மீனும் மீனும் பேசிக் கொண்டன - வித்யாசாகர்

.
உயிர் பூக்கும் இடத்தில் இதயமும், இதயம் உள்ள இடத்தில் நினைவுகளும்,
வாழ்வின் நிராசைகளும் நிறைந்து கிடப்பதை தெரியாமல் தான் மீனை பிடிக்கவும் விற்கவும் வாங்கவும் தின்னவும் நாம் மனிதராகியுள்ளோம் போல். ஒவ்வொரு மீனின் சுவைக்குள்ளும், கடலின் ஒரு பகுதி கதைகள் அழியப்பட்டுள்ளது என்பதை நாம் அறிய முற்பட்டோமா என்றால் உடனே இல்லை, அதன் சுவையான வாசனை அவைகளை மறைத்துக்கொண்டது எனலாம்.


ஒரு மரம் கூட தான் துளிர்ப்பதற்கும் வாடுவதற்கும் ஒரு காரணத்தை
கொண்டுள்ளது. தன் உயிர்ப்பை பட்டவர்த்தனமாக காட்டும் மீன்களும் பிற
உயிர்களுமா அர்த்தமின்றி பிறந்திருக்கும்? ? ?உண்மையில், ஒரு மரம் பூப்பதற்கும் காய்ப்பதற்கும் கூட காரணம்; மரத்திற்கும் உயிரிருப்பதே என்கின்றனர் முன்னோர். சரி மரமாவது ஒரு மரத்தை வெட்டினால் இன்னொரு மரம் வந்து தடுக்கவோ அல்லது ஐயோ அதை வெட்டுகிறானே
பாவி என சபிக்கவோ, நாமாவது தப்பித்து ஓடி நம்மை காப்பாற்றிக் கொள்வோமென ஓடவோ செய்வதில்லை.

அதே ஒரு மீனை பிடிக்க நீரில் கை வைத்தால், கூட்டத்திலிருந்து பிரிந்து
ஓடும் பிற மீன்களுக்கு எத்தனை உயிர் பயம் இருக்கவேண்டும்? ஒரு கோழியை கழுத்தறுத்து கீழே எறிந்தால், அது துடித்து துடித்து அடங்குவதற்கு எத்தனை உயிர்பிரியும் வலியை அந்த கோழி அனுபவித்திருக்க வேண்டும்??? ஒரு ஆட்டினை கழுத்தை துண்டமாக வெட்டிவிட துடித்து துடித்து வாழ்வின் துடிப்புகள் அடங்குவதை கால் சூப்பு குடிக்கும் எத்தனை பேர் பார்த்திருப்போம்? வருந்தியிருப்போம்?

இப்படி பிற உயிர்களின் உயிர் பறிக்கத் தான், ’நம் நாக்கில் எச்சில் ஊறுகிறதென உணர படுவோமானால், மீன்கள் மிச்சப் பட்ட வரலாற்றினை, ’நாளை வேறு யாராவது எழுத மாட்டார்களா…? ஒவ்வொரு முறை நாம் அவைகளை கொள்ளும் போதும், ஐயோ விட்டுவிடு விட்டுவிடு என்று தன் மொழியில் கதறும் அலறல்; நம் நாக்கை மட்டுமா’ கட்டிப் போட மறுக்கும்? தன் வீட்டில் உள்ள ஒரு குழந்தையை வெட்டி சாப்பிட யாராலாவது
சிந்திக்கவாவது செய்வீர்களா??? பிறகு வீட்டில் அல்லது ஏதோ காட்டில்
உல்லாசமாய் வாழப் பிறந்த பிற உயிர்களுக்கு தீணியிடவும், வளர்க்கவும்,
துடிக்க துடிக்க வெட்டவும், தின்னவும், ஏப்பம் விட்டு, ‘பாவம் போச்சென்றும் சொல்ல’ எப்படி நாம் உரிமை பெற்றோம்? என்னை யாரேனும் பணம் கொடுத்து வாங்கி வளர்த்து கழுத்தறுத்து குழம்பு வைக்கப் போனால் மறுக்க எப்படியெல்லாம் நான் போராடுவேனோ, அப்படித் தானே ஒவ்வொரு கோழியை, ஆட்டினை, மாட்டினை வெட்டும் போதும், அவைகளால் இயன்றளவு அவைகளும் மறுப்பை தெருவிக்கின்றன? பிறகு என்னை வெட்டுவது கொலை; நரபலி. ஆடோ கோழியோ வெட்டித் தின்றால்; பாவம் விட்டொழியுமென்றோ, அதலாம் தவறில்லை என்றோ ஒரு கண்மூடித் தனமான புரிதலை எந்தப் புள்ளியில் இட்டு நியாயப் படுத்திக் கொள்ளத் துணிந்தோமோ; அந்தப் புள்ளியிலிருந்தே நம் பாவங்கள் நம்மையும் கொள்ளப் புறப்பட்டுவிட்டது.

ஒரு கன்றுக் குட்டியை தடவி தடவி அன்பு செய்யும் ஒரு மாட்டினையோ, ஒரு ஆட்டினை துரத்தி விளையாடும் இன்னொரு ஆடோ.., கோழிக் குஞ்சுகளை தொடப் போனாலே மயிர் சிலிர்ப்பி குத்தவரும் கோழியோ, ஒன்றன் பின் ஒன்றாக ஓடி கூட்டமாக துள்ளிக் குதித்து விளையாடும் மீன்களோ.. மற்றும் இன்ன பிற உயிர்களும்.. முற்றிலும் உணர்வுகளற்றவை என்று நாமே எப்படி நம் விருப்பத்திற்கு முடிவெடுத்துக் கொண்டோமோ.
கேட்டால், நாம் கொன்றுவிடா விட்டால் பல்கி பெருகி vidum என்கிறார்கள்.
காட்டில் இருக்கும் சிங்கமோ புலியோ பெருகி விடுமென யாரேனும் அடித்துத் திண்ண துணிவீர்களா? காட்டில் வாழும் பாலூட்டி இனத்திற்கெல்லாமென்ன மடியில் யாருமே பால் கறக்க வில்லையே என்று பால் கட்டிக் கொள்கிறதா..? இயற்க்கை நம்மை படைத்ததை போல் அவைகளும் படைக்கப் பட்டுள்ளன. எல்லாவற்றையும் தனதாக்கிக் கொள்ளும் மனிதனின் சுயநலமே ‘இப்போது மனிதனை வரை கொன்று தின்னவும் முன்னேறி விட்டது.

இதலாம் எழுதும் நோக்கம் உடனே உயிர்களை கொள்வதை விட்டு விடுங்கள், நாளையிலிருந்து எதையுமே கொன்று தின்னாதீர்கள் என்று சொல்வதற்கல்ல. அங்ஙனம் தின்பது அத்தனை சரியா என்பதை மட்டும் சிந்தியுங்கள். பிற உயிர்களை கொள்வதை நிறுத்த இயலுமா என யோசியுங்கள். ஒரு எறும்பு கை பட்டு இறந்து விட்டால் கூட வருத்தம் கொள்ளுங்கள்.

பிறகு கோழியை கொல்வதும், மீனை அறுப்பதும், ஆடு மாடுகளை வெட்டுவதும் தன்னை யாரோ கொல்வதும் ஒன்றே எனப் புரியலாம். அதன் பிறகு இறைச்சி தின்பதை நிறுத்துவதை பற்றி யோசிப்போம். வேறொன்றுமில்லை, எப்படி காகிதங்களை வீணாக்குவதை நிறுத்திக் கொண்டால்; மரங்கள் மிஞ்சுமோ, நான்கு சட்டை தேவையான இடத்தில் பத்து சட்டை எடுப்பதை நிறுத்திக் கொண்டால் ’ அந்த மீத சட்டைகள் பிறருக்காய் போய் சேருமோ; அப்படி நாமும் பிற உயிர்களை, யாரோ கொன்ற இறைச்சியினை உண்பதை நிறுத்துவோம். பிற உயிர்கள் தானே மிஞ்சும். அல்ல, நான் அப்படித் தான் செய்வேன், தின்பேன் தான், உடனே நிறுத்த எப்படி முடியும், என்றெல்லாம் கேட்டால், மறு பதிலுக்கு அவசியமில்லை. தாராளமாக உட்கொள்ளுங்கள். பல்லிடுக்கில் சிக்கிக் கொண்டு வலிக்கும் ஏதேனும் ஒரு ஆட்டிறைச்சியோ, தொண்டையில் குத்திக் கொண்டு வலிக்கும் ஒரு மீன் முள்ளோ; மீனை கண்டமந்துண்டமாக வெட்டிய வலியை நிச்சயம் நினைவுறுத்தும்.

நமக்கென்ன, நாம் தான் மனிதராயிற்றே, பிற உயிர்கள் என்ன பேசினாலென்ன.., புரியாததை கத்துகிறதென சொல்லி வாயை அழுத்தி, துடிக்க துடிக்க வெட்டி, ’அடி சக்க என, நாக்கில் எச்சிலூற சுவை பார்த்து, கொன்று தின்று… “வேண்டாம் வேண்டாம்.. இனி நீங்கள் எதையோ செய்யுங்கள்.. நான் இன்னும் இருக்கும் சற்று நேரத்திற்கேனும், வாழ்வின் கடைசி நிமிடங்களை வாழப்போகும் அந்த இரண்டு மீன்களோடு சற்று வாழ்ந்து விட்டு வருகிறேன்…


6

அமைதியாய் இசைத்துக் கொண்டிருந்த கடல் திடீரெனப் பொங்கியது. உலகை மடியில் தாங்கிக்கொண்டிருந்த பூமியின் கடல்பாகம் லேசாக அதிர்வுற்றன. நிலத்தின் நடுக்கத்தில் நிலைகுலைந்த கடல் பொங்கி அலையெனத் திரண்டு ஒரு ராட்சத வடிவில் கரையின் ஓரமிருந்த கிராமங்களுக்குள் எட்டியவரை புகுந்தன..


‘ஐயோ.. ஐயோ.. போச்சே போச்சே எல்லாம் போச்சே சுனாமி வந்துடுச்சே... கடல் துரோகி.. கடல் துரோகி.. நாங்க உன்னைக் கும்பிட்ட பாவமா இது? நீ நல்லாயிருப்பியா!!!!!!!!! கடலே நீ நாசமாப் போக...............’

பொங்கும் கடலே மாயமாய் வற்றிப்போகுமளவிற்கு கடலெல்லாம் ஏழைகளின் சாபங்கள் தண்ணீராய் நிறைந்தன...

ஒரு பிடி சோறுக்கே கடலை நம்பி வாழும் கரைவாழ் மக்களின் வீடு போய், உறவு போய், வாழ்வே இன்னும் பல கேள்விக் குறிகளாய் மாறி, நம்பியிருந்த கடலாலேயே அவர்களின் வாழ்க்கை சூன்யமாகுமெனில்; அந்த பெற்ற வயிறும், எறும்பு போல சேர்த்த மனிதனின் மனமும், கடலை சபிப்பதைத் தவிர; மீண்டும் கடலிடம் மன்றாடி மன்னிப்புக் கேட்டு கடலுக்குள் சென்று தன் வாழ்வினை தேடுவதைத் தவிர வேறென்ன அறிந்திருக்கும்?!!!

எப்படியோ அசுர வேகத்தில் வந்தாலும்; ஓரிரு வினாடியில் கரையிலெல்லாம் பரவி திரும்பச் சென்றன அலைகள். சோகத்தின் சுவடுகளின் மீது நின்று கத்தி கதறிய அப்பாவி ஏழைகளின் குரல் கடலெல்லாம் நிறைந்து நிற்க, கரை புகுந்த அசூர அலை தன்னால் அள்ளிக்கொள்ள முயன்றவரை; அள்ளிக்கொண்டு கடலில் புக, அதன் தலைவிரிக் கோலம் ஊரெல்லாம் செய்தியாக புகுந்து கொண்டிருந்தது.

கடல் மட்டும் தனக்கொன்றுமே நடந்திடாதது போலவும், யார் தவறிற்கும் தான் காரணமே இல்லையென்பது போலவும், எப்பொழுதும் போல் சலனமேயின்றி இசைக்கத் துவங்கியது.

திடீரென.., சுனாமி தின்ற கிராமத்தின் ஓரப் பகுதியிலிருந்து அப்பொழுது தான் கேட்டது அந்த ஒரு தாயின் அவலக் குரல்..

‘ஐயோ என் புள்ள.. எம் புள்ள போச்சே.. ஏம் பச்ச புள்ளைய தூக்கி போச்சே, கடல் நல்லாருக்குமா; மோசக்காரி; என்னை கொண்டு போ.. என்னை கொன்று போடு.., நாசமாப் போனவளே.. ஏ கடலே நாங்க உன்னை கும்பிட்டது தவறாடி????????? உன்னை கும்பிடுவது தவிர வேறென்ன குறையடி வைத்தோம்?? தாயே.. கடல்கொண்டவளே - ஏம் பிள்ளையை கொடேண்டி.., அம்மா அம்மா ஏங் குழந்தையை கொடுத்திடும்மா..’

மனதை கவ்வி இழுத்தது அந்த தாயின் ஓலம் கேட்கையில். அவள் கதறிக் கொண்டே ஓடி கடலுக்குள் விழப் போனாள். சாகப் போனார். கணவரும் சொந்தமும் ஓடிச் சென்று அவளை தூக்கி வந்து வீட்டின் வாசலில் பாயில் கிடத்தி மொத்த வீடும் சேர்ந்து அவளை சுற்றி அமர்ந்துக் கொண்டு வயிற்றில் அடித்துக் கொண்டு அழுதது. என்ன நினைத்தாரோ, அந்த தாயின் கணவர் எழுந்தார் ‘ச்சே.......... என் குழந்தையே போனபிறகு நானிருந்து என்ன செய்ய’ என்று சொல்லி ஓடிச் சென்று கடலில் குதித்து; ஆழக் கடல் நோக்கி நீந்தி தற்கொலை செய்துக் கொள்ளப் போனார்.

அவரை ஒரு கூட்டம் மீண்டும் ஓடிப் போய் வாரிவந்து வாசலில் போட்டு குடித்த நீரையெல்லாம் வயிற்றை அழுத்தியெடுக்க; கடல் கண்ணிசைக்காமல் பார்க்கும் ஒரு சாதுவான குழந்தையினைப் போல அவர்களின் அழும் கண்களை பார்த்து பார்த்து அலையாய் பொங்கியது.

அது சற்று தூரம் கடந்த அடுத்த கரைப்பகுதி. சுனாமி வந்து ஒரு ஊரையே கொண்டு சென்ற விளிம்பில் மக்களுக்கோ வீடுகளுக்கோ அப்பகுதியில் சேதமில்லை என்றாலும்; கரையில் வீட்டின் வாசலில் பாய் விரித்துப் போட்டு வைத்திருந்த குழந்தை எழுந்து கரையில் விளையாடிக் கொண்டிருக்க, அதையும் சேர்த்து தன் வெறிப்பல்லுக்கு கிடைத்த வெற்றிலை போல் மடித்து சுனாமி தூக்கிக் கொண்டுச் சென்ற கொடூரத்தின் கதறலும் சோகக் காட்சிகளும் தான் மேலேக் கண்டது. .

அதேநேரம், உள்ளே, கடலுக்குள்ளே, சற்று அக்கரை கடந்த தூரத்திற்கு அப்பால் கரையின் ஓரம் பார்த்தவாறு நீந்தி வந்துக்கொண்டிருந்தன அந்த இரண்டு மீன்களும்..

“ஏய்... சீக்கிரம் வா நானுனக்கு ஒரு பெரிய விருந்து வைத்திருக்கேன்”

“விருந்தா??? கடல்ல நமக்குக் கிடைக்காத அப்படி என்னத்த நீ எனக்கு விருந்தாக்கி விடுவாய் அப்பாவி மீனே???

“போதும் உன் குறும்புத் தனம், வேகமாக என்னோடு வா காட்டுகிறேன்..”

“இரண்டு மீனும் விரைந்து செல்ல, அந்த பெண்மீன் ஓடிச் சென்று, ஒரு துள்ளல் துள்ளி; அந்த அசூர அலை கொண்டு வந்துவிட்டிருந்த அக்குழந்தைக்கு அருகில் போய் நின்றது.

“பார்த்தியா!!!!!!!! இப்படி ஒரு விருந்து உனக்குக் கிடைக்குமா இந்தக் கடலில்???"

“ஐயோ இது மனித குழந்தை இல்ல??????????!!!!!!!!!!!!” அந்த பென்மீனின் தோழிமீன் அதிர்வுற்றுக் கேட்டது.

“ஆமாம், அதனால தான் வினோத விருந்தென்றேன்” அந்த பெண் மீன் சொல்ல

“அடிப் போடி இவள, நீ எல்லாம் ஒரு நல்ல பிறப்பே இல்ல, முதல்ல இந்த குழந்தையைத் தூக்கு கரையில கொண்டுபோய் விடலாம்”

“அதலாம் முடியாது..”

“முடியாதெல்லாம் முடியாது. நீ தூக்குவியா இல்ல நான் வேற யாரையாவது கூப்பிடவா...?”

அந்த தோழிமீன் உறுதியாக கேட்க, அந்த பெண்மீனும் சேர்ந்துத் தூக்கி; இரண்டு மீனுக்கும் நடுவே குழந்தையை கிடத்திக் கொண்டு கரையை நோக்கித் நீந்தின அந்த மீன்கள்.

“நீ ஏம்பா இப்படி இருக்க?” அந்த பெண்மீன் கேட்டது.

“எப்படி..?!”
“நியாயம்.. நீதி.. தர்மம்.. வெங்காயம்.. வெள்ளப் பூண்டுன்னு..”


“அது என் இயல்பு. எனக்கு என் வாழ்க்கை அப்படித் தான் தெரிகிறது”

“சரி நீ இவ்வளோ பன்றியே.............. உன் குழந்தையை என்ன பண்ணுவ? அது உன்னை மாதிரியே இருக்கும்னு நினைக்கிறியா?”

“அப்படி நினைத்தால் அது என் பெருத்த முட்டாள்தனம். என் குழந்தை என்ன மாதிரியே இருக்கணும்னு எந்த சட்டமும் எழுதப் படவில்லை. அந்த குழந்தை அந்த குழந்தைப்போல வளரனும், அதன் வளர்ச்சிக்கு பெத்தவங்க நாம பலமா இருக்கணும் அவ்வளவுதான்”

“அப்போ உன் குழந்தை உன்னை மாதிரி எல்லாம் நல்லா வளரவில்லை என்கிறாயா?”

“ஏன் அதுக்கென்ன, அது நல்லா தான் வளருது. குழந்தையை நாம வளர்த்தா தான் அது தப்பு தப்பா வளரும். அதை நம் வாழ்க்கையை பார்த்து வளர வைக்கனும். அதோட வாழ்க்கையை அந்த குழந்தை உணர்ந்து வாழ நாம தோழமையான ஒரு வழிகாட்டிப் போலவும் பலமாவும் இருக்கணும் அவ்வளவுதான்..”

“ஆமா நீ மாமிசப் பூச்செல்லாம் தின்னமாட்டியே, தாவரமா தின்னுவியே இப்போ உன் குழந்தை என்ன பண்ணும்”

“அதுவும் வெறும் தாவரம் மட்டுமே தின்னுது”

“அதையும் கெடுத்துட்டியா?”

“இதுல கெடுக்க என்னடியிருக்கு..., ஒரு குழந்தையை வளர்க்கும் உரிமை தான் நமக்கு இருக்கேத் தவிர, அதை வளர்க்கும்போதே தவறா வளர்க்க நமக்கு எந்த உரிமையும் இல்லை”

“அதெப்படி?”

“ஒரு குழந்தையை வளர்க்கும்போதே சிகரெட் பிடிக்க சொல்லி கொடுத்து, குடிக்கப் பழகி சொல்லிக் கொடுத்து வளர்ப்போமா? அது அந்த குழந்தையின் வளர்சிக்கான சுகாதாரக் கேடில்லையா?”

“ஆமாம்..”

“அதுபோலத் தான் இதுவும். வளர்க்கும் போதே பிற உயிர்களை அடித்து சுவைத்து தின்ன சொல்லிக் கொடுத்துவிட்டால் அது என்ன செய்யும் கண்ணில் பட்டதெல்லாம் அடித்து தின்னத் தானே செய்யும்”

“அப்போ மாமிசமே குழந்தைக்கு தரக் கூடாதுன்றியா?”

“ஆமாம். கண்டிப்பாக தரக் கூடாது”

“ஹா ஹா நீ சொல்லுறது எல்லாம் கேட்டா சிரிப்பு தாண்டி வருது”

“ஏன்..”
நீ இன்னும் எத்தனை வருடம் இப்படி பொத்தி வைப்ப? இன்னும் கொஞ்சம் வளர்ந்தா அது உனக்குத் தெரியாம தின்னதான் போகுது, அப்போ என்ன பண்ணுவ?”


“அதுக்கெல்லாம் வாய்ப்பே கொடுக்கக் மாட்டேண்டி நான், அதுக்கு பிடிக்குதுன்னு சொன்னா அதை தடுக்க எனக்கென்ன உரிமை இருக்கு. இப்போ நாம வளர்க்கும்போது கொடுத்து வளர்க்கக் கூடாது. நாளைக்கு அது வளர்ந்தப் பிறகு அதுக்கு எது சரி எது தவறுன்னு புரிய ஆரம்பித்த பிறகு, எனக்கு இது வேணும் எனக்குப் பிடித்திருக்குமான்னு சொன்னா நான் மறுக்கக் ஒன்றும் போவதில்லை. குழந்தைகள் அவர்களின் விருப்பம் சிந்தனைகளை கொண்டு வளரனும், அப்போதான் அந்த குழந்தைகளால் நாளைக்கு சமுதாயத்தில் புதிய மாற்றங்கள் வரும். அவர்களின் வாழ்க்கைக்கான கட்டமைப்பு அமையும்”

“கொடுக்கக் கூடாதுன்ற, கொடுபேன்ற, ரெண்டும் நீ தாண்டி சொல்ற”

“நான் சொல்லவந்ததை உனக்கு சரியா சொல்லலைன்னு நினைக்கிறேன். நாம சின்னவயசிலேர்ந்து வளர்கிறோம், அப்படி வளர்கையில், அதன் சம்மதமில்லாமல் ஏன் பிற உயிர்களை கொன்று உண்ணும் வழக்கத்தையும் அதுகளுக்கு சொல்லித் தரனும்? அதை செய்யவேண்டாம். ஒருவேளை அது வளர்ந்து, உலக நடத்தையோடு சேர்ந்து நிற்கையில் ‘அதற்கும் ஆசை வந்து உண்ணவேண்டுமென்று கேட்டால் அது அக்குழந்தையின் சுதந்திரம். அதை என்னால் தடுக்க இயலாது”

“அப்படி வா வழிக்கு, அப்போ அது தின்னாமையா போய்டும்..”

“ஆனால் ஆது என் குழந்தை..டி. அதற்கு சரி எது, தவறு ஏதென்று தெரியும். எனவே என் குழந்தை எது சொனனாலும் அதை நான் தலைமேல் ஏற்பேன்..”

இரண்டு மீனும் பேசிக் கொண்டே கரைக்கு வந்தன, கரையின் அருகாமையில் இருந்து குழந்தையை சுனாமியில் இழந்த ‘அந்த வீட்டின் வாசலிருந்து ஒருத்தி மட்டும் கடலையே வெறித்துப் பார்த்தாள்.

சடக்கென அதிர்ந்தாள். கடலிலிருந்து இரண்டு மீன்கள் கரைநோக்கி நீந்திவருவதையும், மேலே எதையோ ஏற்றி வருவதையும் கண்டு ஓடி வருகிறாள்..

அருகே வர வர அந்த மீன்கள் சுமந்து வருவது ஒரு குழந்தை என்று தெரியவர, அந்த பெண் எழுந்து கடலை நோக்கி ஓடுகிறாள்.

கடலை நெருங்க நெருங்க அந்த மீன்கள் சுமந்து வருவது அந்த வீட்டின் குழந்தையைத் தான் என்பது தெரிந்துவிட அவள் பதறினாள், குழந்தையை பார்த்ததும் பேச நாவிழந்து, செய்வதறியாது ஓடிச்சென்று அந்த மீன்கள் கொண்டுவந்து கரையிலிட்ட குழந்தையைத் தூக்கிக் கொண்டு வீர்ர்ர்ர்ரென்று கத்தினாள். எல்லோரும் கடல் நோக்கி ஓடி வர அந்த தாயும் மயங்கிக் கிடந்த தந்தையும் எழுந்து ஐயோ ஏம் பிள்ளையென்று ஓடி வருகிறார்கள்.

“குழந்தை.. குழந்தை.. செல்வா.. செல்வா.. எங்கள் செல்வம்.., எங்கள் வீட்டின் செல்வமே, வெளிச்ச மேயென்று எல்லாம் சொல்லி வயிற்றில் அடித்துக்கொண்டு கத்துகிறார்கள் எல்லோரும் மாறி மாறி.

ஐயோ ஐயோ என குழந்தையை பார்த்து கதறுகிறாள் தாய். குழந்தை வயிறு முழுக்க தண்ணி குடித்து வாயிலும் மூக்கிலும் நுரைதள்ளி, மலம் கழித்து பற்கள் இடுக்கிக் கடித்து கடல்மண் அப்பி விகாரமாக கிடந்தது. வயிறு மட்டும் உப்பி உப்பி சுருங்கியது. உடம்பில் ஒரு கடைசி துடிப்பு இருப்பதாக கணித்தார்கள் அவர்கள்.
 
என்றாலும், யாருக்கும் என்ன செய்வதென்றெல்லாம் யோசனை வரவில்லை. ஒருவர் மட்டும் சுதாரித்து ‘நேரத்தை கடத்தாதீங்க மருத்துவர்கிட்ட கொண்டுபோய் காட்டுவோம்’ என்கிறார்.


அந்த கூட்டம் துடிப்பு தான் நிக்கலையே எப்படியும் குழந்தையை காப்பாற்றி விடுவார் மருத்துவர்’ என்று கடலை நோக்கி கையெடுத்துக் கும்பிட்டுக் கொண்டே ஓடியது.

அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் இரண்டு கடவுள்கள் தான் ஒன்று கடல், இன்னொன்று மருத்துவர். கடல் சிலரைக் கொன்றுபோட்டாலும் பின் பலரை வாழவைக்கிறது, மருத்துவரும் வாழவைத்து விடுவாரென்ற’ மனிதநம்பிக்கையை சுமந்துக் கொண்டே அந்த கூட்டமும் மருத்துவமனை நோக்கி ஓடியது.

கரையில் குழந்தையை விட்டுவிட்டு சற்று தூர நின்று இவைகளை பார்த்துக் கொண்டிருந்த அந்த இரண்டு மீன்களும் சிரித்துக் கொண்டு கட்டி பிடித்துக் கொண்டன..

பார்த்தியா ஒரு குழந்தை தான் மனிதகுலத்தின் வீட்டிற்கே உயிர். வெளிச்சம். அது இல்லைனா அந்த குடும்பமே நிராகதியாகிவிடும். அது தான் நமக்கும் அந்த மனிதர்களுக்கும் உள்ள வித்யாசம்.

“அதலாம் சரி தான்; ஆனால் அந்த வலி அவர்களுக்கு நம்மை கொள்ளும்போது இல்லையே?” அந்த பெண்மீன் கேட்டது.

“இல்லாமல் எல்லாம் இல்லை...”

“நீ தான் சொல்லிக்கனும். நம்மை கொன்று தின்று தின்றே அவர்கள் பழகிவிட்டார்கள். அது அவர்கள் சுபாவம் போல்; துடிக்க துடிக்க நம்மை பிடித்து அறுத்து இப்படி ஒரு இனத்தையே அழிக்கிறதே இந்த மனித ஜனங்கள்.. ச்ச!!!”

“போடி இவளே.. நீ இயற்கையை என்னன்னு நினைத்த? அவரவர் தவறுக்கு அவரவருக்கு தண்டனை கிடைக்கும்”

“கூண்டோட நம்மை அழித்த பிறகா?”

“அப்படி இல்லடி, சரி விடு, திரும்ப திரும்ப ஏன் அதையே பேசுவானேன், ஆனா, ஒன்னு மட்டும் உறுதியா கேட்டுக்கோ.. ‘இந்த கடல் உள்ளவரை நாமலும் அழிய மாட்டோம். கடல் இல்லாத அன்று மனிதரும் இருக்க மாட்டார். ஆக மனிதர் இருக்கும் வரை நாமும் இருப்போம். ஒர்தினம் மனிதருக்கு புரியும் நாமும் ஓர் உயிர்தான், நமக்கும் அறுத்தால் வலிக்கும்தான், நாமும் உயிர்பயமெல்லாம் உள்ளவர்தான், நாமும் இறப்பதற்கு துடித்துத் தான் போகிறோம் என்று புரியும். நமக்குள்ளும் உறவுமுறையும் வாழ்க்கைநெறியும் உண்டென்று புரியவரும். அன்று மனித இனம் நம்மை தின்பதை விட்டுவிடும். அதற்கு பின் நாம் சுதந்திரமாய் நீந்தி கடலை வலம் வருவோம்..

அந்த தோழிமீன் தன் பகல் கனவோடு அந்த பெண்மீனைப் பார்த்து சொல்ல, அதை அந்த பெண்மீனும் நம்பி சிரித்துக் கொண்டே அதன் வால்பிடித்துக் கொண்டு கடலுக்குள் ஆழ ஆழ நீந்திப் போனது..

அதேநேரம், கரையிலிருந்து ஒரு மீனவக் கூட்டம் கடலை வணங்கி, சுனாமி வந்த சேதி கூட தெரியாமல் கடலின் வேறொரு கரையிலிருந்து அம் மீன்கள் இருக்கும் திசை நோக்கி கடலுக்குள் புகுந்தது..
--------------------------------------------------------------------------------------------


மீன்கள் பாவம் மடிந்துக் கொண்டே இருக்கின்றன மனிதர்களால். தன் ஒவ்வொரு உயிரையும் மனிதரின் நாவில் ஊரும் ஒருதுளி எச்சில்சுவைக்காக மெல்ல மெல்ல இழந்துக் கொண்டிருந்தன. அந்த மீன்களின் வலி, துடிப்பு, வாழ்க்கை என ஒன்றையுமே நாம் சிந்திக்காதவரை ‘மனிதன்; மனிதமிருந்தும் மிருகம்போல்தான் ஆசையால் சிருத்தே போகிறான்..

-------------------------------------------------------------------------------------------

தொடரும்.. (மீன்கள் இன்னும் நிறைய பேசும்..)

No comments: