தமிழ் சினிமா

.
எங்கேயும் காதல்


வாழ்க்கையில் எங்கேயும் எப்போதும் கமிட்டாகாமல் ஜாலியாய் இருப்பேன் என்ற முடிவோடு இருக்கிறார் ஒருவர்.

இவருக்கும் பாரிஸிலேயே பிறந்து வளர்ந்து இந்திய கலாச்சாரங்களில் ஊறியவள் என்று சொல்லப்படுகிறவளுக்கும் இடையே ஆன காதல் தான் கதை.

பார்த்த மாத்திரத்திலேயே ஹீரோவை காதலிக்க ஆரம்பித்துவிடுகிறார். அதன் பிறகு அவனைப் பற்றிய விவரங்கள் அவளுடய டிடெக்டிவ் அப்பாவின் கேஸ் ஃபைலினால் தெரிய வருகிறது. அதன் பிறகு அவனைக் காப்பாற்ற அவள் எடுக்கும் முயற்சியெல்லாம் பெரிய லாஜிக் சொதப்பல்கள். அதை சொல்ல முடியாமல் அந்த பெண்ணுக்கு என்ன பிரச்சினை என்றால் அவன் காதல் என்றால் காத தூரம் ஓடிவிடுபவன் என்று தெரிந்ததால். அவன் ஊருக்கு கிளம்பும் போது தன் காதலை தெரிவிக்காமல் இருந்து விடுகிறாள்.

அதன் பிறகு ஒரு வருடம் அவனுக்காக அவள் காத்திருக்கிறாள். அடுத்த வருட லீவுக்கு வரும் போது மீண்டும் சந்திக்கிறார்கள். அவனை இம்ப்ரஸ் செய்ய நெகட்டிவான ஒரு அப்ரோச்சை செய்து தன் காதலை புரிய வைக்க முயற்சிக்கிறாள். அவனுக்கு புரிந்ததா, இல்லையா என்பதுதான் கதை. ஜெயம் ரவியிடம் ஒரு கார்பரேட் லுக் இருக்கிறது ஆனால் அந்த வயதுக்கான இளமை துள்ளல் இல்லை. பிரபுதேவாவிடம் இருக்கும் ஒரு லைவ்லினெஸ் அவரிடம் இல்லை என்றே சொல்ல வேண்டும். அவருக்கும் ஹன்சிகாவுக்குமிடையே நல்ல 'கெமிஸ்ட்ரி'.


ஒன்று காதலர்களுக்குள் பிரச்சினை, இல்லை காதலுக்கு வெளியிலிருந்து பிரச்சினை, இல்லை காதலால் அவர்களுக்கு பிரச்சினை இதைத் தவிர வேறேதும் காதல் கதைகளில் இருக்க முடியாது. அம்மாதிரி கதைகள் எப்போது நம்முள் ஏறும் என்றால் அவர்களின் காதல் நம் உணர்வுகளுடன் சிங்க் ஆகும் போது படத்தினூடே இன்வால்வாகி அவர்கள் சேர்ந்தே ஆகவேண்டும் என்று நாமும் பதைப்போம். ஆனால் படத்தில் சுறுசுறுப்பு என்பது கொஞ்சம் கூட இல்லாததால் எப்படியும் க்ளைமாக்ஸில் சேர்ந்துவிடுவார்கள் என்று கட்டாயமாய் தெரிந்துவிடுவதால் சுவாரஸ்யம் மிகவும் கம்மி.

படத்தின் மூன்று அருமையான விஷயங்கள், ஒன்று நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு. நியூசிலாந்து, ப்ரான்ஸ் என்று கண்ணுக்கு குளிர்ச்சியாய் இருக்கிறது. அடுத்து இசையமைப்பாளர் ஹாரிஸ். மூன்று பாடல்கள் இதம். முக்கியமாய் 'எங்கேயும் காதல்', திமுதிமு', 'நெஞ்சில் நெஞ்சில்' ஆகிய பாடல்கள் அருமை. மைக்கேல் ஜாக்ஸனின் த்ரில்லரின் அட்டக் காப்பியான 'நங்கை' பாடல் கேட்பதை விட விஷுவலாக நன்றாக இருக்கிறது. ஆண்டணியின் எடிட்டிங் படு ஸ்லீக்.

நாயகன் - நாயகியை அறிமுகப்படுத்தும் விதமும், பிரகாஷ்ராஜின் என்ட்ரியும் ரசிக்கும்படி இருந்தது. ராஜு சுந்தரம் கொமெடி என்ற பெயரில் அசத்தியிருக்கிறார். டைட்டில் பாடலுக்கு பிரபுதேவாவே ஆடியிருக்கிறார். அதுவும் இந்த மாதிரி மெலடிக்கு மூவ்மெண்ட்ஸ் அமைப்பது சிரமம், கலக்கியிருக்கிறார். பாடல் பாடும்போது கீழே 'இந்தப் பாடல் நயன்தாராவிற்கு டெடிகேட் செய்யப்படுகிறது' என்று போடாத குறைதான், ஒன்றும் தப்பில்லை பிரபு. அநியாயமான வழில சம்பாதிச்ச பணம், நியாயமான வழில சம்பாதிச்ச பணம் என ரெண்டுக்கும் விளக்கம் குடுத்து ஹீரோயின் ரெண்டையும் தொலைக்கும் கொமெடி கலைகட்டுகின்றது.

நடிகர்கள்: ஜெயம் ரவி, ஹன்சிகா மோத்வானி, சுமன், ராஜு சுந்தரம், பிரகாஷ் ராஜ்

இசை: ஹாரிஸ் ஜெயராஜ்

இயக்கம்: பிரபுதேவா

தயாரிப்பு: கல்பாத்தி எஸ்.அகோரம்


நன்றி விடுப்பு


பாசக்கார நண்பர்கள்

கருணை இல்லத்துக்கு இலவசமாய் வழங்கிய இடத்தை ராதாரவி திருப்பி கேட்கிறார். இதனால் அங்கு தங்கி இருக்கும் ஆதரவற்ற முதியவர்கள் தெருவுக்கு வரும் நிலை ஏற்படுகிறது.

அருண் சிறு வயதில் இருந்தே குத்துச் சண்டையில் ஆர்வமாய் இருக்கிறான். பக்கத்தில் பெரோஸ்கான் நடத்தும் குத்துச்சண்டை பயிற்சி மையத்துக்கு போய் மறைந்திருந்து பயிற்சி பெறுகிறான். அப்போது தேசிய குத்துச் சண்டை போட்டிக்கான அறிவிப்பு வருகிறது. வெற்றி பெறுபவருக்கு வீடு பரிசாக வழங்கப்படும் என்கிறார்கள்.

கருணை இல்லத்துக்கு அவ்வீட்டை பெற்றுத் தர குத்துச் சண்டை போட்டியில் பங்கேற்க தயாராகிறான் அருண். அவன் ஆர்வத்தை புரிந்து பெரோஸ்கான் குத்துச்சண்டை பயிற்சி அளிக்கிறார். அருண் ஆசை நிறைவேறியதா? என்பது கிளைமாக்ஸ்...

கருணை இல்லவாசிகளின் உருக்கமான வாழ்க்கை, அம்மா சென்டிமெண்ட், பள்ளி மாணவர்களின் நட்பு விஷயங்களை கோர்த்து காட்சிகளை கச்சிதமாக நகர்த்துகிறார் இயக்குனர் பெரோஸ்கான். ஆதரவற்றோர் இல்லவாசிகளுக்கு துணையாக இருக்கும் அனாதை சிறுவன் அருண் பாத்திரத்தில் அஜ்மல்கான் அம்சமாய் பொருந்துகிறார்.

மாணவியின் கையை பிடித்து இம்சை செய்யும் ரவுடி மாணவனை ஓட ஓட விரட்டி நொறுக்குவதில் வேகம். கடலில் விழுந்து நண்பன் பலியாவது கண்டு கதறுகையில் மனதில் இறங்குகிறார். குத்துச் சண்டை போட்டியில் வீரர்களுடன் மோதுவதில் ஆக்ரோஷம்.

நாயகி திவ்யா நாகேஷ் பிரியமான தோழி. அவர்களுக்குள்ள நட்பு பிரசமற்று நகர்வது ஜீவன். குத்துச் சண்டை பயிற்சியாளராக வரும் பெரோஸ்கான் ஈர்க்கிறார். ராதாரவி, பாலா சிங், பாய்ஸ் ராஜன், ரிஷிராஜ், ஆதித்யா, நீலன் போன்றோரும் உள்ளனர்.

காட்சியோட்டத்தில் நாடகத்தனம் எட்டி பார்ப்பது நெளிய வைக்கிறது. கிளைமாக்ஸ் குத்துச்சண்டை விறுவிறுப் பின் உச்சம். தினா இசையில் அம்மா சென்ட்மெண்ட் பாடல் மனதை தொடுகிறது. கிளைமாக்ஸ் சண்டையை மோகனராமன் கேமரா பரபரவென பதிவு செய்துள்ளது.


நன்றி விடுப்பு
 


கண்டேன்

ஒரே ஒரு பொய்... காதலில் என்ன சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதுதான் 'கண்டேன்’!

பார்வையற்றவர்போல நடித்து, நம்ப வைத்து ராஷ்மியைக் காதலிக்கிறார் சாந்தனு. திருமணம் முடியும் தருணத்தில் உண்மை தெரிந்து சாந்தனுவை உதறுகிறார் ராஷ்மி. சமாதானப் படலங்களுக்குப் பிறகு, பெற்றோர் சம்மதத்துடன் இருவருக்கும் திருமணம் நிச்சயம் ஆகிறது. ஆனால், இப்போது ஒரு அடிதடியில் உண்மையிலேயே சாந்தனுவுக்கு நிஜமாகவே பார்வை பறி போகிறது. இப்போது கண் தெரிவதுபோல நடிக்க வேண்டிய சூழல் சாந்தனுவுக்கு. காதல் என்ன ஆகிறது என்பது க்ளைமாக்ஸ்!

அறிமுக இயக்குநர் முகில் 'எந்த ரிஸ்க்கும் எடுக்க வேண்டாம்’ என்று நினைத்ததோடு, 'எந்த லாஜிக்கும் வேண்டாம்’ என்றும் யோசித்து இருப்பார்போல. முதல் பாதி முழுக்கவே 'அடுத்த ஸீன் இதுதானோ’ என்ற எதிர்பார்ப்புக்குக்கூட இடம் அளிக்காமல், 'பலே பாண்டியா’ காலத்துக் காட்சிகளால் அடுக்கி இருக்கிறார்கள். இடைவேளை ட்விஸ்ட்டுக்குப் பிறகு, சாந்தனு பார்வை தெரிவதுபோல நடிக்கும் அத்தியாயங்கள் மட்டுமே சுமார் சுவாரஸ்யம்!

'காதலியிடம் பொய் சொல்லிவிட்டோமே!’ என்ற குற்ற உணர்ச்சி வர வேண்டிய இடங்களில் தேமே என்று இருக்கிறார் சாந்தனு. ஆனால், அதே 'தேமே’ பார்வை இல்லாதவராக நடிக்கும் சமயங்களில் கை கொடுக்கிறது. 'செம ஸ்கோப் உள்ள ஹீரோயின் கேரக்டர்’ என்று ஷூட்டிங்குக்கு முன்னர் ஏமாந்ததில் தொடங்கி, க்ளைமாக்ஸ் வரை ஏமாந்துகொண்டே இருக்கும் ராஷ்மியின் உறுத்தாத அழகு படத்தின் ரிலாக்ஸ் கஃபே!

'தான் தண்ணி அடிக்கிறப்போ... தக்காளி ஊறுகாயை நக்கிச் சாப்பிடுறது, அடுத்தவன் காசுன்னா... ஆமைக் குஞ்சு கேட்குதா... அனகோண்டா குஞ்சு கேக்குதா?’, 'போலீஸ்கிட்ட பொய் சொல்லக் கூடாதா? டாக்டர்கிட்டயும் வக்கீல்கிட்டயும்தானே பொய் சொல்லக் கூடாது!’ - சந்தானத்தின் சாம்பிள் சிக்ஸர்கள் இவை. பின்பாதி முழுக்க ஒற்றை ஆளாகத் தியேட்டர் பாப்புலேஷனை இருக்கவைக்கிறார் சந்தானம்! ஆனால், சமயங்களில் 'மாற்றுத் திறனாளி’களை எல்லை மீறிக் கிண்டல் அடிப்பது சரியா சந்தானம்?

கமிஷனர் ஆசிஷ் வித்யார்த்தியே, 'கமிஷனரோடு எனக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு’ என்று சொல்லிக் கிளம்புகிறார். படத்தின் 'லாஜிக் மேஜிக்’ மேளாவுக்கு இது ஒரு நல்ல உதாரணம். படத்தின் முக்கியத் திருப்பங்கள் அனைத்தையும் கதாபாத்திரங்கள் 'நினைத்துப் பார்ப்பதாக’வே காட்டி இருப்பதால், அவ்வப்போது வரும் சுவாரஸ்யமான காட்சிகளையும் 'கற்பனையோ’ என்று சந்தேகிக்க வேண்டி இருக்கிறது. சாந்தனு ராஷ்மியைப் பார்த்தால், சிரித்தால், கண்ணடித்தால், 'ஏய்... பாட்டைப் போட்ராதீங்கப்பா’ என்று தியேட்டர் கோரஸையும் மீறி பாடல் வந்தே விடுகிறது.

விஜய் எபிநேசரின் இசையில் முணுமுணுக்கவைக்கும் 'உன்னைக் கண்டேனே’ பாடலுக்கு, ஜாலி கேலியாக நடனம் அமைத்திருக்கிறார் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்.

சாந்தனுவுக்கு நிச்சயிக்கப்பட்ட கிராமத்துப் பெண்ணின் முகம் காட்டாமலேயே சதாய்ப்பதுபோன்ற இடங்களில் மட்டுமே ஈர்க்கிறது இயக்கம். மற்றபடி, லாஜிக்கை மறந்து, துறந்தால் கண்டேனைக் கண்டு ரசிக்கலாம்!

நன்றி விடுப்பு

No comments: