.
-ரஸஞானி-
அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வருடாந்த தமிழ் எழுத்தாளர்விழா இம்முறை மெல்பனில் கடந்த ஜூன் 4 ஆம் திகதி பிரஸ்டன் நகரமண்டபத்தில் சங்கத்தலைவர் கலைவளன் சிசு. நாகேந்திரன் தலைமையில் நடைபெற்றது. சிட்னியிலிருந்து பிரபல எழுத்தாளரும் சீர்மிய செயற்பாட்டாளருமான திருமதி கோகிலா மகேந்திரன், கம்பன் கழக ஸ்தாபகரும் தமிழ்க்கல்வி போதனாசிரியரும் இலக்கியவாதியுமான திரு.திருநந்தகுமார், மற்றும் பேர்த்திலிருந்து நூலகம் பவுண்டேசன் அமைப்பைச்சேர்ந்த திரு. கோபிநாத் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக வருகைதந்து உரையாற்றினார்கள்.
உலகடங்கும் யுத்தங்களினாலும் இயற்கை அநர்த்தங்களினாலும் மரணித்த மக்களுக்கான மௌன அஞ்சலியுடன் தொடங்கிய பதினொராவது எழுத்தாளர்விழா, தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் பணிகளை குறிப்பிடும் வாழ்த்துப்பாடலுடன் (நிகழ்ச்சிகள்) ஆரம்பமாகின.
திருமதி டவீனா வேந்தனின் மாணவிகள் செல்விகள் அபிதாரணி சந்திரன், சாகித்தியா வேந்தன், தீப்தா முரளிதரன் ஆகியோர் இனியகுரலுடன் வாழ்த்துப்பா பாடினர்.
இம்முறையும் சிறுவர் அரங்கு மாணவர் அரங்கு என்பன இவ்விழாவில் களைகட்டின. மூத்ததலைமுறையினர் மாத்திரம் பங்கேற்கும் விழாவாக அமையாமல் இளம்தலைமுறைச்சிறார்களும் தமது ஆற்றல்களை வெளிப்படுத்துவதற்கேற்றவாறு நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்பட்டிருந்தன.
சிறுவர் அரங்கிற்கு தலைமைதாங்கியதும் ஒரு சிறுமிதான். செல்வி காவியா வேந்தன் தலைமையில் தமிழுக்குப்பணி செய்தவர்கள் என்ற தலைப்பில் செல்வி நித்தியசிறி பத்மசிறி ( பாரதியார்) செல்வி ஆரபி மதியழகன் ( சோமசுந்தரப்புலவர்) செல்வன் அஜ்யன் மணிவண்ணன் ( பாரதியார் கவிதை) தமிழுக்குப்பணி செய்பவர்கள் என்ற தலைப்பில் செல்வன் துவாரகன் சந்திரன் (அம்பித்தாத்தா) செல்வன் காவியன் பத்மசிறி (இளமுருகனார் பாரதி) செல்வன் ஆரூரன் மதியழகன் ( இளமுருகனார் கவிதை) ஆகியோர் சரளமாக உரையாற்றினர்.
திருமதி மாலதி முருகபூபதி தலைமையில் நடந்த மாணவர் அரங்கில் சிட்னியிலிருந்து வருகைதந்த செல்வி தர்சனா சிறீசந்திரபோஸ் எழுத்தாளர் பேராசிரியர் ஆசி. கந்தராஜாவின் சிறுகதைகளில் சமூக நோக்கு என்ற தலைப்பில் ஆய்வுரை நிகழ்த்தினார். சிட்னியிலிருந்து வருகைதந்திருந்த மற்றுமொரு மாணவரான செல்வன் விதுரன் ஜெகதீஸ்வரன் திரைப்பட இயக்குநர் சேரனின் படங்கள் பற்றிய தமது மனப்பதிவுகளை விமர்சனக்கண்ணோட்டத்துடன் சமர்ப்பித்தார். மெல்பன் பாரதி பள்ளி மாணவர்கள் செல்விகள் கீர்த்தனா ஜெயரூபன், மதுசா சண்முகராஜா, மதுசா ஆனந்தராசா, மெல்பன் மில்க்பார்க் தமிழ்ப்பாடசாலை மாணவர்களான செல்விகள் சஞ்சிதா நாகசாந்தகுமார், அம்சவி கோபாலசிங்கம், விபுசனா ஜெயமனோகரன், ஜெகனி நடேசமூர்த்தி ஆகியோர் உரையாற்றினர். அவர்களது உரைகள் அவர்களின் சுயவிருத்தியினதும் வாசிப்பு மற்றும் ரசனையினதும் அனுபவப்பகிர்வாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தகுந்தது.
திரு. சண்முகம் சந்திரன் தலைமையில் நடைபெற்ற இலக்கிய கருத்தரங்கில் திரு.திருநந்தகுமார் உரையாற்றுகையில் தமிழர் புலம்பெயர்ந்து வாழும் அவுஸ்திரேலியா போன்றதொரு நாட்டில் குடியேறிய தமிழ்ச்சிறார்களுக்கும் புகலிட நாடுகளில் பிறந்த தமிழ்க்குழந்தைகளுக்கும் எவ்வாறு தமிழை கற்பிக்கலாம் அவர்களுக்கான எழுதும் திறனை எவ்வாறு ஊக்குவிக்கலாம் என்பதை பலதரப்பட்ட விளக்கங்களுடன் விரிவுரைப்பாங்கில் குறிப்பிட்டார்.
திருமதி கோகிலா மகேந்திரன் இலக்கியபடைப்பாளர் பல நூல்களை எழுதியிருப்பவர். உளவியல் சார்ந்து பல சீர்மிய பணிகளை இலங்கையில் போரில் பாதிக்கப்பட்டவர்களின் நலன் குறித்தும் மேற்கொண்டவர். அவர் தமது உரையில் தமிழினம் நெருக்கடிகளினால் பாதிக்கப்பட்டிருக்கும்போது எழுத்தாளர்கள் எவ்வாறு இயங்கவேண்டும் என்பதை உளவியல் தரிசனத்துடன் விளக்கினார்.
கணினி யுகதில் வாழும் எம்மவரது இலக்கியப்படைப்புகளை இலத்திரணியல் ஊடகங்களில் சேமித்து கணினி நூலகத்தில் எவ்வாறு பாதுகாப்பது என்பது தொடர்பாக அரிய பல ஆலோசனைகளை தெரிவித்தார் நூலகம் பவுண்டேசன் சார்பாக உரையாற்றிய திரு. கோபிநாத். அத்துடன் இதுதொடர்பான பிரசுரங்களையும் தகவல்களுக்காக வழங்கினார்.
இவர்கள் மூவரினதும் உரைகள் சிறந்த ஆவணப்பதிவுகள் என்றும் சொல்லலாம். அவர்களுடைய கருத்துக்கள் காற்றோடு கலந்து மறைந்துவிடாமல் ஊடகங்களில் முழுமையாக பதிவாகவேண்டும். எழுத்தாளர் விழாவை கடந்த பதினொரு வருடகாலமாக தங்கு தடையின்றி நடத்திவரும் அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் இந்த சிறப்புரைகளை இனிவரும் காலங்களில் பிரசுரங்களாக வெளியிடுவது சாலச்சிறந்தது. மூத்ததலைமுறையினரது உரைகள் மாத்திரமின்றி இளம் தலைமுறையினரது எழுத்தாளர் விழா உரைகளும் அவ்வாறு பிரசுர வடிவில் வெளியாகவேண்டும்.
மூத்ததலைமுறையினர் மூவர் பங்கேற்ற இலக்கியக்கருத்தரங்கில் இளம்தலைமுறை மாணவி விமலா ஸ்ரீநிவாசன் தமிழ் இசைக்கு மகத்தான சேவையாற்றிய மூன்று இசைவேந்தர்கள் பற்றி உரையாற்றினார்.
விமர்சன அரங்கில் டென்மாரக் ஜீவகுமாரன் தொகுத்த ‘முகங்கள்’ புலம்பெயர்- புகலிட வாழ்வை சித்திரிக்கும் 50 சிறுகதைகள் இடம்பெற்ற நூலை திருமதி ரேணுகா தனஸ்கந்தாவும் கோகிலா மகேந்திரன் எழுதிய ‘உள்ளத்துள் உறைதல்’ என்னும் உளவியல் சார்ந்த நூலை திருமதி உஷா சந்திரனும் அறிமுகப்படுத்தி விமர்சித்தார்கள்.
அவுஸ்திரேலியாவின் நான்கு வகையான பருவகாலங்களை இலக்கியநயத்துடன் சித்திரிக்கும் கவியரங்கு திரு. நிர்மலன் சிவா தலைமையில் நடந்தது. கவிஞர்கள் கலாநிதி மணிவண்ணன், செல்வி ஹம்சாயினி தில்லைநாதன், திருவாளர்கள் ஆனந்தகுமார் பாலசுப்பிரமணியம், சசிதரன் தனபாலசிங்கம் ஆகியோர் இக்கவியரங்கில் பங்குபற்றினர்.
எழுத்தாளர் விழா கலையரங்கில் இடம்பெற்ற இரண்டு நிகழ்வுகளிலும் சிறுவர்களான இளம்தலைமுறையினரே பங்கேற்றனர். பாரதி பள்ளியின் ரிசேர்வயர் வளாக மாணவர்கள் ‘எலிக்குஞ்சு செட்டியார்’ என்ற நாடகத்தில் நடித்தனர். செல்விகள் உபாஷனா, லக்ஷனா ரமேஷ்வரக்குருக்கள், லாவண்யா அறிவழகன், செல்வன்கள் அஷ்வின், ஆகாஷ் பொன்னுத்துரை ஆகியோர் இந்நாடகத்தில் பங்கேற்றனர். ஆசிரியர் திரு. மயில்வாகனம் மகாதேவா இந்நாடகத்தை தயாரித்து நெறிப்படுத்தியிருந்தார்.
‘வந்தேன் வந்தனம்’ என்னும் தாளலய நாடகத்தில் செல்வன்கள் தர்சிகன் சிறிகாந்தன், ரவிசங்கர் சுபசேகரன் ஆகியோர் நடித்தனர். பக்கவாத்தியம் திருவாளர்கள் ஸ்ரீநந்தகுமார், வாசவன் பஞ்சாட்சரம். இந்நாடகத்தை எழுதி நெறிப்படுத்தியவர் திரு. நிர்மலன் சிவா.
குறும்படக்காட்சி, இராப்போசன விருந்துடன் பதினோராவது எழுத்தாளர்விழா பல்சுவை அரங்காக நிறைவடைந்தது. சங்கத்தின் செயலாளர் திருமதி கௌசல்யா அன்ரனிப்பிள்ளை நன்றி நவின்றார். வானமுதம் ஊடகவியலாரும் சங்கத்தின் நிதிச்செயலாளருமான திரு. நவரத்தினம் அல்லமதேவன் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்திருந்தார்.
----0----
2 comments:
சிறுவர்களையும் ,மாணவர்களையும் முதன்மைபடுத்தியமைக்கு எழுத்தாளர் விழா குழுவினரை பாராட்ட வேண்டும் ,மேலும் இந்த இளம் சமுகத்தினருக்கு எமது படைப்புக்களை (கருத்துக்களை) புகுத்தாமல் அவர்களின் சொந்த சிந்தனையில் உருவாகும் படைப்புக்களை ஊக்கப்படுத்தினால் மிகவும் நன்றாக இருக்கும்...அதாவது கம்பனையோ,மகாபாரத்தையோ,மேலும் வட இந்திய
புராணபுளுகளை சொல்லி கொடுத்து கிளிப்பிள்ளை மாதிரி அதை திருப்பி சொல்லுவதை விட இளம் சமுகத்தினர் வேறுவிதமாக சிந்தித்தல் நல்லம்
[quote]உலகடங்கும் யுத்தங்களினாலும் இயற்கை அநர்த்தங்களினாலும் மரணித்த மக்களுக்கான மௌன அஞ்சலியுடன் தொடங்கிய பதினொராவது எழுத்தாளர்விழா[/quote]
ஈழத்தில் நடந்த படுகொலைக்கு மெளன அஞ்சலி(முள்ளி வாய்க்கால்) என்று சொன்னால் எழுத்தாளர்கள் நீங்கள் குறைஞ்சே போயிடுவியள்..
அல்லது அப்படி சொல்லக்கூடாது என்று யாரிடமிருந்தாவது அறிவுறுத்தல் வந்ததோ?
//ஈழத்தில் நடந்த படுகொலைக்கு மெளன அஞ்சலி(முள்ளி வாய்க்கால்) என்று சொன்னால் எழுத்தாளர்கள் நீங்கள் குறைஞ்சே போயிடுவியள்..
அல்லது அப்படி சொல்லக்கூடாது என்று யாரிடமிருந்தாவது அறிவுறுத்தல் வந்ததோ?//
கிறுக்கன், மெல்பர்னில் "நாயளின்" கூட்டம் ஒன்று இருக்கிறது உமக்குத் தெரியாதோ? அந்த நாயளுக்குப் பயந்தும் இருக்கலாம்.
Post a Comment