கொள்ளை அழகைக் காண கோடிக் கண்களும் போதாது . இருள் அரக்கனின் முன்னே வானளாவ உயர்ந்து கம்பீரமாக , வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட நிலையில் தோற்றமளிக்கும் ஆலயத்தின் அழகும் கொள்ளை அழகே .
எமது ஆலயத்தை பொருத்தவரைக்கும் பல வருடங்களாக தமிழகத்திலிருந்தும் குருக்கள் பிரசங்கிகளாக எம்மவர்களால் வரவழைக்கப்பட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது .
எமது ஊரில் குருக்கள் இல்லை என்பதில்லை என்னும் அர்த்தம் இல்லை . எமது ஊரின் பல குருக்கள் . கன்னியாஸ்திரிமார்கள் பிற இடங்களில் தேவ பணியாற்றிக் கொண்டுதான் இருக்கின்றார்கள் . தமிழகத்தில் கூட எனது பெரிய தகப்பனாரின் இரண்டு பூட்டப் பிள்ளைகள் , அதுவும் ஒரே குடும்பத்தில் இருந்து குருக்களாக திருநிலைப்படுத்தப் பட்டு பணியாற்றிக் கொண்டிருக்கின்றார்கள் . என்பது மட்டுமல்லாமல் மாமா முறையானவர் . மற்றும் தூரத்து சொந்தங்கள் எல்லாம் குருக்களாக பணியாற்றுகின்றார்கள் என்று சொல்லிக் கொள்வதில் நான் பெருமைப்பட்டுக்கொள்கின்றேன். ஒரே சமூகம் , ஒரே சமயம் மட்டுமே எமது ஊரின் மக்களாக இருந்தார்கள் .
அதனால் சுற்றி, சுற்றி பார்த்தால் எல்லோருமே உறவினர்கள்தான் .
யாழ்மண்ணிலே எத்தனையோ கத்தோலிக்க மக்களைக் குருக்களாகத்தந்த ஊர்கள் ,கிராமங்கள் இருந்தாலும் . குறிப்பிட்ட ஒருசில கிராமங்களைத்தவிர ,வேறு எந்தக் கிராம்களில் இருந்தும் குருக்கள் ஆயர்களாக உயர்நிலைப் படுத்தப் பட்டதாக வரலாறு இல்லை . அது எமக்கு ஏற்பட்ட சாபக்கேடு என்றுதான் சொல்ல வேண்டும் .
அந்த வகையில் வேற்று நாட்டில் ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்ட எமது ஊரின் குருவைப் பற்றி நான் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன் .எமது ஊரின் வணக்கத்திற்குரிய அருட்தந்தை விக்ரர் ஞானப்பிரகாசம் அடிகளார் கடந்த வருடம் அதாவது இரண்டாயிரத்து பத்தாம் ஆண்டு பாகிஸ்தான் கராச்சிநகர் குவேற்ரா மறைமாவட்ட ஆயராக திருநிலைப் படுத்தப்பட்டுள்ளார் என்பதையிட்டு நாங்கள் பெருமைப்படுகின்றோம் . அதோடு ஆங்கிலப் புலமையை வைத்துக் கொண்டு மிகப் பெரிய அறிவாளிகள் போல் தம்மைக் காட்ட முனையும் மக்கள் மத்தியில் , பலமொழிகளில் பாண்டித்தியம் பெற்றிருந்தாலும் நிறைகுடம் தளம்பாது என்பது போல் தன்னடக்கத்தோடு வாழும் எமது ஊரின் மக்களுக்கு எடுத்துக் காட்டாக விழங்கிய, எமது அருட்தந்தை மறைந்த வணக்கத்திற்குரிய இராயப்பு பஸ்தியாம்பிள்ளை அடிகளாரையே இங்கு குறிப்பிடுகின்றேன் .ஐந்துக்கும் மேற்பட்ட மொழிகளில் பாண்டித்தியம் பெற்றது மட்டுமல்லாமல் . வத்திகானில் லத்தீன் மொழியை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கும் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றினார் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்பட்டுக் கொள்கின்றது பாஷையூர் மண்ணும், மக்களும் .
பாஷையூர் மக்களின் ஆலயப் பணியென்பது ஒரு ஆலயத்துடன் நின்று விடுவதில்லை .அவர்கள் தமது தொழில் செய்யும் இடங்களில் எல்லாம் ஆலயங்கள் கட்டி , அதற்கென்று நாட்களை அமைத்து திருவிழாக்கள் கொண்டாடி வருவார்கள் . அதற்காக தூரப் பயணத்தை கடல் மார்க்கமாக மேற்கொள்வார்கள் . ஊர்மக்கள் அனைவரும்
கிடுகளால் சிறு சிறு குடிசைகள் அமைத்து ஒரு கிழமைகள் தங்கியிருந்து திருவிழாக்களை நடத்துவார்கள் . புலம் பெயர் மண்ணில் நாம் விடுமுறை வந்தால் என்ன செய்கின்றோம் ? எமது பிள்ளைகளைக் கடற்கரைக்கு அழைத்துச் சென்று அந்தக் கடல் அலையோடும் ,அந்த சரசரத்த மணலோடும் விளையாட விடுகின்றோம் .எமது ஊரில்
வளர்ந்த மக்களுக்கு இதில் என்ன மகிழ்ச்சி இருக்கின்றது என்று தான் எண்ணத் தோன்றும் .
கடல்தாண்டி வாழும் அந்தக் குடிசை வாழ்க்கை தரும் மகிழ்ச்சியைக் கல்வீட்டு வாழ்க்கை தந்து விடுவதில்லை . மணலால் உயர்ந்த மலை போன்ற குன்றுகள் ஆங்காங்கே அமைந்த பகுதிகளைக் கொண்ட மண்ணித்தலைஎன்னும் இடத்தில் புனித செபஸ்தியாருக்குஆலயம் கட்டி அங்கு திருநாள் கொண்டாடுவார்கள் . மற்றும் மண்டைக்கல்லாறு என்னும் இடத்தில் புனித அந்தோனியாருக்கு ஆலயம் கட்டி அங்கு வேறொரு நாளில் திருநாள் கொண்டாடுவார்கள் . மேலும் கல்லடி என்னும் இடத்தில் புனித யூதாததேயுவிற்கு ஆலயம் கட்டி மற்றுமொரு நாளில் திருநாள் கொண்டாடுவார்கள் .இவ்வாறாக ஊருக்கு ஒரு ஆலயம் இருந்தாலும் அதனை முறையாகப் பயன்படுத்த முடியாமல் கைவிடப்பட்ட நிலையில் பல ஆலயங்கள் இருக்கும் நிலையில் . பல ஆலயங்களைக் கட்டி பராமரிப்பது போன்ற பலபணிகளைச் செய்வதன் மூலம் ஆன்மீகத்திலும் எமது ஊர்மக்கள் தமது வாழ்நாட்களை செலவு செய்துகொண்டிருகின்றார்கள் .
வைத்தியராக , பொறியியலாளராக , கணக்காளராக , வழக்கறிஞராக , ஆசிரியராக , தாதியராக , இலங்கையின் பல்வேறு பட்ட இடங்களில் எமது ஊர் மக்கள் தொழில் புரிந்தாலும் , ஆனி மாதம் வந்தாலே விடுப்பு எடுத்துக் கொண்டு ஊருக்கு திரும்பிவிடுவார்கள் . அது போல் புலம் பெயர் நாடுகளிலும் இருந்து எமது அந்தோனியார் திருநாள்
என்ற வார்த்தை தான் அவர்கள் வாயிலிருந்தும் வெளிவரும் . அதனால் பெரும் தொகைப் பணத்தையும் செலவு செய்துகொண்டு ,குடும்பம் , குடும்பமாக பாஷையூருக்கு வந்து
சேர்வார்கள் எமது ஊரைச்சார்ந்த மக்கள் . அந்த அளவிற்கு எம் ஊரவர்களோடு ஒன்றித்து விட்டவர் எமது புனித அந்தோனியார் . எமது பாடசாலையின் பெயரும் புனித அந்தோனியார் ரோமன் கத்தோலிக்க பாடசாலை , எமது உதைபந்தாட்ட கழகத்தின் பெயரும் சென்ட் அன்டனீஸ் விளையாடுக் கழகம்தான் .எமது புனிதரது பெயருக்குத்தான்
எமது மக்கள் அதிகமாக முக்கியத்துவம் கொடுப்பது . கலைத் துறை என்னும் போது பல அண்ணாவிமார்களைக்கொண்டது எம் ஊர் . அத்தோடு விளையாட்டுத்துறையிலும்
எம் ஊரின் ,மற்றும் யாழ் , விளையாட்டுக் கழகங்களில் மட்டும் அல்லாது ,தேசிய உதைபந்தாட்டக் கழகத்திலும் எம்மவர்கள் கலந்து கொண்டது மட்டுமல்லாமல் ,வெளிநாடுகளில் தேசிய விளையாட்டுக் கழகம் விளையாடச் சென்ற போதெல்லாம் எமது விளையாட்டு வீரர்களும் கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது . இவ்வாறு கலை , விளையாட்டு , கல்வி . ஆன்மிகம் , போன்ற அனைத்திலும் எமது ஊர் மக்கள் சிறந்து விளங்குவதற்கு அன்றிலிருந்து இன்றுவரை ஊரின் பாது காவலராக இருந்து , ஆண்டவர் இயேசுவின் அருளைப் பெற்று , வரங்களை வாரி வழங்கிக் கொண்டிருப்பவர் எமது அந்தோனியார் என்றால் அது மிகையாகாது .
போராட்டக் காலங்களில் பல மாவீர்களையும் தந்தது எம் மண் என்பதனையும் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன் .
போராட்டம் உக்கிரம் அடைவதற்கு முந்திய காலப் பகுதியில் . ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு தடவை இந்திர விழா , வசந்த விழா , என்று விழாக்களை ஒழுங்கு படுத்தி விளையாட்டுப் போட்டிகள் , நாடகப் போட்டிகள் , போன்று பல போட்டிகள் ஊரில் இடம்பெறும் , அந்தப் போட்டிகளில் கடலிலே வேகமாக நடக்கும் போட்டி , கண்ணைக் கட்டிக் கொண்டு உயரத்தில் கயிற்றில் கட்டப்பட்டிருக்கும் மண்முட்டியை உடைக்கும் போட்டி என்று பல போட்டிகள் நினைக்கும் போது இன்னமும் மனதில் பசுமையான நினைவுகளைத் தந்து கொண்டுதான் இருக்கும் . அது மட்டுமல்லாமல்,ஒவ்வொரு வருடமும் எனது ஊரில் உள்ள விளையாட்டுக் குளுக்களிட்குள்ளே உதைபந்தாட்டப் போட்டி
நடாத்தப்பட்டு அதில் சிறந்த வீரர் தெரிவு செய்யப்பட்டு , சென்ட் அன்டனீஸ் விளையாட்டுக் கழகத்தில் சேர்க்கப் படுவார் . இவ்வாறு எப்போதுமே விளையாட்டு , அல்லது நாடகங்கள் ,கலை நிகழ்ச்சிகள் ,என்று களைகட்டியவாறு இருக்கும் எம் பாஷையூர் மண் . ஊரோடு ஒன்றித்து . ஊரிற்குள்ளே வாழ்ந்தவர்களால் தான் ஊரின் மகத்துவத்தை
உணர்த்து கொள்ள முடியம் . எம் ஊரினிலே இரண்டு வாசிக சாலை உண்டு . அந்த இரண்டு வாசிக சாலையிலும் சிறுவர்களுக்கு இரவுப்பாடசாலை நடைபெற்று வந்தது
இவ்வாறு கடற்தொழில் வளர்ச்சி பெற்ற அதே வேளை , கல்வியிலும் சிறந்து விளங்கினார்கள் . இன்றைக்கும் தமது ஆசீர் எல்லாம் வாரி வழங்கிக் கொண்டிருக்கும் எமது புனிதராம் அந்தோனியாரின் அருளும் ஆசீரும் எல்லோருக்கும் கிடைத்து ,நல்வாழ்வு வாழவும் , இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய தமிழ் முரசு இணையத்தாருக்கும் நன்றி
கூறிக் கொண்டு , இழந்து விட்ட காலங்களோடும், இழக்க விரும்பாத நினைவுகளோடும் உங்களிடமிருந்து நன்றியுடன் விடை பெற்றுக் கொள்கின்றேன்
மண்ணின் மகள்
பாஷையூர் சோனா பிறின்ஸ்.

No comments: