அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற தென்மோடி நாட்டுக்கூத்து


..
                                                                  -தேவி திருமுருகன், மெல்பேண்.

மேலை நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் தமது மொழிக்கும், தமிழ்க்கலைக்கும் ஆற்றிவரும் அளப்பரிய தொண்டுகளுக்கு மற்றுமொரு சான்றாகக் கொள்ளக்கூடிய வகையில் பாரம்பரியத் தமிழ்க்கலைகளில் ஒன்றான தென்மோடி நாட்டுக்கூத்தினை அண்மையில் அவுஸ்திரேலியாவில் வெற்றிகரமாக நடாத்தியமை அமைந்தது.

கிராமங்களில் வட்டக்களரியில் ஆடப்படும் நாட்டுக்கூத்து மேடை நிகழ்ச்சியாகப் பரிணாமம் பெற்றபோது, இலங்கையில் பல்கலைக்கழகங்களிலும், பாடசாலைகளிலும் அதனைப் பேணி வளர்க்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த முயற்சிகள் குறிப்பிடத்தக்களவு வெற்றியும் பெற்றன.



நாட்டுக்கூத்தொன்றைப் பழகிப் பயிற்சியெடுப்பதற்கு நீண்டகாலம் தேவைப்படுகிறது. அதிக உழைப்பு அவசியமாகின்றது. அவுஸ்திரேலியாவைப் போன்ற புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் மக்களைப் பொறுத்தவரை பலமணி நேரங்களை ஒதுக்கி மிக நீண்டகாலத்திற்குப் பயிற்சியெடுப்பதென்பது இயலக்கூடிய விடயமல்ல. இந்த நிலையில் யாழ் திருமறைக்கலாமன்றத்தின் அவுஸ்திரேலியக்கிளையினர் நாட்டுக்கூத்தொன்றை அரங்கேற்றும் முயற்சியில் இறங்கியமையும், வெற்றிகரமாக அதனை நிறைவேற்றியுயுள்ளமையும் வியப்பைத் தருகின்றது.


இந்த நாட்டுக்கூத்துப்பற்றிய விளம்பரங்கள் பத்திரிகைகளிலும், வானொலிகளிலும் மட்டுமன்றித் தொலைக்காட்சியிலும் மிகவும் கவர்ச்சிகரமாக இடம்பெற்றிருந்தமையும், பேச்சாளர், கவிஞர்,எழுத்தாளர், பத்திரிகையாளர் நாடக நடிகர், இயக்குனர், வானொலி அறிவிப்பாளர் என்று பன்முகத்தோற்றங்களில் புகழ்பெற்று விளங்கும் சட்டத்தரணி பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா இதனை நெறியாள்கை செய்கிறார் என்பதும், எட்வேட் அருள்நேசதாசன், யாழ் எஸ் பாஸ்கர் முதலிய பிரபல்யமான நாடக நடிகர்கள் பங்கேற்கிறார்கள் என்பதும் மக்களிடையே மிக அதிகமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. பார்வையாளர்களால் மண்டபம் நிறைந்திருந்தமை அதற்குச் சான்று பகர்ந்தது. மக்களின் அந்த எதிர்பார்ப்பு எள்ளளவும் ஏமாற்றமாகிவிடாதவகையில் கூத்து சிறப்பாக அரங்கேறியமை வந்திருந்த அனைவருக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்தது.


பாடல்களில் பெரும்பகுதி ஏற்கனவே ஒலிப்பதிவு செய்யப்பட்டுக் கணனிமூலம் ஒலிபரப்புச் செய்யப்பட்டாலும் இனிமையாகவும், சந்தங்கள் மாறிவரும்போது அருமையாகவும் இருந்தன. இடையிடையே சேர்க்கப்பட்டிருந்த விருத்தங்களையும், சந்தங்களையும் கூத்துக்கலைஞர்கள் தமது சொந்தக் குரலில் பாடியும் பேசியும் நடித்தமை கூத்து தொய்வடைந்து போவதைத் தடுத்து, கதைப்போக்கின் சிறப்பிற்கு வழிவகுத்தது. இவை திரு. சு.ஸ்ரீகந்தராசாவால் சேர்க்கப்பட்டவை என்பதை அறிந்தபோது, கூத்தின் விறுவிறுவிறுப்பிற்காகச் சுவைகருதியே அவர் அவ்வாறான இடைச்செருகலைச் செய்திருக்கிறார் என்பதை உணரமுடிகிறது.


ஓலிப்பதிவு செய்யப்பட்டு ஒலிபரப்பப்பட்ட பாடல்களில் இடம்பெறும் பக்கப்பாட்டுப்பகுதிகளோடு சேர்ந்து மேடையில் சொந்தக் குரலில் பக்கப்பாட்டுக்கலைஞர்களான திரு. சூசைராசா, சிட்னியைச் சேர்ந்த திரு. ந.கருணாகரன் ஆகியோர் பாடியமை மேலும் மெருகூட்டும் வகையில் அமைந்திருந்தது. அனுபவப்பட்ட கலஞர்கள் என்பதால் இடம் பொருள் உணர்ந்து அழகாகப் பாடினார்கள். தபேலாக் கலைஞர் வாசவனும், ஆர்மோனியக் கலைஞர் ஈஸ்வரநாதனும், தாளம் (சல்லாரி) இசைத்த குணா அருளானந்தமும் செய்த பங்களிப்பு அற்புதமானது. பாடல்கள் வசனங்களுக்கிடையேயும் பாத்திரங்களின் வரவு, புறப்பாடு என்பவற்றினை ஒட்டியும், சந்த மாற்றங்களுக்கிடையேயும் இரம்மியமாக அவர்கள் வாசித்த இசை கூத்தோடு மக்களை ஒன்ற வைத்தது.

மேடை அலங்காரம் திரைப்படக் காட்சியமைப்பைப்போல இருந்தது. கூத்தின் ஒவ்வொருகாட்சிக்கும் காட்சியமைப்புக்கள் பிரமாண்டமான திரைச்சீலையாகவும், கணனி மூலமாகவும் பிண்னணியில் செய்யப்பட்டிருந்தமை பாரம்பரியக் கூத்துக்கலையை இன்றைய கணனியுகத் தொழில் நுட்பத்தோடு இணைத்து வழங்கப்பட்ட அற்புதமான தயாரிப்பாக இந்த நிகழ்ச்சியை எடுத்துக்காட்டியது என்று விதந்து கூறலாம். இதற்குப் பின்னால் எத்தனை கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் பணியாற்றியிருப்பார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. அவர்கள் எல்லோரும் பாராட்டுக்குரியவர்கள்.





கூத்துக்கலையில் ஒப்பனை மிகவும் முக்கியமானது. முன்னைய காலத்தில் கிராமங்களிலே இதனை “முகமாத்துப் போடுதல்” என்று சொல்வார்கள். பார்வையாளர்களால் நடிகரை இலகுவில் அடையாளம் கண்டுகொள்ள முடியாத அளவுக்குப் பாத்திரப் பொருத்தத்திற்கேற்ற வகையில் முகம், தலைமுடி என்பவற்றின் ஒப்பனையும், உடையலங்காரமும் செய்யப்படும். அத்தகைய பண்டைய முறைகளுக்குப் பங்கம் ஏற்படாதவகையிலும். இன்றைய வசதிகளைப் பயன்படுத்தியும் ஒவ்வொரு கலைஞருக்கும் செய்யப்பட்டிருந்த ஒப்பனை மிகவும் சிறப்பாக இருந்தது. உண்மையில் கூத்துக்கலைஞர்கள் சிலரை அவர்களது நெருங்கிய உறவினர்களாலேயே கடைசிவரை அடையாளம் கண்டுகொள்ள முடியாமல் இருந்ததாகப் பின்னர் அறிந்தோம். அந்த அளவிற்கு ஒப்பனை கச்சிதமாக இருந்தது. பிரபல ஒப்பனைக் கலைஞர் கண்ணன் சண்முகசுந்தரம் மிகுந்த சிரமம் எடுத்து அக்கறையுடன் செயற்பட்டிருப்பது வெளிப்பட்டது. அவரது தலைமையில் திருமதி செல்வா நவரெத்தினம், திருமதி நந்தினி எட்வேட், திருமதி. பிலிப் மரியதாசன், திருமதி சகிலா வில்லியம், திருமதி. அன்ரன் நியூட்டன், அருள்சந்திரன் எனப் பலர் இயங்கியிருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும், சிறப்பாகக் கண்ணனும் மிகுந்த பாராட்டுக்குரியவர்கள்.

“கடன்பட்டார் நெஞ்சம்” என்ற தலைப்பிலான இந்தக் கூத்தின் கதை ஒரு பெண்ணைச்சுற்றியே எழுப்பப்பட்டிருந்தது. ஞானமனோகரி என்ற அழகிய பெண்ணுக்குத் திருமணம் செய்துவைக்க அவளின் தமையன் விசயன் முயற்சி செய்கிறான். ஞானமனோகரிமீது காதல்கொண்ட விக்கிரமசிங்கன்  என்பவன் அவளை அடைய விரும்புகிறான். அதற்காகக் கள்வர்கூட்டத்தலைவனான உக்கிரமசிங்கன் என்பவனோடு தவறான முயற்சிகளில் ஈடுபடுகிறான். அவர்களிடமிருந்து ஞானமனோகரியை மனோகரன் என்றும் பிரபு காப்பாற்றுகிறார். இதற்கிடையில் கொடுங்கோலாட்சி செய்யும் கோதி என்ற அரசன் ஞானமனோகரியை அடைவதற்காக அவளை அச்சுறுத்துகிறான். விசயனையும், மனோகரனையும் தூக்கிலிட்டுக்கொல்ல உத்தரவிடுகிறான். நாட்டில் நடைபெறும் கோதியரசனின் கொடுங்கோலாட்சிக்கெதிராக மக்கள் புரட்சி ஏற்படுகிறது. பெரியவர் ஒருவரால் தூக்குத்தண்டனை பெறவிருந்தவர்கள் காப்பாற்றப்படுகிறார்கள். கோதியரசன் கைதுசெய்யப்படுகின்றான். அமைச்சர் அரசனாகின்றார். மக்கள் மன்றத்தின் தலைவர் முன்னர் விசரணை நடைபெறுகிறது. கோதியும் துட்டர்களும் சிறையிடப்படுகிறார்கள். விசயன் அமைச்சராக நியமிக்கப்படுகிறார். இதுதான் கூத்தின் கதைச்சுருக்கம்.





நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் கதைச்சுருக்கத்தினை செல்வி நி~hனி நவரெட்ணம் ஆங்கிலத்தில் கூறியமை தமிழ்மொழியில் நல்ல பரிச்சயம் இல்லாதவர்களும்கூட கூத்துப்பாடல்களைப் புரிந்துகொள்ள உதவியது. ஓவ்வொரு காட்சிக்கும் முன்னர் காட்சியில் நடைபெறவுள்ள கதைபற்றிய சிறுகுறிப்பு நெறியாளரால் திரைக்குப்பின்னாலிருந்து சொல்லப்பட்டமை பார்வையாளர்களுக்குக் கதைபற்றிய தெளிவுக்கு உதவியது.

ஆரம்பத்திலிருந்தே கூத்து விறுவிறுப்பாகத் தொடங்கியது. கூத்தின் நெறியாளர் பாரம்பரிய நாட்டுக்கூத்து அண்ணாவியாரின் கோலத்தில் தாளத்துக்கு ஆடிக்கொண்டே மேடைக்கு வர அரங்கம் முளுவதும் கரகோசம் செய்து வரவேற்றது. சபைக்கு வணக்கம் சொல்லி அவர் பாடிய விருத்தத்துடன் கூத்து ஆரம்பமாகியமை நல்லதொரு தொடக்கமாக இருந்தது. கோதி அரசனின் புதிய சட்டங்களை மக்களுக்கு அறிவிக்கும் சாம்புவன் என்னும் கட்டியக்காரனாக நடித்த ரத்தினேஸ்காந்த் மிகவும் சிறப்பாக ஆடினார். அவரே பின்னய காட்சிகளின் உக்கிரம சிங்கனாகவும் மிகவும் உணர்ச்சி பாவத்துடன் ஆடி நடித்தார்.





விசயனாக நடித்தவர் பிரபல நடிகரும், வானொலி அறிவிப்பானருமான ஆசிரியர் எட்வேட் பிலிப் மரியதாசன். அவரது நாடக அனுபவத்தை இந்த நாட்டுக்கூத்தில் காணமுடிந்தது. அவரது ஆட்டமும், பல்வேறு உணர்ச்சிகளை வெளிப்படுத்திய முகபாவமும் மிகச் சிறப்பாக இருந்தன.

மனோகரனாக நடித்த பென் பிருதிவிராஜ் ஞானமனோகரியுடனான காட்சியில் மிகவும் சிறப்பாக நடித்தார். கோதியரசனாகப் பாத்திரமேற்றவர் பிரபல நடிகரும், வானொலி, தொலைக்காட்சி அறிவிப்பாளருமான எட்வேட் அருள்நேசதாசன். கொடுங்கோல் அரசனுக்கேயுரிய மிடுக்குடனும், உணர்ச்சி பாவத்துடனும் மிகவும் அனுபவம்வாய்ந்ததொரு கூத்துக்கலைஞராகவே அவர் ஆடி நடித்தார். அதிலும் எதிர்த்துப்பேசிய வயோதிபரை வாளால் வெட்டமுனையும் காட்சியில் சொந்தக்குரலில் அவர் பாடிநடித்தபோதும், ஞானமனோகரியைப் பலவந்தமாக அடையத்துடித்துக்கொண்டு விரட்டுகின்ற காட்சியிலும் அவரது ஆட்டமும், பாட்டும், அபிநயமும் மிகவும் அற்புதம்.

அரசனாலேயே விரும்பப்படுகின்றவளும், பிரபுத்துவ குடும்பத்தைச் சேர்ந்தவளும், சிறந்த அழகியுமான ஞானமனோகரி என்ற பாத்திரம் பிரபல நடன ஆசிரியை திருமதி.தெய்வயானி மகிந்தனுக்கு மிகவும் பொருத்தமாக இருந்தது. அவரது முகபாவங்களும், ஆட்டங்களும் அவர்தோன்றிய எல்லாக் காட்சிகளிலுமே மிகவும் இரசிக்கத்தக்கதாக அமைந்திருந்தன. விசேடமாக, கோதியரசனிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் காட்சியும், தோழியுடன் பூப்பறிப்பதும் அதனைத் தொடர்ந்து விக்கிரமசிங்கன் உக்கிரமசிங்கள் என்போரால் கட்டப்படும் காட்சியும், பார்த்துக் கொண்டிருந்த அனைவரையும் இருக்கையின் விளிம்பில் இருக்கவைத்தன. செல்வி திவீனா சாஜி தோழியாக சில நிமிடங்களே மோன்றினாலும் தனது நளினமான பாவத்தால் எல்லோரையும் கவர்ந்தார்.





விக்கிரமசிங்கன் பாத்திரத்தை ஏற்றவர் அனுபவம்மிக்க நாடக நடிகரும், பத்திரிகையாளருமான அக்கினிக்குஞ்சு யாழ் எஸ் பாஸ்கர். மேடை முழுவதையும் ஆக்கிரமித்து அவர் ஆடி நடித்த விறுவிறுப்பான காட்சி சபையோரை மெய்ம்மறக்கவைத்தது. அவரும் பிலிப் மரியதாசனும் விவாதம் செய்கின்ற காட்சி பண்பட்ட இரண்டு நாடக நடிகர்களின் திறமை நாட்டுக்கூத்திலும் பளிச்சிட்டமைக்குச் சான்றாக அமைந்தது.

மந்திரியாக இருந்த பின்னர் மன்னனாகும் பாத்திரத்தை ஏற்றவர் இலங்கையில் கூத்துக்கலையில் ஈடுபாடுகொண்ட பரம்பரையில் பிறந்த த.விஜயமனோகரன். உயரமும் பருமனுமான அவரது உடல் அமைப்பு மட்டுமன்றிக் குரல் வளமும் அவர் ஏற்றிருந்த பாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமாக இருந்தன. நெஞ்சை நிமிர்த்தி மிடுக்காக உத்தரவுகளைப் பிறப்பிக்கும் கம்பீரம், கோபம், சாந்தம் முதலிய உணர்ச்சிகளை மாறிமாறி வெளிப்படுத்தும் முகபாவம், தாளத்திற்கமைந்த கூத்தாட்டம் எல்லாவற்றிலும் அவரது திறமை நன்கு வெளிப்பட்டது.

சங்கத்தலைவர் பாத்திரத்தை வில்லியம் ராசேந்திரம் சிறப்பாகச் செய்தார். நிதானமான உணர்வுகளை வெளிப்படுத்தும் இந்தப் பாத்திர அமைப்பை நன்குணர்ந்து அவர் நிறைவேற்றியிரக்கிறார்.





சேவகன் பாத்திரம் கூத்தில் இன்றியமையாததொன்றாக இருந்தபோதும், கூத்தில் நகைச்சுவையையும் கலக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அது வடிவமைக்கப்பட்டதாகவே தெரிகின்றது. நவரெட்ணம் ஆசிரியர் அந்தப்பாத்திரமாகவே மாறி மிகவும் அற்புதமாக நடித்தார். முகபாவமும் சரி, ஆட்டமும் சரி கச்சிதமாக அவரால் வெளிப்படுத்தப்பட்டன. பிரபல நடிகரும். ஓப்பனைக் கலைஞருமான கண்ணன் சண்முகசுந்தரம் வயோதிபர் பாத்திரத்தின் தன்மையுணர்ந்து தனக்கேயுரிய தனித்துவத்துடன் நடித்தார்.

அரசவைப் புலவர்களாக பிரபல திரைப்பட, நாடக நடிகரும் எழுத்தாளருமான சிசு.நாகேந்திரம் மற்றும் அன்ரன் நியூட்டன் இருவரும் சபையை அலங்கரித்தார்கள். காட்சிகளின் போக்குகளுக்கேற்றவாறு தமது உணர்ச்சிபாவங்களை முகத்தில் வெளிப்படுத்தினார்கள். அரசவையில் வெண்சாமரை வீசி நடித்த செல்விகள் சகானி கனிசியஸ், தர்~pகா நாதன், அரண்மனைக் காவலர்களாக நடித்த செல்வன் கிறிசான் பிருதிவிராஜ், செல்வன் கவிசன் பிரதிவிராஜ் ஆகியோரும் நல்லமுறையில் பயிற்றப்பட்டிருப்பதை அவர்களது பொருத்தமான வெளிப்பாடுகள் உணர்த்தின.





காட்சிகளுக்கிடையே மூடியதிரைக்க முன்னால் வந்து நகைச்சுவை விருந்தளித்த பிரபல நகைச்சுவைக் கலைஞர் ரவி பத்மநாதனின் (சபார் நானா) பங்களிப்பைப் பாராட்டாமல் இருக்க முடியாது. கூத்தின் பாத்திரம் ஒன்றாக இல்லாமல் அதேவேளை கூத்தின் கதையோடு தொடர்புறுத்தும் வகையில் நகைச்சுவை கலந்த அவரது பங்களிப்பு சபையினரை எப்போதும் கலகலப்பாக வைத்திருந்தது.

பிரபல நடன ஆசிரியையும், வானொலி அறிவிப்பாளருமான திருமதி நிருத்தசொரூபி தர்மகுலேந்திரன் இந்நிகழ்ச்சியின் அறிவிப்பாளராக இருந்து தெளிவாகவும், இனிமையாகவும் அறிவிப்புக்களைச் செய்தார்.

இத்தனை கலைஞர்களையும் காட்சிகளுக்கேற்றவாறும், கதைப்போக்கிற்கேற்றவாறும் தொய்யாமல் துவளாமல் நெறியாள்கை செய்த பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா உண்மையில் மிகுந்த பாராட்டுக்குரியவர். நாடகங்களின் இயக்குனராக மட்டுமல்ல கூத்தின் அண்ணாவியாராகவும் தன்னால் பிரசாகிக்க முடியும் என்பதை அவர் நிரூபித்துள்ளார்.





பழம்பெரும் கலைவடியமான நாட்டுக்கூத்தை புலம்பெயர்ந்த மண்ணான அவுஸ்திரேலியாவில் அரங்கேற்றிய திருமறைக்கலாமன்றத்தின் அவுஸ்திரேலியக்கிளையினரும், சிறப்பாக இதன் தயாரிப்பாளராகப் பொறுப்பெடுத்துத் துணிவுடன் செயலில் இறங்கிய திரு. மரியசேகரம்பிள்ளையும் பாராட்டுக்குரியவர்கள். மேலும், இதன் நெறியாளர், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், தோளோடு தோள் நின்று உழைத்த தொண்டர்கள் அனைவரையும் பாராட்டுவோம். அருமையான இந்த நாட்டுக்கூத்து நிகழ்ச்சியை அவுஸ்திரேலியாவின் ஏனைய மாநிலங்களிலும் மேடையேற்றுவதோடு, மேல்பேணில் மீண்டும் ஒருமுறை தென்பிராந்தியத்தில் மேடையேற்றுவதும் அவசியமாகும்.





No comments: