பகவான் ஸ்ரீ சத்திய சாய் பாபா அருளிய இளைஞர்களுக்கான அறிவுரைகள்

.
பாகம் 2

அனைவரும் ஒன்றே:

ஜீசஸ் கூறினார்: என் அருமை மகனே அனைவரும் ஒன்றே அதனால் அனைவருடனும் ஒரே மாதிரியாகப் பழகு அனைவரும் இதே தாய் மண்ணில்தான் பிறந்தோம். இதே காற்றைத்தான் சுவாசிக்கிறோம். இதே நீரைத்தான் பருகிறோம். அப்படியிருக்கையில் ஏன் இந்த வேற்றுமைகள் எல்லாம்? அனைத்து வேற்றுமைகளையும் உதறிவிட்டு, ஒற்றுமையுடன் வாழுங்கள். வேற்றுமையில் ஒற்றுமை உள்ளதென உணருங்கள். அதன்படி வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் கிராமங்களுக்குச் சென்று, தேவையானவர்களுக்கு வேண்டிய சேவைகளைச் செய்யலாம். கிராமப்புற முன்னேற்றத் திட்டங்களை செயல் படுத்தலாம். அவ்வாறு செய்வதால் நீ ஏதோ பெரிய சேவை செய்துவிட்டதாக நினைக்காதே. உண்மையில் சொன்னால், இதெல்லாம் உன்னுடைய கடமை. நீ சேவை செய்வதற்கு பிறந்தவன். ஆகவே பிறருக்குச் சேவை செய்வதில் உனது வாழ்நாளைச் செலவிடு. பதவிக்கும், அதிகாரத்துக்கும் ஏக்கப்படாதே. யார் சேவகனாக இல்லையோ அவனால் நாயகனாக (தலைவனாக) விளங்க முடியாது. உண்மையில், ஒரு உண்மையான சேவகனே உண்மையான நாயகன்.

தியானமா?
மக்கள், ஜபம், த்யானம், தவம் ஆகியவையெல்லாம்தான் ஆன்மீகப் பயிற்சி முறை என்ற தவறான நோக்கத்தில் இருக்கின்றனர். தியானம் என்றால் என்ன என்பதே அறியாமல் தியானம் செய்கின்றனர். தாங்கள் கடவுளின் மேல் தியானம் செய்வதாகச் சொல்கிறார்கள். ஆனால் கடவுள் யாரென்று அவர்களுக்கே தெரியாது! ராமா, கிருஷ்ணா, யேசு, அல்லா, ஜொராஷ்டிரா என முணுமுணுத்து அவர்களைத் தியானிக்கிறார்கள். ஆனால் அனைவருமே கடவுளின் வடிவங்கள் என்ற உண்மையைப் புரிந்து கொள்ளவில்லை. மனம் குவித்துக் காண்பதை (Concentration) தியானம் எனத் தவறாக எண்ணுகிறார்கள். மனக்குவிப்பு என்பது புலன்கள் சம்பந்தப்பட்டது. ஆனால் தியானம் என்பது மனஎல்லைகள் அனைத்தையும் கடந்தது. தியானம் என்பதை ஒரு குறிப்பிட்ட காலத்துக்கோ, இடத்துக்கோ குறுக்கிவிடக்கூடாது. அது ஒரு வாழ்க்கைமுறை. அன்பெனும் உணர்வோடு செய்யப்படும் அனைத்தும் தியானமே!

சகமனிதர்களிடம் அன்பு செலுத்தாமல், மணிக்கணக்காக தியானத்திற்காக உட்காருவது என்பது தியானமே அல்ல. உண்மையான ஆன்மீக சாதனை என்பது அனைவருடனும் கைகோர்த்து சமுதாயம் முழுமைக்குமாக உழைப்பதுதான். அதன்மூலம் நமுதாய முன்னேற்றம் ஏற்பட வேண்டும். அன்பே கடவுள். ஆகவே அன்பிலேயே வாழுங்கள். அன்பற்ற இதயம் வறண்ட தரிசு நிலத்துக்குச் சமம். அனைத்து செயல்பாடுகளும் அன்புடன் இணைந்து இருக்கவேண்டும். புதிதாகப் பிறந்த குழந்தை எப்படி பட்டப்படிப்புக்கான வகுப்புகளுக்குச் செல்ல முடியாதோ, அது போலத்தான், உயர்ந்த பிரேமை தத்துவத்தை உடனடியாக அடைய முடியாது. கொஞ்சம் கொஞ்மாக ஆன்மீகப் பயிற்சிகளைச் செய்து, படிப்படியாக முன்னேற வேண்டும். உள்நோக்கித் தன் பார்வையை (நிவ்ருத்தி)ச் செலுத்தத் தயாராகும் வரை, இந்த வெளிப்புற (பிரவ்ருத்தி) மார்க்கமான வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும். எந்த ஒரு செயலையும் ஆன்மீகப் பார்வையோடு அணுகுங்கள். சத்யம், பிரேமை இவற்றைப் பின்பற்றிச் செய்வதைவிடச் சிறந்த ஆன்மீகப் பயிற்சிமுறை வேறெதுவும் கிடையாது. சத்யமும், பிரேமையும், இறைவனின் பெயர்கள். ஆகவே இவை இரண்டுமின்றி ஆன்மீக சாதனைகளை மேற்கொள்வதில் அர்த்தமில்லை.

தியாகம்
இளைஞர்களே! யுவதிகளே!
அன்பையும், தியாகத்தையும் உங்களது பிராணனாக, மூச்சுக் காற்றாக எண்ணுங்கள். உங்கள் புலன்களை அடக்குங்கள். எந்த ஒரு ஆன்மீக சாதனை வெற்றிபெற வேண்டுமானாலும், புலனடக்கத்தின் மூலம் தெய்வமாக உயரமுடியும். கோபம் என்பது நாயின் இயல்பு. சலனப்படுத்திக கொண்டே இருப்பது குரங்கின் குணம். உனக்குக் கோபம் வரும்போது “நான் நாயல்ல, நான் மனிதன்” என்று நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். அதைப்போலவே மனம் அலைபாயும்போது உனக்குள் திரும்பச் திரும்பச் சொல்லிக்கொள். “நான் குரங்கல்ல, நான் மனிதன்” என்று. சத்தியம், தர்மம், சாந்தி, பிரேமை, அகிம்ஸை ஆகியவைதான் உண்மையான மனித உயர்குண நலன்கள். இந்த குண நலன்களை மனிதனின் பஞ்ச பிராணன்களுக்கு ஒப்பிடலாம் - பிராண அபான, வ்யான, உதான மற்றும் சமான. இந்த குணநலன்கள் ஏதாவது ஒன்றை இழந்தாலும் கூட வாழ்க்கையே துறந்து விடுவதைப் போன்றது. ஒரு குணநலனும், மற்றொன்றின்றி வாழ இயலாது. இக்குணநலன்களை இழந்துவிட்டதால் மனிதன் இன்று வாழும் பிணமாக இருக்கிறான். இக் குணநலன்களின் மேல் நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள், அவற்றைப் போற்றி வளர்த்து, அவற்றிடமிருந்து கிடைக்கும் ஆனந்தத்தை அனுபவியுங்கள்.

எங்கே நம்பிக்கையிருக்கிறதோ, அங்கே அன்பிருக்கிறது.
எங்கே அன்பிருக்கிறதோ, அங்கே அமைதியிருக்கிறது.
எங்கே அமைதியிருக்கிறதோ, அங்கே ஸத்யம் இருக்கிறது.
எங்கே ஸத்யம் இருக்கிறதோ, அங்கே கடவுள் இருக்கிறார்.
எங்கே கடவுள் இருக்கிறாரோ, அங்கே ஆனந்தம் நிறைகிறது.

ஆனந்தம்
இன்று ஒவ்வொறு மனிதனும், ஆனந்தமாக இருக்கவே விரும்புகிறான். அதற்கு நம்பிக்கை என்பது முதலில் அவசியம். ஆனந்தத்தைப் பெறுவது சுலபமல்ல. ஆனந்தம் என்பது பிரம்மன், நிலையாக, து}யதாக, நிரந்தரமானதாக, இரட்டை நிலையைக் கடந்ததாக இருக்கக்கூடியது. தீய குணங்களைக் கைவிடாமல் மனிதன் இந்த உயர்ந்த ஆனந்தத்தை அனுபவிக்க இயலாது. இதயம் என்பது இறைவனின் கருவறை. ஆதனைத் தீய எணணங்களாலும், தீய உணர்வுகளாலும், மாசுபடுத்தி விடாதீர்கள்.

எந்த ஒரு தனி மனிதச்செயல்பாடுகளிலும், சுயமுயற்சி என்பது வெற்றியடைய மிகவும் அத்தியாவசியமானது. ஒரு சிறிய பூவைப் பறிப்பதானாலும், அன்றி மரத்தினின்று பழம் பறிப்பதானாலும் கூட, உடலின் பல அங்கங்களான – கண்கள், கரங்கள், கால்கள் ஆகியவற்றின் ஒததுழைப்பு தேவையாகிறது.

ஸரீர மாத்யம் கலு தர்ம ஸாதனம், உடல் கொடுக்கப்பட்டிருப்பது நல்ல தர்மமான வழியில் செயலாற்றுவதற்கும், அதன் மூலம் சமுதாயத்திற்கு ஒரு எடுத்துக் காட்டாய் விளங்குவதற்கும் மட்டுமே. அல்லாது வீணே உறங்குவதற்கும், உண்பதற்கும், பருகுவதற்கும் மகிழ்ச்சியை அனுபவிப்பதற்குமா கடவுள் மனிதனுக்கு அத்தனை சக்திகளையும் பரிசாகக் கொடுத்திருக்கிறார்? ஆனால் மனிதனால் தன்னுள் இருக்கும் சக்திகளைப் புரிந்து கொள்ளத்தான் இயலவில்லை.

தொடரும்

No comments: